TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 06

August 22 , 2024 143 days 759 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 06

(For English version to this please click here)

29. ஜே.சி. குமரப்பா (பச்சை காந்தி)

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ் என்ற பெயரில் ஜனவரி 4, 1892 ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ஜே.சி.குமரப்பா, தமிழ்நாட்டின் தஞ்சையில் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இவர் திரு. சாலமன் துரைசாமி (சென்னை அரசின் பொதுப்பணித்துறை அதிகாரி) மற்றும் திருமதி ஈஸ்டர் ராஜநாயகம் (புகழ்பெற்ற கவிஞர் வேதநாயகம் சாஸ்திரியரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்) ஆகியோரின் ஆறாவது குழந்தை ஆவார்.
  • குமரப்பா மராஸில் தனது அடிப்படைக் கல்வியைப் பெற்று பின் பட்டயக் கணக்கியல் படிப்பைத் தொடர 1912 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.
  • அவர் லண்டன் வங்கிகள் மற்றும் பிரிட்டிஷ் தணிக்கையாளர்களின் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.
  • 1919 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும், அவர் பம்பாயில் பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பணி புரிந்தார், பின்னர் அவர் தனது சொந்தத் தணிக்கை நிறுவனமான 'கொர்னேலியஸ் & தாவர்' நிறுவனத்தை நிறுவினார்.
  • தாவர் வணிகவியல் கல்லூரியில் துணை முதல்வராகவும், பகுதி நேரப் பேராசிரியராகவும் அவர் பணியாற்றினார்.

தேசியவாதத்திற்கு மாறுதல்

  • 1928 ஆம் ஆண்டு, குமரப்பா அமெரிக்கா சென்று, சைராக்யூஸில் பி.எஸ்சி. வணிக நிர்வாகம் பயின்றார்.
  • மற்றும் பேராசிரியர் டாக்டர் செலிக்மேனின் கீழ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் அவர் எம்.ஏ பயின்றார்.
  • அவரது ஆய்வறிக்கையான, "பொது நிதி மற்றும் நமது (இந்திய) வறுமை", அவரை ஒரு ஐரோப்பிய விசுவாசியிலிருந்து உறுதியான இந்திய தேசியவாதியாக மாற்றியது.
  • அவர் 1929 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார் மற்றும் பிரிட்டிஷாரின் வரிவிதிப்பு கொள்கையின் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் சுரண்டலை அம்பலப்படுத்த முயன்றார்.

காந்தியுடன் சந்திப்பு

  • குமரப்பா 1929 ஆம் ஆண்டு காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்தார்.
  • அவரது கருத்துக்களால் காந்தி ஈர்க்கப்பட்டு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் அவரது முயற்சிகளில் சேருமாறு கேட்டுக் கொண்டார்.
  • குமரப்பா குஜராத்தில் ஒரு கிராமப்புற ஆய்வு நடத்தினார், இதன் விளைவாக "கேடா மாவட்டத்தில் மாதர் தாலுகாவில் ஒரு ஆய்வு" என்ற உன்னதமான ஒரு ஆய்வு கிடைத்தது.

சுதந்திர இயக்கத்தில் பங்கு

  • குமரப்பா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நபராக உருவெடுத்தார்.
  • அவர் காந்தியின் பத்திரிக்கையான ‘யங் இந்தியாவில்’ எழுதியதோடு தனது புரட்சிகரமான எழுத்துக்களுக்காக அவர் சிறைத் தண்டனையையும் எதிர்கொண்டார்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் நிதிப் பொறுப்புகள் குழு மற்றும் தேசியத் திட்டமிடல் குழு உட்பட பல்வேறு குழுக்களில் அவர் பணியாற்றினார்.
  • அவரது பொருளாதார ஆய்வுகள் மற்றும் எழுத்துக்கள் தேசியவாதப் பொருளாதாரச் சிந்தனையைப் பெரிதும் பாதித்தன.

