- தாய்மொழியில் உயர்கல்வி கற்பிப்பது தொடர்பான உரையாடல் மீண்டும் வலுப்படுகிறது. பொறியியல், மருத்துவம் ஆகிய தொழிற்கல்விப் படிப்புகளைத் தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் அரசியல் குரல்கள் எழுந்துள்ளன.
- இதன் பின்னால் இருக்கும் அரசியல் கணக்கீடுகள் என்னவாக இருந்தாலும் சரி, தமிழ்வழிக் கல்வியைப் பற்றி விவாதிக்கவும் சிலவற்றை நடைமுறைப்படுத்தவும் ஏற்ற சூழல் இது. தமிழ்வழிக் கல்வியை எல்லாத் துறைகளிலும் கொண்டுவரவும் ஏற்கெனவே உள்ளவற்றை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு முயன்றால் எளிதாகச் செய்யலாம். அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கெனவே இங்கு உள்ளது.
ஆண்டுதோறும் நிதியுதவி
- அரசு கலைக் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளிலும் 1960கள் முதற்கொண்டு தமிழ்வழிக் கல்வி நடைமுறையில் உள்ளது. அதற்கெனத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை உருவாக்கியது. அவை பல்துறை சார்ந்தவை. மொழிபெயர்ப்புகளும் நேரடியாக எழுதப்பட்டவையும் அடங்கும். அவற்றை அந்நிறுவனம் இப்போது மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது. அவை போதுமானவை அல்ல. இன்னும் கூடுதலாக நூல்கள் தேவை.
- ஒவ்வொரு துறையிலும் நவீனமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் பாடத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் கவனத்தில் எடுத்தும் இன்னும் ஆயிரக்கணக்கான நூல்களை எழுத வேண்டிய தேவை உள்ளது. நூல்களை எழுதுவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் நம் இடையே பலர் உள்ளனர். தற்போது தமிழ்வழிப் படிப்புகளுக்குத் தனியார் பதிப்பகங்கள் விற்பனை நோக்கில் வெளியிடும் நோட்ஸ் எனப்படும் நூல்களை எழுதுவோர் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான். நூல்களை உருவாக்குவதற்கான அறிவு வளத்தில் பிரச்சினை ஏதும் இல்லை.
- தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையையும் அரசு வழங்கிவருகிறது. ‘தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் திமுக முதன்முதலில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 1967- 1968இல் அறிமுகப்படுத்தப்பட்டு, அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது’ என உயர்கல்வி அமைச்சர் தம் அறிக்கையில் (13-11-22) சுட்டியுள்ளார்.
- தமிழ்வழிக் கல்வி 1960களில் அறிமுகமானபோது அதைக் குறித்துக் கலைக் கல்லூரி மாணவர்கள் இடையே தயக்கம் இருந்தது. புதிதாக ஒன்றைத் தொடங்கும்போது அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கமும் எதிர்மறைக் கருத்துகளும் உருவாவது இயல்பு. காலப்போக்கில் எதிர்ப்பு மட்டுப்படும்; ஏற்பு கிடைக்கும். மாணவர்களை ஈர்க்கும் வகையிலும் ஏற்கச் செய்யும் நோக்கிலும் தமிழ்வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது மிகச் சிறந்த முன்னெடுப்பு. அதன் நல்விளைவை இன்று காண முடிகிறது.
தமிழ்வழியில் பயின்றோருக்கான இடஒதுக்கீடு
- தொடர்ச்சியாகத் தமிழ்வழியில் கற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இருபது விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு கொண்டுவந்தது. அதற்கு வந்த எதிர்ப்புகளை எல்லாம் கடந்து நீதிமன்ற ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமான முன்னேற்றம். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே பெரிதும் அரசுப் பள்ளிகளில் பயில்கிறார்கள்; அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி. ஆகவே, தமிழ்வழியில் பயின்று வருவோர், தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழியில் படித்துவரும் மாணவர்களுடன் போட்டியிடுவது கடினம் என்னும் நடைமுறைப் புரிதலுடன் இருபது விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சமூக நீதியில் மொழிக்கும் முக்கியமான பங்கிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்ட இந்த இடஒதுக்கீட்டு முறை பெரும் பயனைக் கொடுத்திருக்கிறது.
- இப்போதெல்லாம் கலைக் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்பில் சேரவே மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கலைக் கல்லூரிகளில் முதலில் நிரம்புவது தமிழ்வழிப் படிப்புகள்தான். பொருளியல், வரலாறு, கணிதம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட அடிப்படை இளநிலைப் பட்டக் கல்வியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் படிப்புகள் உள்ளன. மாணவர்கள் முதலில் தேர்வு செய்வது தமிழ்வழிப் படிப்பைத்தான். உதவித்தொகையைவிடவும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இருபது விழுக்காடு இடஒதுக்கீடு அதற்கு முக்கியமான காரணம்.
