TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 03

July 21 , 2024 6 hrs 0 min 109 0

(For English version to this please click here)

16. ஜானகி அம்மாள்

ஆரம்ப கால வாழ்க்கை

  • நாடக கலைஞரான ஜானகி அம்மாள், 1917 ஆம் ஆண்டு மதுரையில் பத்மநாபன் மற்றும் லட்சுமிக்கு மகளாகப் பிறந்தார்.
  • எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார்.
  • பழனியப்பா பிள்ளை பாய்ஸ் நிறுவனத்தில் பாடகியாக சேர்ந்த அவர், பின்னர் முன்னணி நடிகையானார்.
  • அவர் குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை மணந்தார்.

அரசியல் செயல்பாடு

  • 1930 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இசை நிகழ்ச்சி நடத்தியபோது முதன்முறையாக கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார்.
  • தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முதல் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • அரசியல் மற்றும் சுதந்திர இயக்கம் மீதான இவரது ஆர்வம் இவரை நடிப்பை விட்டு விலகச் செய்தது என்பதோடு, இவர் சமூகச் சேவையில் நேரத்தையும், பணத்தையும் அதிகம் செலவிடத் தொடங்கினார்.
  • இவர் நாடகக்கலை மூலம் ஈட்டிய அனைத்தையும் மக்களுக்காகவே செலவழித்தார்.

அரசியலில் ஈடுபாடு

  • இவர் 1936 ஆம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்து அந்தக் கட்சியின் ஒரு முக்கியப் பேச்சாளராக மாறினார்.
  • பின்னர், கம்யூனிஸ்ட் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, 1940 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

சட்டமன்ற வாழ்க்கை

  • 1967 ஆம் ஆண்டில், ஜானகி மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கான ஊதியத்தை முறைப்படுத்துதல் போன்ற பல போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கினார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் இறப்பு

  • இவர் சுதந்திரப் போராட்ட வீரருக்கான ஓய்வூதியம் மற்றும் 'தாமரை பட்டயம்' ஆகியவற்றை மறுத்து விட்டார்.
  • பலமுறை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது உடல்நிலை பலவீனமடைந்ததோடு ஆஸ்துமா காரணமாக மார்ச் 1, 1992 அன்று இவர் காலமானார்.

17. மாயாண்டி பாரதி

ஆரம்ப கால வாழ்க்கை

  • மாயாண்டி பாரதி 1917 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.
  • 1932 ஆம் ஆண்டில் அந்நியத் துணி மற்றும் மதுபானங்களை விற்கும் கடைகளுக்கு எதிரான பேரணியின் போது நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது பிரிட்டிஷ் போலீசார் தடியடி நடத்தியதை இவர் தனது 14 வயதில் கண்டார்.
  • காவல்துறையினரால் தாக்கப்பட்ட இந்த சம்பவம் இவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அரசியல் செயல்பாடு

  • இந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட பாரதி, சுதேசிப் பொருட்கள் மற்றும் காதியை ஊக்குவிக்கும் பேரணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • அவர் போர் நிதிச் சேகரிப்பை எதிர்த்தார் என்பதோடு 1940 மற்றும் 1946 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டார்.
  • இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கே.பி. ஜானகி அம்மாள், எம்.ஆர்.வெங்கடராமன், சீதாராமையா போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டார்.
  • காந்தியவாதியாக இருந்தாலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் பெரிதும் போற்றிய இவர் 1939 ஆம் ஆண்டு போஸ் மதுரைக்கு விஜயம் செய்த போது வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தார்.

பத்திரிகை மற்றும் எழுத்து

  • பாரதி இலக்கியம் மற்றும் பத்திரிகைக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை இவர் வழங்கினார்.
  • அவர் ஏராளமானப் புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதோடு 1944 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரையில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் இதழான ‘ஜனசக்தி’யின் ஆசிரியராக பணியாற்றினார்.
  • இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாக்சிஸ்ட்) தமிழ் நாளிதழான ‘தீக்கதிர்’ ஆசிரியாராகவும் அவர் பணியாற்றினார்.

