TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் நிதிச் சுமைக்கு என்ன தீர்வு?

June 23 , 2021 1135 days 494 0
  • தமிழக அரசின் கடன் மார்ச் 2021 முடிய ரூ.4.85 லட்சம் கோடியைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இரண்டு முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும்.
  • ஒன்று, தமிழக அரசின் கடன் அளவு சட்டரீதியான அளவைவிடக் குறைவாக இருந்தாலும், இந்தக் கடன் மீதான வட்டியைச் செலுத்துவதும், அடுத்து வரும் ஒருசில ஆண்டுகளில் மிகப் பெரிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதாலும் இந்தக் கடன் அளவு பெரிய சுமையாக உள்ளது.
  • இரண்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பெறும் கடன் மீதான வட்டி விகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழக அரசு மீது நிதிச் சந்தை வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுகிறது.
  • இதனால், அடுத்த ஆண்டுகளில் தமிழக அரசு மேலும் அதிக வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டும். இதனால், வருங்கால நிதிச் சுமை அதிகரிக்கும்.

அரசு நிறுவனங்களின் கடன்

  • தமிழக அரசின் கீழ் 51 வியாபார நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்தக் கடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2018 மார்ச் முடிய ரூ.1.68 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
  • இதற்கு என்ன காரணம்? அடிப்படையில், ஒரு நிறுவனத்தின் நடப்பு வருவாயைவிடவும் நடப்புச் செலவு குறைவாக இருக்க வேண்டும்.
  • ஆனால், இதில் உள்ள பெரும் பகுதி நிறுவனங்களின் நடப்புச் செலவானது நடப்பு வருவாயை விட மிக அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இந்த நிறுவனங்களில் அரசு தலையீடு அதிகமாக உள்ளதுதான்.
  • எப்போதெல்லாம் அரசு இந்த நிறுவனங்களின் விலை நிர்ணயத்தில் தலையிடுகின்றனவோ அப்போதெல்லாம் அரசுதான் அதனால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டும்.
  • அதற்கு மாறாக, அந்த நிறுவனங்களைக் கடன்வாங்க வைப்பது என்பது அரசு நேரடியாகக் கடன் வாங்குவதற்குச் சமம்.
  • இதன்படி, அரசு நிறுவனங்களின் கடன் அளவைத் தமிழக அரசின் கடன் அளவுடன் சேர்க்க வேண்டும். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் மேலும் அதிக அளவில் கடன் வாங்கியிருக்க வேண்டும்.
  • உதாரணமாக, கரோனா காலத்தில் போக்குவரத்து நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படவில்லை; ஆனால், அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கியாக வேண்டும்.
  • இது டாஸ்மாக் நிறுவனத்துக்கும் பொருந்தும், மின்சார வாரியத்துக்கும் பொருந்தும். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு நிறுவனங்களின் கடன்சுமை ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியிருக்க வேண்டும்.
  • இதிலும் வட்டி அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு நேரடியாக வாங்கும் கடன் மீதான வட்டியைவிட அதிக வட்டி விகிதத்தில்தான் அரசு நிறுவனங்கள் கடன் வாங்கித் தங்கள் நிதிச் சுமையை அதிகமாக்கியுள்ளன.

