தற்கொலையைச் செய்தியாக்குவதில் பொறுப்புணர்வு வேண்டாமா?
- சின்னத்திரை நடிகை சித்ரா சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் தந்தையும் அதே முடிவை எடுத்தது அண்மையில் அதிர்ச்சி அளித்த சம்பவம். ஒவ்வொரு தற்கொலைக்கும் பன்முகக் காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், அச்செய்தி ஊடகங்களில் எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் தற்கொலை அதிகரிக்க ஒரு காரணம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
- தற்கொலை தொடர்பான செய்தியை வெளியிடுவதில் இன்னும்கூட ஊடகத்தினர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்ல... திரைப்படங்கள், நாடகங்கள், வலைப்பூக்கள், புத்தகங்கள், சமூக வலைதளங்கள் என அனைத்துமே ஊடகங்கள்தான்.
வெர்தர் விளைவு:
- இயல்பிலேயே மற்றவர்கள் பேசுவதை, நடந்துகொள்வதைப் பார்த்து அவரைப் போலப் பேச வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் ஏற்படுவது உண்டு. “நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், குறிப்பாக நம்மைவிடக் கூடுதலாகத் தெரிந்தவர்கள் சொல்லும் தகவல்கள், அனுபவங்கள், வழிகாட்டுதல்கள் நம் வளர்ச்சியில் அதிகப் பங்கு வகிக்கின்றன” என்று உளவியலாளர் லெவ் வ்காட்ஸ்கி முன்வைக்கும் சமூகப் பண்பாட்டுக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.
- நல்லதைப் பார்த்து, தீய குணத்திலிருந்து திருந்தி வாழ்வதும் அல்லது தவறான செயலைக் கண்டு தானும் அந்தத் தவறை செய்வதும் இதன் அடிப்படையில்தான். அன்றாட வாழ்க்கையின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, சுற்றுச்சூழல், உடல் - மன நலக் காரணிகளால் தன்னளவில் பலமிழந்திருக்கும் ஒருவர், மற்றவரது தற்கொலைச் செய்தியை ஊடகத்தில் பார்க்கும்போது அது சார்ந்த சோகத்துடன் அவரும் ஒன்றிவிடுகிறார்.அவரைப் போலவே தானும் செய்யத் தூண்டப்படுகிறார். தற்கொலை செய்தவர் புகழ்மிக்கவர் என்றால் ஆபத்தின் அளவு இன்னும் அதிகம். இதற்கு ‘வெர்தர் விளைவு’ (Werther effect) என்று பெயர்.
தவறான சித்தரிப்பு:
- ஊடகத்தினர், தற்கொலைச் செய்தியை வெளியிடும்போது, வாசகர்களையும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதற்காக, ‘பிரேக்கிங் நியூஸ்’ எனச் சத்தம்போட்டு உரக்கச் சொல்கிறார்கள். கவிதையாக - புதுமையாகத் தலைப்பு வைக்கிறார்கள். எப்படி, எங்கே, எந்த நேரத்தில், எந்தப் பொருளால், யார் தூண்டுதலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலில் எந்த இடத்தில், எவ்வளவு ஆழத்தில், என்ன மாதிரியான காயங்கள் இருக்கின்றன என்பது போன்ற தகவல்களை மிக விரிவாகப் பேசுகிறார்கள்.
- ஒருவர் தன் வாழ்வை முடித்துக்கொண்ட காட்சிகளை லேசாக மறைத்தும், காட்சித் துணுக்கு கிடைக்கவில்லை என்றால், வரைகலை உதவியுடன் வரைந்தும் திரும்பத்திரும்ப ஒளிபரப்புகிறார்கள். கதையையும் கற்பனையையும் கலந்து காசாக்குகின்றனர் சிலர்.