18. எஸ். சீனிவாச ஐயங்கார்

ஆரம்ப கால வாழ்க்கை

  • எஸ். சீனிவாச ஐயங்கார் 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னை மாகாணத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ஒரு முக்கிய நில உரிமையாளரான சேஷாத்ரி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி மற்றும் சட்ட வாழ்க்கை

  • சீனிவாச ஐயங்கார் சட்டத்தில் பட்டம் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  • இவர் சட்டத் துறையில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றதோடு 1916 ஆம் ஆண்டில் அட்வகேட்-ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார்.
  • பார் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், ஆளுநரின் நிர்வாகக் குழுவின் ஒரு சட்ட உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

அரசியல் செயல்பாடுகள்

  • 1920 ஆம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சீனிவாச ஐயங்கார் தனது அட்வகேட்-ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ததோடு ஆளுநரின் நிர்வாகக் குழுவில் இருந்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் இவர் இந்தியப் பேரரசின் தோழர் பட்டத்தினை (C.I.E) துறந்தார்.
  • இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
  • 1923 ஆம் ஆண்டில், தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக மகாத்மா காந்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்ற மற்ற தலைவர்களுடன் இவரும் காங்கிரஸில் இருந்து விலகினார்.
  • இந்தப் பிரிவு சுயராஜ்யக் கட்சியை உருவாக்கியது.

தலைமைப் பண்புகள்

  • சீனிவாச ஐயங்கார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், பின்னர் சென்னை மாகாண சுயராஜ்யக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • இவர் 1926 ஆம் ஆண்டுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற போதிலும், சுயராஜ்ஜியக் கட்சியின் தலைவராக இருந்தார்.
  • 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மதராஸ் மாகாண மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கியதோடு அகமதாபாத் (1921), கயா (1922), காக்கிநாடா (1923), டெல்லி (1923), பெல்காம் (1924), கான்பூர் (1925), கௌஹாத்தி (1926), மதராஸ் (1927), கல்கத்தா (1928), மற்றும் லாகூர் (1929) ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வுகளிலும் அவர் பங்கேற்றார்.

பங்களிப்புகள் மற்றும் பிற்கால வாழ்க்கை

  • சீனிவாச ஐயங்காரின் அயராத உழைப்பின் காரணமாக, சுமார் ஒரு தசாப்தக் காலத்திற்கு சென்னையில் காங்கிரசிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வழிகாட்டுதலை இவர் வழங்கினார்.
  • இவர் 1926 ஆம் ஆண்டில் கௌஹாத்தி காங்கிரஸின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதோடு அங்கு இரு சமூகங்களுக்கிடையில் அவர் ஒரு தற்காலிக அரசியல் உடன்பாட்டை மேற் கொண்டு, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை மேம்படுத்தப் பாடுபட்டார்.
  • 1927 ஆம் ஆண்டில், இவர் எதிர்கால இந்தியாவுக்கான கூட்டாட்சி அரசாங்கம் என்ற திட்டத்தைக் கோடிட்டுக் காட்டும் ‘சுயராஜ்ஜிய அரசியலமைப்பை’ வெளியிட்டார்.
  • இவர் இந்திய சுதந்திர லீக்கை நிறுவியதோடு சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்.
  • டொமினியன் அந்தஸ்து குறித்த மற்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளுடனான பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக, இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனாலும் 1938 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்குத் திரும்பி சிறிது காலம் பணியாற்றினார்.
  • எஸ். சீனிவாச ஐயங்கார் 1941 ஆம் ஆண்டு மே 19 அன்று சென்னையில் காலமானார்.

19. மதுரை ஏ. வைத்தியநாத ஐயர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • ஏ. வைத்தியநாத ஐயர் 1890 ஆம் ஆண்டு மே 16 அன்று தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம்பேட்டை கிராமத்தில், சென்னை மாகாணத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை அருணாசலம் ஐயர், புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி பின் தாம் ஓய்வு பெற்ற பிறகு மதுரையில் குடியேறினார்.
  • ஏ. வைத்தியநாத ஐயர் 1909 ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை (எஸ்.எஸ்.எல்.சி) முடித்து, இந்த மாநிலத்தில் இரண்டாமிடமும் மற்றும் கணிதத்தில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கமும் பெற்றார்.
  • இவர் மதுரை கல்லூரியில் நுண்கலைப் படிப்பில் சிறந்து விளங்கினார்.
  • மேலும் மாநில அளவில் நான்காவது இடத்தைப் பெற்று அவர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் ஃபிஷர் ஆகிய தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
  • 1914 ஆம் ஆண்டு மதராஸ் பிரசிடென்சி கல்லூரியில் முதல் வகுப்பில் பிஏ பட்டத்தினைப் பெற்றார்.
  • பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மசூலிப்பட்டினம் இந்து மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்ற பிறகு, அவர் சட்டப் படிப்பைத் தொடர்ந்து ஒரு வழக்கறிஞரானார்.
  • ஏ. வைத்தியநாத ஐயர் மதுரையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு. நடேச ஐயரின் கீழ் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார்.
  • நடேச ஐயரின் வைத்தியநாத ஐயரைச் சொந்த வழக்கறிஞர் தொழிலைத் தொடங்க வேண்டி ஊக்குவித்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றல்

