TNPSC Thervupettagam

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய வரி விதிப்புகள்

December 27 , 2024 15 days 83 0

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய வரி விதிப்புகள்

  • இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான வாடகைக் கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதும், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பழைய / பயன்படுத்தப்பட்ட மின்சார, சிறிய வகை (1,200 சிசிக்கு உட்பட்ட) பெட்ரோல், டீசல் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதும் பேசுபொருளாகியிருக்கின்றன.
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரி 18% இலிருந்து 5% குறைப்பது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் மரபணு சிகிச்சைக்கு முழு வரிவிலக்கு, கறுப்பு மிளகு, உலர் திராட்சைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கும்போது ஜிஎஸ்டி இல்லை, கடன் தொகை செலுத்தாததற்காக வங்கிகள், நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராதக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவை வரவேற்கத்தக்கவை.
  • அதே நேரத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான வாடகைக் கட்டிடங்களுக்கு 18% வரி விதித்திருப்பது சிறு குறு நடுத்தரத் தொழில் துறையினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே ஆண்டுதோறும் உயரும் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் இத்தொழில் துறையினர் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் வாடகைக் கட்டிடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறுகுறு தொழில்கள் மேலும் பாதிப்பைச் சந்திக்கக்கூடும். வாடகையை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் சிரமம் ஏற்படலாம்.
  • பழைய / பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ஜிஎஸ்டி 12% என்கிற நிலையிலிருந்து 18% ஆக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. நிறுவனமாகப் பதிவுசெய்து பழைய கார்களை கமிஷன் அடிப்படையில் வாங்கி விற்பனை செய்வோரின் தொழிலில் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
  • மேலும் தவணை (இஎம்ஐ) செலுத்தப்படாத கார்களைப் பறிமுதல் செய்து விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வாங்கப்பட்ட கார்களுக்கு, மீண்டும் ஜிஎஸ்டி செலுத்த நேர்வது, இரண்டு முறை ஜிஎஸ்டி விதிப்பதற்குச் சமமாகிவிடும்.
  • தற்போது மின்சார வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மறுவிற்பனைக்கு 18% விதிக்கப்பட்டால் மின்சார வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறையும். மின்சார வாகனங்கள் வாங்க மாநில அரசுகள் அளிக்கும் இதர வரிச்சலுகைக்கு எதிராகவும் இது அமைந்துவிடும்.
  • ஆயுள், மருத்துவக் காப்பீடு தவணைக்கு ஜிஎஸ்டி செலுத்துவதற்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த இரண்டும் மக்கள் உடல்நலன், எதிர்கால நலன் சார்ந்தவை. மட்டன் பிரியாணிக்கு 12% ஜிஎஸ்டி, முட்டையுடன் கூடிய மட்டன் பிரியாணிக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையே ரூ.6 என்கிற அளவில் விற்பனையாகும் நிலையில் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு தெளிவில்லாமல் இருக்கிறது.
  • ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற பெயரில் 2017 ஜூலையில் ஜிஎஸ்டி வரிச் சட்டம் அமலான பிறகு வரி விதிப்பில் திருத்தம் செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இதுபோன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இப்போதும் 148 பொருள்களுக்கு வரி விகிதம் மாற்றி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைமுறையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் குழப்பம் இருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ள சூழலில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மறுசீரமைப்பு செய்வது அவசியம். இதைப் பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் திறந்த மனதுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்