TNPSC Thervupettagam

தரணியெங்கும் தமிழிசை ஒலிக்க...

January 21 , 2020 1774 days 1353 0
  • தமிழிசையை உலகறியச் செய்யும் வகையில் தமிழிசை மாநாடு,  தமிழிசை விழாக்கள் தமிழகத்தில் அவ்வப்போது நடைபெறுகின்றன. இந்த இனிய தருணத்தில் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து நோக்குவதோடு, தமிழிசையை ஆராய்ந்தும், இசை வளர்ச்சிக்குப் பாடுபட்டும் 1917-ஆம் ஆண்டு "கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற இசை ஆய்வு நூலைப் படைத்த ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் கல்வெட்டுச் செய்திகளாகப் பதிவு செய்துள்ள அரிய தகவல்களை அறிந்து கொள்வதன் வாயிலாகவும் தமிழிசையின் பழைமையும் சிறப்பும் நமக்கு நன்கு புலப்படும்.
  • சங்கம் மருவிய காலத்தில் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளையும் தன்னகத்தே கொண்டு முத்தமிழ்க் காப்பியமாக விளங்குவதை நாம் நன்கு அறிவோம். இந்தக் காப்பியத்தில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசைகளைப் பற்றிய குறிப்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

பழந்தமிழர் வாழ்வு

  • பழந்தமிழர் வாழ்வு இசையோடு இயைந்தது என்பதற்குச் சான்று பகரும் வகையில், காவிரிப்பூம்பட்டினத்து மருவூர்ப் பாக்கத்தில் பாடுவோர், இசைக் கருவி வாசிப்போர் ஆகியோருக்கு இருக்கைகள் அமைந்து அவர்கள் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை, "குழலினும் யாழினும் குரல்முத லேழும், வழுவின் றிசைத்து வழித் திறங் காட்டும், அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்' என்னும் பாடல் வாயிலாக இளங்கோவடிகள் விரிந்துரைத்துள்ளார்.
  • மேலும், "எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்/பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் மண்ணிற்மேற்/போக்கினாள் பூம்புகார் பொற்கொடி மாதவிதன்/ வாக்கினால் ஆடலரங்கில் வந்து' என்னும் பாடல் வாயிலாக இயற்றமிழின் ஐந்து பாகுபாடுகளையும், இசைத் தமிழின் நால்வகைப் பண்புகளையும், பதினொரு வகை நடிப்புக் கலையையும் மாதவி சிறப்புடன் வெளிப்படுத்தி அரங்கில் ஆடினாள் என்று கூறி அதன் மூலம் முத்தமிழின் இலக்கணக் கூறுகளை அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகள் சுட்டிக் காட்டியுள்ளார்.  இந்தக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக் குரவை ஆகிய பகுதிகள் பழந்தமிழரது இசை அறிவுக்குச் சான்றாக அமைந்துள்ளன.

அரங்கேற்று காதை

  • அரங்கேற்று காதையில், "அசையா மரபின் இசையோன் தானும்/இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்/தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி/ வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்/நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து'  (பாடல் 37-44) என்னும் பாடல் வரிகளின் வாயிலாக, பாடல் ஆசிரியனிடம் பொருந்தியிருக்க வேண்டிய தகுதிகளைப் பட்டியலிட்டுள்ளார். இதே போன்று தண்ணுமை ஆசிரியன், குழலாசிரியன், யாழாசிரியன் போன்ற இசைக் கலைஞர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளையெல்லாம் பாடல்களில் (45-94) விரிந்துரைத்துள்ளார். 
  • இவ்வாறு சிலப்பதிகாரம் நூலில் காணப்படும் இசை பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்த ஆபிரகாம் பண்டிதர், தற்காலத்தில் கூறப்படும் ராகங்கள், அந்தக் காலத்தில் பண்களாக இருந்தன என்றும், அவையே கர்நாடக இசையின் மூல இலக்கணங்களாகத் திகழ்கின்றன என்றும் தமிழிசையின் தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.
  • மேலும், சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர் குரவையில் (இசைப் பெயரிடுதல் மற்றும் கூத்துள் படுதல்) குரல், துத்தம் கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று மாதிரி இட்ட இசைப் பெயருடன் ஆடிப் பாடும் பெண்களை, ஆபிரகாம் பண்டிதர் தன் ஆய்வில் ஏழு ஸ்வரங்களாகச் சித்தரித்தும், அந்தப் பெண்கள் முதலில் சமநிலையில் நின்று பின்னர் வட்டமாக கைகோத்து ஆடும் வடிவத்தைக் கணக்கீடு செய்து 12 ஸ்வரஸ்தானங்கள் என்றும், அவை 24 ஸ்ருதிகளாக உருவாகக் கூடிய தன்மை பெற்றது என்றும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அகில இந்திய இசை மாநாடு

  • மேலும், 1916-ஆம் ஆண்டு பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் பழங்காலத்தில் இசைவல்லோர் 24, 48, 96 ஆகிய சுருதிகளில் பாடியுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டு இசைவுலகினரை வியப்பில் ஆழ்த்தினார் என்றும் அறிய முடிகிறது.
    இசைத் தமிழ் நூல்களாகிய பெருநாரையும் பெருங்குருகும், பஞ்சபாரதியமும் அழிந்தொழிந்த நிலையில் சிலப்பதிகாரம் மட்டுமே இசைத் தமிழுக்கும், தமிழிசை ஆராய்ச்சிக்கும் கலங்கரைவிளக்கம் போல விளங்குகிறது என்பது தமிழிசை அறிஞர்களின் கருத்தாகும்.
  • சீவகசிந்தாமணி காப்பியத்தில் இடம்பெற்றுள்ள காந்தருவதத்தையார் இலம்பகத்தில் (பாடல் 716 முதல் 722 வரை) யாழின் வாயிலாக இசைக்கருவி உருவாக்கத்தின் நுணுக்கம்,  இசை குறித்த குறிப்புகளையும் ஆசிரியர் திருத்தக்க தேவர் வெளிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
    6-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்களும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நாச்சியார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பண்ணோடு பாடி சமயம் வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழிசைக்குப் புத்தொளியூட்டினர். தலங்கள்தோறும் சுந்தரர்  சென்று பாடிய பாடல்கள், பிற்காலத்தில் "சுந்தரர் செந்தமிழ்' எனப் போற்றப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களை திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் அமைத்துப் பாடி இசை வளர்த்தார்.

மறுமலர்ச்சி

  • சென்ற இரு நூற்றாண்டு காலத்தில் முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், இராமலிங்க அடிகளார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேதநாயகம்  பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார், முத்தையா செட்டியார், எம்.எம்.தண்டபாணி தேசிகர், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதலான சான்றோர்களின் அருந்தொண்டால் தமிழிசை மீண்டும் மறுமலர்ச்சி பெற்றது.
  • இவ்வாறான தொன்மைமிக்க தமிழிசையின் வரலாறு,  பெருமைகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இன்றைய மாணவ சமுதாயம், மக்களிடையே கொண்டுசேர்க்கும் பணியினை முனைப்போடு தமிழிசைச்  சான்றோர்கள் மேற்கொண்டால் தமிழிசைக்கு என்றும் தாழ்வு வராது. மேலும், உலகம் முழுவதும் தமிழிசை  ஒலிக்க தன்னார்வத்துடன் பலர் முன்வருவார்கள் என்பது உறுதி.

நன்றி: தினமணி (21-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்