TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை – பகுதி II

June 16 , 2023 572 days 1702 0

(For the English version of this Article Please click Here)

மாநிலக் குடும்பத் தரவு தளம் (SFDB)

  • மாநில குடும்ப தரவுத் தளமானது (SFDB) அரசின் திட்டங்களைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கு உதவுவதன் மூலம், அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி தரவு சார்ந்த முடிவுகளுக்கான ஒரு ஆதரவு உட்கட்டமைப்பாக விளங்குகிறது.
  • மக்களுக்கு வெளிப்படையான மற்றும் தடையற்றச் சேவை வழங்கலை  உறுதி செய்வதற்காக பல்வேறு துறைகளுக்கு இடையே  தரவு   ஒத்திசைவைச் செயல் படுத்துவதன் மூலம் தற்போதுள்ள துறையின் உட்கட்டமைப்பை இது வலுவாக்குகிறது.
  • தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறைக்கும் அவற்றின் தனித்தச் செயலிகள் மற்றும் அதற்குத் தொடர்புடைய வகையில் தரவுத் தளங்கள் உள்ளன.
  • அத்தரவுதளங்கள் அனைத்தும் SFDB தளத்தின் மையத் தரவுதளத்தை உருவாக்கப் பயன்படுத்தப் படும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளைத் தனித்துவமாக அடையாளம் காண இது பயன்படுகிறது.
  • இது அரசின் சலுகைகள் மற்றும் சேவைகளை  மக்களுக்கு விரைவாகவும் முனைப்புடனும் வழங்கிட வழிவகை செய்யும்.
  • மக்கள் வலைதளம் மற்றும் பின் அலுவலக வலைதளம் (Backoffice) ஆகியவை படிப்படியாக வெளியிடப் படும்.

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு (TNGIS)

