TNPSC Thervupettagam

தலைமைக்குப் பஞ்சம்?

May 2 , 2019 2034 days 1191 0
  • மனிதர்கள் கூட்டாக வாழத் தொடங்கிய காலந்தொட்டு ஆங்காங்கே அமைத்துக்கொண்ட கூட்டமைப்புக்கு  ஒரு தலைமை உருவானது.   மன்னன் என்ற குறியீட்டால் தலைமை உணரப்பட்டதற்கு அடையாளமாகவே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  என்றது புறநானூறு.  இதன் மறுவாசிப்பாகவே மன்னன் எவ்வழி அவ்வழி குடிகள்  என்ற வாசகமும் தோன்றியது.
  • முடியாட்சியான  வாழ்க்கையில் கூறப்பட்ட  மன்னன்,  அரசன், வேந்தன் என்ற தலைமைப் பெயர்கள்,  மக்களாட்சி மலரத் தொடங்கியதும் பிரதமர், அதிபர், முதல்வர்,  தலைவர் என்றெல்லாம் மாற்றம் பெற்றன.
தலைமை
  • ஆதிநாளில்  பொது வாழ்க்கைக்கு முன்மாதிரியாக இருந்த தலைமை, பல்வேறாகக்   கிளைவிட்ட அரசியல் பரிமாணத்தால்  பல  மாசுபடியும்   மதிப்புரைகளுக்கு  ஆளாக நேர்ந்ததால் முன்மாதிரியாகும் தகுதியை அத்தலைமை  இழந்து விட்டது என்பது கலிகாலக் கோலமோ என எண்ணத் தோன்றுகிறது.  இருப்பினும் குணம் நாடி குற்றம் நாடிச் சலித்துக் கொழித்தால் ஓரிரு தலைமை துருவ நட்சத்திரமாய்  ஒளிர்வதை உணரலாம்.
  • அரசியலுக்கு அப்பால் உலகத் தலைமையாகக் கருதப்படும் காந்தி,  புத்தர்,  இயேசு,  நபிகள் நாயகம் போன்றோரின் தலைமை என்றும்  உதிக்கும் சூரியனைப் போன்றது.
  • இந்தத் தலைமை,  எட்டாக்கனியாக இல்லாமல் நாளும் எட்டும் கொய்யாக்கனி போல் பறித்து உண்ணும் பண்பாட்டுத் தலைமையாக உள்ளது.  இந்தத் தலைமைப் பண்பு அடுத்தடுத்து வளராததாய் ஆகிவிட்டதே என்ற ஏக்கத்தோடு ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என சில தலைமையைச் சிந்திக்க வேண்டியுள்ளது.
  • வளர்ந்து விட்ட உலகியல் வாழ்வில், ஆட்சித் தலைமையைக் கடவுளாகக் கருதும் கானல்நீர் நிலைமை உருவாகிவிட்டது. மேலும், ஆட்சி என்பது மக்களுக்குச் சேவை செய்ய  தமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்பதாகக் கருதும் நிலையும் மாறி விட்டது.  மக்கள் சேவையைவிட ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆராய்ச்சி பெருகிவிட்ட பாலைவன அரசியல் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற ஏக்கப் பெருமூச்சுதான் வெப்பமாக வெளிவருகிறது.
  • இந்தப் பாலைவனத்தில் பால் வார்ப்பது போல ஒரு சில தலைமையை எண்ணிப்  போற்றலாம்.
  • குறிப்பாக, தமிழகத்தைப் பொருத்தமட்டில் பெருந்தலைவர் காமராசருக்குப் பின் நல்ல  தலைமையில்லாத வெறுமை வளர்ந்துவிட்டது  எனலாம்.  அவரது தனி மனிதத்தனம்,  கடைப்பிடித்த அரசியல் நாகரிகம்,  அப்பழுக்கற்ற சேவை,  தொலைநோக்குப் பார்வை, நடுநிலைமைப் பண்பு போன்றவை மக்களுக்கு முன்மாதிரியாக இருந்தன.
அரசியலில்.....
  • இந்த உண்மையின் நுட்பத்தை உணர்ந்த பேரறிஞர் அண்ணா,  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மணம் உண்டு என்று அந்தத்  தலைமைப் பண்பைப் பாராட்டும் வகையில்  அரசியலில் ஓரளவு பயணித்தார். இவர்களுக்குப் பின், எந்தத் தலைமையும் அவர்கள் அளவுக்கு ஒளிர்ந்து ஓங்கவில்லை. பலர் அவ்வப்போது அரசியலில் கால் மாறி இடறி விழுந்தனர். சிலர் ஆடும் அரசியல் களத்தின் ஆட்டமானது, நிலையானதாக இல்லாமல் கானல் நீராகவே ஆகி விட்டது.
  • இந்தக் கானலில் எவரும் பலருக்கு நிழல் தரும் மரமாக இல்லாமல் ஒற்றைப் பனை மரமாகவே வளருகின்றனர்.
  • எதிர்பாராமல் அரசியல் களம் அமைத்த திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களோ அந்தத் துறையில் ஒளிர்ந்த அளவுக்கு அரசியல் சாதனையால் ஒளிரவில்லை. மாறாக, பல சிக்கல்களுக்கு உள்ளாகி அரசியல் சதுரங்கத்தில் தோல்வியின் விளிம்பைத் தொட்டவராகி விட்டனர்.
  • நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தில் பல சோதனை  நெருப்பாறுகளைக் கடந்து வந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கியவர்களாகி நல்ல தீர்வுக்கு வழி வகை செய்யாத பழிப்புக்கும் உள்ளாகிவிட்டனர். அதாவது, அரசியலில் கிடைத்த தலைமை வாய்ப்பில் செய்ய வேண்டியதைச் செய்யாததால் நிலவி அமைந்த களங்கமாக அரசியல் வாழ்வில் மாறா வடுவைப் பெற்றனர்.
பொது வாழ்வு
  • வளர்ந்து வரும் அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைக்க விரும்புவோரும் விரைந்து புறம் வேர்க்கும் புழுக்கத்தால் அவர்களின் தலைமைக்குரிய பண்பும் பின்னடைவாகவே உள்ளது.
  • எனவே, நடப்பியல் உலகில் நம்பத்தகுந்த முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க நல்ல அரசியல் தலைமைக்கான இடம் வெற்றிடமாகவே உள்ளது.  வெளிப்படையாகச் சொன்னால், எந்தப் பொதுவாழ்வுத் தலைமையும் தனித மனித வாழ்வுக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நிறைந்த வழிகாட்டியாகக் கொள்ளத்தகுமாறு இல்லை.
  • ஏனெனில் அரசியலுக்கு அப்பால் அப்படிப்பட்டதொரு தலைமையைக் காண முடியாத  கானலாகி விட்டது நாடு என்பதே உண்மை. ஆனால், அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,  அப்துல் கலாம், அன்னை தெரசா போன்ற பொதுத் தலைமைகள் சாய்ந்துவிட்ட நிலையில், தன்னிகரில்லாத் தலைமைக்கான  வெறுமை நீடிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதன்று.
  • குறிப்பாக, பொது வாழ்க்கையிலிருந்து தற்போதைய நிலையில் எவரையும் முன்மாதிரியாகக் கொள்ளும் தகுதியைச் சமூகம் இழந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்