- இதுபோன்ற செய்திகளைப் பார்ப்பதால், அது குறித்த பயமோ அல்லது விழிப்புணர்வோ அடைவதற்குப் பதிலாக, அதேபோலச் செய்துபார்க்கும் ஆர்வம் பலமிழந்திருக்கும் பலருக்கு, குறிப்பாகப் பதின்பருவ மாணவ - மாணவிகளிடம் அதிகரிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
- உதாரணமாக, ‘ஏன் என்பதற்கு 13 காரணங்கள்’ என்றொரு புதிர் புதினம் அமெரிக்காவில் இளைஞர்களுக்காக வெளி யானது. உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஹன்னா பேக்கர் என்னும் கற்பனை நபர் அதன் முக்கியக் கதாபாத்திரம். தான் ஏன் சாகிறேன் என்பதற்கான 13 காரணங்களை 7 ஒலிப்பேழைகளில் பேசி வைத்துவிட்டு, ஹன்னா தற்கொலை செய்துகொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.
- 2017இல் ஓடிடி தளத்தில் தொடராகவும் வெளியானது. அதன்பிறகு, தற்கொலை தொடர்பாக இணையத்தில் தேடுகிறவர்களின் எண்ணிக்கை 19%, தற்கொலை செய்து கொள்வது எப்படி எனத் தேடிய வர்களின் எண்ணிக்கை 26%, 10-17 வயதுக்கு உள்பட்ட பதின் பருவத்தினரின் தற்கொலை எண்ணிக்கை 30% அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. ஹன்னாவின் தற்கொலைக்கான காரணங்கள் தொடர்பான காட்சிகள், பிறருக்கு நம்பிக்கையையும் மனமாற்றத்தையும் கொடுப்பதற்குப் பதிலாக, தற்கொலை எண்ணத்தைச் செயல்படுத்தத் தூண்டியிருக்கின்றன.
ஆரோக்கியமான வழிமுறை அவசியம்:
- உலகில் 40 நொடிகளுக்கு ஒருவர் தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்வதாக உலகச் சுகாதார நிறுவனமும், உலக அளவில் இந்தியாவில்தான் தற்கொலை எண்ணிக்கை அதிகம் என தேசியப் புள்ளிவிவரமும் சொல்கின்றன. இந்நிலையில், ஒருவரின் தற்கொலைச் செய்தியை விலாவாரியாக விளக்காமல், மனச்சோர்வான சூழலை எப்படியெல்லாம் கையாளலாம் என்கிற வழிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடு வது, துயர்மிகு நிலையில் உள்ள பலரைப் பாதுகாக்கிறது என்கின்றன ஆய்வுகள். இதற்கு, ‘பபஜெனோ விளைவு’ (Papageno effect) என்று பெயர்.
- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதுபோல, இங்கும் ஊடகத்தினர் இது குறித்த ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்கலாம். சமூகப் பொறுப்புணர்வுடன், ஆரோக்கியமற்ற தகவல்களைத் தவிர்த்து விட்டுச் செய்திகளை வெளியிடலாம்; பெற்றோர்கள், நண்பர்கள், அல்லது உதவி மையத்துக்கு அழைத்துப் பேசுவது; இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குச் செல்வது; தாங்கள் வெற்றிகண்ட கடந்த கால சவால்களை நினைத்துப் பார்ப்பது; மூச்சுக்காற்றைக் கவனித்துப் பதற்றம் தணிப்பது; தற்கொலைக்கு முயன்று தப்பி வாழ்கிறவர்களின் நம்பிக்கையான கதைகளைப் பகிர்வது, குணம்பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்வது; இத்தகையவர்களுடன் பணியாற்றும் அமைப்புகளிடம் உள்ள நம்பிக்கை தரும் அனுபவங்களைச் சொல்ல வைப்பது; நிபுணர்களைப் பேச வைப்பது உள்ளிட்டவற்றை முன்னெடுக்கலாம்.
- எல்லோரும் எல்லா நேரமும் முழு மன வலிமையுடன் இருப்பதில்லை. ஏதோ ஒரு சூழலில் மனவலிமை குறைந்து பதற்றத்தில் தான் இருக்கிறோம். எனவே, செய்தியைச் செய்தியாக மட்டும் சொல்லிவிட்டு, சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட ஆரோக்கியமான வழிமுறைகளை ஊடகங்கள் தொடர்ந்து சொல்லும்போது வலு குறைந்தவர்களுக்கு மனநலம் அதிகரிக்கிறது, சூழலை அணுகும் முறைகளை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்கிற ஆய்வு முடிவுகளை நாம் சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாதுதானே!
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 01 – 2025)