  • புவிசார் தகவல் அமைப்பு (GIS) என்பது இடம்சார்ந்த மற்றும் இடம்சாராதத் தரவுகளை இணைப்பதன் மூலம் மேலாண்மை, பகுப்பாய்வு மற்றும் முடிவெடுப்பதற்கான ஒரு கருவியாகத் திகழ்கிறது.
  • தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு (TNGIS) மாநிலத்திற்கான பொதுவான புவிசார் தகவல் அமைப்புத் தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதுஇதில் அனைத்துத் துறை சார்ந்தச் சொத்துக்கள், பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் வசதிகள், திட்டங்கள் (நிலத்தடித் தரவு உட்பட செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள், வான்வழி மற்றும் நிலப் பரப்புத் தளங்களிலிருந்துத் தொலைதூர ரீதியில் உணர்தல் தரவு) ஆகிய புவிசார் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இடம் சார்ந்தத் தரவுத் தொகுப்பாக காட்சிப் படுத்தப் படுகிறது.
  • அனைத்துத் துறைகளின் தடையற்ற இடம் சார்ந்தத் தரவுத்தொகுப்புகள் மற்றும் தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு மூலம் அவற்றின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் தகவல் அமைப்புத் தரவுகள் அரசுத் துறைகளுக்கு இடையே பகிரப்பட்டு, மாநிலத்தில் ஒருங்கிணைந்தத் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் ஒரு செயல்முறைக்குப் பயன்படுத்தப் படும்.
  • தற்போது தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு பல்வேறு துறைகளில் இருந்து தொகுக்கப் பட்ட 300 இடம் சார்ந்தத் தரவு அடுக்குகளை நிர்வகித்து வருகிறது. அவை தேவைப்படும் துறைகளுடன் பகிர்ந்துக் கொள்ளப் பட்டன.
  • கடந்த ஆண்டில் சுமார் 70 அடுக்குத் தரவுகள் சுமார் 20 துறைகளுடன் பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன.
  • அதில் கிடைக்கப் பெற்றத் தரவுகள் தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு இணைய தளமான  https://tngis.tn.gov.ih என்ற தளத்தில் உள்ளீடு செய்யப் படுகிறது.
  • இதன் அடிப்படையில் துறை சார்ந்த செயலிகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் முடிக்கப் பட்டச் செயல்பாடுகளின் முக்கிய சிறப்பம்சங்கள்:
  • உயர் மதிப்புடைய உள்கட்டமைப்புத் திட்டங்களின் உண்மை நிலை மற்றும் நிதி முன்னேற்றத்தைக் கண்காணிக்க இ-முன்னேற்றம் என்ற செயலி பயன்படுகிறது.
  • ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகளின் உதவியுடன் நிர்வாக எல்லைகளை உருவாக்குதல்.
  • தமிழ்நாடு புவிசார்த் தகவல் அமைப்பு 10 துறைகளுடன் ஒருங்கிணைந்த 29 இடம் சார்ந்த அடுக்குகளைப் பிரதம மந்திரி கதிசக்தி இணைய தளத்துடன் பகிர்ந்துள்ளது.
  • ஊரக வளர்ச்சி, கலால் துறை, மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், நெடுஞ்சாலைகள் துறை போன்றவற்றுக்கான செயலிகளை உருவாக்குதல்.
  • 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் கீழ் பின்வரும் நடவடிக்கைகள் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன:
  • கூடுதல் வசதிகளுடன் ஏற்கனவே உள்ள இணைய தளத்தை மறுசீரமைத்து, அனைத்து வகையான இடம் சார்ந்தப் பகுப்பாய்வைச் செய்வதற்கும், இடைமுக நிரலிகள் மூலம் தரவைப் பகிர்வதற்கும் மற்றும் குறிப்பிட்ட ஆய்வு பொருள் கொண்ட தகவல் பலகைகளை உருவாக்குவதற்கும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒவ்வொருப் பருவத்திலும் விளையும் அனைத்துப் பயிர் குறித்தத் தகவல்களையும் புவிசார் சரிபார்ப்புடன் பதிவு செய்ய கைபேசி /இணையச் செயலியை உருவாக்குதல்.
  • இத்தரவு, அடங்கல் தரவுத் தளத்தைப் புதுப்பிப்பதற்கும், திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய புள்ளி விவரங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப் படும்.
  • சொத்துக்களுக்கான நில அளவை எண், தற்போதைய இடம், அருகிலுள்ள வசதிகள் / அரசாங்கத்தால் வழங்கப் பட்டு வரும் சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து விவரங்களைப் பெறுவதற்கான செயலியை உருவாக்குதல்.
  • திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைக்கான அனைத்து அரசாங்கச் சொத்துக்கள் மற்றும் வசதிகளை வரைபடமாக்குவதற்கான கைபேசிச் செயலியை உருவாக்குதல்.
  • அனைத்து உட்கட்டமைப்புத் தொடர்பான திட்டப் பணிகளின் உண்மை நிலை மற்றும் நிதி முன்னேற்றத்தைக் கண்காணிக்க புவிசார்  திட்டத் தகவல் அமைப்பு அடிப்படையிலான மேலாண்மைப் பயன்பாட்டை உருவாக்குதல், அனைத்துப் பயனரையும் கலந்தாலோசித்து, அனைத்து இடம் சார்ந்த தரவு அடுக்குகளுக்கானத் தரநிலைகளைத் தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு தயாரித்து வெளியிடும்.
  • அனைத்து இடம் சார்ந்த தரவு உள்ளடக்கங்களுக்கான தரவுப் பகிர்வு / பரிமாற்றக் கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் புவியியல் கொள்கை தயாரிக்கப் படும்.
  • தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்புக் குழு பல்வேறு துறைகளின் புவிசார் தகவல் குறித்தத் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் வலுப்படுத்தப் படும்.

