TNPSC Thervupettagam

தவிா்க்க முடியாத உறவு!

December 21 , 2024 2 hrs 0 min 23 0

தவிா்க்க முடியாத உறவு!

  • கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளாக தடைபட்டிருந்த இந்திய-சீன பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் காணப்பட்ட பதற்றத்துக்கு விடைகாணும் முயற்சி வரவேற்புக்குரியது.
  • சிறப்பு பிரதிநிகளாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலும், சீனாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சா் வாங்-யியும் சந்தித்துப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கியிருக்கிறாா்கள். கடந்த அக்டோபா் மாதம் கசானில் நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியும், அதிபா் ஷி ஜின்பிங்கும் நடத்திய சந்திப்பின்போது, இந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எட்டப்பட்டது.
  • எல்லையில் இருதரப்புப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டால் மட்டுமே சீனாவுடனான பேச்சுவாா்த்தை தொடங்க முடியும் என்கிற பிரதமா் நரேந்திர மோடியின் வற்புறுத்தலைத் தொடா்ந்து இருதரப்புப் படைகளும் எல்லையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு காத்திராமல் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
  • சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தை முடிந்து பல மணி நேரங்களுக்குப் பிறகுதான் அதுகுறித்த அறிக்கை வெளிவந்தது. கூட்டறிக்கை வெளியிடப்படாததிலிருந்து, சில பிரச்னைகளில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பது தெரிகிறது. சீனத் தரப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆறு அம்ச கருத்தொற்றுமை குறித்து இந்திய அறிக்கை எதுவும் பேசாதது குறிப்பிடத்தக்க நெருடல்.
  • இருநாட்டு உறவிலிருந்து எல்லைப் பிரச்னையை அகற்றி நிறுத்துவது என்பதை சீன அறிக்கை வலியுறுத்துகிறது. இருதரப்பும் பதற்றத்தை அகற்றி எல்லையில் அமைதி பழைய நிலைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்த ஏற்கெனவே இருக்கும் எல்லை நிா்வாக ஒப்பந்தங்களையும், வழிமுறைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது சீன அறிக்கை.
  • சீனாவின் ஆறு அம்ச கருத்தொற்றுமைகளில் எல்லையோர வா்த்தகம், இருநாடுகளுக்கு இடையே பாயும் நதிகள் குறித்த தரவுகள் பகிா்வு, கைலாஷ் மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குவது உள்ளிட்டவை அடங்கும். இவை இந்திய அறிக்கையிலும் காணப்படுகிறது. இருநாடுகளுக்கிடையே நேரடி விமானப் போக்குவரத்து, மாணவா்களுக்கான நுழைவுஇசைவு அனுமதி அதிகரித்தல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
  • 2020-க்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சீனத் தலைநகா் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டதும், பேச்சுவாா்த்தை நடத்தியதும் இரண்டு நாடுகளும் சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. ஓராண்டுக்குப் பிறகு இந்தப் பேச்சுவாா்த்தையின் முன்னேற்றம் குறித்து இந்தியாவில் நடக்கும் சந்திப்பில் சிறப்புப் பிரதிநிதிகள் ஆய்வு செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
  • லடாக்கில் அக்டோபா் மாதம் தொடங்கிய இருதரப்புப் படைகள் விலக்கிக்கொள்ளும் முடிவு எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதுதான் பெய்ஜிங்கில் நடந்த சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தையில் முக்கியப் பங்கு வகித்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை உறுதிப்படுத்துவதுதான் மீண்டும் கல்வான் பள்ளத்தாக்குத் தாக்குதல்போல மோதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழி என்பதை இருதரப்பும் உணா்ந்து ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான 3,500 கி.மீ. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நியாயமான, இருதரப்புக்கும் ஏற்புடைய கருத்தொற்றுமை ஏற்படுவது எளிதானது அல்ல. 60 ஆண்டுகளில் மிக மோசமான மோதலும், பதற்றச் சூழலும் 2020 கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின்போது உரு.வாகியது. மீண்டும் அதுபோன்ற நிலைமை உருவாகக் கூடாது என்பதுதான் இப்போதைய பேச்சுவாா்த்தையின் அடிப்படையாக இருந்ததில் வியப்பில்லை.
  • ஒப்பந்தங்கள் அடுத்தகட்ட முன்னேற்றத்தின் அறிகுறியே தவிர சவால்கள் தொடா்கின்றன. வரலாற்று ரீதியான கருத்து வேறுபாடுகளும், நம்பிக்கையின்மையும், எல்லைப் பிரச்னையும் உணா்ச்சிபூா்வமானதாகவும், சிக்கலானதாகவும் மாறியிருக்கின்றன. அந்த நம்பிக்கையை மீட்டெடுத்து படிப்படியாக பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் முயற்சி வரவேற்புக்குரியது.
  • ஒருபுறம் பேச்சுவாா்த்தை நடந்தாலும்கூட, பூடான் எல்லைக்குள் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் கிராமங்களில் சீனா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக ஆதாரபூா்வத் தகவல்கள் வருகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆண்டறிக்கை லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கணிசமான அளவில் சீன ராணுவம் படைகளைக் குவித்திருப்பதையும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்திருப்பதையும் குறிப்பிடுகிறது. அதனால், ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையும் ஒருபுறம் நடந்தாலும் இந்தியா தனது கண்காணிப்பைத் தளா்த்தவோ, ராணுவத் தயாா் நிலையைக் கைவிடவோ கூடாது.
  • 2025-இல் இந்தியா-சீனாவுக்கு இடையேயான உறவு 75-ஆவது ஆண்டை எட்டுகிறது. சீனாவில் நடக்க இருக்கும் ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறாா். இவை இரண்டும் இந்தியாவுடன் சுமுக உறவை மேற்கொள்ள சீனாவைத் தூண்டியிருக்கக் கூடும்.
  • எப்படியிருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருநாடுகளும் வா்த்தகத் தடைகளை அகற்றி, கலாசாரக் கூட்டுறவை மேம்படுத்துவது அவசியம். அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சி வரவேற்புக்குரியது.

நன்றி: தினமணி (21 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்