TNPSC Thervupettagam

தற்கொலை, எண்ணச் சுழற்சி நோய்: சில கற்பிதங்கள்

July 16 , 2023 545 days 293 0
  • எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நேரடி அனுபவம் இல்லையென்றால், பொதுப்புத்தியிலும் ஆகிவந்த வழக்குகளிலும் அந்த விஷயத்தைப் பற்றி நமக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதன் அடிப்படையில்தான் நமது புரிதலும் பார்வையும் இருக்கும். இத்தகைய கருத்துகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். இது Myth என அழைக்கப்படுகிறது. அடிப்படை இல்லாத தவறான கருத்துகள் அல்லது கற்பிதங்கள் என்றும் சொல்லலாம். பொதுப்புத்தியில் மனநோய்களைப் பற்றி இதுபோல் நிறைய கற்பிதங்கள் உள்ளன.
  • பிரபலமானவர்களில் யாரேனும் ஒருவர் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் போதெல்லாம் பொதுத்தளத்திலும் சமூக ஊடகங்களிலும் நடக்கும் விவாதங்களில் இது போன்ற பல கற்பிதங்கள் வெளிப்படுகின்றன. சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரியின் மரணம் எழுப்பிய அதிர்வலைகளிலும் விவாதங்களிலும் அத்தகைய கற்பிதங்கள் வெளிப்பட்டன.

மனவலிமை போதுமா?

  • முதலாவதாக, மனச்சோர்வு என்பது மன வலிமை இல்லாதவர்களுக்கே வரும் என்று பலரும் கருதுகின்றனர். தன்னம்பிக்கையோடு மனதை வலிமையாக வைத்துக்கொண்டால் மனச்சோர்வு வராது என்பதே அந்தக் கருத்துக்கான அடிப்ப டையாக உள்ளது. தன்னம்பிக்கைக்கும் மன வலிமைக்கும் உதாரணமாக இருந்தவர் அந்தக் காவல் அதிகாரி. கடினமாக உழைத்து ஐ.பி.எஸ். பட்டம் பெற்றவர். அவரே மனச்சோர்வு அடைய முடியுமா என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

எது மன நோய்?

  • தற்கொலை எண்ணங்கள், மனச்சோர்வு ஆகியவற்றில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். சாதாரணமாக அனைவருக்குமே எப்போதாவது மனச்சோர்வு ஏற்படும் சாத்தியம் உண்டு. திருமணமான அனைவருக்குமே விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஒரு முறையேனும் தோன்றும். அதுபோல் உயிரோடு இருக்கும் அனைவருக்கும் ஒரு நாளாவது தற்கொலை எண்ணம் தோன்றும்.
  • ஆனால், இவை தற்காலிகமான எண்ணங்கள்; உணர்வுவயப்படும்போது அனைவருக்குமே தோன்றக்கூடியவை. ஆனால், அளவுக்கு அதிகமாக, நீண்ட காலத்துக்கு அடிக்கடி இது போன்ற மனச்சோர்வும் தற்கொலை எண்ணங்களும் தோன்றினாலோ அதனால் அன்றாட அலுவல்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ அவற்றை மனநோய் (Mental Disorder) என மருத்துவ அறிவியல் வரையறுக்கிறது.

மனதைக் கட்டுப்படுத்த முடியுமா?

  • எல்லாராலும் எல்லா நேரமும் தங்கள் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனும் கற்பிதம் சமூகத்தில் பரவலாக உள்ளது. தன்னம்பிக்கையான கருத்துகள் மூலமும், ஆரோக்கியமான எண்ணங்களின் மூலமாகவும் மனதை உறுதியாக வைத்துக்கொள்வது போன்றவை எல்லாம் தற்காலிக எண்ண நிலைகளுக்கு மட்டுமே பயன் தரும். தீவிரமான மனநோயால் பாதிக்கப்படும்போது அவர்களது மனமே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. பாதிப்பு தீவிரமடையும் போது மூளையில் வேதியல் மாற்றங்களும் தீவிரமடையும்.
  • அப்போது மற்றவர்கள் மிக எளிமையாகச் செய்வதைக்கூட, அவர்களால் செய்ய முடியாது. மற்றவர்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் பிரச்சினைகள்கூட அவர்களுக்குப் பூதாகரமாகத் தோன்றும். எவ்வளவு உளவியல் ஆலோசனை சொன்னாலும் அவர்களால் அவர்களது சிந்தனையை, உணர்வு களை மாற்றிக் கொள்ள முடியாது. அப்போது மருந்து மாத்திரை தருவதே சிகிச்சை. இந்த விழிப்புணர்வு இல்லாமல் தீவிர மனச்சோர்வு உள்ளவர்களை யோகா செய், தியானம் செய், பாசிட்டிவாக நினை என்றெல்லாம் சொல்வதால் பிரச்சினைகள் தீராது.
  • தற்கொலை எண்ணங்களும் அது போலத் தான். ஒரு மேகம் போல் நிலவை, ஏன் சூரியனையே மறைத்து மனதை இருட்டாக்கும். அது கலையும் வரை ஏதோ ஓர் எண்ணத்தையோ நபரையோ பற்றிக்கொள்ள முடிந்தால் மீளலாம். பெரும்பாலும் தற்கொலை எண்ணங்கள் என்பது உணர்வு என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டு பிரச்சினைகளைப் பார்ப்பதால் வருபவை. கறுப்புக் கண்ணாடி கொண்டு பார்த்தால் எல்லாமே கறுப்பாகத் தெரிவதுபோல் சின்ன விஷயங்கள்கூடப் பெரிதாகத் தோன்றும்.

