TNPSC Thervupettagam

தரமான உயர் கல்வியே அடிக்கல்!

July 23 , 2019 1953 days 988 0
  • உலகம் கட்டுப்பாடான வாழ்க்கை முறையில் இருப்பது கடந்த 2019-ஆம் ஆண்டுகளாகத்தான் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சம். இந்தக் காலகட்டத்தில், முதல் கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகவும் சிறப்பானவை. இதற்கு உலகெங்கும் உருவான பல்கலைக்கழகங்களே காரணம். சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகம் என உருவான உயர் கல்வி அமைப்பு, கடந்த 200 ஆண்டுகளில் முழுமை பெற்று சமுதாயத்தின் எல்லா வளர்ச்சிகளையும் உருவாக்கியுள்ளது.
  • அரசியல் நடவடிக்கைகளையும், அரசின் திட்டங்களையும் பல்கலைக்கழகங்கள் இயக்குவதில்லை என்றாலும், அவற்றுக்கான அறிவினையும் கருத்துகளையும் பாடங்களாக உருவாக்கி அளித்துள்ளன. செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றை பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதில்லை. ஆனால், அவற்றை உருவாக்குபவர்களையும், எழுத்தாளர்களையும், இயக்குநர்களையும் பயிற்சி பெறும் வகையிலான பாடங்களைப் போதிப்பது பல்கலைக்கழகங்களே.
  • கட்டடக் கலைஞர்கள், புத்தகங்கள்,செய்தி ஆசிரியர்கள், தொழிற்சாலைகளை உருவாக்கும் வல்லுநர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போன்ற பலதரப்பட்ட சமூகத்துக்குத் தேவையான லட்சக்கணக்கானவர்களை உருவாக்குவதும் பல்கலைக்கழகங்களே.
  • பல நாடுகளின் பல்கலைக்கழகங்களையும் ஆராய்ந்தவர்கள், அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சிறப்பான தன்மையைப் பாராட்டுகின்றனர்.
பல்கலைக்கழகம்
  • அந்த நாட்டின் பல்கலைக்கழகங்கள்  மற்ற பல நாடுகளின் மாணவர்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. இன்றைய நவீன பல்கலைக்கழகங்களைப்பற்றி புரிந்து கொள்வதற்காக, போலோக்னா, ஹார்வர்டு, வர்ஜினியா, கர்னெல், ஜான் ஹாப்கின்ஸ் ஆகிய ஐந்து தரமான பல்கலைக்கழகங்கள் உருவாகிச் செயல்பட்ட விவரங்களைப் பார்க்கலாம்.
  • இத்தாலிய நாட்டில் உருவாக்கப்பட்ட போலோக்னா பல்கலைக்கழகம்தான் உலகிலேயே முதல் பல்கலைக்கழகம். இது கி.பி.1088-ஆம் ஆண்டில் இர்நேரியஸ், பெப்போ ஆகிய இரண்டு அறிஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்டபோது, அதற்கு அலுவலகம், கட்டடங்கள் என எதுவும் கிடையாது. மாணவர்களும் அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் பேராசிரியர்களும் இருந்தனராம். பேராசிரியர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள். அதற்கான கட்டணப் பணத்தை ஒவ்வொரு மாணவரும் ஆசிரியருக்கு ஒவ்வொரு போதனைக்கும் வழங்குவார்களாம்.
  • தொடங்கப்பட்டு 500 ஆண்டுகள் கழிந்த பிறகே, போலோக்னா பல்கலைக்கழகத்துக்கு கட்டடங்கள் உருவாகின.  அதன் பிறகே, உயர் கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை அந்த நகரின் தேவாலயம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கியது. அந்த நாட்டில், பல்கலைக்கழகம் உருவாவதற்கு முன்பு, பாடங்களை சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்களை இந்தத் தேவாலயங்கள்தான் அங்கீகரிக்க முடியும். இதுபோல் அங்கீகாரம் பெறாத ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் போதித்து பணம் சம்பாதித்தால் அது குற்றம்; தண்டனை உண்டு.
