TNPSC Thervupettagam

தற்போதைய தடுப்பூசிகள் புதிய கரோனாவை தடுக்குமா

April 27 , 2023 626 days 313 0
  • இந்தியாவில் சில வாரங்களாகத் தினசரி கரோனா தொற்று ஏறுமுகத்தில் இருக்கிறது. அதேவேளை, பெரிதாக அச்சப்படும் வகையில் சூழல் இல்லை என்பதாகவே அரசு சொல்கிறது. எனினும், ஒரு பாதுகாப்புக்காக, கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முன்வந்தால், தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்கின்றனர். அப்படியே கிடைத்தாலும், தற்போதைய கரோனா தடுப்பூசிகள் இப்போது பரவும் உருமாறிய கரோனாவுக்குப் பலன் தருமா என்று சந்தேகப்படுபவர்களும் இருக்கின்றனர்.

‘எக்ஸ்பிபி.1.16’ கரோனா திரிபு:

  • இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் இப்போது பரவும் கரோனாவுக்கு ‘எக்ஸ்பிபி.1.16’ (XBB.1.16) எனும் ஒமிக்ரான் துணை வேற்றுருவம்தான் (Omicron sub variant) காரணம். ஆரம்பத்தில் கரோனா பரவலுக்குக் காரணமாக இருந்த SARS-CoV-2 கிருமியின் பலதரப்பட்ட வேடங்களில் இது ஒரு புதிய வேடம்; அதாவது, புதிய திரிபு (Mutation). மற்ற திரிபுகளைவிட அதிவேகமாக வளர்வதும், நம் தடுப்பாற்றல் பிடியிலிருந்து எளிதில் தப்பித்துவிடுவதும் இதன் தனித்தன்மைகள்.
  • உலகில் இதன் பரவல் கடந்த ஜனவரி 9 அன்று கண்டறியப்பட்டது. அதன் நீட்சியாக உலக சுகாதார நிறுவனம் மார்ச் 22 அன்று, ‘தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய வேற்றுருவம்’ (Variant under monitoring- VUM) என்று இதைச் சுட்டிக்காட்டியது. அதே மார்ச் மாதத்தில், இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்தில் இது பரவுவது உறுதியானது.
  • இதுவரை உலகில் 33 நாடுகளில் இது பரவியிருக்கிறது. கடந்த வாரத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு நாளில் 12,193 புதிய கரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்; 42 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கரோனா பரவுவது அதிகரித்திருக்கிறது.

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கை போதும்:

  • கடந்த மூன்று கரோனா அலைகளில் ஏற்பட்ட தீவிரமான பாதிப்புகள் போன்று ‘எக்ஸ்பிபி.1.16’ திரிபால் ஏற்படவில்லை. ஆகவே, இதற்கு அச்சப்படத் தேவையில்லை; ஆனாலும், எச்சரிக்கை அவசியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும், இந்தத் திரிபைச் சென்ற வாரம் ‘கவனத்துக்குரிய வேற்றுருவம்’ (Variant of interest – VOI) என்று வகைப்படுத்தியுள்ளது.
  • இதை எதிர்கொள்வதற்கு மரபணு வரிசை ஆய்வு (Genomic surveillance) உள்ளிட்ட பரிசோதனைகளை அதிகப்படுத்துவதும் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் முக்கியம். என்றாலும், இது பரவுவதைத் தடுப்பதற்குப் பழைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்; கரோனா தடுப்பூசித் தவணைகள் விடுபட்டுப்போனவர்களுக்கு அவற்றைச் செலுத்துவதில் முன்னெடுப்புகள் தேவை என்கிறது அந்நிறுவனம்.

யாருக்குத் தேவை?

  • தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை மொத்தம் 5.51 கோடிப் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதைக் கடந்தவர்களில் 97.89% பேருக்கு முதல் தவணையும், 92.47% பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளன. எனினும், ‘பூஸ்டர்’ எனும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் பொறுத்தவரை 17.04% பேர்தான் செலுத்திக்கொண்டுள்ளனர்.
  • தற்போது அவசரமாகத் தடுப்பூசி தேவைப்படுபவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்தான். இவர்களில்கூட இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியோர், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் தடுப்பாற்றல் குறைந்தவர்கள், தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை தரலாம். ஆனால், இவர்கள்தான் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளப் பெரிதும் தயங்குகின்றனர்.

சந்தேகங்களும் விளக்கமும்:

