TNeGAயின் அரசுத் துறைகளுக்கான திட்டங்கள்
- தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான மென்பொருள் தொடர்பான பணிகளுக்கான ஒரு விருப்பக் கொள்முதல் நிறுவனமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நியமிக்கப் பட்டு உள்ளது.
- இம்முகமை தமிழ்நாடு அரசின் நிறுவனங்களுக்கு ஆலோசனைச் சேவைகள் மற்றும் திட்ட மேலாண்மைச் சேவைகளை வழங்கி வருகிறது.
- இம்முகமை, அரசுத் துறைகளுக்குத் தேவை அடிப்படையில் செயலிகள், இணையதளம், இணைய கைபேசிச் செயலிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் செயலிகள், தரவுப் பொறியியல் போன்றவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை உறுதி செய்கிறது.
- இம்முகமை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திடவும், தமிழ்நாட்டு மக்களுக்கானப் பொதுச் சேவைகளை வழங்கிடவும் வேண்டி தகவல் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தச் செய்வற்கான ஒரு கருவியாக உள்ளது.
- இம்முகமை முதல்வரின் முகவரி, புதுமைப் பெண், சட்டமன்ற செயலகப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கல், "ஊட்டச்சத்தை உறுதி செய்தல்" மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற அரசின் முதன்மைத் திட்டங்களைச் செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் வேண்டி அதற்குத் தொடர்புடைய அரசுத் துறைகளுக்கு உதவிகரமாக உள்ளது.
- இந்த அமைப்பு, நிதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வணிக வரிகள். பெருநகர சென்னை மாநகர காவல்துறை, வனத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலன், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, திட்டம் மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் தொழில்நுட்பச் சேவைகளை ஆலோசனையாக வழங்கி வருகிறது.
- 2022-23 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, பிற துறைகள் தங்கள் பழையக் கோப்புகளை டிஜிட்டல்மயமாக்கச் செய்தல், டிஜிட்டல் முறையில் சேவைகளை வழங்குவதற்கான செயலிகளை உருவாக்குதல், வலைதளங்கள் உருவாக்குதல், தரவுச் சேகரிப்புச் செயலிகள், திட்டக் கண்காணிப்புச் செயலிகள், சொத்து மேலாண்மைச் செயலிகள், திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்புச் செயலிகள், முழு அளவிலான நிறுவன வளத் திட்டமிடல் செயலிகள், ஆட்சேர்ப்புத் தீர்வைகள், நிதி ஆதாரத் தளங்கள், மின் கற்றல் தளங்கள் மற்றும் மின்னணு வணிகச் செயலிகள் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக உள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டம்
- தமிழ்நாடு அரசு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் (MRAHEAS) புதுமைப் பெண் திட்டத்தினைத் தொடங்கி அதனைச் செயல்படுத்தி வருகிறது.
- இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண்களின் சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தும் ஒரு தனித்துவமான திட்டமாக விளங்குகிறது.
- இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள அனைத்து மாணவிகளுக்கும் இளங்கலைப் பட்டம் / பட்டயம் / தொழிற்கல்விப் பயிற்சி / வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்டப் படிப்பை முடிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை, நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) வாயிலாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள முக்கிய அம்சமானது, பயனாளிகளைப் பதிவு செய்தல், தகுதியான மாணவிகளுக்கு ஒப்புதல் அளித்தல், பணம் செலுத்துதல் ஆகியவை இணைய தளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு அது தடையின்றிச் செயல்படுத்தப்பட்டு வருவதாகும்.
- இருமுறைப் பதிவு மற்றும் தவறான பதிவுகளைத் தவிர்ப்பதற்காக உயர்கல்வி நிறுவனங்களால் மட்டுமே விண்ணப்பப் பதிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் புதுமைகள்
- மாணவிகளின் அடிப்படை சுயவிவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பிலிருந்து (EMIS) பெறப்படுகின்றன. இது செயல்முறைத் தவறு மற்றும் தவறான தரவு உள்ளீட்டைத் தவிர்க்கிறது.
