- இந்தியாவில் கரோனா காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது, உண்மையில் மிக மோசமான சமிக்ஞை.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தைக் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது; 2021 ஜூலைக்குள் 25 கோடிப் பேருக்குத் தடுப்பு மருந்தை வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன என்று நம்பிக்கையின் வெளிச்சம் சற்றே தெரிந்தாலும், இந்தியாவின் உத்தேச மக்கள்தொகையான 138 கோடியுடன் ஒப்பிடும்போது ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பு மருந்து வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதே யதார்த்த நிலை.
- அதற்கும் ஏறக்குறைய பத்து மாதங்கள் வரையிலும் நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், நோய்த்தொற்று தொடர்பிலான தற்காப்புணர்வும் விழிப்புணர்வுமே மக்களை இந்தத் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.
- பிரிட்டன், அமெரிக்க நாடுகளில் நோய்த்தொற்று காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்தபோது, இந்தியாவை அச்சம் சூழ்ந்திருந்தது.
- ஊரடங்கைக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தினோம். இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஊரடங்கு வாழ்க்கையை ஒருபோதும் மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறோம்.
- உயிரச்சம் நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டோம் என்பது ஆறுதலானதுதான். ஆனால், தடுப்பு மருந்துகளுக்கு உடனடி வாய்ப்பில்லாத நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட உடனேயே தடுப்பு நடவடிக்கைகளையும் அலட்சியம் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.
- தொற்றுப் பரவல்களைக் கட்டுப்படுத்திய முன்னனுபவங்களின் அடிப்படையில், திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திய கேரளத்திலும்கூட அடுத்த அலை தொடங்கியிருக்கிறது.
- தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நல்ல வகையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
- தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதற்காகச் சிறப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வை வேண்டும்
- தடுப்பு மருந்து இல்லாத நிலையில், ஓர் அரசால் சிகிச்சை அளித்து உயிர் காக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் அளிக்க முடியும். நோய்ப்பரவல் தடுப்புக்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளைவிட மக்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வே மிக அவசியமானது.
- நோயின் தீவிரம் மக்களிடம் பயத்தை விதைத்த அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. அதனால்தான், தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில், மக்களிடம் இயல்பாக இருந்த முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பேணுவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகின்றன.
- கரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வரை, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் மிகவும் கடுமையான வகையில் பின்பற்ற வேண்டும்.
- அதே நேரத்தில், சிகிச்சைகளைத் தாண்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும் அரசு தீவிரம் காட்ட வேண்டும். ஊரடங்கை ஒரு பக்கம் தளர்த்திக்கொண்டே, இன்னொரு பக்கம் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட தெரு முழுவதையுமே தட்டிகளால் அடைப்பது போன்ற நடவடிக்கைகள் மக்களைச் சிறைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடும்.
- பொதுப் போக்குவரத்தை இயக்க அனுமதித்துவிட்டு, அதற்குக் கூடுதல் கட்டணம் விதிப்பது, ஏற்கெனவே வேலையிழப்பால் தவிப்பவர்களுக்கு மேலும் பொருளாதாரச் சுமையையே ஏற்படுத்தும்.
நன்றி: தி இந்து (06-10-2020)