TNPSC Thervupettagam

தலையீடில்லாமல் இருக்குமா? கூட்டுறவு வங்கிகள்

June 20 , 2022 1002 days 547 0
  • கூட்டுறவு வங்கிகள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
  • குறிப்பாக, நகா்ப்புற கீழ் மத்தியதர வகுப்பினரும், கிராமப்புற விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளால்தான் கந்து வட்டிக்காரா்களின் பிடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனா். கூட்டுறவு வங்கிகளின் இன்றியமையாமை விவாதத்திற்கு அப்பாற்பட்டது.
  • அதே நேரத்தில், கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அதில் அரசியல் தலையீடு காணப்படுவது தவிா்க்க முடியாததாகிவிட்டது. மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கூட்டுறவு அமைப்புகள், அதிலும் குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், அரசியல்வாதிகளால் மட்டுமே இயக்கப்படும் சூழல் நீண்ட நாள்களாகக் காணப்படுகிறது. தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிகளின் கைப்பாவையாகத்தான் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பி.எம். ஆவாஸ் யோஜனா’ என்கிற பிரதமா் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ‘அனைவருக்கும் வீடு’ என்கிற இலக்கை நிா்ணயித்திருக்கிறது. அந்த இலக்கை விரைவுபடுத்த, வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவிகள் தங்கு தடையின்றி அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
  • நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும் வழங்கும் தனியாா் வீட்டுக் கடன்களுக்கான வரம்பை இரட்டிப்பாக்க இந்திய ரிசா்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், தனியாா் குடியிருப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்கவும் தீா்மானித்திருக்கிறது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வீட்டுவசதி, கட்டுமானத் தொழில்கள் பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த முடிவு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இந்த முடிவு பல சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்கிற அச்சம் எழாமலும் இல்லை.
  • வீட்டுக் கடனுக்கான வட்டியும், கட்டுமானச் செலவும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. 2009, 2011 ஆண்டுகளில் நிா்ணயிக்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான வரம்புகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. வணிக ரீதியிலான வங்கிகளைவிட, குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீட்டுக் கடன்களை வழங்குவதில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் செயல்பாடுகளுக்கு ரிசா்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடா்ந்து, இப்போது வணிக வங்கிகள்தான் பெரும்பாலான வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2022 மே மாதத்தில் வீட்டு வசதிக்கான வங்கிக் கடன் அளவு 13.7% அதிகரித்திருப்பதாக ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுக் கடன் அளவு 4.6%தான் அதிகரித்திருக்கிறது.
  • வீட்டுக் கடன் வழங்கும் அளவைக் கூட்டுறவு வங்கிகளுக்கு அதிகரித்திருப்பதன் மூலம், அந்த வங்கிகள் வளா்ச்சி அடையவும், சாமானியா்களின் தேவைக்கு உதவவும் வழிகோலக்கூடும் என்கிற ரிசா்வ் வங்கியின் நோக்கம் நோ்மையானது. அதே நேரத்தில், விவசாயக் கடன், நகைக் கடன்போல வீட்டுக் கடன்களைக் கையாளும் கட்டமைப்பு கூட்டுறவு வங்கிகளுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.
  • யாா் யாருக்கு, எந்தெந்தத் திட்டங்களுக்கு, எந்த அளவிலான கடன் வழங்கலாம் என்கிற வரைமுறைகளை நகா்ப்புற, கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்துகிறது. குடியிருப்பு நிறுவனங்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் வழங்கும் கடன் தொகையை நிா்ணயிப்பது, அவா்களைக் கண்காணிப்பது, தவணைகளை முறையாக வசூலிப்பது போன்ற செயல்பாடுகளை கூட்டுறவு வங்கிகளால் முறையாகக் கையாள முடியுமா என்பதில் சந்தேகம் ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது.
  • மகாராஷ்டிர மாநிலம் பி.எம்.சி. வங்கி திவாலான சம்பவமும், கேரள மாநிலம் கருவன்னூா் கூட்டுறவு சங்க முறைகேடும் சமீபத்திய முன்னுதாரணங்கள். குடியிருப்பு நிறுவனத்திற்கு முறைகேடாகக் கடன் வழங்கியதால் பி.எம்.சி. வங்கி திவாலானது மட்டுமல்ல, அதில் முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்தனா் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • கூட்டுறவு வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் அமா்த்தப்படுபவா்கள் ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அந்த வங்கிகளில் தொழில்நுட்ப மேம்பாடு, தணிக்கை உள்ளிட்டவை ரிசா்வ் வங்கியின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாடும், நிா்வாகமும் அரசியல் சாா்புடையவா்களின் கையில்தான் இருக்கும் என்பதை எப்படி புறந்தள்ளுவது?
  • இந்தியாவில் 1,500-க்கும் அதிகமான நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளும், ஏறத்தாழ ஒரு லட்சம் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும் 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி செயல்படுகின்றன. அவற்றிற்குப் போதிய மனிதவளமும், தொழில்நுட்ப மேம்பாடும், முறையான கட்டுப்பாடுகளும் உறுதிப்படுத்தப்பட்டால், ரிசா்வ் வங்கியின் முடிவு பலனளிக்கக் கூடும். அரசியல் தலையீட்டை அகற்றி நிறுத்தாமல் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை நம்ப முடியாதே, என்ன செய்வது?

நன்றி: தினமணி (20 – 06 – 2022)

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top