- உலகில் தோன்றிய மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி. தமிழின் தொன்மையை மொழி ஆய்வாளர்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துவர். மனிதன் தோன்றி 50,000 ஆண்டுகளுக்குப் பிறகே மொழி தோன்றியிருக்க வேண்டும். அது பேச்சு மொழியாக அமைந்திருக்கும். பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு வர 10,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். எழுத்து முறையிலிருந்து இலக்கியம் வளர 5,000 ஆண்டுகள். இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோன்ற 3,000 ஆண்டுகள். அதற்குப் பின்னரே சங்க இலக்கியங்கள் தோன்றின.
- எனவே, தொல்காப்பியத்திற்கு முன்னர் இலக்கியம் இருந்திருத்தல் வேண்டும். இப்போது தமிழ்மொழியின் தோற்றத்தை ஓரளவுக்கு அறிந்திடலாம். இன்றைக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியன தொல்காப்பியமும் அகத்தியமும். இவற்றையெல்லாம் கூட்டினால் 70,000 (50000+10000+5000+3000+2000) ஆண்டுகளுக்கு முன்னரே தமிழனும் தமிழும் தோன்றியிருத்தல் வேண்டும். ஆய்வாளர்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் எனக் குறிப்பிடுவர். மிகப் பழமையான மொழி, பண்பட்ட மொழி, தென்னவன் மொழி, தென்பாங்கு மொழி, தீந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் பைந்தமிழ் மொழி.
- தமிழ் என்றால் எளிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் அமிழ்தம். எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றியுள்ளன. கால வெள்ளத்தைக் கடக்க முடியாமல் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. உலகிலேயே பழமையான மொழிகள் எனப் பாராட்டப்படுபவை லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீனம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறு மொழிகள்தான். அவற்றுள் லத்தீன், கிரேக்கம், எபிரேயம் இன்று இல்லை. சமஸ்கிருதம் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் குன்றிவிட்டது. எஞ்சியிருப்பவை இரண்டு மொழிகள்தாம். ஒன்று தமிழ்; மற்றொன்று சீனம்.
- சீனமொழி பேசப்படும் மொழியாக இருக்கிறதே ஒழிய, வளமான மொழியாக இல்லை. பெருமைப்படத்தக்க அளவுக்கு அதில் இலக்கணமும் இலக்கியமும் அமையவில்லை. ஆனால், அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான். பிறந்து சிறந்ததான மொழிகளுக்கு மத்தியிலே சிறந்தே பிறந்த மொழி நம் தமிழ் மொழி.
- தமிழ் ஒரு மொழியாக மட்டுமே இருந்திருந்தால் நாம் அதன்பால் இத்தனைப் பற்று வைத்திருக்க வேண்டியதில்லை. அது ஒரு இனத்தின் நாகரிகமாய், ஒப்பற்ற மனிதகுல வாழ்வியல் பண்பாய், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நம்முடன் வந்திருக்கிறது. ஒரு மொழி, மனித குலத்தையே செம்மைப்படுத்த முடியுமா என்று கேட்டால், முடியும்! ஆனால் அது, உலகில் தமிழைத் தவிர வேறெந்த மொழியாகவும் இருந்துவிட முடியாது. அத்தனை சிறப்புகளடங்கியது நமது தமிழ்மொழி.
- 'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்கிறது பிங்கல நிகண்டு. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்றார் பாரதியார். 'தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்தத் தமிழ்இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றார் பாவேந்தர். அமிழ்தத்தைக் கடைந்தால் அதிலிருந்து கிடைக்கும் அரிய சொல்லே தமிழ் எனப் போற்றுகின்றார் நாமக்கல் கவிஞர். 'இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' என்றார் தமிழ் உணர்வு மிக்க தமிழ்விடுதூது ஆசிரியர்.
- உலகில் ஏனைய மொழிகளில் எழுத்துக்கு இலக்கணம் உண்டு; சொல்லிற்கு இலக்கணம் உண்டு; யாப்பு, அணிகளுக்குக்கூட இலக்கணம் உண்டு. ஆனால் பொருளுக்கு இலக்கணம் வேறு எம்மொழியிலும் இல்லை. தமிழ்மொழி ஒன்றுதான் வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மேலைநாட்டு அறிஞர்களான போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றவர் தமிழைக் கற்று இலக்கியத்திற்கு வளம் சேர்த்தனர். மதம், மொழி, இனம், நிறம் கடந்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்று முதல் முழக்கமிட்டது தமிழ்மொழியே ஆகும்.
