TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தங்களில் புகழ்மிக்க பெண்களின் பங்கு

October 5 , 2019 1924 days 39642 0
  • தமிழ்நாட்டில் பல சுதந்திரப் போராளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.
  • அந்த காலத்தில் சமூக சீர்திருத்தத்தில் பெண்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர்.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் தலைவர்கள் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்கும்.

தமிழகத்தைச் சேர்ந்தப்  பெண் தலைவர்களின் பங்களிப்பு

  • சீர்திருத்தம் என்பது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய சில சமூக நடைமுறைகளை ஒழிப்பதைக் குறிக்கிறது.
  • இந்த நடைமுறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கின்றன.
  • சமுதாயச் சீர்திருத்தங்களை அடைய ஆண்கள் மட்டுமல்ல நிறையப் பெண்களும் பாடுபட்டுள்ளனர்.
  • அத்தகையப் பெண் சீர்திருத்தவாதிகளில் குறிப்பிடத் தகுந்த சிலர் மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் மற்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோராவர்.

மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)

  • சமுதாய மாற்றத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தது.
  • தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சார பாரம்பரியத்தில் இருக்கும் சில கருப்பு புள்ளிகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப் பட்டன.
  • அத்தகைய ஒரு கரும்புள்ளி 'தேவதாசி' அமைப்பு ஆகும்.
  • இந்த முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய முக்கியமான தலைவர்களில் ஒருவர் மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி.
  • மருத்துவர். முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு  ஜூலை 30 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
  • இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் ஆவார்.
  • 1923 ஆம் ஆண்டில் அவரது சகோதரி புற்றுநோயால் இறந்தார். அன்று அவர் புற்றுநோயை அழிக்க சபதம் எடுத்தார். எனவே, அவர் 1949 ஆம் ஆண்டில்  புற்றுநோய் நிவாரண மருத்துவமனையைத் தொடங்கினார்.
  • சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனம் அவரது அரும்பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டது.
  • முதல் பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அந்த நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார்.
  • அவர் மருத்துவத்தில் மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களிலும் ஆர்வமாக இருந்தார்.
  • கொடூரமான நடைமுறையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவதற்காகத் தன் வாழ்நாட்களை அவர் அதற்காக அர்ப்பணித்தார்.
  • தேவதாசி அமைப்புக்கு எதிராகத் தீவிரமாக பிரச்சாரம் செய்ததற்காக காந்திஜியால் அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டப்பட்டார்.
  • தேவதாசி அமைப்புக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அவர் 1927 ஆம் ஆண்டு தமிழக சட்ட மேலவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
  • இதன் விளைவாக, 1947 ஆம் ஆண்டில் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இருந்த மதராஸ் மாகாண அரசு தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்றியது.
  • மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டில் அவர் மதராஸ் சட்டமன்றத்தில் இருந்து பதவி விலகினார்.   
  • 1930 ஆம் ஆண்டில், அவர் புனேவில் அகில இந்திய மகளிர் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.
  • அவர் 1933 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்தியப் பெண்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.
  • மதராஸில் உள்ள சாந்தோமில் (தற்போது அடையாரில்) அவ்வை இல்லம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் தொடங்கியுள்ளார்.
  • மருத்துவர்  முத்துலட்சுமி ரெட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பின் மூலம் கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது என்றக் கருத்தை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
  • அவர் தனது 82 வது வயதில் 1968 ஆம் ஆண்டில் காலமானார்.
  • இவர் தனது பெயருக்கு முன்னால் பல்வேறு துறைகளில் முதலிடம் என்ற சிறப்பினைக் கொண்டிருந்தார்.
    • மகாராஜா ஆண்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி.
    • 1907 ஆம் ஆண்டில் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட முதல் மற்றும் ஒரே பெண் மாணவர்.
    • அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் பயிற்சி மாணவராக பணி செய்த முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்.
    • பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
    • 1954 ஆம் ஆண்டில் மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் முதல் தலைவர்.
    • தமிழகச் சட்டமேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்.
    • 1937 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சிக் குழுவில் மேயருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய முதல் பெண் உறுப்பினர்.