- மாணவிகளின் மீதான முன்னரே சரிபார்க்கப்பட்டத் தரவுகள்/ பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தரவுத் தளமாகப் பெறப்பட்டு, விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டுள்ளது. இது மாணவிகள் வங்கிக் கணக்கினைச் செயலில் வைத்திருக்கும் பட்சத்தில், விண்ணப்பத்தைத் தானாக அங்கீகரிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
- இத்திட்டம் ஆதார் அடிப்படையிலான e-KYC பயன்பாட்டின் மூலமாகவும் மற்றும் மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மற்றும் ஆதார் அட்டையிலிருந்துப் புகைப்படம் போன்றவற்றின் மூலமாகவும் அடிப்படை விவரங்களைச் சரிபார்க்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு உதவுகிறது.
- இந்தியத் தேசியப் பணம் செலுத்துகை நிறுவனத்தின் (NPCI) வரைபடமாக்கியுடன் கூடிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுக நிரலி (Application Programming Interface (API)) ஒருங்கிணைப்பு மூலம் மாணவிகளுக்கான செயலில் உள்ள வங்கியின் இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
- இது மாணவிகளுக்கு உதவித் தொகையினை ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுவதை உறுதி செய்ய உதவுகிறது.
திட்டத்தின் தாக்கம்
- பெரும்பாலானத் தரவுகள் பல்வேறு தரவுத் தளங்களிலிருந்துப் பெறப்படுவதால், இந்தப் பயன்பாடு விண்ணப்பத்தை நிரப்பும் நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
- தானியங்கி ஒப்புதல் வழங்குவது என்பது விண்ணப்பச் செயல்முறையை உடனடியாக முடிக்க உதவுகிறது.
- இத்திட்டத்தின் அறிவிப்புக்குப் பிறகு மாநிலம் முழுவதும் மாணவிகளின் கல்விச் சேர்க்கை எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துள்ளது.
- தற்போதைய நிலவரத்தின் படி, பள்ளிக் கல்வியை முடித்து 2 முதல் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சுமார் 14,758 மாணவிகள் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
- உயர்கல்வியைத் தொடராத மாணவிகளை (பள்ளிக் கல்விக்குப் பிறகு இடைநிற்றல்) கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியின் கீழ் கொண்டு வர, பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கு இந்த இணையதளம் உதவுகிறது.
- 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை, இத்திட்டத்தின் மூலம் சுமார் 2,02,824 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பதிவுகளை மின்னனுமயமாக்கல் மற்றும் மேலாண்மை செய்தல் (DMERL)
- 1921 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்தியாவின் மிகப் பழமையான சட்டமன்றங்களில் ஒன்றாகும். தொடக்கத்திலிருந்தே இப்பேரவை பல சுதந்திரப் போராளிகள், திறமை மிக்கவர்கள், சிறந்த மற்றும் குறிப்பிடத்தக்க தலைவர்களை கடந்த 100 ஆண்டுகளில் கொண்டிருந்தது.
- இந்த சட்டமன்றச் செயலகம், சில முக்கியச் சட்டங்களை இயற்றியதற்காக பெருமை பெற்றுள்ளது மட்டுமல்லாமல் பல முக்கிய விவாதங்கள் மற்றும் அறிவிப்புகள் இங்கு பதிவு செய்யப்பட்டு, சட்டமன்றத்தால் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட விவாதப் புத்தகங்கள், பல்வேறு குழுக்களின் அறிக்கைகள், பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தித்தாள் துணுக்குகள், படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் போன்ற சுமார் பத்து இலட்சம் அளவிலான பக்கப் பதிவுகளை, மேம்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மின்னணு மயமாக்கி நிர்வகிப்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டு உள்ளது .இதன்மூலம், சட்டமன்றத்தின் பாரம்பரியமிக்க மின்னணுமயமாக்கப்பட்டத் தகவல்களை இணைய தளம் மூலம் மக்கள் உடனடியாக அணுக முடியும்.
- இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறை முடிவடைந்து, முதற்கட்டமாக 1921 ஆம் ஆண்டு முதல் நாளது தேதி வரையிலான விவாதப் புத்தகங்களை மின்னணு மயமாக்கும் பணியானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டக் கைபேசிச் செயலி
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டக் கைபேசிச் செயலியானது, அரசுப் பள்ளிகளில் அதிக வருகை மற்றும் கல்விக் கற்றலை உறுதி செய்வதற்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் என்று உருவாக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு சமையல் விநியோகம் மற்றும் காலை உணவு வழங்கப் படுவதை கண்காணிக்க ஒரு மையப்படுத்தப்பட்ட சமையலறை அடிப்படையிலான கண்காணிப்புப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தப் பகுதியின் கீழ், சரியான நேரத்தில் உணவுப் பொருட்கள் எடுத்துப் செல்லப் படுவதையும் மற்றும் அதன் விநியோகத்தையும் உறுதி செய்ய ஒரு கண்காணிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
- இதில் இரண்டாவதாக பரவலாக்கப்பட்டப் பகுதி ஒன்று கிராமப்புறங்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளது. அதில் தொலைதூரமான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்காக நேரடித் தரவுச் சேகரிப்பு போன்ற கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமம், தொகுதி / மண்டலம், நகராட்சி / மாநகராட்சி மற்றும் மாவட்டம் போன்ற அளவில் உள்ள முக்கிய முடிவெடுப்பவர்கள் அதனைக் கண்காணிக்கும் வகையில் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் ஒரு நிகழ்நேரத் தகவல் பலகை கிடைக்கப் பெறும்.