உங்கள் அரசை அறிந்து கொள்ளுங்கள்  இணையதளம் (KYG  Website)

  • டிஜிட்டல் உலகின் சகாப்தத்தில், ஒரு அரசைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் முதன்மை தளமாக  இணையதளம் உள்ளது.
  • அதன் முதற்படியாக, தமிழ்நாடு அரசின் இணையதளமான tn.gov.in என்ற தளம் மறு வடிவமைப்புக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
  • இதன் முதல் கட்டமாக, தற்போதுள்ள மாநில இணையதளத்தை உலகத் தரம் வாய்ந்த வடிவமைப்புடனும், பயனர்கள் எளிய முறையில் அணுகும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையிலும் மறுவடிவமைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்தத் தகவல்களைப் பரப்பும் ஊடகமாக இந்த இணைய தளம் செயல்படும்.
  • இதன் முதற்கட்டமாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான திறன்மிகு உரையாடல் (CHATBOT) வசதியை இத்தளம் கொண்டிருக்கும்.
  • இந்தத் திறன்மிகு உரையாடல் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளின் விவரங்களைப் பொதுமக்கள் கண்டறியலாம்.
  • வாக்கெடுப்புகள், போட்டிகள், பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் பொது மக்களுடன் திறம்பட இணைந்து ஈடுபடுவதற்கான அம்சங்களை இந்த இணையதளம் கொண்டிருக்கும்.
  • பல்வேறு அரசுத் துறைகளால் உருவாக்கப்பட்ட மக்களுக்கான சேவைகள் வழங்கும் செயலிகளுக்கான தரவிறக்கம் செய்யக் கூடிய இணைப்பை இயக்குவதற்கான ஒரு ஒற்றைத் தளமாகவும் இந்த இணையதளம் விளங்கும்.
  • இரண்டாம் கட்டமாக தலைமைச் செயலகத் துறைகள், துறைத் தலைமையகங்கள் மற்றும் முகமைகள் மறுசீரமைப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  • தற்போது அரசுத் துறைகள், துறைத் தலைமை அலுவலகங்கள் மற்றும் அரசு முகமைகளின் இணையதளங்கள்  பல்வேறு மென்பொருள் உருவாக்குனர்களைக் கொண்டு நிர்வகிக்கப் படுகின்றன.
  • எதிர்காலத்தில் இத்தளங்கள் அரசின் KYG இணையதளக் குழுவால் நிர்வகிக்கப்படும்.
  • இத்திட்டம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் உள்ள குழுவால் வடிவமைக்கப்பட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள தேசியத் தகவலியல் மையம் மூலம் செயல்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (AI/ML)

  • பிரச்சனைகளைப் புதிய முறையில் அணுகிடவும், பொதுமக்களின் வாழ்வை அர்த்தமுள்ள முறையில் மேம்படுத்திடவும், செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் உதவும். அனைத்துத் துறைகளிலும் ஒரு ஒருங்கிணைந்தக் கூட்டு முயற்சியினை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை கவனம் செலுத்தி வருகிறது.
  • இதன் மூலம் தற்போது முக்கியத்துவம் அளிக்கப் படுபவை:
  • 1. நம்பகமான மற்றும் அணுகக் கூடியத் தரவு
  • 2. கணினிப் பார்வை
  • 3. குரல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன்மிகு உரையாடல்
  • 4. பயன்பாட்டுத் தரவு அறிவியல்
  • 5. புவியிடம் சார்ந்தப் பகுப்பாய்வு
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அனைத்து அரசுத் துறைகளுடன் ஒன்றிணைந்து மேற்கூறிய பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் நிறைவு செய்யப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட சில செயற்கை நுண்ணறிவு மக்கள் மற்றும் துறைகளின் பயன்பாட்டிற்காக அறிமுகப் படுத்தப் பட்ட சில செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் பின்வருமாறு:

இ-பார்வை : செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்புரையினைக் கண்டறிதல்

