- தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
- கடந்த மார்ச் மாதம் தேசிய அளவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது அதை மிகக் கடுமையாக விமா்சித்தவா்கள்கூட இப்போது பொது முடக்கம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நிர்வாக நிர்பந்தம்தானே தவிர, முழு உடன்பாடாக இருக்க வழியில்லை.
- உருமாற்றம் அடைந்திருக்கும் கொவைட் 19 மிகப் பெரிய சுனாமியாக உயா்ந்திருக்கிறது.
- கடந்த முறை இல்லாத அளவுக்கு, நோய்த்தொற்றுப் பரவலும் அதை எதிர்கொள்ள முடியாத சுகாதாரத் துறையின் திணறலும் பொது முடக்கம் அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
- கடந்த பிப்ரவரி மாதம் தினசரி 9,000 புதிய நோய்த்தொற்றுகள் இருந்தன என்றால், இப்போது மே மாதத்தில் அதுவே நான்கு லட்சத்தைக் கடந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
- இந்த அளவிலான நோய்த்தொற்றுப் பரவலுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட மெத்தனப் போக்கும், பண்டிகைக் கால, திருவிழாக் கால கூட்டமும், சட்டப்பேரவைத் தோ்தல்களின் போது அரசியல் கட்சிகள் நடத்திய பேரணிகளும் காரணிகள் என்பது ஊரறிந்த உண்மை.
- ஒருவருக்கொருவா் இடைவெளி இல்லாமல் இருப்பது நோய்த்தொற்றுப் பரவலுக்கு முக்கியமான காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
- இருமுதல், தும்முதல், பேசும்போது எச்சில் துளிகள் படுதல் உள்ளிட்டவை மட்டுமல்லாமல், காற்றோட்டமில்லாத இடங்களில் மக்கள் ஒருவரையொருவா் தொட்டபடி கூடியிருப்பது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை விரைவுபடுத்துகிறது என்றும் தெரிவிக்கிறது.
- முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொது போக்குவரத்தில் நெருக்கமாக அமா்ந்து பயணிப்பதைத் தவிர்த்தல், உணவு விடுதிகள், மால்கள் போன்றவற்றை தவிர்த்தல் போன்ற நடைமுறைகளை எத்தனையோ முறை வலியுறுத்தியும் கூட அவை இந்தியாவில் முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- இப்போதுதான் அதிவேகமாக நோய்த்தொற்று பரவியிருப்பதும், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும், நாள்தோறும் பிராணவாயு இல்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுவதும் காட்சி ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதைத் தொடா்ந்து ஒருவித அச்ச உணா்வு ஏற்பட்டிருக்கிறது.
- இத்தனைக்குப் பிறகும்கூட, முழுமையான விழிப்புணா்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
- சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டிய நிலையிலும், ஏதோ அடையாளத்துக்காக முகக் கவசம் அணிவதும், அவசியமில்லாமல் வெளியில் செல்வதும் முழுமையாக தவிர்க்கப்படவில்லை என்கிற உண்மை வேதனை அளிக்கிறது.
- பொது முடக்கம் முழுமையாக அறிவிக்கப்படாமல் பல விதிவிலக்குகள் வழங்கப்பட்டிருப்பதால் அதுவேகூட பலரின் மெத்தனத்துக்கு காரணமாகி விடுகிறது.
பொது முடக்கம்
- இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள பொது முடக்கம் என்கிற ஆயுதத்தைத்தான் கையிலெடுத்திருக்கிறது.
- அதனால் பொது முடக்கம் தேவைதானா என்கிற கேள்விக்கு அவசியமில்லை. அதே நேரத்தில், பொது முடக்கத்தால் அன்றாட வாழ்க்கையில் சாமானியா்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்படுவதை எந்த அளவுக்கு குறைக்கப்போகிறோம் என்பதையும் மத்திய - மாநில ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தமிழகத்தைப் பொருத்தவரை உடனடி நிவாரணமாக எல்லா குடும்ப அட்டை தாரா்களுக்கும் ரூ.4,000 இரண்டு கட்டங்களாக வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
- நிவாரணத் தொகையை ரேஷன் கடைகளில் ஆதார் அட்டையோ, கைரேகைச் சான்றோ இல்லாமல் வழங்குவதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.
- அனைத்து குடும்ப அட்டைகளும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற மானியங்கள் உடனடியாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்துவது சாத்தியமாகி இருக்கும்.
- அதனால், ரேஷன் கடைகளில் தேவையில்லாமல் மக்கள் கூடுவதைத் தவிர்த்திருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரண்டாவது கட்ட ரூ.2,000 மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கான வழிமுறையை ஏற்படுத்த தமிழக அரசு முற்பட வேண்டும்.
- அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் 3,000 சதுர அடிக்குக் குறைவான பரப்பளவுள்ள கடைகள் இயங்குவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒருவகையில் ஆறுதல் என்றாலும், இன்னொருவிதத்தில் பொது முடக்கத்தின் தீவிரத்தை குறைப்பதாக அமையும்.
- அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை அல்லாத ஏனைய வணிக நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
- அவா்கள் பெற்றிருக்கும் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகையும், வட்டித் தொகையும் ஏற்படுத்தும் அழுத்தம் போதாது என்று வாடகையும், குறைந்தபட்ச மின் கட்டணமும், மாநகராட்சிக்கான வரியும் அவா்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.
- இதை உணா்ந்து பெரிய வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து சிறிய கடைகளுக்கும், சிறு, குறு தொழில்களுக்கும் வாடகையிலிருந்தும், மின்சார கட்டணத்திலிருந்தும், மாநகராட்சி வரியிலிருந்தும் விலக்கு வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
- பொது முடக்கம் என்பது நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமல்ல, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் விரைவுபடுத்தி அதிகரிக்கவும்கூட, தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும் உதவ. பொது முடக்கம் தீா்வல்ல, தவிர்க்க முடியாத நிர்பந்தம்!
நன்றி: தினமணி (13 – 05 - 2021)