- அரசுக் கல்லூரிகளில் உயர்கல்வி பயில வரும் பெருவாரியான மாணவர்கள் தொடக்கக் கல்வி முதலாகத் தமிழ்வழியில் பயின்றவர்கள். அதுவும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள். என் அவதானிப்பின்படி கிட்டத்தட்டத் தொண்ணூறு விழுக்காடு மாணவர்கள் தமிழ்வழியில் கற்றவர்கள் என்று சொல்வேன். ஆங்கிலவழியில் கற்று அரசு கல்லூரிக்கு வரும் அந்தப் பத்து விழுக்காட்டு மாணவர்களும் பெரும்பாலும் மாநகரத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் ஆங்கிலவழி வகுப்புகளில் படித்தவர்கள் அதில் கணிசம்.
ஆங்கிலம் ஏன் அச்சமூட்டுகிறது?
- கிராமப்புறப் பள்ளிகளிலும் சிறுநகரப் பள்ளிகளிலும் பயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலம் பற்றிய அச்சம் மிகுதி. ஆங்கில மொழிப் பாடத்தோடு கட்டிப் புரண்டுதான் பன்னிரண்டாம் வகுப்பைத் தாண்டுகிறார்கள். கல்லூரிக்கு வந்த பிறகும் ஆங்கில மொழிப் பாடம் அச்சமூட்டுகிறது. அத்துடன் ஆங்கில வழியிலேயே எல்லாப் பாடத்தையும் படிக்க வேண்டும் என்றால் எப்படி?
- ஆகவே, அவர்கள் தமிழ்வழிப் படிப்பையே ஆர்வமாகத் தேர்வு செய்கின்றனர். சமீபகாலமாகத் ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ நடத்தும் தேர்வுகளுக்கான அறிவிப்பிலேயே தமிழ்வழியில் கற்றவர்களுக்கான இடஒதுக்கீடு பற்றித் தெளிவான குறிப்பு கொடுக்கப்படுகிறது. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் போது தமிழ்வழிப் படிப்புக்கான சான்றிதழும் கேட்கப்படுகிறது; பரிசோதிக்கப்படுகிறது.
- 2010ஆம் ஆண்டு பொறியியலில் சில பாடங்களுக்கு மட்டும் தமிழ்வழிக் கல்வி அறிமுகம் ஆனது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய அப்படிப்புகளில் பயின்ற மாணவர்கள் இருபது விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் உடனடி வேலைவாய்ப்பைப் பெற்றனர். அதனால் இப்போது பொறியியல் தமிழ்வழிப் படிப்புக்கும் சேர்க்கையில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்வழியில் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இப்போது மிகுந்திருக்கிறது.
- கலைக் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளில் சேர்க்கை முடிந்த பிறகுதான் ஆங்கிலவழியில் மாணவர் சேர்கின்றனர். அதுவும் தயக்கத்தோடுதான். ‘ஆங்கிலவழி என்றாலும் தமிழில் தேர்வு எழுதலாம். வகுப்புகள் எல்லாம் தமிழில்தான் நடக்கும். பயப்பட வேண்டியதில்லை’ என்று ஆசிரியர்கள் தெளிவுறுத்தி மாணவர்களைச் சேர்க்கின்றனர். எனினும் விவரமுள்ள மாணவர்கள் எந்தப் பாடம் என்றாலும் பரவாயில்லை, அது தமிழ்வழியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இது மிகப் பெரிய மனமாற்றம்.
- கலைக் கல்லூரிகளில் இப்போது ஆங்கிலவழிப் படிப்பு பெயரளவுக்குத்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் யாரும் பாடம் நடத்துவதில்லை. மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்வெழுத வேண்டியதில்லை. ஆங்கிலவழியில் கற்றாலும் தமிழில் தேர்வெழுதப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கின்றன. ஆங்கிலவழியில் குறைவான மாணவர் சேர்ந்திருக்கும் துறைகளில் அம்மாணவர்களைத் தமிழ்வழி மாணவர்களோடு இணைத்து உட்கார வைத்தே வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் முதன்மையானவர்களாகவும் ஆங்கிலவழியில் பயில்வோர் அடுத்த நிலையினராகவும் கருதும் போக்கு இயல்பாக ஏற்பட்டிருக்கிறது. இன்று தமிழ்வழிக் கல்விக்கு இருக்கும் மதிப்பு ஆங்கிலவழிக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்.