  • இந்தியாவில் கண்பார்வை இழப்புக்கு முக்கியக் காரணங்களில் கண்புரையும் ஒன்றாகும்.
  • ஆரம்ப நிலையிலேயே கண்புரையைக் கண்டறிவது பார்வை இழப்பைத் தவிர்க்க உதவும்.
  • தற்போது தமிழ்நாடு மின்னாளுமை முகமையானது கண்புரையை விரைந்து கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவு சார்ந்த கைபேசிச் செயலியை உருவாக்கியள்ளது.
  • மதுரை, நாகப்பட்டினம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இது முன்னோட்டமாக பரிசோதிக்கப் பட்டு, தற்போது 34 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்புரை கண்டறிதல் கைபேசிச் செயலியானது மாநிலம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதுவரை 20,000 கண்புரை நோயாளிகள் கண்டறியப்பட்டு, மேல் ஆலோசனை மற்றும் அறுவைச் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • கண்புரை நோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இ-பார்வை கைபேசிச் செயலி, நாஸ்காம் நிறுவனம் வழங்கும் தேசிய அளவிலான 2021 ஆம் ஆண்டுக்கான 'AI கேம் சேஞ்சர்ஸ்’ என்ற விருதை வென்றது.

முக அங்கீகார அடிப்படையிலான வருகைப் பதிவேடு அமைப்பு 2.0 (FRAS 20)

  • முக அங்கீகார அடிப்படையிலான வருகைப் பதிவேடு அமைப்பு 2.0 ஒரு ஆண்ட்ராய்டு செயலியாக உருவாக்கப்பட்டு மாநிலம் முழுவதும் செயலாக்கும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தச் செயலியின் மூலம் களப்பணியாளர்கள் தத்தம் பணியிடங்களிலிருந்துத் தங்களது வருகையைப் பதிவு செய்வதன் மூலம் அவர்களின் வருகை அவர்களின் புவி இருப்பிடத் தகவலுடன் குறிக்கப்படுகிறது.
  • தற்போது, பொதுச் சுகாதார இயக்குநரகத்திலுள்ள 1000 முன்கள சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு, சோதனை அடிப்படையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதன் நிறைவில், 35,000 முன்களச் சுகாதாரப் பணியாளர்களுக்கு இச்செயலி விரிவுபடுத்தப் படும்.
  • விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு இச்செயலியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி உள்ளன.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பூச்சி மற்றும் நோய் கண்டறிதல்

  • பூச்சியால் தாக்கப்பட்ட பயிரை விவசாயிகள் தங்கள் கைபேசியில் படம் பிடித்து "உழவன்" செயலியில் பதிவேற்றம் செய்ய முடியும்.
  • பயிரில் உள்ள பூச்சிகளைக் கண்டறிய தமிழ்நாடு  மின்னாளுமை முகமையால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட இச்செயலியானது பூச்சியினத்தைக் கண்டறிந்து அதைக் களைவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வழியே பரிந்துரைக்கும்.

நிதிப் பகுப்பாய்வுக் கருவி

  • நிதித் துறைக்காக உருவாக்கப்பட்ட நிதிப் பகுப்பாய்வுக் கருவிக்கான கருத்து ஆதாரம், கடன் மேலாண்மையைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கட்டமைப்பு : நம்பிக்கை இணையம்

  • நம்பிக்கை இணையக் கட்டமைப்புத் திட்டமானது தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அரசாங்கத் தரவு மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கவும், டிஜிட்டல்மயமாக்கப்பட்டச் சொத்துக்களின் ஆதாரங்களைக் கண்காணிக்கவும் ஒரு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பைப் பயன்படுத்த உதவும்.
  • இத்தளம் பல்வேறு மின்-ஆளுமைச் செயலிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
  • தற்போது இந்த இணையம் நிலப் பதிவுகளைப் பாதுகாத்தல், கல்வி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் இ-சேவைச் சான்றிதழ்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், நிறுவனங்கள், அலுவலர்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியோர் அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், ரசீதுகள் மற்றும் உரிமங்களைப் பாதுகாப்பாகச் சரிபார்க்க இயலும்.
  • கூடுதலாக, தமிழ்நாட்டின் தற்போதைய மற்றும் முந்தைய காலக் கட்ட நிலப் பதிவுகள் அனைத்தும் இத்தளத்தில் பாதுகாக்கப்படும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்