TNPSC Thervupettagam

தமிழ் மொழிவழிக் கல்வி கட்டாயம்'

August 5 , 2019 1985 days 1290 0
  • தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே மொழி தொடர்பான சர்ச்சைகள், விவாதங்கள் நடைபெறுகின்றன.
  • மும்மொழி கல்வித் திட்டத்தை திராவிடக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன; குறிப்பாக, ஹிந்தியை உள்ளடக்கிய மும்மொழி திட்டக் கல்வி முறை தமிழை அழித்து விடும் எனக் கூறி வருகின்றனர்.
  • பண்டைய காலம் தொட்டே இலக்கியம், அறிவியல், மருத்துவம் ஆன்மிகம், அறம், நீதி போன்றவற்றைப் போற்றும் வகையில் எண்ணற்ற சிறந்த நூல்கள் தமிழில் இருக்கின்றன.
  • ஆனால், தற்போதைய நிலைமையோ வேறு; பல்வேறு துறை சார்ந்த நூல்கள் முன்பு அளவுக்கு தமிழில் வெளியிடப்படுவதில்லை; காரணம், தமிழில் பட்டப்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
  • தமிழில் பட்டப் படிப்பு படிப்பவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, தமிழ்வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருக்கிறது.
  • அரசுப் பள்ளிகளில் மட்டுமே தமிழ்வழிக் கல்வி இருக்கிறது. எந்த ஓர் அரசியல் தலைவரோ, அரசு அதிகாரிகளோ, அரசுப் பள்ளி ஆசிரியர்களோ தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பதில்லை.
  • ஏனெனில், அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்த்தால் ஆங்கில மொழிப் பயிற்சி கிடைக்காது என்றும் தரமான கல்வி கிடைக்காது என்றும் கருதுகின்றனர்.
  • தமிழ்மொழிவழிக் கல்விதான் தமிழின் வளர்ச்சிக்கு சிறந்ததாகும். தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடத்தை மனப்பாடம் மட்டும் செய்யாமல் பாடத்தை நன்கு புரிந்துகொண்டு படிப்பார்கள்.
  • ஆனால், தனியார் நடத்தும் ஆங்கில வழிக்கல்வி முறையில் தமிழை விடுத்து மற்ற எல்லாப் பாடங்களும் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
  • தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், ஆங்கில வழிக்கல்வி முறையில் பாடத்தைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே மனப்பாடம் மட்டுமே செய்து பாடத்தைப் படிக்கிறார்கள்.அவர்களுடைய நோக்கமெல்லாம் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுதான்.
  • தனியார் பள்ளிகளும் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கவேண்டும் என்ற வர்த்தக நோக்கத்தோடு மனப்பாடம் செய்து படிப்பதையே ஊக்குவிக்கிறார்கள்.
  • தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைப்பதுதான் கெளரவம் என்ற தவறான கருத்தும் சமுதாயத்தில் உள்ளது.
  • அரசுப் பள்ளி என்பது, ஏழை மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலை இருக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடத்தை புரிந்து படிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இப்படி படிக்கும் மாணவர்கள் "நீட்' தேர்வில், வேலைவாய்ப்பு நேர்காணலில் எப்படி தேர்ச்சி பெற முடியும்?
  • இதை உணர்ந்த தமிழ்நாடு கல்வித் துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பின் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்போரை "ரேங்க்' அடிப்படையில் வரிசைப்படுத்தி பொதுவெளியில் வெளியிட தடை விதித்தது.
  • இதனால், தனியார் பள்ளிகளின் வர்த்தகப் போட்டி தடுக்கப்பட்டது. இது பாராட்டுதலுக்குரியது.
  • நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், பாடங்களை தங்களது குழந்தைகள் புரிந்து படிப்பதற்கு கற்றுக் கொடுக்கிறார்கள். இத்தகைய மாணவர்கள் "நீட்' தேர்வு, ஐ.ஐ.டி. நடத்தும் நுழைவுத் தேர்வு முதலானவற்றில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
  • மேலும், அரசு கல்லூரிகளில் மருத்துவம்,பொறியியல் போன்ற படிப்பில் சேர்ந்து மிகக் குறைவான கட்டணத்தில் படிக்கிறார்கள்.
  • ஆனால், வெறுமனே மனப்பாடம் செய்து படிக்கும் மாணவர்கள் இது போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவதில்லை.
  • இதுவே தாய்மொழியான தமிழில் பாடங்கள் இருந்தால், பாடங்களை மாணவர்கள் புரிந்து படிப்பார்கள்; சிந்திக்கும் ஆற்றல் பெருகும்; ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்; புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள்.
  • நாட்டின் எந்தப் பகுதியில் வாக்காளர் இருந்தாலும் "பயோமெட்ரிக்' அடிப்படையில் வாக்குப் பதிவு செய்யக் கூடிய சிறிய அளவிலான கருவியை சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் போன்றவற்றில் அவர்களுடைய தாய்மொழியில்தான் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
  • இதுவே, அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு சுலபமாக அமைகிறது.
  • ஆனால், இயற்கையாகவே அறிவில் சிறந்து விளங்கும் தமிழக மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வியை மனப்பாடம் செய்து படிப்பதால் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து வருகிறது. ஆராய்ச்சியில் சாதித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது.
  • தமிழ் மொழியில் கல்லூரி பாடப் புத்தகங்கள் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது.
  • பள்ளிப் படிப்பு வரையிலாவது கட்டாய தமிழ்வழிக் கல்வியை குறைந்தபட்சம் படிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும். அதேசமயம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து, அவற்றைப் பேசுவதற்கும் படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • கல்லூரிகளில் தமிழில் பாட புத்தகங்கள் இல்லாததால் ஆங்கிலத்தில் படித்தால் புரிந்து கொள்ளும் வகையில் பாடப் புத்தகங்களை அமைக்க வேண்டும்.

நன்றி – தினமணி (05-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்