இத்தாலி போன்ற நாடுகளில்
  • இத்தாலி போலோக்னா நகரில் கி.பி.1000-ஆம் ஆண்டு வாக்கில், போப்பாண்டவருக்கும், மன்னருக்கும் நிறைய விஷயங்களில் சட்டப்பூர்வமான தகராறுகள் உருவாகினவாம். இதனால், பல விதிமுறைகளை பைபிள் பின்னணியிலும், அரசரின் வாய்மொழி உத்தரவினால் ஏற்பட்ட பழக்கவழக்கங்களையும் கையிலெடுத்து விவாதம் செய்யும் வல்லுநர்கள் உருவாகினர்.
  • இவர்களில் இருவர்தான் கி.பி.1088-ஆம் ஆண்டில் போலோக்னா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய இர்நேரியஸ் மற்றும் பெப்போ. சட்டம் பயிலவும், அதைப் போதனை செய்யவும் பல மாணவர்களும், பேராசிரியர்களும் வெளிநாடுகளிலிருந்து இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.
  • இந்தப் பல்கலைக்கழகத்தைப் பார்த்து இத்தாலியின் வேறு பல நகரங்களிலும் பல்கலைக்கழகங்கள் உருவாகின. முதலில் சட்டக் கல்வி பிரபலமாக இருந்தது; எனினும் மருத்துவம், தத்துவங்கள், மதங்கள் பற்றிய பாடங்களும் பிரபலமாகின. ஐரோப்பியாவின் பிற நாடுகளிலிருந்து இத்தாலிக்கு மாணவர்கள் வந்து உயர் கல்வி கற்று பலன் அடைந்தனர்.
  • அதைத் தொடர்ந்து, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பல்கலைக்கழகங்கள் உருவாகி, அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இத்தாலியின் போலோக்னாவில் பல்கலைக்கழகம் உருவாகிய பிறகு, 200 ஆண்டுகளில் ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலும் உயர் கல்வி நிலையங்களும் பல்கலைக்கழகங்களும் உருவாகின.
  • வட அமெரிக்காவில், ஆங்கிலேயர்கள் மிக அதிக அளவில் குடியேறியதால் அந்த நாட்டை புதிய இங்கிலாந்து என அழைப்பது அன்றைய வழக்கம். ஐரோப்பாவைப் பார்த்து தங்கள் நாட்டிலும், உயர் கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் வட அமெரிக்காவுக்கு உருவானது. 1636-ஆம் ஆண்டு மாஸசூசெட்ஸ் பகுதியான நியூ டவுனில் அமெரிக்காவின் கல்லூரி உருவாகியது. இந்தக் கல்லூரியில் படித்து முன்னேறிய பலரும் தங்கள் பகுதிகளுக்குச் சென்று கல்லூரிகளையும், பல்கலைக்கழங்களையும் உருவாக்கினர்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
  • 1775-ஆம் ஆண்டில் நியூ டவுனில் உருவாகிய கல்லூரியை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் எனப் பெயரிட்டனர். மாஸாசூசெட்ஸ் காலனி எனப்படும் நிர்வாக அமைப்பு, நமது இன்றைய ஊராட்சிகள் போன்ற கிராம நிர்வாகத்துடன் ஒப்பிடத் தகுந்தது. அந்தக் காலனி, தங்கள் பகுதியில் இருந்த கல்லூரிக்கு 400 பவுன்டுகள் பணத்தை அளித்து ஊக்குவித்தது.  அன்றைய காலகட்டத்தில் இது மிக அதிக தொகை. இந்தக் கல்லூரி மிக அதிகமான மாணவர்களுக்கு கல்வி போதித்து, அவர்களைப் பட்டதாரிகளாக்கியது.
  • இதில் படித்துப் பட்டம் பெற்ற ஜான் ஹார்வர்ட்,  தனது சொத்தில் பாதியை அந்தக் கல்லூரிக்கு வழங்கினார். அதன் மதிப்பு அன்றைய நிலையில் 800 பவுன்டுகள்.  அது மட்டுமின்றி அவரது குடும்பத்தில் இருந்த 260 புத்தகங்களை அந்தக் கல்லூரிக்கு வழங்கினார். தாராளமாக உதவிகளைச் செய்த அவர், கடவுள் நம்மை மிகவும் பாதுகாப்பாக புதிய இங்கிலாந்துக்கு அழைத்து வந்த பிறகு, நாம் நமது வீடுகளைக் கட்டி, நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து, கடவுளை வணங்கத் தேவையான பல இடங்களை உருவாக்கி, நமக்கென காலனி ஆட்சி அமைப்பையும் உருவாக்கிக் கொண்டோம்.
