TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் வரலாற்றுப் பாடம்: தொடரும் ஆதங்கம்

June 27 , 2023 560 days 474 0
  • தமிழ்நாடு அரசு, மாவட்டம் தோறும் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கியிருப்பது கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், இப்பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புகளில் வரலாற்றுப்பாடம் நீக்கப்பட்டிருப்பதாக, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் வரலாற்று ஆசிரியர்கள்தெரிவித்திருக்கும் செய்தி அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வரலாற்றுத் துறை எங்கே?

  • தற்போது நிதிச் செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஐஏஎஸ், பள்ளிக் கல்விச் செயலாளராக இருந்தபோது 11, 12 ஆம் வகுப்புகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தைக் குடிமைப் பணித் தேர்வு உள்பட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படக்கூடிய பாடத்திட்டமாக வடிவமைக்க விரும்பியதன் அடிப்படையில், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரால் எனது வழிகாட்டலின்படி பாடநூல்கள் தயாரிக்கப் பட்டன.
  • இன்று இவ்விரு பாடநூல்களைக் குடிமைப் பணிக்கான பயிற்சி நிறுவனங்கள் குடிமைப் பணித் தேர்வு பொது அறிவுக் கல்வி (General Studies) பாடத்துக்குப் பரிந்துரைக்கின்றன. இத்தகைய பயனுள்ள பாடத்திட்டத்தை மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களின் விருப்பப் பாடமாகக்கூட வைக்காதது வேதனை அளிக்கிறது.
  • பெரும்பாலும் சிறுகதை எழுத்தாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய அரசின் பொது நூலகக் குழுவில் நானும் ஓர் உறுப்பினர். அரசுப் பள்ளி நூலகங்களுக்குப் பரிந்துரைக்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, வரலாற்றுப் புத்தகங்களைச் சமீபத்தில் பரிந்துரைத்தபோது தலைமை ஆசிரியைகள் இருவர் கடுமையாக எதிர்த்தனர். அதற்கு ஒரு சில சிறுகதை எழுத்தாளர்களின் ஆதரவும் இருந்தபோது, தலைமை ஆசிரியை ஒருவர் இறுதி முடிவை வாக்கெடுப்புக்கு விடலாம் என்றார்.
  • அவர்களது கருத்து, ‘வரலாற்று ஆசிரியர்கள்கூடப் பாடநூலைத் தவிர வேறு விரிவான வரலாற்று நூல்களை வாசிக்க மாட்டார்கள் என்பதே. தலைமை ஆசிரியர்களே படிக்காதபோது விரிவான செய்திகள் அடங்கிய புத்தகங்களை அவர்கள் தலைமையின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் படிப்பார்கள் என எதிர்பார்ப்பது நம் தவறே’ என அருகில் இருந்த அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அக்குழுவின் உறுப்பினரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான ஒருவர் முணுமுணுத்தார்.
  • நான் துணைக் குழுவில் இருந்த இருவருடன் சேர்ந்து தயாரித்திருந்த பட்டியலில் பரிந்துரைத்திருந்த ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன் சரித்திரம்’ போன்றவற்றுக்கு இறுதியாக ஏற்பட்ட நிலை பற்றி, அதன்பின் எனக்குத் தகவல் ஏதும் இல்லை.

புறக்கணிக்கப்படும் வரலாறு:

  • இன்று அரசு உதவி பெரும் கல்லூரிகள் பலவற்றில் வரலாற்றுத் துறைகிடையாது. சுயநிதிக் கல்லூரிகள் பெரும்பாலானவற்றில், துணைப் பாடமாகக்கூட வரலாறு கற்றுத் தரப் படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின்அங்கீகாரம் பெற்ற தனியார் பல்கலைக் கழகங்கள் எதிலும் வரலாற்றுத் துறை இதுவரை தொடங்கப்படவில்லை. திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்தவர்வேந்தராக இருக்கக்கூடிய விஐடி பல்கலைக்கழகத்தில்கூட வரலாற்றுத் துறை இல்லாதது பலருக்கு ஆச்சரியமாக உள்ளது.
  • அரசு நினைத்தால், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வரலாற்றுத் துறை தொடங்க ஆணையிட முடியும். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியின்போது, ஏதாவது ஒரு பட்டப்படிப்புப் பாடம் தமிழில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசாணையின்படி தொடங்கப்பட்ட வரலாற்றுப் பட்டப்படிப்பு, புகழ்பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருநெல்வேலி புனித சவேரியார் கல்லூரி போன்றவற்றில்கூட காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது என்பதை இங்கு நினைவுகூர்வது அவசியம்.
  • தற்காலத் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்குக் கடந்த காலங்களில் கருணாநிதி ஆட்சியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ‘சீர்மிகு சிவகங்கை சீமை’ நூலுக்காக எஸ்.எம்.கமாலுக்கு 1989இல் தமிழக அரசின் விருது, பேராசிரியர் கே.ராஜய்யன் எழுதிய ‘தென்னிந்தியக் கிளர்ச்சி’ [South Indian Rebellion, 1800-1801: The First War of Independence] நூலுக்குக் கலைஞர் பொற்கிழி 2007இல் வழங்கப் பட்டது. அதன் பிறகு, அரசின் கவனம் வரலாற்று நூல்களின் பக்கம் திரும்பவே இல்லை.
  • இந்திய அரசின் விருது, சாகித்திய அகாடமி விருது உள்பட, வரலாற்று நூல்களுக்குக் கிடைப்பதில்லை என்றபோதிலும், தமிழ்நாட்டுக்கென இருக்கும் பாரம்பரியத்தின் அடிப்படையில் சிறந்த வரலாற்று நூல்களுக்கு விருது வழங்குவது அவசியமாகிறது. சிறந்த பொருளாதார ஆசிரியருக்கு, மால்கம் ஆதிசேஷய்யா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (MIDS) ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. இத்தகைய அங்கீகாரத்தை வரலாற்று ஆசிரியர்களுக்கு வழங்கிட எந்தக் கல்வி நிறுவனமோ தொண்டு நிறுவனமோ இதுவரை முன்வரவில்லை.

