TNPSC Thervupettagam

தலைமுறை மாற்றம்

July 20 , 2023 548 days 314 0
  • சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதையும் மீறித்தான் தலைமுறை மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்.
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை16) நிறைவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இரண்டு இளம் வீரர்கள் புதிய தலைமுறையின் அடையாளமாக வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள். ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் (20), மகளிர் பிரிவில் செக். குடியரசின் மார்கெட்டா வோண்டுரோஸோவா (24) ஆகிய இருவரும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
  • ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆடவர் பிரிவில் ஜோகோவிச்சையும், மார்கெட்டா வோண்டுரோஸோவா மகளிர் பிரிவில் ஜபியுரையும் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் சரி, துனிஷியாவின் ஆன்ஸ் ஜபியுரும் அடைந்திருக்கும் ஏமாற்றம் எதிர்பாராதது.
  • இந்த முறை எட்டாவது முறையாக வெற்றி பெற்று மார்கரெட் கோர்ட், ரோஜர் ஃபெடரரின் சாதனைகளைச் சமன் செய்யும் எதிர்பார்ப்புடன் ஜோகோவிச் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்டார். 23 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும், விம்பிள்டன் போட்டியில் 7 முறையும் சாம்பியன் பட்டம் வென்றவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். ஆனால், இளம் வீரர் அல்கராஸின் ஆக்ரோஷமான ஆட்டம் ஜோகோவிச்சின் சாதனைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
  • ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், 2022-ஆம் ஆண்டு யு.எஸ். ஓபன் போட்டியில் பட்டம் வென்ற பிறகு கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்தை எட்டியது இது இரண்டாவது முறை. 2008-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் தனது முதல் பட்டத்தை வென்றபோது அல்கராஸுக்கு 5 வயதுகூட ஆகியிருக்கவில்லை.
  • களிமண் மற்றும் கடின தரை ஆடுகளங்களில் மட்டுமே சிறப்பாக விளையாடி வந்த அல்கராûஸ ஜோகோவிச் இந்த புல்தரை போட்டியில் எளிதில் வென்றுவிடுவார் என்றுதான் அவர் உள்பட அனைவரும் கருதினர். 2-ஆவது செட்டை இழப்பின் விளிம்பில் இருந்து அல்கராஸ் போராடி கைப்பற்றியபோது விளையாட்டின் போக்கு திசைதிரும்பியது. இந்த செட் 85 நிமிஷங்கள் நீடித்தது.
  • டென்னிஸ் போட்டிகளில் ஆட்டத்திறனுடன் தாக்குப்பிடிக்கும் சக்தியும் மிக முக்கியம். 36 வயதானபோதும், 20 வயது அல்கராஸுக்கு சமமாக ஜோகோவிச் 4 மணி 42 நிமிஷங்கள் போராடினார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என அல்கராஸ் வென்றார்.
  • இந்த வெற்றியின் மூலம், விம்பிள்டனில் ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் (17 ஆண்டுகள் 227 நாள்கள்), ஸ்வீடனின் போர்க் (20 ஆண்டுகள் 27 நாள்கள்) ஆகியோருக்குப் பிறகு இளம் வயதில் (20 ஆண்டுகள் 72 நாள்கள்) பட்டம் வென்ற 3-ஆவது வீரர் என்ற பெருமையை அல்கராஸ் பெற்றுள்ளார்.
  • இந்த ஆண்டில் இதுவரை பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் 6 முறை பட்டம் வென்றுள்ள அல்கராஸும், ஜோகோவிச்சும் 6 முறை மாறிமாறி சர்வதேசத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர். விம்பிள்டன் போட்டியில் வென்றதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தை அல்கராஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
  • ஒருபுறம், ஆடவர் பிரிவில் அல்கராஸ் சாதனை படைத்தார் என்றால், மறுபுறம் மகளிர் பிரிவில், 24 வயதேயான செக். குடியரசின் மார்கெட்டா வோண்டுரோஸோவா வெற்றி பெற்று டென்னிஸ் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், போட்டிக்கான தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரை 6-4, 6-4 என நேர் செட்டுகளில் வென்று அதிர்ச்சி அளித்தார். போட்டிக்கான தரவரிசையில் இடம்பெறாத ஒருவர் விம்பிள்டனில் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
  • நான்கு வயதில் டென்னிஸ் மட்டையைப் பிடித்த மார்கெட்டாவின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. மணிக்கட்டில் அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு உடல்நல சோதனைகளைச் சந்தித்தார். அத்துடன், இந்தப் போட்டிக்கு முன்னர் விம்பிள்டனில் தான் பங்கேற்ற 5 ஆட்டங்களில் 4-இல் தோல்வியையே தழுவி இருந்தார். இருந்தபோதும் இந்தப் போட்டியில் 7 ஆட்டங்களில் வெறும் 2 செட்டுகளை மட்டுமே இழந்து வாகை சூடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
  • ஜோகோவிச்சின் ஏமாற்றத்தைப் போலவே, துனிஷியாவின் ஆன்ஸ் ஜபியுரின் ஏமாற்றமும் எதிர்பாராதது. 2022 போலவே, விம்பிள்டன் பட்டம் வெல்லும் முதலாவது ஆப்பிரிக்கர் என்கிற பெருமையை எதிர்பார்த்து களம் இறங்கினார் அவர். சிறு பெண்ணான மார்கெட்டா வோண்டுரோஸோவா அந்தக் கனவை தகர்ப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
  • இரண்டு இளைஞர்களின் வெற்றியைப் போலவே, 7 முறை சாம்பியன் பட்டம்பெற்ற ஜோகோவிச்சின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. "அல்கராஸின் ஆட்டத்தில் ஃபெடரர், நடால் மற்றும் எனது ஆட்டத் திறன்களின் கூறுகள் இருப்பதாக ரசிகர்கள் கூறுவதை ஒப்புக் கொள்கிறேன்' என ஜோகோவிச் புகழாரம் சூட்டியுள்ளது அடுத்த தலைமுறையை அடையாளம் காணும் அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. அதை வழிமொழிவது போல "டென்னிஸ் அரங்கில் அடுத்த சூப்பர் ஸ்டார் அல்கராஸ்' என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வர்ணித்துள்ளார்.
  •  ஃபெடரர், நடால், ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரின் காலகட்டத்தைத் தொடர்ந்து அல்கராஸ், மார்கெட்டா உள்ளிட்ட இளம் தலைமுறையினரின் காலம் தொடங்கியிருப்பதன் அறிகுறி, நடந்து முடிந்திருக்கும் விம்பிள்டன் போட்டி. தலைமுறை மாற்றத்துக்கு தயாராகிறது டென்னிஸ்.

நன்றி: தினமணி (20  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்