தவிர்க்க முடியாத செலவினங்கள்

  • கடந்த நிதியாண்டு முதல் இன்று வரை கரோனா தொடர்பான மருத்துவச் செலவுகள் அதிகமாக உள்ளன. இவை மேலும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
  • ஆக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மருத்துவத் துறைச் செலவுகள் இரண்டு மடங்காக உயரக் கூடும்.
  • கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால் உணவு மானியம், கருணைத் தொகை என்று பல செலவினங்கள் ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில் அவற்றை மேலும் அதிகமாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
  • கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகக் கல்வி கற்காமல் இருக்கும் நமது மாணவர்களின் கற்றலை உயர்த்தப் பல புதிய முறைகளை அதிகப் பொருட்செலவில் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
  • கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு நிறுவன ஊழியர்களுக்குக் கொடுக்காமல் இருக்கும் பஞ்சப் படியைச் சேர்த்து கொடுக்க வேண்டும்.
  • அரசு வேலைகளுக்குப் புதிய ஆள்சேர்க்கை பெரிய அளவில் நடத்தினால் மட்டுமே வேலையின்மையைக் குறைக்க முடியும். இதனால், மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகி மேலும் வர்த்தகம் பெருகும்; பொருளாதாரம் உயரும். இதுவும் அரசின் செலவைப் பெரிய அளவில் உயர்த்தும்.
  • சிறு குறு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு, சுயதொழில் முனைவோருக்கு நீண்ட காலக் கடன்தொகையைக் குறைந்த வட்டியில் கொடுக்க வேண்டும்.
  • விவசாயத்துக்கு இடுபொருட்களை மானிய விலையில் கொடுப்பது, நீர் மேலாண்மையைச் சரி செய்வது, விளைந்த பொருட்களைச் சந்தைப்படுத்துவது, மதிப்புக் கூட்டுவது என்று பல பிரச்சினைகள் மாநில அரசின் கவனத்தைக் கவரக் காத்திருக்கின்றன.
  • இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழக அரசின் நிதிநிலை தற்போது உள்ள ரூ.2.85 லட்சம் கோடி இந்த நிதியாண்டிலேயே ரூ.3.50 லட்சம் கோடியாக அதிகரிக்கக்கூடும். அடுத்த சில ஆண்டுகளிலும் இதுபோன்று செலவினங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான நிதி ஆதாரம் எங்கே?

மாநில அரசின் நிதி ஆதாரம்

  • பெட்ரோல் மற்றும் மதுபானங்கள் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே அரசின் வரிவருவாயில் 50% வருவாயைத் தந்துவிடுகின்றன. இவை இரண்டிலும் வரி ஏய்ப்புக்கான வழிமுறைகளும் அதிகம் உள்ளன. எனவே, வரி ஏய்ப்பைக் குறைத்து அதிக வரி வசூலிப்பது முதல் வேலை. இதில் எந்த வரிச் சலுகையும் கொடுக்கக் கூடாது. ஜிஎஸ்டி வரி வருவாயையும் முறையாக வசூலிக்க வேண்டும்.
  • சொத்து பரிவர்த்தனை மீதான வரிவருவாய் குறையும்போது அதை ஈடுசெய்வதற்கு வரியல்லாத வருவாய் வகையில் மாநிலத்தில் உள்ள கனிமங்களால் கிடைக்கும் வருவாயை முழுமையாகப் பெற வேண்டும். இதனால், மாநில அரசின் சொந்த வருவாயை 25% கூடுதலாகப் பெற முடியும்.
  • ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய வரிப் பங்கு, மானியப் பங்கு, ஜிஎஸ்டி வருவாய் என்ற பலவும் கிடைக்கப்பெறாமல் இருப்பதாகத் தெரிகிறது.
  • இது பற்றிய முழு அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைத்து ஒன்றிய அரசுக்கு ஜனநாயக முறையில் அழுத்தம் கொடுத்துத் தமிழகம் பெற வேண்டிய நிதிப் பங்கைப் பெற வேண்டும்.
  • இவை எல்லாவற்றையும் பெற்ற பிறகும் தமிழக அரசானது கடன் பெற வேண்டியிருக்கும். எனவே, கடன் சுமையைக் குறுகிய காலத்தில் குறைக்க முடியாது. நீண்ட காலத்தில் குறைப்பதற்கு ஒரே வழி பொருளாதார முன்னேற்றம்தான்.
  • பொருளாதார முன்னேற்றம் மட்டுமே ஒருபுறம் வரி வருவாயை உயர்த்தும்; மற்றொரு புறம் செலவினங்களைக் குறைக்கும். அரசுத் துறைகள், நிறுவனங்கள் சிறப்பாகச் செயலாற்றினால் மட்டுமே இந்த முன்னேற்றம் சாத்தியமாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்