உதவித்தொகை எதற்கு?
- தமிழ்வழிக் கல்வியில் மேலும் சில முன்னேற்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள இதுவே சரியான தருணம். மாணவர் சேர விரும்பாத ஆங்கிலவழிப் படிப்புகளைத் தமிழ்வழியாக மாற்றிவிடலாம். ஒரு துறையில் தமிழ்வழியில் இரண்டு வகுப்புகள் இருக்கலாம். மாணவர் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அவ்வாறு பிரிப்பது ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுதான்.
- மாணவர் விரும்பும் படிப்புகளில் தனியார் கல்லூரிகள் இரண்டு, மூன்று பிரிவுகளை ஏற்கெனவே தொடங்கி நடத்திவருகின்றனர். ஆகவே, அரசு கல்லூரிகளில் இருக்கும் ஆங்கிலவழி வகுப்புகளை உடனே தமிழ்வழிக்கு மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல் எதுவும் வர வாய்ப்பில்லை.
- தமிழ்வழியில் பயில்வோருக்கு வழங்கும் உதவித்தொகைச் செலவு அரசுக்குக் கூடும். ஒரு மாணவருக்கு ஆண்டுக்குத் 900 ரூபாய் என்பது பெரும் செலவல்ல. புதிதாகத் தமிழ்வழியில் தொடங்கும் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லை என்று அறிவித்தாலும் பிரச்சினை இல்லை. மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டித்தான் இந்த உதவித்தொகைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது மாணவர் சேர்க்கையில் போட்டி மிகுந்திருக்கும் சூழலில் உதவித்தொகைத் திட்டத்தையே ரத்துசெய்தாலும் எதிர்ப்பு இருக்காது. ‘தாய்மொழியில் படிப்பதற்கு உதவித்தொகை எதற்கு? அப்படிக் கொடுப்பது தமிழுக்கு நேர்ந்த அவமானம்’ என்னும் கருத்து நிலவும் காலகட்டம் இது என்பதையும் நினைவில் கொள்வோம்.
- வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு ஆங்கிலவழிப் படிப்பு மட்டுமே இருக்கிறது. அப்படிப்புகளைத் தமிழ்வழியிலும் தொடங்க வேண்டும். தங்களுக்கு இருபது விழுக்காடு இடஒதுக்கீட்டு வாய்ப்பில்லை என்று துயருறும் மாணவர்களுக்கு அது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும். இந்தப் படிப்புகளுக்கு மாணவர்களிடையே எப்போதும் வரவேற்பு அதிகம். ஆகவே, கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கும் வகையில் தமிழ்வழியிலும் தொடங்கினால் வரவேற்பு மிகும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் கூடும். ஒவ்வொரு கல்லூரியும் புதிய படிப்புகளை வேண்டிக் கேட்கும்போது தமிழ்வழிப் படிப்புகளுக்கு முன்னுரிமை தரலாம். அரசும் அதை ஊக்கப்படுத்தலாம். தமிழ்வழிப் படிப்பைக் கேட்டால் அரசு உடனே வழங்கும் என்னும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அரசின் கவனம் வேண்டும்
- கடந்த பதினைந்து ஆண்டுகளில் கணிசமான அரசு கலைக் கல்லூரிகளைப் புதிதாக அரசு தொடங்கியுள்ளது. தற்போதைய அரசும் இரு கல்வியாண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளுக்குச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தேவையையும் வரவேற்பையும் இது உணர்த்துகிறது. இவ்வாறு புதிதாகத் தொடங்கும் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
- பொதுவாகத் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பட்டப் படிப்புகள் மட்டுமே புதிய கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் ஆங்கில இலக்கியம் தவிர பிற நான்கு பட்டப் படிப்புகளும் தமிழ்வழியாக இருக்க வேண்டும். புதிதாகத் தொடங்கும் படிப்புகள் எல்லாம் தமிழ்வழிதான் என்பதை அரசு தன் உயர்கல்விக் கொள்கையாகவே கடைப்பிடிக்கலாம்.
- இன்று கிட்டத்தட்ட 150 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. 160க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் தமிழ்வழிக் கல்வியை மேம்படுத்தவும் புதிதாகத் தொடங்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும். பொறியியல், மருத்துவக் கல்விகளைத் தமிழில் வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருபுறம் தொடரட்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தமிழ்வழிக் கல்வியை விரிவாக்கவும் அரசின் கவனம் குவியட்டும்.
நன்றி: அருஞ்சொல் (18 – 11 – 2022)