தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய உயிரிழப்புகள்!
- சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படை நடத்திய சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றாலும், அதைக் காண வந்த மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானதும் 5 பேர் உயிரிழந்ததும் வருத்தம் அளிக்கிறது.
- இந்திய விமானப் படை தொடங்கப்பட்ட 92ஆம் ஆண்டை முன்னிட்டுப் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 அன்று நடைபெற்றன. காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியைப் பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் வருகை தந்திருந்தனர். சென்னை மட்டுமல்லாது, கடலூர், கோவை எனப் பல பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 15 லட்சம் பேர் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
- நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றாலும் நிகழ்ச்சி முடிந்து கடற்கரையிலிருந்து மக்கள் வெளியேறுவது சுமுகமாக நடந்தேறவில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கடற்கரைச் சாலைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
- அக்டோபர் மாதத்தின் இயல்புக்கு மாறான மிகையான வெயிலும் வாட்டிவதைத்தது. காலாண்டு விடுமுறை என்பதால், பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்களில் பலர் நீர்ச்சத்து இழப்புக்கும் வெப்ப மயக்கத்துக்கும் உள்ளாகினர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டாலும், அது மக்கள் வெள்ளத்தைத் தாண்டி, பாதிக்கப்பட்டவரைச் சென்றடைய வெகு நேரம் ஆனது.
- மின்சார ரயில்களும் மெட்ரோ ரயில்களும் கூட்டநெரிசலில் திணறின. ஏறக்குறைய 150 பேர் முதலுதவி பெற்றனர். ஐந்து பேர் உயிரிழந்தனர். இவை நெரிசல் காரணமாக நேர்ந்த இறப்புகள் அல்ல எனினும், சரியான திட்டமிடல் இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை நிச்சயம் தடுத்திருக்கலாம்.
- தமிழக அரசு இந்நிகழ்வுக்காக விமானப் படைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். தமிழக அரசு போதுமான எண்ணிக்கையில் காவல் துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியதையும் மறுக்க முடியாது. எனினும், நண்பகல் நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடும்போது, குறிப்பாக, ஊமை வெயில் அடிக்கும் சூழலில் நிகழ்வு நடக்கும்போது போதுமான மருத்துவ உதவி மையங்கள் ஏன் அமைக்கப்படவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
- கடந்த கோடைக்காலம் வெப்ப மிகுதியால் அதிக இறப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். வெப்பத்தோடு காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் ஈரக்குமிழ் வெப்பநிலை குறித்து சூழலியலாளர்கள் எச்சரித்துவருகிறார்கள். இதை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
- கடற்கரையில் ஆங்காங்கே தற்காலிகத் தண்ணீர்ப் பந்தல் அமைத்து இலவசக் குடிநீருக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தாலே மயக்கம், நீரிழப்பு போன்றவை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும். காவல் துறை, மாநகராட்சி, போக்குவரத்துத் துறை போன்றவை ஒருங்கிணைந்து செயல்படத் தவறிவிட்டனவோ என்கிற ஐயமும் மக்களுக்கு எழுகிறது.
- நிகழ்வுக்கான தேதியை விமானப் படை முன்கூட்டியே நிச்சயித்திருந்தாலும், அக்டோபருக்குத் தொடர்பே இல்லாத வானிலை நிலவும்போது நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கலாம்; மாநில அரசுக்கும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம்.
- இதுபோன்ற சூழல்களில் மக்கள் தரப்பில் இருக்க வேண்டிய தன்பொறுப்பு குறித்தும் பேச வேண்டியது அவசியம். கட்டுக்கடங்காத கூட்டம் திரளும் சூழலையும் உக்கிரமான வானிலையையும் உணர்ந்து, மக்கள் கூடுதல் ஏற்பாடுகளுடன் வந்திருக்கலாம்; இத்தகைய நிகழ்ச்சிகளின்போது அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட பொது இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் காணாமல் போய்விடுவதன் பாதிப்பையும் மக்களே அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
- உயிரிழந்தோரின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணமாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இனிவரும் காலத்தில், மக்கள் கூடல்களில் இத்தகைய குறைபாடுகள் களையப்படுவதில் அனைவரும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 10 – 2024)