சுதந்திரத்திற்குப் பிந்தையப் பங்களிப்புகள்

  • சுதந்திரத்திற்குப் பிறகு, குமரப்பா கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்.
  • அகில இந்திய கிராமத் தொழில்கள் சங்கம் (AIVIA) அமைப்பதில் முக்கியப் பங்காற்றிய அவர், அதன் செயலாளராகப் பணியாற்றினார்.
  • அவர் கிராமப்புறத் தொழில்நுட்பங்களை உருவாக்கியதோடு பரவலாக்கப்பட்ட பங்கேற்பு திட்டமிடலுக்கும் வாதிட்டார்.
  • உடல்நலச் சவால்கள் இருந்த போதிலும், அவர் தனது பணியைத் தொடர்ந்தார், கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் பொருளாதார அமைப்புகளைப் படிக்கச் சென்றார்.

பிந்தைய காலங்கள் மற்றும் மரபு

  • அவரது பிற்காலங்களில், குமரப்பா குஜராத்தில் ஒரு தலித் கிராமத்தில் வசித்து வந்ததோடு, விவசாயச் சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சியையும் அவர் ஊக்குவித்தார்.
  • அவரது உடல்நிலை மோசமடைந்து, டி.கல்லுப்பட்டியில் (மதுரை) உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தனது இறுதி ஆண்டுகளைக் கழித்தார்.

குறிப்பிடத்தக்கப் படைப்புகள்

  • டாக்டர். குமரப்பா பல மதிப்புமிக்கப் புத்தகங்களை எழுதியுள்ளார், அவை பின்வருமாறு:
  • நிரந்தரப் பொருளாதாரம் (1984)
  • ஏன் கிராம இயக்கம் (1958)
  • நமது பொருளாதாரத்தில் பசு (1963)
  • காந்தியப் பொருளாதாரச் சிந்தனை (1962)
  • பொது மக்களுக்கான ஸ்வராஜ் (1948)
  • காந்தியப் பார்வையின் மூலம் ஐரோப்பா (1948)
  • அமைதி மற்றும் செழிப்பு (1948)
  • ஐரோப்பாவிலிருந்து பாடங்கள் (1954)
  • மாதர் தாலுகாவின் பொருளாதார ஆய்வு (1952)
  • தற்போதைய பொருளாதார நிலை (1949)
  • பொது நிதியும் நமது வறுமையும் (1930)
  • சுதேசி (1992)
  • தானியங்களை அரைத்தல் (1947)
  • கிராமத் தொழில்கள் (1947)
  • கிளைவ் முதல் கீன்ஸ் வரை (1947)
  • கிறிஸ்துவம்: அதன் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறை (1945)
  • நிரந்தரப் பொருளாதாரம் பகுதி II (1948)
  • காந்தியப் பொருளாதாரம் மற்றும் பிற கட்டுரைகள் (1949)
  • கல் சுவர்கள் மற்றும் இரும்பு கம்பிகள் (1949)
  • இறப்பு: அவர் ஜனவரி 30, 1960 இல் காலமானார்.

30. ருக்மணி லட்சுமிபதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • ருக்மணி லட்சுமிபதி 1892 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி மதுரையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
  • அவரது தாத்தா ஒரு நிலப்பிரபு, மற்றும் அவரது பாதுகாவலர் கொச்சி மாநிலத்தின் திவான் ஆவார்.
  • ருக்மணி மதராஸில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார், மேலும் அந்தக் கல்லூரியில் முதற்தொகுதியில் B.A பட்டம் பெற்றப் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • சிறு வயதிலிருந்தே, அவர் தேசியவாதம், சமூக நீதி மற்றும் சுதந்திர இயக்கம் ஆகியவற்றின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
  • மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு மற்றும் ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்களால் மிக செல்வாக்கு பெற்ற அவர் தனது படிப்பின் போது பல்வேறு சுதந்திரப் போராட்டங்கள் மற்றும் பெண்கள் உரிமைத் திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார்.

