- விவசாயத்துக்கு அடிப்படைத் தேவை அல்லது மூலத் தேவை தரமான விதைகளே. விதைகள் தான் உழவுத் தொழிலின் உயிர்நாடி. அதிக விளைச்சலுக்குத் தரமான விதைகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- தரமான விதைகளைப் பயன்படுத்துவதால் மகசூலை 15% அதிகப்படுத்தலாம். எனவே, ஒவ்வொரு விவசாயியும் விதைகளின் உற்பத்தி நிலைகள் பற்றியும் தரமான விதைகளின் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
விதைகளின் உற்பத்தி நிலைகள்
- விதைகளின் உற்பத்தி நிலைகளில் கருவிதை, வல்லுநர் விதை, ஆதாரவிதை, சான்று விதை என நான்கு நிலைகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு, கருவிதைகள் உற்பத்தி செய்யப்படும்.
- அந்தக் கருவிதையிலிருந்து வல்லுநர் விதை கிடைக்கும். வல்லுநர் விதைகள் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்திசெய்யப்பட்டு 100% தூய்மையுடன் தங்கநிற மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டிருக்கும்.
- இந்த விதைகளைப் பயன்படுத்தி ஆதார விதை உற்பத்தி செய்யப்படும். சான்றளிப்புத் துறையில் பதிவு செய்து விட்டு ஆதார நிலை விதைகளை விவசாயிகளே உற்பத்திசெய்யலாம்.
- ஆதார நிலை விதைக்கு வெள்ளை நிற அட்டை பொருத்தப்பட்டு இருக்கும். இவ்விதைகள் 99% இனத் தூய்மையுடன் இருக்கும். ஆதார விதைகளைப் பயன்படுத்தி சான்று விதை உற்பத்தி செய்யலாம்.
- இவ்விதைகளின் தரத்தைப் பரிசோதித்த பின் நீல நிற அட்டை பொருத்தப்படும். இதன் இனத்தூய்மை 98% இருக்கும். விதை உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகளே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விதைகளுக்கு உண்மை நிலை விதைகள் என்று அழைக்கப்படும். இந்த விதை உற்பத்தியில் விதைச் சான்றளிப்புத் துறை ஆய்வு செய்வதில்லை.
- ஆனாலும், விதையின் தரம் பரிசோதிக்கப்பட்டு விவசாயிகளே விதைகளின் தரத்தை அட்டையில் குறிப்பிட வேண்டும். பொதுவாக, தானிய உற்பத்திக்கு ஆதார நிலை விதை அல்லது சான்று நிலை விதைகளைப் பயன்படுத்திச் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்.
தரமான விதைகள்
- தரமான விதை என்றால் அது தனது பாரம்பரிய குணங்களிலிருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் களை, பிற ரகம், பிற பயிர் விதைகள் கலப்பில்லாமல், பூச்சி, பூஞ்சைகள் தாக்கம் இல்லாமலும், தூசிதும்பு இல்லாமலும் இருக்க வேண்டும்.
- விதைகளை விதைத்த உடன் நன்கு முளைத்து சிறப்பாகவும் சீராகவும் வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் இனத்தூய்மை, புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகிய விதைத் தரங்கள் இந்திய அரசால் விதைச் சட்டத்தில் குறைந்தபட்ச நிர்ணயம் செய்யப் பட்டுள்ளன.
- நெல், மக்காச்சோளப் பயிர்களுக்கு 98% புறத்தூய்மையும், 80% முளைப்புத் திறனும், 12-13% ஈரப்பதமும் இருக்க வேண்டும். சோளம், கம்பு போன்ற பயிர்களுக்கு 98% புறத்தூய்மையும், 75% முளைப்புத் திறனும், 12% ஈரப்பதமும் இருக்க வேண்டும்.
- சத்துமிகு தானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, வரகு, பனிவரகு போன்ற பயிர்களுக்கு 97% புறத்தூய்மையும், 75% முளைப்புத் திறனும், 12% ஈரப்பதமும் இருக்க வேண்டும்.
- பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசி, தட்டைப் பயறு, துவரை போன்ற பயிர்களுக்கு 98% புறத்தூய்மையும், 75% முளைப்புத் திறனும், 12% ஈரப்பதமும் இருக்க வேண்டும். எண்ணெய் வித்துப் பயிர்களான ஆமணக்கு, சூரியகாந்தி பயிர்களுக்கு 98% புறத்தூய்மை, 70% முளைப்புத் திறனும், 8-9% ஈரப்பதமும் இருக்க வேண்டும்.
- கடலைப் பயிருக்கு 96% புறத்தூய்மையும், 70% முளைப்புத் திறனும் 9% ஈரப்பதமும் இருக்க வேண்டும். பருத்திப் பயிருக்கு 98% புறத்தூய்மை, 65% முளைப்புத் திறனும், 10% ஈரப்பதமும் இருக்க வேண்டும்.
- இவ்வாறு விதைகளின் தரம் இருந்தால் மட்டுமே விதை சான்றளிப்புத் துறையினரால் ஆதார விதைகளுக்கும் சான்று விதைகளுக்கும் சான்றட்டை பொருத்த அனுமதி அளிக்கப்படும்.
சுயதேவைக்கு ரக விதைப் பெருக்கம்
- விவசாயிகள் சில நேரங்களில் தாங்கள் சாகுபடிசெய்த வயலிலிருந்து விதைகளை எடுத்து வைத்து, அடுத்த பருவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
- அவ்வாறு தேர்வு செய்யும் விதைகள் வீரியமாகவும் தூய விதைகளாகவும் கிடைக்க, விதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் செடியானது நிலத்தின் மையப் பகுதியிலிருந்து எடுக்கப்பட வேண்டும்.
- தேர்ந்தெடுக்கும் செடியானது ரக மரபியல் தூய்மையுடன் சுத்தமாகவும், நல்ல வளர்ச்சி அடைந்த மணிகள் உள்ள பயிராகவும் இருக்க வேண்டும். வளர்ச்சியடையாத, அதிகம் நோய் தாக்கப்பட்ட செடிகளிலிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. தேர்ந்தெடுத்த விதைகளை நன்கு உலர்த்தி விதைகளைப் பிரிக்க வேண்டும்.
- பின்னர், விதைநேர்த்தி செய்து தங்களின் தேவைக்காக உபயோகித்துக்கொள்ளலாம். ஆனாலும், விதைப்பதற்கு முன்னர் விதைகளின் தரத்தைப் பரிசோதனை செய்வது அவசியம்.
- இதற்காகத்தான் நம் முன்னோர்கள் முளைப்பாரி என்னும் வழக்கத்தை உருவாக்கி, அது இன்றும் தொடர்கிறது.
- அதாவது, தாங்கள் அறுவடை செய்த விதைகளை அடுத்த பருவத்தில் விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத் திறனைச் சோதனை செய்த பிறகே விதைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்திருக்கிறது.
- அவ்வாறு விதைகளை நாமே பரிசோதனை செய்து பயன்படுத்தலாம் அல்லது அருகில் உள்ள விதைப் பரிசோதனைக் கூடத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி விதைகளின் தரத்தைப் பரிசோதனை செய்து, தரமான விதைகளாக இருக்கும்பட்சத்தில் அவ்விதைகளைப் பயன்படுத்தலாம்.
- விவசாயிகள் தங்கள் வயலிலிருந்து தொடர்ந்து இவ்வாறு மீண்டும் மீண்டும் விதைகளைச் சேகரித்துப் பயன்படுத்தும்போது, விதைகளின் முளைப்புத் திறனும் வீரியமும் குறைய வாய்ப்புள்ளது.
- எனவே, சாகுபடி செய்யும்போது விவசாயிகள் முடிந்தவரை தரமான விதைகளாகச் சான்று பெற்றவற்றைப் பயன்படுத்தினால் நிச்சயம் அதிக மகசூலையும் அதிக வருமானத்தையும் தரும் பேராயுதமாக அந்த விதைகள் இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 - 11 - 2021)