கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூரில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும். மேலும் இது சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இங்குள்ள கருவேல மரங்களின் வளர்ச்சியடைந்த காடுகள் பலவகையான புலம்பெயர் நாரையினங்களுக்கு அடைகாக்கும் தளமாக உள்ளன.
இந்த சரணாலயத்தின் காடுகளானது வெப்பமண்டல வறண்ட இலையுதிர் வகையைச் சேர்ந்ததாகும்.
இந்தச் சரணாலயமானது குளிர்கால புலம்பெயர் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை ஐபிஸ், கருப்பு ஐபிஸ், சிறிய வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு ஆகியவற்றிற்கு சிறந்த வாழ்விடத்தை வழங்குகிறது.
காலனித்துவ பறவைகளான நாரை இனங்களானது இங்கு அதிக அளவில் காணப்படுகின்றது. 170-க்கும் அதிகமான பறவையினங்கள் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
முட்புதர் காடுகளும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் அமைப்பாலும் இந்த காடுகளானது பெரிய அல்லது நடுத்தர உருவமுடைய பாலூட்டிகளின் வாழ்விற்கு உகந்ததாக இல்லை.
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
சித்திரங்குடி கண்மாய் என்றறியப்படும் இந்த சித்திரங்குடி பறவைகள் சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சித்திரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
இது கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த சரணாலயமானது பெரும்பாலும் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளால் ஆனது.
அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்ககு இடைப்பட்ட காலங்களில் புள்ளி அலகு கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, சிறிய கொக்கு, பெரிய கொக்கு போன்ற நீர்ப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு புலம்பெயர்கின்றன.
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
பல்வேறு வகையான பறவைகளின் வாழ்விடமான உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமானது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
இந்தச் சரணாலயத்தின் பல்வேறு வாழ்விடங்களில் அல்லியினங்கள், நாணல் புதர்கள் மற்றும் நீர்வாழ் புல் இனங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏராளமான நீலத்தாடைக் கோழி, நத்தைக் குத்தி நாரை ஆகியவை இங்கு காணப்படுகின்றன.
மேலும் புலம்பெயர் பறவைகளான நாமக் கோழி, சாம்பல் நாரை, இராக் கொக்கு, செந்நாரை, சிறிய ரக நீர்க் காகம், பாம்புத் தாரா, கரைக் கொக்கு, வெண்கழுத்து நாரை போன்றவை இங்கு வருகை தருகின்றன.
நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இங்கு சுமார் 10,000 பறவைகள் கூடுகின்றன.
வடுவூர் பறவைகள் சரணாலயம்
வடுவூர் பறவைகள் சரணாலயமானது திருவாரூர் மாவட்டத்தின் வடுவூரில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து பல வெளிநாட்டுப் பறவைகளை ஈர்க்கும் இந்த நீர்ப்பாசன பகுதியானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் தண்ணீரைப் பெறுகின்றது.
பறவைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான மீன்களை இங்குள்ள பல ஏரிகள் வழங்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 38 வகையான வெவ்வேறு பறவையினங்களைச் சேர்ந்த 20,000 பறவைகள் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
கூந்தன்குளம் - காடங்குளம் பறவைகள் சரணாலயம்
1994 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கூந்தன்குளம் - காடங்குளம் பறவைகள் சரணாலயமானது ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
இது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குனேரி வட்டத்திலுள்ள கூந்தன்குளம் எனும் குக்கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்தச் சரணாலயமானது கூந்தன்குளம் மற்றும் காடங்குளம் ஆகியவற்றின் நீர்ப்பாசனப் பகுதியை உள்ளடக்கியதாகும்.
இது காடங்குளம் கிராம மக்கள் சமூகத்தால் நிர்வகிக்கப்பட்டு தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் 43 வகையான குடியிருப்பு மற்றும் புலம்பெயர் நீர்வாழ்ப் பறவையினங்கள் இங்கு வருகை தருகின்றன.
டிசம்பர் மாதத்தில் 100,000-க்கும் அதிகமான புலம்பெயர் பறவைகள் வருகை தந்து ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் அவற்றின் வடக்குப்புறத் தாயகத்திற்குத் திரும்பி விடுகின்றன.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
கரைவெட்டி பறவைகள் சரணாலயமானது அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கின்ற இந்த நன்னீர் ஏரியானது புல்லம்பாடி, கட்டலால் கால்வாய் ஆகியவற்றால் நிரப்பப்படுகின்றது.
