TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின் வாரியம் எதிர்கொண்டு வரும் கடும் நிதி நெருக்கடி குறித்த தலையங்கம்

April 21 , 2022 838 days 442 0
  • தமிழகத்தில் தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிவதற்குள் ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசைப் பொருத்தவரையில் இது ஒரு சாதனை எனப் பெருமிதம் கொள்வதில் தவறில்லை என்றாலும், தமிழ்நாடு மின் வாரியம் எதிர்கொண்டு வரும் கடும் நிதி நெருக்கடியை இது மேலும் அதிகரித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
  • தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு கோரி மொத்தம் 4,52,777 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. தற்போது விவசாய பயன்பாட்டுக்கான இலவச மின் இணைப்புகளின் எண்ணிக்கை 22.80 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • நிகழ் நிதியாண்டில் (2022-23) மேலும் ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதால், மின் வாரியத்தின் நிதிச் சுமை மேலும் உயரும் என்பது திண்ணம். விவசாய பயன்பாட்டுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக நிகழ் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.5,157.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மின் வாரியம் எப்படி சமாளிக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
  • கடந்த 1957-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் தமிழ்நாடு மின் வாரியம் உருவாக்கப்பட்டது. இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. மின் உற்பத்தி, மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், விநியோகம் ஆகிய மூன்றும் இந்த ஒரே அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 2003-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (டான்ஜெட்கோ), தமிழ்நாடு மின்சாரம் கொண்டு செல்லுதல் நிறுவனம் (டான்டிரான்ஸ்கோ) என இரு அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டன.
  • நிர்வாக வசதிக்காக இரு அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டாலும், தமிழ்நாடு மின் வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மின் வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்க முடியாத அசாதாரண சூழல் தொடரத்தான் செய்கிறது. தமிழ்நாடு மின் வாரியத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.1,50,000 கோடியாக உள்ளது. இந்தக் கடனுக்கு வட்டி கட்டக்கூட முடியாமல் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது மின் வாரியம்.
  • புதிய மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாரத்தை அளவீடு செய்வதற்கான மீட்டர் சாதனங்கள், துணை மின் நிலையங்கள் பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுதோறும் ரூ.12,000 கோடி தேவைப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மின் வாரியத்தின் மொத்த வருவாய்க்கும், மொத்த செலவினத்துக்கும் இடையிலான பற்றாக்குறை ஏறத்தாழ ரூ.12,000 கோடி என்ற நிலை தொடர்கிறது. இந்தப் பற்றாக்குறையானது 2018-19-ஆம் ஆண்டில் ரூ.12,623 கோடியாகவும், 2019-20-ஆம் ஆண்டில் ரூ.11,964 கோடியாகவும், 2020-21-ஆம் ஆண்டில் ரூ.12,685 கோடியாகவும் இருந்தது.
  • மின் உற்பத்தி, விநியோகம், ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றுக்காக ஒரு யூனிட்டுக்கு ரூ.9 செலவிடுகிறது டான்ஜெட்கோ. ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் மூலம் அதற்குக் கிடைக்கும் வருவாய் ரூ.7 மட்டுமே. இதனால், தமிழக நிதிநிலை அறிக்கையில் மின் வாரியத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது.
  • மேலும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மட்டுமல்லாது, 9 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரத்தை மின் வாரியம் வழங்குகிறது. இவைதவிர, வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், விசைத்தறிகளுக்கு சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டு வரும் மின் வாரியத்துக்கு கடந்த நிதியாண்டில் மாநில அரசு மானிய உதவியாக ரூ.8,000 கோடி மட்டுமே அளித்துள்ளது.
  • விவசாய மின் இணைப்புகளுக்கு மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கீடு செய்வதற்கான மீட்டர் இதுவரை பொருத்தப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் மீட்டர் பொருத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அது கைவிடப்பட்டது. ஆனால், விவசாயப் பயன்பாட்டுக்காக இலவச மின் இணைப்புகள் வழங்கப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ஈடுகட்ட மின் வாரியத்துக்கு எவ்வளவு காலத்துக்கு மானியம் அளிக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • அதோடு, ஆண்டுதோறும் கோடையில் ஏற்படும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. இந்த ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் தலா 3,000 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான நிதியை மின் வாரியம் எங்கிருந்து திரட்டப் போகிறது என்பது தெரியவில்லை.
  • பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் புதிதாகத் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கான மின் தேவையைச் சமாளிக்கும் விதத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழலையும் தமிழ்நாடு மின் வாரியம் எதிர்கொண்டாக வேண்டும். இலவசங்களும், மானியங்களும் வாக்கு வங்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமானால் அரசு திவாலாகிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. இப்படியே போனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடத் தடுமாறும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது.

நன்றி: தினமணி (21 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்