- இதில் ஒரு விதிவிலக்காக இந்தக் கையாளுதலின் ஒரு பகுதியாக, முடிவெடுக்கும் அலுவலர்களுக்கு தினமும் காலை 11 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
நம்ம கிராம சபைக்கான அறிக்கையிடல் செயலி
- நம்ம கிராம சபைக்கானச் செயலியானது கிராம சபை நிகழ்ச்சி நிரல்கள், தீர்மானங்கள் ஆகியவற்றின் இணைய அறிக்கையுடன், குறைந்தபட்சப் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையுடன் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தச் செயலியில் இருந்து சேகரிக்கப்பட்டத் தரவுகள் புவி/நேர அளவில் முத்திரையிடப் பட்டு, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பங்கேற்பு முறை, தாக்கல் செய்யப்பட்ட மற்றும் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றை உடனடியாகப் பகுப்பாய்வு செய்ய ஊரக வளர்ச்சித் துறைக்கு உதவுகிறது.
- ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக தற்போது இந்தச் செயலியை ஊரக வளர்ச்சித் துறை பயன்படுத்துகிறது.
- வீடியோ பதிவு செய்தல், இணையத்திற்கும் வெளியில் தரவுகளைச் சேகரித்தல் போன்ற அம்சங்கள் அடுத்தடுத்தப் பதிப்புகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
- 12,525 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 388 ஊராட்சிகளிலிருந்து வரிசைப்படுத்தப்பட்ட நிரல்கள் மூலம் தரவுகளைச் சேகரித்தல், ஒத்திசைவு செய்தல் மற்றும் அதனைத் திருத்துதல் ஆகியவற்றின் சிரமத்தை சமாளிக்க இச்செயலி உதவுகிறது.
மற்ற துறைகளுக்கான முக்கிய திட்டங்கள்
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, டிஜிட்டல் சேவைகள் வழங்கும் அமைப்பை வடிவமைத்து மேம்படுத்துவதற்கு வேண்டி தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளை வழங்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
- பத்திரப்பதிவுத் துறையின் STAR 2.0 திட்டச் செயலாக்கம், சென்னைப் பெருநகரக் காவல் துறையின் மெகா சிட்டி திட்டச் செயலாக்கம், நிதிப் பகுப்பாய்வுச் செயலி, நிதித்துறைக்கான பொதுநிதிக் கண்காணிப்பு அமைப்பு, சுகாதாரத் துறைக்கான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்திற்கான தமிழ்நாடு ஒருங்கிணைந்த வீட்டு வசதித் தகவல் அமைப்பு, தமிழ் இணைய கல்விக் கழகத்திற்கு தமிழ் உள்ளீடு மற்றும் தமிழ் மென்பொருள் மேம்பாட்டிற்கான கருவிகளை அடையாளம் காண்பதில் உதவுதல் ஆகியவை இதில் சில எடுத்துக்காட்டுகளாகும்.
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், வனத்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் ஆகிய துறைகளுக்கு அவர்களின் வணிகச் செயல்முறைப் பணியினை முழுமையாக கணினி மயமாக்கிச் செயல்படுத்துவதற்கு உதவி செய்து வருகிறது.
- கணினிமயமாக்கல் மூலம், அரசுத் துறையால் வழங்கப்படும் சேவைகள் டிஜிட்டல் முறையில் இருக்கும். இது விரைவான சேவை வழங்கல் முறையை நடைமுறைப் படுத்துதல் மற்றும் அரசுத் துறைகள் வழங்கும் சேவையைத் திறம்படக் கண்காணித்தல் ஆகியவற்றைச் செயல்படுத்த உதவுகிறது.
-------------------------------------