இந்தச் சரணாலயமானது தமிழ்நாட்டில் புலம்பெயர் நீர்வாழ்ப் பறவைகளுக்கு உணவளிக்கும் ஒரு மிக முக்கியமான நன்னீர் தளமாகும்.
இது தமிழ்நாட்டில் உள்ள மற்ற பகுதிகளை விட அதிகபட்சமான நீர்வாழ் பறவைகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 188 இனங்களில் 82 இனங்கள் நீர்வாழ்ப் பறவையினங்களாகும்.
இந்தச் சரணாலயமானது பட்டைத் தலை வாத்து, ஊசி வால் வாத்து, வெள்ளை நாரை, நீலச்சிறகி, நீலச்சிறகு கிளுவை, வராலடிப்பான் மற்றும் உள்ளான் போன்ற புலம்பெயர் பறவைகளுக்குத் தாயகமாக உள்ளது.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயமானது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அயல்நாட்டுப் பறவைகளின் தாயகமான இந்த மிகப்பெரிய ஏரியானது மிதமான அடர்த்தி கொண்ட புதர்களால் சூழப்பட்டுள்ளது.
இந்தச் சரணாலயமானது மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இது மிகப்பெரிய ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் அதனைச் சுற்றி காடுகள் ஏதுமில்லை.
இந்தச் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பறவையினங்கள் வருகை தருகின்றன. மேலும் அவற்றில் நீர்க் காகம், கிளுவை, ஊசிவால் வாத்து, கூழைக் கடா, பாம்புத் தாரா போன்றவை எளிதில் அடையாளம் காண முடிபவையாகும்.
.
மேலசெல்வனூர் - கீழசெல்வனூர் பறவைகள் சரணாலயம்
மேலசெல்வனூர் - கீழசெல்வனூர் சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தின் காயல்குடிக்கு அருகே அமைந்துள்ளது.
1998 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தச் சரணாலயமானது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும்.
இது இராமநாதபுரத்தின் சிறந்த நாரைகள் அடைகாக்கும் தளமாக கருதப்படுகின்றது.
குளிர்காலத்தில் இந்தச் சரணாலயமானது 40 பறவையினங்களை ஈர்க்கின்றது.
யுரேசிய துடுப்பு வாய்ப் பறவை, மஞ்சள் மூக்கு நாரை, மற்றும் தோணிக் கொக்கு ஆகிய மூன்று பறவையினங்களும் இந்தச் சரணாலயத்தின் முதன்மை இனங்களாகும்.
கூழைக் கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை ஐபிஸ் மற்றும் வெள்ளைக் கொக்கு ஆகியவை இந்த சரணாலயத்தில் பொதுவாக வசிக்கும் பறவைகளாகும்.
தீர்த்தங்கல் பறவை சரணாலயம்
தீர்த்தங்கல் பறவை சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது பல வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர் பறவைகளின் தாயகமாகும்.
சக்கரக்கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம்
சக்கரக் கோட்டை ஏரி பறவைகள் சரணாலயமானது பொதுவாக இராமநாதபுரத்தில் விவசாயத்திற்கு நீர் சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்ப்பாசன ஏரி ஆகும்.
இது அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான வடகிழக்குப் பருவமழையினால் நிரப்பப் படுகின்றது.
இது பரவலான பறவையினங்களுக்கான முக்கியமான மற்றும் தனித்துவமான வாழ்விடமாகும்.
இந்தச் சரணாலயமானது 42-க்கும் மேற்பட்ட பறவையினங்களுக்கு சூழலியல் சார் நீடித்த வாழ்விடத்தை அளிக்கின்றது.
பருவ காலங்களில் 30 வகை இனங்களைச் சேர்ந்த சுமார் 5000 பறவைகளும் பலவகையான புலம்பெயர் பறவைகளும் உணவிற்காக இங்கு வருகின்றன.
மேலும் அரிய வகையான, அபாயத்திலுள்ள, அச்சுறு நிலையில் உள்ள பறவைகளான பெரிய நீர்க் காகம், செந்நாரை, செண்டு வாத்து, கிளுவை, பவழக் காலி, பச்சைக் காலி போன்றவற்றினையும் இச்சரணாலயம் கொண்டுள்ளது.