- 'உண்பது அமிழ்தமே ஆயினும் தனியராய் உண்ணோம்' என்று உணர்த்தியவர் தமிழர். 'தீதும் நன்றும் பிறர்தர வாரா; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; உண்பது நாழி; உடுப்பவை இரண்டே' என்று உயர்ந்த சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தியது நம் செந்தமிழ்மொழி. சரிகமபதநி என இசையை ஏழாகக் கொடுத்து, சுவையை ஆறாகவும், நிலத்தை ஐந்தாகப் பிரித்து, காற்றை நான்காகப் பிரித்து, தமிழை மூன்றாகவும், வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகவும் வகுத்த தமிழன் ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாகக் காத்தான். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடி.
- தமிழ் திராவிட மொழிகளின் தாய். பிற மொழிகளின் துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றலைப் பெற்ற மொழி. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் போன்ற இலக்கியங்கள் தமிழின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
- பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள், பக்தி மணம் பரப்புகின்றன. நல்வழி, மூதுரை, உலகநீதி, கொன்றை வேந்தன் போன்றன நீதி நெறிகாட்டும் வழிகாட்டியாய் விளங்குகின்றன. மகாபாரதம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாய்த் திகழ்கின்றன. தமிழ் வன்மை உடையவருக்கு வல்லினம். மென்மை உடையவருக்கு மெல்லினம். வன்மை, மென்மை என இரண்டின் தன்மை கொண்டவருக்கு இடையினம்.
- அணு மிகச்சிறிய துகளாகும். அணுவை உடைக்க முடியும் என ரூதர்போர்டுக்கு முன்பே கூறியவர் ஒளவையார். இதனை 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்ற வரியின் மூலம் அறியலாம். தொல்காப்பியரின் தொல்காப்பியம் மரபியல் உயிரியல் கருத்துக்கள் அடங்கிய ஓர் அறிவியல் பெட்டகம் ஆகும். இதில்
- "ஒன்று அறிவுஅதுவே உற்று அறிவதுவே
- இரண்டு அறிவுஅதுவே அதனொடு நாவே
- மூன்று அறிவுஅதுவே அவற்றொடு மூக்கே
- நான்கு அறிவுஅதுவே அவற்றொடு கண்ணே
- ஐந்து அறிவுஅதுவே அவற்றொடு செவியே
- ஆறு அறிவுஅதுவே அவற்றொடு மனனே
- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" என்று உயிர்களின் பாகுபாடுகளைக் காட்டியுள்ள தொல்காப்பிய வரிகளின் மூலம் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறியலாம்.
- "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
- அற்றது போற்றி உணின்"
- என்ற குறளின் மூலம் பசியறிந்து உண்ணும் உணவை உயிர்காக்கும் மருந்து என்கிறார் திருவள்ளுவர். மருந்தே உணவாகக்கொள்ளும் இக்காலச் சூழலில் உணவையே மருந்தாகக் கொண்டு நோயற்ற வாழ்வை வாழ வழி காட்டியுள்ளார் வள்ளுவர்.
- 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணை, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் முதலான பல கட்டுமானங்களின் மூலம் தமிழரின் கட்டுமானத்துறை அறிவை உணர முடிகிறதல்லவா? தமிழரின் அறிவியல் அறிவு விண்ணைப் போல விரிந்தது.
- அறிவியல் எவ்வித வளமும் வளர்ச்சியும் அடையாத காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தம் இலக்கியங்களில் இவ்வளவு அறிவியல் செய்திகளைப் பதிவு செய்திருக்கையில் பல அறிவியல் வளமுடைய நவீன காலத்தில், தமிழ் மொழியில் அவற்றைப் பெருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்னும் தொடரால் ஞானசம்பந்தர் இறை அருளோடு தமிழ் பரப்பியமை அறியலாம். முரசுக் கட்டிலில் உறங்கிய புலவனுக்கு அரசனே சாமரம் வீசி நின்றது தமிழ் மீது அவன் கொண்ட காதலே. ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்கி பெருமைப்படுத்தியதும் தமிழுக்காகவே.
- சோழன் கரிகாலனால் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட பதினாறுகால் மண்டபத்தைப் பிற்காலத்தில் சோழ நாட்டின் மீது படையெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் அழிக்காமல் விட்டதற்குக் காரணம் தமிழன்னையிடம் அவன் கொண்ட காதலன்றோ? சுவாமி வேதாசலம், சூரியநாராயண சாஸ்திரியும் தம் பெயர்களை மறைமலை அடிகள் என்றும், பரிதிமாற்கலைஞர் என்றும் மாற்றிக் கொண்டமைக்குக் காரணம் அவர்கள் தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்றே ஆகும்.
- இவ்வளவு பெருமைகள் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ் இலக்கியத்திற்கும் இருப்பினும், தமிழே, நீ தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயினும் சீரிளமைத் திறத்தோடு விளங்கும் உன் பெருமையைப் பாதுகாக்காத்திடாமல் பண்பற்றுத் திரியும் உன் மக்களை எண்ணுந்தொறும் கண்ணீர் வருகிறது தாயே!.