  • இவர்களின் முதல் சந்தேகம், ‘தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கரோனா ஏற்படுகிறது; பிறகு எதற்குத் தடுப்பூசி?’ என்பதுதான். இதற்குச் சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு கரோனா தடுப்பூசியும் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடியது என்று சொல்லவில்லை. தொற்று தீவிரமாகாமல் மட்டுமே அது பார்த்துக்கொள்ளும்.
  • அதன் பலனாக, இறப்பிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும். சமீபத்தில், புனேயில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்டி, ‘எக்ஸ்பிபி.1.16’ திரிபு தொற்றுக்கு ஆளானவர்களில் 26% பேர் மூன்று தவணை கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்கள்தான். ஆனாலும், இவர்களில் ஒருவர்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.
  • அடுத்ததாக, சீனாவில் முதன்முதலில் பரவிய SARS-CoV-2 கிருமியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தற்போதைய கரோனா தடுப்பூசிகள், இப்போது பரவும் புதிய திரிபுகளுக்குப் பலன் தருமா என்பது பலருடைய கேள்வி. பொதுவாக, ஒருவருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு வாரங்களில் அவருடைய ரத்தத்தில் கரோனாவுக்கு எதிராக ‘பி’ செல் எதிர்ப்பணுக்கள் (Antibodies) முதலில் அதிகரிக்கும்.
  • அந்த நபருக்குத் தொற்று ஏற்பட்டால், அது தீவிரமாகாமல் இவை தடுக்கும். தொற்று மறைந்ததும் இவற்றின் அளவு குறைந்துவிடும். அதேசமயம், ‘டி’ செல் எனும் நினைவணுக்கள் (‘T’ memory cells) அதிகரிக்கும். ஆனாலும், இந்த செல்களுக்கும் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இல்லை. மாறாக, இவை கரோனா கிருமிகளை அடையாளம் கண்டுகொள்வதுடன், நீண்ட காலம் நினைவில்கொள்வதும் உண்டு.
  • ஆகவே, மறுபடியும் அந்த நபருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டால், ‘டி’ செல்கள் அதை அழிக்கும் விசையில் வேகமெடுக்கும். வழக்கத்தில், கரோனா தொற்றாளரின் உடல் செல்களில் கோடிக்கணக்கில் புதிய கிருமிகள் படியெடுக்கும். அந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதுதான் ‘டி’ செல்களின் வேலை.
  • எப்படியெனில், கரோனா கிருமிகளால் தொற்று ஏற்பட்ட உடல் செல்களை, ‘டி’ செல்கள் அழித்துவிடும். அப்போது அந்த செல்களில் குடிபுகுந்துள்ள கரோனா கிருமிகளும் அடியோடு அழிந்துவிடும். ஆகவே, தொற்றாளர் உடலில் அந்தக் கிருமிகளின் ஆதிக்கம் குறைந்து, நோய் தீவிரமாகாமல் பாதுகாக்கப்படுவார்.
  • இப்போது பரவும் ‘எக்ஸ்பிபி.1.16’ திரிபுக்கும் இது பொருந்துமா என்றால் பொருந்தும். எப்படி? இதுவரை 33 நாடுகளிலிருந்து கிடைத்துள்ள ஆய்வறிக்கைகளின்படி கரோனா எந்த வேடத்தில் வந்தாலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ‘டி’ செல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதை நினைவில் வைத்துக்கொள்வதாகத் தெரிகிறது.
  • ‘டி’ செல்களின் அதிகபட்ச நினைவுக் காலம் இன்னும் முடிவாகவில்லை. மேலும், ‘எக்ஸ்பிபி.1.16’ திரிபில் மட்டும் 3,648 மரபணு வரிசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் எந்தவொன்றுக்கும் இந்த நினைவணுக்களை அழிக்கும் திறன் இதுவரை உருவாகவில்லை. அதனால், இப்போது பரவும் ‘எக்ஸ்பிபி.1.16’ திரிபு ‘டி’ செல்லிடமிருந்து தப்பிக்க முடியாது.

ஆபத்து குறைவு:

  • அப்படியானால், நம் தடுப்பாற்றல் பிடியிலிருந்து இந்தத் திரிபு எளிதில் தப்பித்துவிடும் என்று ஏன் சொல்கிறார்கள்? இந்தத் திரிபு முதல்நிலைத் தடுப்பான ‘பி’ செல் எதிர்ப்பணுக்களிடமிருந்து தப்பிக்கும் தன்மை உடையது. அதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்.
  • உதாரணத்துக்கு, ‘பி’ செல் என்பது ரோந்து சுற்றும் காவல்காரர் என்றால், ‘டி’ செல் என்பது துணை ராணுவம். ‘பி’ செல்லிடமிருந்து ‘எக்ஸ்பிபி.1.16’ திரிபு தப்பித்தாலும், ‘டி’ செல்லிடமிருந்து தப்பிக்க முடியாது. அதனால்தான் இப்போது கரோனா கடுமையாவதில்லை. இறப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.
  • இந்தச் சூழலில், தமிழகத்தில் இன்னமும் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாவது தவணையும், 4.42 கோடிப் பேர் முன்னெச்சரிக்கை தவணையும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
  • இவர்களுக்காக, முதற்கட்டமாக தமிழகத்துக்கு 6.25 லட்சம் தடுப்பூசிகள் தேவை என்று மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது. மத்திய அரசு அதற்குக் கைவிரித்திருக்கிறது; மாநில அரசுகளை நேரடியாகக் கொள்முதல் செய்யச் சொல்லிவிட்டது.
  • எனவே, தமிழக அரசு செலவைப் பார்க்காமல், விரைவில் தடுப்பூசிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே வேளை, பயனாளிகள் அவற்றை வீணாக்கிவிடக் கூடாது; தயங்காமல் செலுத்திக் கொள்ள வேண்டும். அதன் பலனாக, இப்போதைய திரிபு மட்டுமல்ல, அடுத்ததாக எத்தனை திரிபுகள் வந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பது நிச்சயம்.
  • ஏப்ரல் 24 – 30: உலக நோய்த் தடுப்பு வாரம்

நன்றி: தி இந்து (27 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்