  • அடுத்து, நாம் மிகவும் விரும்பிய நல்ல கல்வியை உருவாக்கி கற்று, நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லாவிட்டால், இன்று நாம் பெற்ற வாழ்க்கைத் தரம் வெகுவாகப் பெருகி செழிப்படையாமல், நம் மக்கள் எல்லோருமே தரையில் மண்ணோடு மண்ணாகிப் போவார்கள் என்றார்.
  • வசதி படைத்த ஆர்வலர்களால்  நிதியுதவி வழங்கப்பட்டு, ஹார்வர்டு உருவாக்கிய கல்லூரியில் 1642-ஆம் ஆண்டு முதல்முறையாக பேச்சலர் ஆஃப் ஆர்ட்ஸ் எனப்படும் பி.ஏ. பட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதிலிருந்து ஆரம்பமாகி பல கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அமெரிக்காவில் உருவாகின. 1900-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 2,37,592 மாணவ, மாணவியர் கல்லூரிகளில் படித்தனர்.
  • இது அமெரிக்காவில் கல்லூரி செல்லும் வயது  மாணவர்களில் 4 சதவீதத்தினர் எனவும், இது 1940-ஆம் ஆண்டில் 15 லட்சமாக உயர்ந்து அந்த ஆண்டின் மக்கள்தொகையில் 12 சதவீதம் கல்லூரி செல்லும் மாணவர்களை உருவாக்கியிருந்தது. இந்த உயர் கல்வி வளர்ச்சியின் பலனாக பொருளாதாரத்திலும், விஞ்ஞானம் உள்பட அனைத்துத் துறைகளிலும் உலகின் மிகச் சிறந்த நாடாக அமெரிக்கா வளர்ந்தது என்பது சரித்திரம்.
  • அப்படியே, நம் நாட்டின் கல்வி சரித்திரத்தையும் புரட்டிப் பார்த்தால், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்த பின்னர், டேவிட் ஹரே எனும் ஆங்கிலேயரும், ராஜா ராம் மோகன் ராயும் கவனிக்கத் தகுந்தவர்கள். 1857-ஆம் ஆண்டில், கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகம் அங்கீகரித்த கல்லூரிகள் லண்டன் பல்கலைக்கழகத்தின் பாணியில் உருவாக்கப்பட்டன.  இந்தக் கல்லூரிகளில் ஆங்கிலமும், தாய் மொழியும் போதிக்கப்பட்டன.  சட்டம், மருத்துவம், பொறியியல், சம்ஸ்கிருதம், அரபிக், பெர்ஷியன் மொழிகளை மாணவர்கள் பாடங்களாக தேர்வு செய்தனர்.
கல்வி
  • 1857-ஆம் ஆண்டு தொடங்கி, 1902 வரையிலும் இந்தக் கல்லூரி கல்வி வளர்ச்சியடைந்து, நிறைய கல்லூரிகளும் உருவாகின.  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் என்ற நடைமுறை உருவாகி, வேந்தர்கள், துணைவேந்தர்கள் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் (செனட்) பணியமர்த்தப்பட்டனர். 1857-இல் 59 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் இந்தியா முழுவதும் இருந்தன.
  • 1902-ஆம் ஆண்டு வாக்கில் இவை 140 கல்லூரிகளாக அதிகரித்தன. சுதந்திரத்துக்குப் பிறகு, 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் படித்தனர்; 1957-ஆவது ஆண்டில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 556-ஆக உயர்ந்தது. ஆங்கிலப் பயிற்சியில் தேறி மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது மாணவர்களும் உருவாகினர்.
  • ஆங்கில போதனை நமது உயர் கல்விக்கான உதவித் தொகை, தங்கும் விடுதிக்கான செலவுத் தொகை ஆகியவை மாநில அரசுகளால் அளிக்கப்பட்டதால், அதிக மாணவர்கள் உயர் கல்வி பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்  கொண்டனர். இந்தியாவில் 821 பல்கலைக்கழகங்களும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளும் உள்ளன.
  • சில கல்லூரிகள் நல்ல முறையில் இயங்கி வந்தாலும் தரமான முறையில் அனைத்துக் கல்லூரிகளும் கல்வி போதிக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு இது மிகவும் முக்கியம்.

நன்றி: தினமணி (23-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்