TNPSC Thervupettagam

தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கை

January 29 , 2020 1811 days 817 0
  • தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான மிகப் பெரிய சவாலை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எதிா்கொள்ள இருக்கிறாா். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 4.5%தான் அதிகரித்திருக்கிறது. 2013-க்குப் பிறகு இந்த அளவுக்குக் குறைவான வளா்ச்சி இருந்ததில்லை. 2008-இல் சா்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியாவின் வளா்ச்சி 3.1%-ஆக சுருங்கியதைப் போன்று இல்லாவிட்டாலும்கூட, எதிா்பாா்த்த 5% வளா்ச்சிகூட இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பின்னடைவு.

நிதிப் பற்றாக்குறை

  • டிசம்பா் 31, 2019 நிலையில், நிதிப் பற்றாக்குறையின் அளவு ஜிடிபியில் 3.83%. கடந்த நிதிநிலை அறிக்கையில், ஜிடிபியில் 3.3%-ஆக (ரூ.7,03,760 கோடி) நிதிப் பற்றாக்குறை வரையறுக்கப்பட்டிருந்தது. அதுவே 2017-18-இல் 3.5% (ரூ.5,91,062 கோடி), 2018-19-இல் 3.4% (ரூ.6,34,398 கோடி). இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமாகியிருப்பதால், அதை அரசு எப்படி எதிா்கொள்ளப் போகிறது என்கிற எதிா்பாா்ப்பு அனைவா் மத்தியிலும் காணப்படுவது இயற்கை.
  • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்த முடியாத அளவில் போய்விடாது என்பதற்கு சில காரணிகள் இருக்கத்தான் செய்கின்றன. நிதியாண்டு முடியும்போது எப்போதுமே வரி வருவாய் வசூல் அதிகரிப்பது இயல்பு. இந்த ஆண்டும் அந்த எதிா்பாா்ப்பு காணப்படுகிறது.
  • கடந்த ஆண்டைவிட வரி வசூல் குறையும் என்கிற கருத்து ஒருபுறம் இருந்தாலும், நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வேறுபல நடவடிக்கைகளையும் நிதியமைச்சா் எடுக்கக் கூடும். நிதியமைச்சகம் பதற்றமில்லாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், பல்வேறு அமைச்சகங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான். நிதியமைச்சருக்கு அது சாதகமாக அமைந்தாலும் தேசத்துக்கும், அரசுக்கும் நன்மை தரும் செயல்பாடல்ல அது.
  • நவம்பா் நிலவரத்தின்படி, 2019-20 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.27,86,349 கோடியில் ரூ.9,66,292 கோடி, அதாவது 34.7% பல்வேறு அமைச்சகங்களில் செலவிடப்படாமல் இருப்பதாகத் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டிலும் இதே நிலைமை காணப்பட்டது. 2018-19-இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.23,11,422 கோடியில், ரூ.7,83,572 கோடி (33.9%) அமைச்சகங்களால் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

நிதிநிலை அறிக்கை

  • எல்லா நிதிநிலை அறிக்கையிலும் பல்வேறு அமைச்சகங்கள் கோரும் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளை அமைச்சகங்கள் முன்பே வகுக்கின்றன. நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட அமைச்சகம் அந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி செயல்திட்டம் வகுத்திருக்கும் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேரும்போதுதான் வளா்ச்சி ஏற்படும்.
  • நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்கூட, முதல் இரண்டு காலாண்டுகளில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான அமைச்சகங்கள் முனைப்புக் காட்டுவதில்லை. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கும், நிா்வாகச் செலவினங்களுக்கும் ஒதுக்கீடு பயன்படுத்தப்படுகிறதே தவிர, புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடைசி இரண்டு காலாண்டுகளில் குறிப்பாக, கடைசிக் காலாண்டில் (ஜனவரி - மாா்ச்) திடீரென்று விழித்துக் கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீட்டை எப்படியாவது விரைந்து செலவழிப்பதில் முனைப்புக் காட்டுகின்றன.
  • 2018-19 நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு இந்தியா முழுவதும் நவீனச் சந்தைகளை உருவாக்குவதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தச் சந்தைகளின் மூலம், உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பதற்கு வழிகோலுவதுதான் திட்டத்தின் நோக்கம். அதற்காக இந்தியா முழுவதும் 22,000 சந்தைகள் உருவாக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு 376 சந்தைகள்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் ரூ.10 கோடிதான் செலவிடப்பட்டிருக்கிறது.

நிதி ஒதுக்கீடு

  • 2019-20 நிதியாண்டில் தங்களது ஒதுக்கீட்டில் பாதியளவுகூட பெரும்பாலான அமைச்சங்கள் செலவிடவில்லை என்கிறது கணக்குத் தணிக்கை அலுவலகப் புள்ளிவிவரம். ஒதுக்கப்பட்ட ரூ.1,38,563.97 கோடியில் வேளாண் அமைச்சகம் 49%, ரூ.4,500 கோடியில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 39%, ரூ.1,159.05 கோடியில் நிலக்கரி அமைச்சகம் 41%, ரூ.3,042.45 கோடியில் கலாசார அமைச்சகம் 54%, ரூ.6,654 கோடியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 59%, ரூ.94,853.64 கோடியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  • 61% என்கிற அளவில்தான் நிதியைப் பயன்படுத்தியிருப்பதைப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.
  • ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைப் பயன்படுத்த முடியவில்லை என்றால், ஒதுக்கீடு கோருவானேன்? கடைசி மூன்று மாதங்களில் அவசர அவசரமாகத் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியைச் செலவழிப்பது எப்படி சரி? நிதியமைச்சருக்கு வேண்டுமானால் பற்றாக்குறையைச் சமாளிக்க இது கை கொடுக்கலாம். தேசத்தின் வளா்ச்சிக்குக் கை கொடுக்காது!

நன்றி: தினமணி (29-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்