 

மருத்துவர்  எஸ்.தர்மாம்பாள் (1890-1959)

  • செல்வம், அதிகாரம், கல்வி மற்றும் தகுதிநிலை காரணமாக அல்லாமல், மாறாக நாட்டிற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு காரணமாக பலர் பிரபலமடைந்துள்ளனர்.
  • மனிதநேயம் மற்றும் நல்லெண்ணம் மூலம் சேவை செய்ய முடியும் என்பதை நிரூபித்த அத்தகைய சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் மருத்துவர்  எஸ்.தர்மாம்பாள் ஆவார்.
  • சமூக சேவையில் அதிக ஈடுபாடுகளைக் கொண்டிருந்த அவர் சித்த மருத்துவம் பயின்றார். அதன்பின் அவர் சென்னையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
  • பின்னர் அவர் பொது சேவையில் ஈடுபட்டார்.
  • மருத்துவர்  எஸ். தர்மாம்பாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கருந்தட்டான்குடியில் பிறந்தார்.
  • பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட  இவர், விதவை மறுமணம், சாதிக் கலப்பு திருமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
  • தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையின் வளர்ச்சியிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.
  • அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் (1937-40) பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றார்.
  • 1940 ஆம் ஆண்டு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, அவர் 'இழவு வாரம்' என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்.
  • இதன் விளைவாக கல்வி அமைச்சர் திரு. அவிநாசிலிங்கம் செட்டியார் மற்ற ஆசிரியர்களைப் போலவே தமிழ் ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.
  • மாணவர்கள் தமிழில் தங்கள் அறிவை மேம்படுத்தவும், தேர்வுகளில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் "சென்னை மாணவர் மன்றம்" நிறுவப்பட்டது.
  • அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மன்றத்தின் தலைவராக இருந்தார்.
  • தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது சேவையைப் பாராட்டி 1951 ஆம் ஆண்டில் அவருக்கு "வீரத் தமிழன்னை" என்ற  பட்டம்  வழங்கப்பட்டது.
  • முற்போக்கு மகளிர் சங்கத்தின் 1938 ஆம் ஆண்டு மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர், அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்
  • மேலும் அவர் எம். கே. தியாகராஜ பாகவதருக்கு "ஏழிசை மன்னர்" என்ற  பட்டத்தையும் வழங்கினார்.
  • தனது வாழ்க்கை முழுவதையும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் மக்களுக்காகத் தியாகம் செய்து அர்ப்பணித்த அவர் தனது 69 வயதில் 1959 ஆம் ஆண்டில் இறந்தார்.

மூவலூர் ராமாமிர்தம் (1883-1962)

  • இவர் ஒரு தமிழ் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் மதராஸ் மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காகப் பணியாற்றினார்.
  • இவர் திருவாரூரில் பிறந்தார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் கிராமத்தில் வளர்க்கப்பட்டார். எனவே, இவர் பொதுவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.
  • 1936 ஆம் ஆண்டில் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தேவதாசிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தியது.
  • முதலில் தேசியக் கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸின் ஆதரவாளராக இருந்த இவர், பெரியார் 1925 ஆம் ஆண்டில் காங்கிரஸை விட்டு வெளியேறிய பின்னர், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினரானார்.
  • 1930 ஆம் ஆண்டில், மதராஸ் மாகாணத்தில் தேவதாசி முறையை சட்டத்தின் மூலம் ஒழிக்க முத்துலட்சுமி ரெட்டி மேற்கொண்ட முயற்சியை இவர் ஆதரித்தார்.
  • இவர் 1937-1940 ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். நவம்பர் மாதம் 1938 ஆம் ஆண்டில், அந்தப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இவரது புதுமையான முயற்சியால் உருவாக்கப்பட்ட பொது விழிப்புணர்வும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கான இவரது தொடர்ச்சியான பிரச்சாரமும், 1947 ஆம் ஆண்டு மதராஸ் தேவதாசி (அர்ப்பணிப்புத் தடுப்பு) சட்டம் அல்லது தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய உந்துகோலாக இருந்தன.
  • 1949 ஆம் ஆண்டில் பெரியார் அவரை விட மிகவும் இளைய பெண்ணான மணியம்மையை மணந்த போது, அவர் பெரியாரின் இயக்கத்தை விட்டுப் பிரிந்துச் சென்றார்​​.
  • பின்னர் அவர் பெரியாரின் சீடரான சி. என். அண்ணாதுரை அவர்களால் தொடங்கப்பட்ட “திராவிட முன்னேற்றக் கழகத்தின்” (தி.மு.க) ஆதரவாளரானார்.
  • அவர் 1962 ஆம் ஆண்டில் இறக்கும் வரை தி.மு.க கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.
  • தனது வாழ்நாள் இலட்சியம் நிறைவேறியதைக் கண்டு கண்ணுற்ற பிறகு அவர் ஜூன் 27, 1962 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
  • அவரது நினைவாக, ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு சமூக நலத் திட்டமான "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை" தமிழக அரசு நிறுவியுள்ளது.
  • இதற்கான தகுதிகள் பின்வருமாறு
    • கல்வியறிவு - மணமகள் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒருவேளை மணமகள் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயின்  அவர் 5 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
    • வருமான வரம்பு - ஆண்டிற்கு ரூ.12,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • வயது வரம்பு - மணமகள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்