கலப்புத் திருமணம்

  • ருக்மணி முற்போக்குச் சிந்தனை கொண்டவர் என்பதோடு தன் தனிப்பட்ட வாழ்க்கை உட்பட பல வழிகளில் சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
  • பாரம்பரிய இந்திய மருத்துவப் பயிற்சியாளராகவும், சுதந்திர இயக்க ஆர்வலராகவும் மாறி MMC மருத்துவரான டாக்டர் அச்சந்த லக்ஷ்மிபதியை அவர் மணந்தார்
  • அந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான அவர்களின் கலப்புத் திருமணம் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை உருவாக்கியது.
  • அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர், இருப்பினும் அவர்களின் முதல் மகன் இளம் வயதிலேயே இறந்து விட்டார்.
  • இதைத் தொடர்ந்து, ருக்மணி தனது வாழ்நாளை தனது குடும்பத்தை விட தேசத்திற்காக அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

அரசியல் பங்கேற்பு

  • ருக்மணி 1923 ஆம் ஆண்டு தனது 31 வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் (INC) சேர்ந்தார் மற்றும் INC அமைப்பின் இளைஞர் கழகத்தை அமைப்பதில் தீவிரப் பங்கு வகித்தார்.
  • காங்கிரசில் சேருவதற்கு முன்பே அவர் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
  • 1911 ஆம் ஆண்டு, அவர் பெண்கள் இயக்கத்தில் பங்கேற்று பாரத ஸ்திரீ மகாமண்டலின் செயலாளராக ஆனார்.
  • 1917 ஆம் ஆண்டு, அவர் பெண்கள் இந்தியச் சங்கத்தில் (WIA) இணைந்தார்.
  • 1923 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் நுழைந்தவுடன், அவரது முதல் குறிப்பிடத்தக்கச் செயல், அந்த காலத்துப் பெண்மணிக்கு ஒரு வீரச் செயலாக அமைந்த, ஹரிஜன் நல நிதிக்கு தனது நகைகள் அனைத்தையும் நன்கொடையாக அளித்ததாகும்.
  • இந்தியப் பிரதிநிதியாக, ருக்மணி 1926 ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த சர்வதேச மகளிர் வாக்குரிமை காங்கிரஸில் கலந்து கொண்டார்.
  • காதி, குழந்தைத் திருமணத்தை ஒழித்தல் மற்றும் மதுவிலக்கு தொடர்பான இயக்கங்களில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார், மேலும் அவர் மற்றவர்களுக்கு காதி நூற்பு மற்றும் காதி அணிய கற்றுக் கொடுத்தார்.
  • ருக்மணி சைமன் கமிஷனை கடுமையாக எதிர்த்ததோடு 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அன்று திருவல்லிக்கேணியில் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒரு கற்பனையான சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினார்.

உப்புச் சத்தியாகிரகத்திற்காக சிறை

  • காந்தியின் சத்தியாகிரகக் கொள்கை பல பெண்களைச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியது.
  • சட்ட மறுப்பு இயக்கத்தின் கீழ், காந்தி உப்புச் சட்டத்தை மீறுவதற்காக மார்ச் 12, 1930 அன்று தண்டிக்கு தனது அணிவகுப்பைத் தொடங்கினார்.
  • அதே சமயம், ராஜகோபாலாச்சாரியின் தலைமையில், திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை இதே போன்ற ஊர்வலம் தமிழகத்தில் நடந்தது.
  • தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சத்தியாகிரகிகளில் ருக்மணியும் ஒருவர் ஆவார்.
  • மே 15, 1930 அன்று, அவர் வேதாரண்யத்தில் இருந்து ஒரு பிடி உப்பு எடுத்ததற்காக கைது செய்யப் பட்டார் என்ற நிலையில், இந்தியா முழுவதும் உப்புச் சத்தியாகிரகம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்திற்காக கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார்.
  • உப்புச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் செலுத்திய முதல் பெண் இவர் ஆவார்.
  • அவர் வேலூர் சிறையில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டார், அங்கு எழுதிய அவரது 30 கடிதங்கள் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

