TNPSC Thervupettagam

தலித் சமூகத்தின் அறிவு வரலாற்றுக்குச் சான்று பகிரும் ‘சூரியோதயம் - 150’

February 15 , 2021 1437 days 741 0
  • ஒன்றரை நூற்றாண்டு ஆகிறது, ‘சூரியோதயம்’ இதழ் தொடங்கப்பட்டு; தமிழின் முதல் தலித் இதழ் என்ற பெருமைக்குரிய ‘சூரியோதயம்’ இந்தியாவின் முதல் தலித் இதழாகவும் இருக்கலாம்.
  • 1932-ல் ஹரிஜன சேவா சங்கத்தையும் ‘ஹரிஜன்’ இதழையும் தொடங்கிய காந்தி பிறந்த 1869-லேயே சென்னை புதுப்பேட்டையில் திருவேங்கிடசாமி பண்டிதர் என்னும் ஆதிதிராவிடப் பெரியவர் சமூக சமத்துவத்துக்காக ‘சூரியோதயம்’ எனும் இதழைத் தொடங்கினார்.
  • சமீபத்தில்தான் தமிழில் தலித் இதழியல் வரலாறு எழுதப்பட்டுவருகிறது. தலித் இதழியல் வரலாற்றை வரலாற்றாசிரியர்கள் எழுத முன்வரவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், இதழியல் வரலாற்றை எழுதுவதற்குப் பெரும் தடையாக இருப்பது ஆதாரங்கள் அரிதாகிப்போனதும் ஒரு காரணம்.
  • 19-ம் நூற்றாண்டில் வெளியான தலித் இதழ்களில் பெரும்பாலானவை இன்று கிடைப்பதில்லை. காலனிய அரசு ஆவணங்களில் கிடைக்கும் கொசுறு தகவல்களைக் கொண்டுதான் தலித் இதழியல் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.
  • இதற்கு ‘சூரியோதயம்’ இதழும் விதிவிலக்கு அல்ல; அதன் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை. காலனிய ஆவணங்களில்தான் இந்த இதழ் குறித்த தகவல்களைக் காண முடிகிறது.
  • இதழியல் வரலாற்றை எழுதுவதற்கு பிரிட்டிஷ் காலனிய அரசு இந்தியர்கள் நடத்தும் இதழ்களைக் கண்காணிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்திய மொழிப் பத்திரிகைகள் அறிக்கை ஒரு முக்கியமான ஆதாரம் ஆகும்.
  • ஆனால், இந்த அறிக்கை 1872-லிருந்துதான் தொடங்குகிறது. இதனால் ‘சூரியோதயம்’ குறித்த தகவல்களைப் பெறுவது மேலும் சிக்கலாகிறது. இருப்பினும், ஆண்டறிக்கைகளில் சில அடிப்படைத் தகவல்கள் கிடைக்கின்றன.
  • ‘சூரியோதயம்’ சென்னை புதுப்பேட்டையிலிருந்து வெளியாகியது என்றும் இதன் ஆசிரியர், பதிப்பாளர், அச்சகர், வெளியீட்டாளர் திருவேங்கடசாமி பண்டிதர் என்றும் அவர் இந்து பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  •  மேலும், இந்தப் பத்திரிகை பற்றிய கருத்தை எழுதும்போது ‘இந்த இதழுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது’ என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • இந்தத் தகவல்களுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பண்டிதர் அயோத்திதாசர் ‘தமிழன்’ (21 ஏப்ரல் 1909) இதழில், “இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டவர்களும் இக்குலத்தோர்களேயாகும்.
  • அதாவது புதுப்பேட்டை திருவேங்கிடசாமி பண்டிதர் ‘சூரியோதயப் பத்திரிக்கை’ என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார்” என்றும், மற்றொரு கட்டுரையில், “இச்சென்னையில் பர்ஸீவேலையர் தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கு முன், புதுப்பேட்டையில் ‘சூரியோதயப் பத்திரிக்கை’யென வெளியிட்டுவந்த திருவேங்கிடசாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும், ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்தூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றனர்” என்றும் குறிப்பிடுகிறார்.
  • அயோத்திதாசர் ‘பர்ஸீவேலையர்’ என்று குறிப்பிடுவது ‘தினவர்த்தமானி’ இதழை நடத்திய ரெவரெண்ட் பெர்சிவல் என்ற புகழ்பெற்ற ஆங்கிலேயத் தமிழறிஞரைத்தான். ‘தினவர்த்தமானி’ 1855-ல் தொடங்கப்பட்டது ஆகும். அயோத்திதாசர் சொல்வது காலப்பிழை இல்லை என்றால், ‘சூரியோதயம்’ இதழின் வரலாறு இன்னும் முற்பட்டதாகும்.
  • கடந்த காலத்தில் தலித்துகளுக்கு அறிவுத்தளத்தில் இடமிருந்திருக்க வாய்ப்பில்லை என்னும் பொதுப் புத்தியை இக்கருத்துகள் உடைப்பதோடு, தலித்துகளின் அறிவு வரலாற்றை இவையெல்லாம் எடுத்துக் கூறுகின்றன.
