கடந்த ஆகஸ்ட் 15 அன்று மூன்று பாதுகாப்புப் படைத் தலைவர்களுக்கும் மேல்நிலையில் ஒரு தலைமை பாதுகாப்புப் பணியாளரை (Chief of Defence Staff -CDS) நியமிக்கப் போவதாக பிரதமர் அறிவித்தார்.
இது கூட்டான மற்றும் முப்படைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதற்கான நாட்டின் மிகப் பெரிய உயர்மட்ட இராணுவச் சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.
தலைமை பாதுகாப்புப்பணியாளர்
சி.டி.எஸ் என்பது அரசின் ஒற்றை இராணுவ ஆலோசகராகவும் முப்படைகளின் நீண்ட காலத் திட்டமிடல், கொள்முதல், பயிற்சி மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பவராகவும் இருப்பவர் என பொருள்படும்.
எதிர்காலத்தில் போர்கள் மிகவும் குறுகியனவாகவும் விரைவாகவும் அமைப்புச் சார்ந்ததாகவும் மாறும் போது முப்படைகளினிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானதாகும்.
மேலும் மூல வளங்களின் மீதான அழுத்தம் அதிகரிப்பதாலும் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடுகள் மாறாமல் இருப்பதாலும் கூட்டுத் திட்டமிடல் மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மூலம் படைகளை மேம்படுத்துவதே முன்னோக்கிச் செல்வதற்கான தற்போதைய வழியாகும்.
இப்பதவியானது முப்படைத் தலைவர்களுக்கும் மேலாக இருப்பதால் கொள்முதலை மேம்படுத்துதல், ஒரே பணிகள் திரும்ப நடைபெறுவதைத் தவிர்த்தல், மற்றும் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தியா ஒரு அணு ஆயுத நாடாக இருப்பதால், சிடிஎஸ் ஆனது அணுசக்தி விவகாரங்கள் குறித்து பிரதமரின் இராணுவ ஆலோசகராகவும் செயல்படும்.
தலைமை பாதுகாப்புப்பணியாளரின் வரலாறு
இப்பதவியின் முன்மொழிதலானது கடந்த இருபதாண்டு காலமாக உள்ளதால் இது இந்தியாவிற்குப் புதிதல்ல.
உயர் இராணுவ சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்வதற்காக கார்கில் போருக்குப் பின்னர் 1999 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட K. சுப்பிரமணியம் குழுவால் இது முதன்முதலில் பரிந்துரை செய்யப்பட்டது.
இருப்பினும் படைகளினிடையே ஒருமித்த தன்மையின்மை மற்றும் ஐயங்கள் ஆகியவற்றின் காரணமாக இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
2012 ஆம் ஆண்டில் சிடிஎஸ் மீதான ஐயங்களைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக, பணியாளர் குழுவின் தலைவர்களின் தலைமையாக ஒரு நிரந்தரத் தலைவரை நியமிக்க நரேஷ் சந்திரா குழு பரிந்துரை செய்தது.
முப்படைகளின் சீரமைப்பு தொடர்பாக 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்ற துணை படைத் தளபதியான D.B. ஷேகட்கர் குழுவின் 34 பரிந்துரைகளோடு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள 99 பரிந்துரைகளில் இப்பதவியின் உருவாக்கமும் ஒன்றாகும்.
தற்போதைய நிலை
சிடிஎஸ் பதவி இல்லாத நிலையில், தற்போது முப்படைத் தலைவர்களில் உள்ள மூத்தவர் தலைமை பாதுகாப்புப் படைப் பணியாளரின் தலைவராக (Chairman of the Chiefs of Staff Committee -COSC) செயல்படுகின்றார்.
ஆனால் கூடுதல் பணியான இதன் பதவிக் காலம் மிகவும் குறைவாகும்.
உதாரணமாக, இந்த வருடம் மே 31 அன்று பதவி விலகிய கடற்படைத் தலைவர் சுனில் லன்பாவையடுத்து COSC-இன் தலைவராக விமானப் படைத் தலைமைத் தளபதியான B.S தனோவா பொறுப்பேற்றார்.
இருப்பினும் தனோவா செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெறவிருப்பதால் சில மாதங்களுக்கு மட்டுமே அவர் இப்பதவியில் இருப்பார். அதன் பின்னர் அடுத்த மூத்தத் தலைவராக இருக்கும் தரைப்படை தலைவரான பிபின் ராவத்திற்கு இப்பதவி மாறும்
பிபின் ராவத்தும் மூன்று ஆண்டு கால தரைப் படைத் தலைவர் பதவியிலிருந்து டிசம்பர் 31 அன்று ஓய்வு பெறவுள்ளார்.
பிறநாடுகளில் தலைமை பாதுகாப்புப்பணியாளரின் நிலை
அனைத்துப் பெரிய நாடுகளும் குறிப்பாக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் அனைத்தும் தலைமை பாதுகாப்புப் பணியாளரைக் கொண்டுள்ளது.
இந்திய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை ஐக்கியப் பேரரசை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஐக்கியப் பேரரசானது பாதுகாப்புச் செயலருக்குச் சமமான ஒரு நிரந்தரச் செயலாளரையும் ஒரு சி.டி.எஸ்ஸையும் கொண்டுள்ளது.
சி.டி. எஸ் பதவியில் இருப்பவர் பிரித்தானிய ஆயுதப் படைகளின் பணிசார் தலைவராகவும், இராணுவ மூலோபாய தளபதியாகவும் ராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப் படுகின்றன என்பதற்குப் பொறுப்பாளராகவும் அவர் உள்ளார் என ஐக்கிய பேரரசின் நெறிமுறைகள் கூறுகின்றன.
மேலும் இவர் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ஒரு மிக மூத்த இராணுவ ஆலோசகராகவும் உள்ளார்.
நிரந்தரச் செயலாளர் என்பவர் அரசின் பாதுகாப்பு தொடர்பான முதன்மை குடியியல் ஆலோசகர் ஆவார். கொள்கைகள், நிதி மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிற்கான முதன்மை பொறுப்பையும் அவர் கொண்டுள்ளார். மேலும் துறைசார் கணக்கியல் அலுவலராகவும் அவர் உள்ளார்.
திறனாய்வு
கோட்பாட்டளவில், சி.டி.எஸ் நியமனம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள ஒரு திட்டமாகும். ஆனால் இப்பதவியின் செயல்திறனை உறுதிப்படுத்துவதற்கான தெளிவான திட்டம் எதுவும் இருப்பதாக தெரிய இல்லை.
இந்தியாவின் அரசியல்சார் அமைப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி அறியாதவைகளாகவோ அல்லது மிகவும் அலட்சியமாகவோ காணப்படுகின்றன.எனவே ஒரு சிடிஎஸ் திறனுடன் செயல்படுவதை உறுதி செய்ய இவற்றால் இயலாது.
பொதுவாகவே இராணுவத்தினர் மாற்றத்தை எதிர்க்கவே முனைகிறனர்.
தெளிவான தொலைநோக்கு மற்றும் புரிதல் இல்லாமை ஆகியன சி.டி.எஸ்ஸை "ராணுவ வீரர்களுக்கான வேலைகள்" என்ற மற்றொரு வாதமாக மாற்றக் கூடும்.
எதிர்காலப்பாதை
தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் முதல் வரைவானது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி, இப்பதவியை உருவாக்கும் பணியைப் பாதுகாப்பு அமைச்சகமானது தொடங்கவுள்ளது. இதற்கு சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.