சட்டமன்றச் சாதனைகள்

  • 1934 ஆம் ஆண்டு அவர் மதராஸ் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகப் பணியாற்றிய அவர், 1935-36 ஆம் ஆண்டு நகராட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1937 ஆம் ஆண்டு, அவர் மதராஸ் பிரசிடென்சியின் சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரானார், பின்னர் 1937 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை அவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1941 ஆம் ஆண்டில், தனிப்பட்ட சத்தியாகிரக இயக்கத்திற்கான 21 சத்தியாக்கிரகிகளில் ஒருவராக காந்தி அவரைத் தேர்ந்தெடுத்தார்.
  • அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் மற்றும் அவரது பிரதிநிதிகளின் பதவிகள் பறிக்கப் பட்டன.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, காங்கிரஸ் அமைச்சகத்தின் கீழ், டி. பிரகாசம் 1946 ஆம் ஆண்டு மதராஸ் பிரசிடென்சியின் முதலமைச்சரானார், அந்த காலக் கட்டத்தில் ருக்மணி 1946 ஆம் ஆண்டு மே முதல் 1947 ஆம் ஆண்டு மார்ச் வரை பொது சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.
  • மதராஸ் நகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வாரியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர் பணியாற்றியதோடு, மதராசில் பிரசிடென்சிக்கான கௌரவக் குற்றவியல் நடுவராகவும் பணியாற்றினார்.

மறைவு

  • நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ருக்மணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
  • ஆகஸ்ட் 6, 1951, அவர் இறக்கும் வரை சுதந்திர இந்தியாவில் ஒரு சட்ட மன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்தார்.
  • அவரது நினைவாக, சென்னை எழும்பூரில் உள்ள ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப் பட்டு, 1997 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது நினைவாக தபால் தலையையும் வெளியிட்டது.

31. . ரங்கய்யா நாயுடு

ஆரம்ப கால வாழ்க்கை

  • பழவை ரங்கய்யா நாயுடு 1828 ஆம் ஆண்டு மராஸ் பிரசிடென்சியில் தெலுங்கு பேசும் ஒரு குடும்பத்தில் பிறந்தார்.
  • அவர் சட்டத்தில் பட்டம் பெற்று பின்பு வெற்றிகரமாக ஒரு வழக்கறிஞராகப் பணி ஆற்றினார்.
  • அவர் விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • ரங்கய்ய நாயுடு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமான தலைவராக இருந்தார்.
  • அவர் இந்திய தேசிய காங்கிரஸின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார் மற்றும் டிசம்பர் 1885 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற முதல் அமர்விலும் பங்கேற்றார்.
  • அவர் மதராஸ் மகாஜன சபையின் மதிப்புமிக்கதத் தலைவராகவும் திகழ்ந்ததோடு, மதராஸ் மகாஜன சபை 1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.

அரசியலுக்கானப் பங்களிப்புகள்

  • ரங்கய்ய நாயுடு 1892 ஆம் ஆண்டு முதல் 1899 ஆம் ஆண்டு வரை மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
  • சுயராஜ்யத்திற்காகவும், அரசாங்கத்தில் இந்தியர்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் அளித்திடுவதற்காகவும் வாதிடுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • கூடுதலாக, அவர் 1883 ஆம் ஆண்டு முதல் 1902 ஆம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பா கல்லூரியின் அறங்காவலராக இருந்தார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் இறப்பு

  • ரங்கய்ய நாயுடு 1902 ஆம் ஆண்டு எழும்பூரில் காலமானார்.
  • அவரது பங்களிப்பைப் போற்றும் வகையில், எழும்பூரில் உள்ள இரண்டு தெருக்களுக்கு அவரது தந்தை வீராசாமி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்