  • ஏ. வைத்தியநாத ஐயர் பின்னர் பிபின் சந்தர் பால் உரையாற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தண்டனையை எதிர்கொண்டார் என்றாலும் தனது நம்பிக்கைகளில் அவர் மிக உறுதியாகவே இருந்தார்.
  • மகாத்மா காந்தியின் வருகைகளும், ஒத்துழையாமை இயக்கமும் ஏ. வைத்தியநாத ஐயரை மிக ஆழமாகப் பாதித்தன.
  • இவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் காதி விளம்பரத்தில் ஈடுபட்டார்.
  • 1924 ஆம் ஆண்டளவில் காதி உற்பத்தி மற்றும் விற்பனையில் மாநிலத்தின் முதலிடத்தை பெற மதுரை மாவட்டத்தில் அவர் பெரும் முயற்சிகளை முன்னெடுத்தார்.
  • காதி இயக்கத்தின் மீதான வைத்தியநாத ஐயரின் அர்ப்பணிப்பு அதன் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
  • இவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்தார், தீண்டாமைக்கு எதிராகப் போராடினார், மற்றும் சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தினார்.
  • 1930 ஆண்டு உப்புச் சத்தியாகிரக அணிவகுப்பின் போது, ​​திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபயணத்தின் தெற்குப் பகுதியை ஒருங்கிணைத்தார் என்பதோடு அவரது இந்தச் செயல்பாட்டிற்காக அவர் கைதும் செய்யப்பட்டார்.
  • அடுத்தடுத்த ஆண்டுகளில், மதுவுக்கு எதிரான போராட்டங்கள், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தல், இரண்டாம் உலகப் போரின் தாக்கங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரங்களுக்கு ஏ. வைத்தியநாத ஐயர் தலைமை தாங்கினார்.
  • மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் இவர் முக்கியப் பங்காற்றினார், மிகக் குறிப்பாக 1940 ஆம் ஆண்டில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான மத வன்முறை மோதலை பெருமளவில் தணித்தார்.

சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கோவில் நுழைவு இயக்கம்

  • ஏ. வைத்தியநாத ஐயர், கோவில் நுழைவு இயக்கத்தின் முக்கியப் பிரமுகராக இருந்தார், என்பதோடு தீண்டாமையை ஒழிக்கவும், தலித்துகளுக்கு கோவில் நுழைவை உறுதி செய்யவும் அவர் அயராது உழைத்தார்.
  • 1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தலித்துகள் நுழைவதற்கு இவரது பெரும் முயற்சிகள் நன்கு வழி வகுத்தன.
  • தனது சமூகத்திலிருந்து அவரது வெளியேற்றம் உட்பட மிகவும் கடுமையான பின்னடைவை தனது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட போதிலும், ஏ. வைத்தியநாத ஐயரின் உழைப்பு குறிப்பிடத்தக்க சமூகச் சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்தது.

சட்டமன்ற உறுப்பினராகப் பங்களிப்பு

  • 1946 ஆம் ஆண்டில், ஏ. வைத்தியநாத ஐயர் மதுரை - மேலூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் அமைச்சர் பதவியை நிராகரித்தாலும், இவரது பங்களிப்பு அதில் குறிப்பிடத்தக்கது.
  • இவர் தலித் நலன், கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மிகவும் வாதிட்டார்.
  • பொது சுகாதாரத்தை மேம்படுத்தச் செய்தல் மற்றும் தனது தொகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் இவர் செய்த பணிகள் அவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத் தந்தது.

விருந்தோம்பல் மற்றும் சமூக சேவை

  • முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை விருந்தளித்து வந்த வகையில் ஏ. வைத்தியநாத ஐயர் தனது விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்,.
  • சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட தேவைப்படும் நபர்களுக்கு இவர் பல்வேறு உதவிகளைச் செய்தார்.

மரபு

  • அயராத உழைப்பால் ஏ. வைத்தியநாத ஐயரின் உடல்நலம் குன்றி, 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
  • இவர் பிப்ரவரி 23, 1955 அன்று காலமானார்.
  • இவரது நினைவாக தபால் தலை வெளியிடப் பட்டது என்பதோடு இவரது வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தால் வெளியிடப்பட்டது.
  • மதுரையில் ஒரு தெரு அவரது பெயரைக் கொண்டு அவரது நினைவாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது என்பது தமிழ்நாடு மற்றும் பரந்த இந்திய சுதந்திர இயக்கத்தின் மீதான அவரது நீடித்த தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்