- இரண்டு பேர் மலையாளத்தில் உரையாடினால் அவர்கள் மலையாளிகள். இரண்டு பேர் தெலுங்கில் உரையாடினால் அவர்கள் தெலுங்கர்கள். இரண்டு பேர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லது அமெரிக்கர்கள். இரண்டு பேர் இந்தியில் பேசினால் அவர்கள் வடநாட்டவர்கள். இரண்டு பேரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்களாம். கலப்பு மொழி பேசும் குழப்பவாதிகளாகத்தான் தமிழன் தற்போது திரிகிறான். இன்று பலரும் ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்று கருதுகின்றனர்.
- வழக்காடு மொழியாகத் தமிழ் இல்லை. வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லை. வணிகரின் மொழியாகத் தமிழ் இல்லை. பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை. அலுவல் மொழியாகவும் முழுமையாகத் தமிழ் இல்லை. ஊடகங்களிலும் நல்ல தமிழைக் காண முடிவதில்லை. தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை.
- தமிழா! இமயமலை போல் உயர்ந்த ஒரு நாடும், தன் மொழியில் தாழ்ந்தால் வீழும். தமிழுக்குத் துறைதோறும் அழகு காப்பாய். இதுதான் நீ செய்யத்தக்க எப்பணிக்கும் முதற்பணி. வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் எனப் பழமொழி உண்டு. மொழி நிறைவு பெற்றதாக இல்லை எனக் குறை சொல்பவர்கள் இந்தத் தொழிலாளியைப் போன்றவர்களே.
- இன்பம் தரும் மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழிதான் என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும். குழந்தையின் அறிவும் திறமும் வளர்ச்சி பெறத் தாய்மொழியே சிறந்தது என்பது உளவியலாளர் கருத்தாகும். மேலை நாடுகளில் குழந்தைகள் 15 ஆண்டுகள் தாய்மொழிக் கல்வியையே முதன்மையாகக் கற்கின்றனர். அமெரிக்காவில் ஆங்கிலமும், உருசியாவில் உருசிய மொழியும், ஜப்பானில் ஜப்பானிய மொழியும், சீனாவில் சீனமொழியும் கட்டாயக்கல்வி ஆக்கப்பட்டுள்ளன. வெறும் தொழில் மொழியாக மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர். தமிழா! அயல்மொழி போதையிலிருந்து நீ மீள வேண்டும். இயன்ற வரையில், இயன்ற இடங்களில் எல்லாம் இனிய தமிழ் பேச வேண்டும்.
- தலையில் குடுமி. காதில் கடுக்கன். நெற்றியில் திருநீறு பூசிய அந்தச் சிறுவனின் பெயர் சாமிநாதன். என்ன படிப்பது மேலே என்பதுதான் விவாதப் பொருள். அந்த வீட்டிலிருந்து ஒரு குடும்பப் பெரியவர் அந்தச் சிறுவன் சாமிநாதனிடம் ஒன்று சம்ஸ்கிருதம் அல்லது ஆங்கிலம் படி. ஆங்கிலம் படித்தால் இந்த லோகத்திலேயே சௌக்கியமாக இருக்கலாம். சம்ஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம். நீ என்ன படிக்கப்போகிறாய் என்று அந்தப் பெரியவர் சிறுவனிடம் கேட்க, சிறுவன் சாமிநாதன் உறுதியாக அவரிடம் சொன்னான். தமிழ் படிக்கப் போறேன் என்று.
- உடனே கோபப்பட்டு அந்தப் பெரியவர், ஏன் தமிழ்ப் படிக்கப் போறேன் என்றாய் என்று அந்தச் சிறுவனிடம் கேட்க, அதற்கு அந்தச்சிறுவன், 'ஆங்கிலம் படிச்சா இங்க நல்லா இருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் அங்கே நன்றாக இருக்கலாம். தமிழ் படித்தால் இந்த இரண்டு இடத்திலும் நன்றாக இருக்கலாம்' என்று பளிச்சென்று சொன்னான். அன்று தமிழ்ப் படித்த அவரை இந்தத் தமிழ் உலகமே இன்று விரும்பிப் படித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன்தான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர்.
- படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்து, விரும்பிப் படிப்பவர்கள் உயர்வது திண்ணம். தமிழ் மொழியில் கற்போம். தரணியில் உயர்வோம். தமிழ் மானம் காப்போம். தமிழ் மணம் பரப்புவோம். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் படைத்திடுவோம். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றிடுவோம். மொழி தான் ஞானம். மொழிப்பற்று என்பது மானம்.
நன்றி: தினமணி (17 – 04 – 2022)