வரலாற்றாய்வின் நிலை:

  • தமிழ்நாட்டில், 1973இல் கருணாநிதி ஏற்படுத்திய ‘தமிழ்நாடு வரலாற்று ஆய்வு மன்றம்’ (Tamil Nadu State Council of Historical Research) இன்று செயல்படுகிறதா என்று யாருக்கும் தெரியவில்லை. அரசியல் கண்ணோட்டத்துடன் அரசு அலுவலர் அல்லாத உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதால், போதிய நிதி ஒதுக்கப்படாததால், அம்மன்றத்தால் எத்தகைய குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்ய முடியவில்லை. தமிழக ஆவணக்காப்பகத்துக்கு ஆணையராக வரக்கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அப்பதவியைத் தண்டனையாகக் கருதுவதால், எத்தகைய சிறப்பு அக்கறையும் காட்டுவதில்லை.
  • பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆவணக்காப்பகத்தில் பணியாற்றுபவர்கள் உதவியுடன் 2006 வரையிலான தகவல்களையும் சேர்த்து, எல்லா மாவட்டங்களின் செய்திக்களஞ்சியம் 2007இல் வெளியிடப் பட்டது. அதற்குப் பின் ஏற்கெனவே வெளிவந்த ஆய்வு நூல்களை, மாவட்டச் செய்திக் களஞ்சியங்களை மறுபதிப்பு செய்ததைத் தவிர - எனக்குத் தெரிய - வேறு எந்த வெளியீடுகளும் ஆவணக்காப்பகத்திலிருந்தும் வெளிவரவில்லை.
  • அண்டை மாநிலமான கேரளத்தில், அரசு வரலாற்று ஆய்வு மன்றம் திறமையான வரலாற்று ஆய்வாளர்கள் தலைமையில் (Chairperson) சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது. இப்போது அதன் தலைவர் ஒரு புகழ்பெற்ற பொருளாதார வரலாற்றறிஞர்; அதன் இயக்குநரும் பிரசித்தி பெற்ற ஆய்வாளர். அரசு அதிகாரிகளுக்கு அங்கு இடம் கிடையாது. அத்தகைய அமைப்பைத் தமிழ்நாட்டில் உருவாக்குவது உடனடித் தேவை.
  • தமிழ் மொழியின் தொன்மையையும் பண்டைத்தமிழர்களின் பெருமையையும் கற்றுக் கொடுக்கவும் ஆய்வு செய்திடவும் முக்கியத்துவம் கொடுக்கும்தற்போதைய தமிழக அரசு, நாட்டின் பன்முகக்கலாச்சாரத்தை, மதச்சார்பின்மையை மதவெறியர்களிடமிருந்தும் பிரிவினைவாதிகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய சூழலில், வரலாற்றுப் பாடத்துக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது. எம்ஜிஆர்ஆட்சிக் காலத்தில், கல்வி அமைச்சராக பொன்னையன் இருந்தபோது வரலாறு, அரசியல் பாடங்கள் பயனற்ற பாடங்கள் என அரசாணை வெளியானது.
  • தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தியில் இத்தகைய கருத்து ஆழமாகவே பதிந்துள்ளது. இந்த மனநிலையை மாற்றிட இளம் மாணவர்களிடையே அவர்களது பள்ளி, கல்லூரி பருவ காலங்களில் அறிவுபூர்வமான வரலாற்றைக் கற்கச்செய்வது, மதச்சார்பற்ற, ஜனநாயக அரசுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தற்போதைய தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

நன்றி: தி இந்து (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்