தற்கொலை எண்ணங்கள்

  • நம்பிக்கையின்மை (Hopelessness), கையறு நிலை (Helplessness), தாழ்வுமனப்பான்மை (Worthlessness) ஆகிய மூன்று கூறுகளின் கலவையே தற்கொலை எண்ணங்கள்.
  • எப்போதாவது ஏற்படும் தற்கொலை எண்ணம் தானே சரியாகும் அல்லது அந்தக் கணத்தில் யாருடனேனும் உரையாடிக் கடந்தால் சரியாகிவிடும். ஆனால், அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், காரணமே இல்லாமல் ஏற்பட்டால் அது மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். உங்களைப் பற்றி, உலகைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள எண்ணங்களை மாற்றும் ஆலோசனை (Cognitive Behaviour Therapy) அல்லது உளக் கொதிப்பைத் தணிக்கும் மருந்துகள் தேவைப்படக்கூடும்.

எண்ணச் சுழற்சி நோய்

  • மனநோய் என்பது ஒன்றே ஒன்றுதான், அது மன அழுத்தத்தால் மட்டுமே வரும் எனும் கற்பிதமும் பரவலாக உள்ளது. ஆனால், மனநலப் பாதிப்புகள் பலவகைப் பட்டவை. மனப்பதற்றம், மனச்சிதைவு, மனச்சோர்வு எனப் பல்வேறு வகையான மனநல பாதிப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வகைதான் ஓ.சி.டி எனப்படும் எண்ணச் சுழற்சி நோய்.
  • சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி எண்ணச் சுழற்சி நோயினால் (Obsessive Compulsive Disorder) பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது. இந்த நோய் பற்றிய பொதுக் கருத்து என்னவென்றால், இவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள் என்பது மட்டுமே.
  • ஆகவே, அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் செல்வார்களா எனப் பலரும் கேட்கின்றனர். ஓசிடி என்னும் எண்ணச் சுழற்சி நோய், மிகவும் தீவிரமான மனநலப் பாதிப்புகளுள் ஒன்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவராவது தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுகிறார்கள். பத்துச் சதவீதம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்கின்றன ஆய்வுகள்.
  • பொதுவாக இந்நோய் ஏற்பட்டவர் களுக்குப் பயமும் போதாமையும் திருப்தியின்மையும் இருக்கும். கைகளை, கழிப்பறைகளைக் கழுவியது போதவில்லையோ என மீண்டும் மீண்டும் கழுவிக் கொண்டிருப்பார்கள். அதேபோல் சுவிட்சுகளை அணைத்துவிட்டோமா, வீட்டைப் பூட்டிவிட்டோமா என மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.
  • அதேபோல் சிலர் சரியாகப் பேசினோமா, பேசும்போது தவறுதலாக ஏதேனும் கெட்ட வார்த்தை சொல்லிவிட்டோமோ என்று பயப்படுவார்கள். பிறருக்கு ஏதாவது தீங்கு செய்துவிடுவோமோ என்றெல்லாம் சிலர் பயப்படுவார்கள். ஒரு குழந்தை இருந்தால் அதைக் கீழே போட்டு விடுவோமோ என்றும் கத்தியைக் கண்டால் யாரையாவது குத்தி விடுவோமோ என்று பயப்படுவார்கள்.
  • இதைத் தடுக்க மீண்டும் மீண்டும் கழுவுதல், குளித்தல், பரிசோதித்தல், உறுதிசெய்தல் என அடிக்கடி செய்துகொண்டே இருப்பார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கே தாங்கள் செய்வது அபத்தம் என நன்றாகத் தெரியும். இருந்தாலும், அதைத் தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் செய்வார்கள்.
  • இது போலச் சில ஐயங்களும் நடவடிக்கைகளும் எல்லாருக்குமே லேசாக வரும் என்றாலும், இவர்களுக்கு அதன் அளவு தீவிரமாக இருக்கும். பல மணி நேரத்தை இதிலேயே செலவிடுவார்கள். அளவுக்கு அதிகமாக முழுமைத்தன்மை (Perfection), சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்நோய் வருகிறது. சுற்றுப்புறத்தில் ஏதோ சரியில்லை, குறையிருக்கிறது என்றால் நம் மூளை அதைக் கண்டறிந்து எச்சரிக்கும்.
  • இந்த எதிர்வினை அதீதமாக மாறும்போது எந்தக் குறைபாடும் இல்லாமலேயே ஏதோ குறை இருக்கிறது எனத் தேவையற்ற அலாரம் (False alarms) அடிக்கிறது. மூளையில் சில வேதி மாற்றங்கள் ஏற்படுவதால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பிற நோய்களைப் போன்றே இதற்கும் மிதமான நிலையில் சில மனப்பயிற்சிகளே போதுமானது. தீவிரமாக இருந்தால் அதற்கென மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
  • சமூகத்துக்கும் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. இந்நோயை அலட்சியப்படுத்துவதோ அவமானப்படுத்துவதோ எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். புரிந்துகொள்வதுதான் முக்கியம். அதுவே உயிரிழப்பையும் தவிர்க்கும்.

மன நோய்களுக்கான மூன்று காரணங்கள்

  • உடல்ரீதியான காரணங்கள் மூளையில் உள்ள சுரப்பிகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள்
  • உளவியல் ரீதியான காரணங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆளுமை காரணமாக ஏற்படும் பிரச்சினைகள்
  • சமூகவியல் காரணங்கள் - சமூகம் ஏற்படுத்தும் காரணங்கள்.
  • இந்த மூன்று காரணங்களின் கலவையே மன நோய்களாக வெளிப்படுகின்றன.

நன்றி: தி இந்து (16 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்