TNPSC Thervupettagam

தருணம் வந்துவிட்டது

October 4 , 2019 1736 days 901 0
  • தமிழ் மரபில் சித்தர்கள் ஞானிகளாகவும் முற்போக்குச் சிந்தனையாளர்களாகவும் கொண்டாடப்படுபவர்கள்.
  • பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் வரலாற்றில் ஒரு சம்பவம். கொங்கண சித்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதைவிட பாரத தேசத்தின் பெண்களோடு தொடர்புடையது. ஞானம், மன வலிமை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ஆகியவை தமிழ்ப் பெண்களின் அடையாளம்.
  • கானகத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோகப் பயிற்சிகளில் கொங்கண சித்தர் ஈடுபட்டபோது மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. அது 
  • கொங்கண சித்தர் மீது படவே, அவர் கோபத்தில் மரத்தில் இருந்த கொக்கை முறைத்துப் பார்க்க அந்தப் பார்வையின் வெம்மை தாளாமல் கொக்கு பொசுங்கிச் சாம்பலானது.
  • வேறொரு சமயம் சித்தர் கிராமத்தில் பிச்சைக்காக வந்தபோது ஒரு வீட்டில் பிச்சை வேண்டி நின்றார்.
வினா
  • அந்த வீட்டுப் பெண்மணி உணவு எடுத்து வருவதற்குச் சற்று காலதாமதமானதாகக் கருதி அந்தப் பெண்ணை கோபத்தோடு பார்க்க, அப்போது அந்தப் பெண், கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்று கொங்கண சித்தரை நேருக்கு நேர் நோக்கி வினா எழுப்புகிறாள்.
  • சித்தர்கள் யோக பயிற்சிகளில் பெற்ற ஆற்றலை இல்லத்தில்  இல்லறக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் பெற்றிருக்கிறாளே!
  • எங்கோ கானகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்திருக்கிறாளே என்று கொங்கணர் அதிர்ச்சியுற்றதோடு அந்தப்பெண்ணை வணங்கினார். பெண்ணின் ஆத்ம சக்தி என்பது தவ வலிமைக்கு ஈடானது என்று சொல்வதற்காகவே தமிழகத்தில் நூற்றாண்டுகளாக இந்தச் சம்பவம் கூறப்பட்டு வருகிறது. 
  • இப்படி ஆத்ம சக்தியோடு விளங்கிய பாரதப் பெண்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களின் ஆற்றலில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அதன் பயன்பாடு, அவர்களின் நம்பிக்கை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உடை முதல் அலங்காரப் பொருள்கள் வரை மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
  • ஆனால், கலாசார ரீதியாக இன்னும் அவர்களின் மனநிலை இந்திய கலாசார அமைப்பில்தான் வேர் கொண்டிருக்கிறது. இதனால் முழுமையாக நமது கலாசாரத்திலும் ஒன்றாமல் முற்றிலும் மேலைநாட்டின் சிந்தனைகளை ஏற்பதற்கும் இயலாமல் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாரத தேசம்
  • பாரத தேசத்தில் தனி மனித அளவில் ஒழுக்கமும் சமூக அளவில் பொறுப்புணர்வுமே நாகரிகத்தின் அடிப்படை. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நாகரிகத்தைத் தன் ஆத்ம சக்தியும் மன உறுதியும் தெளிவும் கொண்டு நிலைநிறுத்திக் காத்து நிற்பது பாரதத்தின் பெண்மை.
  • அண்மைக் காலத்தில் சமூக ஊடகங்களில் பெண்கள் ஏமாற்றத்துக்குள்ளாகி பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது, அவலமான முடிவுகளை நோக்கி நகர்வது போன்ற பிரச்னைகளைக் காண்கிறோம். பலாத்காரங்கள், வன்புணர்வுகள், மனித உரிமை மீறல்கள் எனப் பல விதமான உளவியல் சிக்கல்கள் இந்தத் தலைமுறையைப் பீடித்திருக்கின்றன.
  • இவற்றையெல்லாம் காணும்போது, வெளியேற முடியாத வியூகத்திற்குள் இளம் தலைமுறை சிக்கிக்கொண்டு தவிக்கிறதோ என்ற பயம் சூழ்கிறது.
  • கொடூரமான சம்பவங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் இளம் தலைமுறையினரிடையே திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள், தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், பெருகிவரும் ஒற்றைப் பெற்றோர் முறை மனக் கலக்கத்தைத் தருகின்றன. 
  • எது உண்மை, எது பொய் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு சமூக வலைதளங்களும் ஊடகங்களும் தரும் முரணான செய்திகளும் தகவல்களும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
விழுமியங்கள்
  • நம் முன்னோர் பாதுகாத்துத் தந்த விழுமியங்களை, வாழ்வியல் நெறிகளை சிறிது சிறிதாகத் தவறவிட்டுக் கொண்டே வந்திருக்கிறோம். நமது கல்வி முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் தொய்வும் இத்தகைய கலாசார சீரழிவுக்கு ஒரு விதத்தில் வழிகோலுகின்றன. வாழ்வியல் கற்றுத் தந்த கல்வி முறையிலிருந்து மாறி, பணம் ஈட்டுவதற்கான கருவியாக மட்டுமே கல்வி மாறிப் போயிருக்கிறது. 
  • உலகை இயக்கும் சக்தியாகப் பெண்ணை மதித்த மிகப் பெரும் பெருமை மிக்க கலாசாரத்தின் வேர்களில் அமிலத்தை ஊற்றும் கல்வி முறையை நாம் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பது, இன்னும் சரிவை நோக்கி நம்மை நகர்த்துவதாகும்.
  • இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு வரலாற்றை, வாழ்வியல் அறம் சொல்லும் இலக்கியங்களைக் கற்பதுதான். பொறுமை, விட்டுக் கொடுக்கும் தன்மை, பிறர் துன்பத்தைத் தன் துன்பம் என உணரும் மேன்மை இவற்றையெல்லாம் கற்றுத் தரும் கல்வியை நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.
உலகமயமாக்கல்
  • உலகமயமாக்கல் எனும் மாயையின் பிடியில் சிக்கியுள்ளோம். இதை அரசோ தனி நபர்களோ உணராமல் மீண்டும் மீண்டும் மேற்கத்திய உடைகள், உணவுகள் தொடங்கி அவர்களின் சிந்தனைகள் வரை நமக்கு ஒவ்வாத அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஜீரணிக்க முடியாமல் திணறும் நிலையில் அவலங்களை சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
  • உலகமயமாக்கல் என்பது வளர்ந்த நாடுகளின் வியாபார உத்தி; இது முதல் அவர்கள் நம் உணவு, உடை என்று பிணி முதல் அதற்கான மருத்துவர் என அனைத்திலும் நம்மை மறைமுகமாக அடிமை கொண்டு வருகிறார்கள். உலகமயமாக்கல் தத்துவத்தை அறிமுகம் செய்த எந்தவோர் வளர்ந்த நாடும் பிற தேசத்தினரின் உடைப் பழக்கத்தையோ உணவுப் பழக்கத்தையோ பின்பற்றவில்லை. மிகத் தெளிவாகவே தங்கள் வர்த்தகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
  • இந்த வர்த்தகத் தந்திரத்தை உணர்ந்து நாம்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நமக்கென்று தனித்த சிறந்த அடையாளங்கள் இருக்க, நாம் மற்றவரைப் போல இருக்க நினைப்பதும் முனைவதும் அறிவீனம்.
  • காலம் காலமாக நமது குடும்பங்களில் கலாசாரத்தைப் பேணி வளர்த்த நம் பெண்கள் திருவாசகம் போன்ற மனதைச் செப்பனிடும் பக்தி இலக்கியங்களைக் கோயில் பிராகாரங்களில், ஆன்மிகத் திருவிழாக்களில் கேட்டுக் கொண்டிருந்த பெண்கள் அறநூல்களையும் இதிகாசங்களையும் படித்துக் கொண்டும் அவற்றைத் தம் பிள்ளைகளுக்குக் கதையாக உணவோடு சேர்த்து அறம் ஊட்டிக் கொண்டிருந்த நமது தாய்மார்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் எதிர்மறைச் சிந்தனைகளை மனங்களில் விதைக்கும் நிகழ்ச்சிகளுக்குள் தங்களைத் தொலைத்துவிட்ட நாளில் தான் நமது சரிவு ஆரம்பமானது. 
காலம்
  • காலத்தின் தேவைக்கேற்ப காலந்தோறும் தன்னைப் புனரமைத்துக் கொண்டே வரும் சமூகம், தான் சிக்கித் தவிக்கும் சீர்கேடுகளில் இருந்தும் சிக்கல்களுக்குள் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு வரலாற்றை திரும்பிப் பார்த்து நம்முடைய சுயத்தை, மதிப்பை மீட்டெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 
  • பெண் குழந்தைகள் அவர்களுக்கே உரிய பொறுப்புணர்வோடு வளர்க்கப்பட வேண்டியதை உறுதி செய்வதும் அவர்களை சக ஜீவனாய் கண்ணியத்தோடு நடத்த வேண்டிய தன்மையை ஆண் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டியதும் இன்றைய கட்டாயம். சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு கூடியது; கட்டற்றுத் திரிவதல்ல.
  • அறவழிப்பட்ட வாழ்வியல் நெறிகளை நாமும் உணர்ந்து கொண்டு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
வாழ்வியல் முறை
  • குளிர் பிரதேசத்தில் வாழ்வோர் அதற்குரிய வாழ்வியல் முறையை கைக்கொள்வதும், வனப் பிரதேசத்தில் வாழ்வோர் அதற்குரிய வாழ்வியல் முறையை மேற்கொள்வதும் அறிவுடைமையாகும். ஆனால், உலகம் முழுமையும் ஒரே விதமான வாழ்வியல் முறையைப் பின்பற்ற முயற்சிப்பது அறிவீனத்தின் உச்சம் என்பதை உலகம் அறிந்து கொள்ளும் நாளில் இத்தகைய சிக்கல்கள் தீர்ந்துவிடும். 
  • எந்த ஒரு மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் எளிதாகவும் இயல்பாகவும் ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தக் கூடிய ஆற்றல் நமது இந்தியப் பெண்களுக்கு எப்போதும் உண்டு. வரலாற்றில் மாற்றம் எப்போதும் பெண்களிடமிருந்தே தொடங்கியிருக்கிறது. நம் இந்தியத் தாய்மார்கள் அத்தகைய மாற்றத்துக்கான வேர்களாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
  • குடும்பம் எனும் அமைப்பின் மேன்மையை உணர்தல், அறம் போதிக்கும் கல்விமுறையை மீட்டெடுத்தல், சுதேசியத்தின் பெருமை அறிந்து நம்முடைய ஆற்றலை, திறனை அங்கீகரித்தல் என்ற புராதன நெறிகளை சென்ற நூற்றாண்டில் நமக்கு நினைவூட்டி ஆற்றுப்படுத்திய காந்திய சிந்தனையை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வோம் என்ற மகாகவியின் கனவு மெய்ப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. 

நன்றி: தினமணி (04-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்