  • 19-ம் நூற்றாண்டில் காலனிய அரசும், கிறிஸ்தவ மிஷனரிகளும் உருவாக்கிய நவீனக் கல்விக் கூடங்களில் தலித்துகள் கல்வி கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அரசு சார்பில் பஞ்சமர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
  • இந்திய அரசு 1882-ல் நியமித்த கல்வி ஆணையம் பஞ்சமர்களின் சமூகப் பொருளாதார நிலை தொடர்பிலான ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் இவர்களின் பின்தங்கிய நிலைக்கான காரணங்களைக் கண்டறிந்து ஒரு ஆணையைப் பிறப்பித்தது.
  • அந்த ஆணையில் “சாதியைக் காரணம் காட்டி, எந்தக் குழந்தைக்கும் அரசுப் பள்ளியிலோ, கல்லூரியிலோ அனுமதி மறுக்கப்படக் கூடாது” என்று பரிந்துரைத்தது.
  • காலனிய அரசின் முயற்சிகள் ஒருபக்கம் இருந்தாலும் தலித்துகளிடம் மரபான திண்ணைப் பள்ளி மூலம் தமிழ்மொழி, இலக்கியம் போன்றவற்றைக் கற்பிக்கும் முறை இருந்துவந்தது.
  • இதுபோன்ற மரபான திண்ணைப் பள்ளியில் கற்றவர்தான் பண்டிதர் அயோத்திதாசர். அவர் காலத்தில் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் அறிஞர்கள் இருந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.
  • இந்த அறிவு மரபுதான் பிரிட்டிஷ் இந்திய காலத்தில் ஊடகச் சூழலை மாற்றியமைத்தது. 1869 - 1943 காலகட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இதழ்களை தலித்துகள் நடத்தியுள்ளனர் என்பதை ஆவணங்கள் உறுதிசெய்கின்றன. ஆனால், கெடுவாய்ப்பாக இவற்றில் ஐந்து இதழ்கள் மட்டுமே பிரதிகள் கிடைத்துள்ளன.
  • இந்த இதழ்கள் சாதி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, தலித்துகள் பெண்களுக்கான கல்வி, அரசு வேலைகளில் தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம், மது ஒழிப்பு, நாத்திகம் போன்ற விஷயங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன.
  • சில விகட இதழ்களையும் தலித்துகள் நடத்தினர். ‘மஹாவிகடதூதன்’ அப்படியான ஒன்று. இது 1886-ல் பி.ஏ.ஏ. இராஜேந்திரம்பிள்ளையால் தொடங்கப்பட்டது ஆகும். இதழ்களில் விகடம் எனும் வகைமை அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தது. அதாவது, விஷயங்களை நகைச்சுவையுடன் வாசகர்களுக்குத் தெரிவிக்கும் வகைமை.
  • காங்கிரஸ் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான இயக்கம் அல்ல என்ற அரசியல் நிலைப்பாட்டைத் தலித் இதழாசிரியர்கள் கொண்டிருந்தனர். சுதேசி ஆட்சி என்பது பிராமணர்களின் ஆட்சியாகவே முடியும். ஆகவே, அரசியல் விடுதலைக்கு முன் சமூக மாற்றம் அவசியம் என்ற கருத்தை இவர்கள் முன்வைத்தனர்.
  • இந்தியாவில் மட்டுமல்லாமல் வேலைக்காக தலித்துகள் புலம்பெயர்ந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா, ரங்கூன், பிஜி தீவுகள், சிங்கப்பூர், மலேசியா, தான்சானியா ஆகிய நாடுகளிலும் தலித் இதழ்களுக்குச் சந்தாதாரர்கள் இருந்திருக்கின்றனர்.
  • ஆதிதிராவிடன் இதழ் இலங்கைக்கு வேலைக்குச் சென்ற இந்திய தமிழ் தலித்துகளால் கொழும்புவிலிருந்து 1919-ல் தொடங்கப்பட்டது.
  • தலித் இதழ்களின் ஆசிரியர், வெளியீட்டாளர் தலித்துகளாக இருந்தாலும், அதில் தலித்தல்லாதோரும் நிறையப் பங்களிப்பு செய்தனர்.
  •  ஜஸ்டிஸ் கட்சியின் ‘திராவிடன்’ நாளிதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் ‘ஆதிதிராவிடன்’ இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில் முதல் பெண் இதழாளர் ‘தமிழ்மாது’ இதழின் ஆசிரியர் ஸ்வப்பனேஸ்வரி அம்மாள், ‘வருணபேத விளக்கம்’ நூலின் ஆசிரியர் ம.மாசிலாமணி முதலியார், தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலர், பேராசிரியர் பி.லெட்சுமி நரசு முதலானோர் முக்கியமான கட்டுரைகள் எழுதினர்.
  • வரலாற்றில் தலித்துகள் இவ்வாறு இதழ்களை நடத்தியதன் மூலம், பொதுவெளியில் தலித்துகள் பங்கேற்று மேலாதிக்கக் கருத்துகளுக்கு எதிராகத் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
  • வெளியிலிருந்து ஒரு மீட்பர் வந்து தங்களைச் சமூகக் கொடுமைகளிலிருந்து மீட்பார் எனும் நம்பிக்கையை எந்நாளும் ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டதில்லை என்பதையும், தாமாகவே இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தார்கள் என்பதையும் இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (15-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்