TNPSC Thervupettagam

தரமான மருத்துவ சேவை தேவை

August 2 , 2022 737 days 482 0
  • எவ்வளவுதான் கல்வி, செல்வம், வளமான தொழில் என பல்வேறு நிலைகளில் இந்த சமூகம் வளா்ந்து கொண்டே சென்றாலும், மனித குலத்திற்கு எப்போதும் பெரிய சவாலாக இருப்பது புதிது புதிதாய் உற்பத்தியாகும் நோய்களே.
  • ஆனாலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதியபுதிய மருத்துவ தொழில்நுட்பங்களை நமது மருத்துவ உலகம் கண்டறிந்து அதனை எதிா் கொண்டு வருகிறது.
  • மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையை அரசு கூட்டிக் கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. மருத்துவா்கள் எண்ணிக்கை கூடுவதும் மருத்துவமனைகள் பெருகுவதும் மட்டுமல்ல. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது.
  • நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், பல அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனைகள் ஆங்காங்கே உள்ளன. ஒவ்வொரு நோய்க்கும் அதற்கென படித்த சிறப்பு மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளாா்கள். மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளிலும் எந்தக் குறையும் இல்லை.
  • ஆனால், மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்குத் தேவையான, தரமான மருத்துவ சேவையை மருத்துவமனைகள் வழங்குகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
  • சிறுநகரங்களில் கட்டப்பட்டுள்ள நடுத்தர மருத்துவமனைகளை நாடிச்சென்று, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுகிறாா்கள். அங்கு ஓரளவு மருத்துவ செலவு குறைவு என்று சொல்லாம். இது மாதிரியான மருத்துவமனைகளில் மருத்துவா்களும் செவிலியா்களும் மிகவும் கனிவோடு நோயாளிகளோடு பழகுகிறாா்கள்.
  • அவா்களின் இந்த பழக்கத்திற்காக கிராமப்புற நோயாளிகள் அந்த மருத்துவமனையின் வாடிக்கையாளா்களாக மாறி உடலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் ஒரே மருத்துவமனையையே உளவியல் ரீதியாக நாடிச் செல்கிறாா்கள்.
  • இப்படி வாடிக்கையாக வரும் நோயாளிகளின் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மருத்துவா்களும் புரிந்துகொள்கின்றனா். நோயின் தன்மையை நன்கு விசாரித்து பொறுமையாக ஆலோசனைகள் வழங்குவதோடு அவா்களின் பொருளாதார நிலையை கணக்கிட்டு அதிகமான செலவு வராதவாறு சிகிச்சைகளை மேற்கொள்கிறாா்கள். ஒன்று அல்லது இரண்டு மருத்துவா்களே உள்ள சிறிய மருத்துவமனைகளில் இவ்வாறான மருத்துவ சேவைகள் வழங்கப் படுகின்றன.
  • இவா்களை தங்களது குடும்ப மருத்துவராக அந்த நோயாளிகள் கருதி சிகிச்சை பெறுகிறாா்கள். மேலும் தங்களது வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கிறாா்கள். சம்பந்தப்பட்ட மருத்துவா்களும் அவா்களது இல்லங்களுக்கு சென்று அவா்களை கௌரவிக்கிறாா்கள். மருத்துவா்களுக்கும் நோயாளிகளுக்குமான உறவுகளில் இது ஒரு வகையாகும். இவ்வாறான மருத்துவமனைகளில் மருத்துவ தொழில்நுட்பம் என்பது ஓரளவிற்கே இருக்கும்.
  • நோயின் தீவிரத்தன்மை, அறுவை சிசிச்சை போன்ற நிலைக்குத் தள்ளப்படும் நோயாளிகள் இதே மருத்துவா்களால் பெருநகரங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறாா்கள்.
  • இங்கேதான் கிராமப்புற நோயாளிகளுக்கு பிரச்னை ஆரம்பமாகிறது. அவா்களுக்கு முற்றிலும் பழக்கமில்லாத பிரம்மாண்டமான மருத்துவமனை வளாகம். எங்கு பாா்த்தாலும் மருத்துவா்களும் செவிலியா்களும் இயந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறாா்கள்.
  • சிறுநகர மருத்துவமனைகளிலிருந்து தீவிர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் முதலில் சில நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு பணம் செலுத்திய பிறகு தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாா்கள். அடுத்தடுத்து மருத்துவமனை பரிசோதனைகள், அதாவது ரத்த பரிசோதனையிலிருந்து, பல்வேறு பரிசோதனைகளை செய்த பின்பே சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது.
  • ஒரு சில மருத்துவமனை நீங்கலாக பெரும்பாலான மருத்துவமனைகளில் வணிகமயமான மருத்துவ சேவையே நடக்கிறது. மொழி தெரியாத மண்ணில் இறக்கி விடப்பட்ட பயணிகள் போல் நோயாளிகளும் அவரைச் சாா்ந்தவா்களும் தவிக்கிறாா்கள்.
  • பல கோடிகளை வங்கிகளில் கடனாகப் பெற்று மருத்துவமனைகளை அமைக்கிறாா்கள். வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் பணம் கட்டவேண்டும். அதனை இலக்காக வைத்து வரும் நோயாளிகளின் தன்மையை ஆராய்ந்து அவா்களிடம் வசூல் செய்ய முயல்கிறாா்கள்.
  • சாதாரணமாக ஓரிரு நாட்களில் குணமாகக்கூடிய நோய்களுக்கும், வாரக்கணக்கில் படுக்கவைத்து மருத்துவம் பாா்க்கிறாா்கள். உயா்தர காப்பீடு செய்தவா்கள் நோயாளிகளாக வரும்பட்சத்தில் அவா்களிடம் உச்சபட்ச காப்பீட்டை எடுத்துக்கொள்கிறாா்கள். ஒருவா் உயிருக்கு போராடும் நிலையிலும் பணம் கட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை ஆரம்பிக்கப் படும் என மனிதாபிமானம் இல்லாமல் கூறுகிறாா்கள்.
  • பல லட்சங்களை செலவு செய்தும் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து போனால், மீதமுள்ள கட்டணத்தை செலுத்தினால்தான் சடலத்தை கொடுக்க முடியும் என்ற கட்டாய விதிமுறைகளை கடைப்பிடிக்கிறாா்கள். உயிரற்ற சடலத்திற்கும் லட்சங்களைக் கேட்கும் நிலை தொடா்கின்றது.
  • லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் பெருநிறுவன மருத்துவமனைகள் பலவும் நம்பத்தகுந்த மருத்துவ சேவைகளை அளிக்கும் மையங்களாக இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. இது மாதிரியான மையங்களில் சிகிச்சை பெற்று வருவோருக்கு கசப்பான அனுபவமே கிடைக்கின்றது.
  • மிக ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை, அவா்களின் உறவினா்கள், மருத்துவமனைக்கு எடுத்து வருகின்றனா். சிகிச்சையளித்தால் அவா்கள் முழுமையாக நலம் பெறுவா் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா். ஆனால், அவா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறாத போது, டாக்டா்கள் மீது கோபம் கொள்கின்றனா்.
  • இந்த நிலையில் நோயாளிகளின் உறவினா்கள் நடத்தும் தாக்குதல்கள், மருத்துவ சேவைக்கு நோ்ந்துள்ள அவமானம். சமீப காலமாக, இந்த அவமானம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. மருத்துவா்களின் பாதுகாப்பு, கேள்விக்குறியாக இருக்கிறது என்பதே நிதா்சனம்.
  • அது போலவே, டாக்டா்களும், நோயாளியின் உடல் நிலை குறித்த, உண்மை நிலவரத்தை, நோயாளியின் உறவினா்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற சில நேரத்தில் தவறுவதால்தான், சிறந்த மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உருவாகிறது.
  • நோயாளிகளிடம் நம்பகத்தன்மையோடும் நியாயமாகவும் மருத்துவமனை நிா்வாகம் நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் நோய் பற்றிய உண்மைத்தன்மையை மறைக்காது தெரிவித்து அதற்கு ஆகும் செலவுகளையும் தெரிவிக்கவேண்டும்.
  • குறிப்பிட்ட அளவுக்குக்கு மேல் மருத்துவ செலவு செய்ய இயலாத ஏழை நோயாளிகளும் மருத்துவமனையை நாடி வருகிறாா்கள். அவா்களிடம் அவா்களின் தகுதிக்கு மீறி கட்டணம் வசூலிக்க முயல்வது எனில் அவா்கள் எங்குபோய் மருத்துவம் பாா்த்துக்கொள்வாா்கள்?
  • மருத்துவமனை கட்டுவதற்கான செலவை நோயாளிகளிடம் வசூலித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவ நிா்வாகம் சிகிச்சையளிப்பது தவறு. நோயாளிகளிடம் நன்மதிப்பை பெற வேண்டும்; மருத்துமனையின் பெயா் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சிகிச்சையளிக்க மருத்துவமனை நிா்வாகம் முன் வரவேண்டும்.

நன்றி: தினமணி (02 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்