TNPSC Thervupettagam

தாமரைப் பூ தின்னும் ஆண்கள்!

September 15 , 2024 73 days 81 0

தாமரைப் பூ தின்னும் ஆண்கள்!

  • அள்ளூர் நன்முல்லையார் கவிதைகள், செளந்தர்யம் மிக்கவை. தமிழ் நிலமும் காட்சிகளுமாகச் சித்திரங்களாக எழுந்து வருபவை. அள்ளூர் நன்முல்லையார், பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். இவரது குறுந்தொகைக் கவிதைகள் பிரபலமானவை. அகநானூறு, புறநானூறு ஆகிய தொகுப்புகளில் முறையே ஒரு கவிதை எழுதியிருக்கிறார். குறுந்தொகையில் ஒன்பது கவிதைகள் என இவரது பங்களிப்பு 11 கவிதைகளாகும்.

இரு வேறு ஊர்கள்

  • இவரது அகநானூற்றுப் பாடல் (46), ஆண் மனமும் பெண் மனமும் திருத்தமாகத் தொழிற்பட்டிருக்கும். ‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்/ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து/கூர்முள் வேலி கோட்டின் நீக்கி/நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய/அம்தும்பு வள்ளை மயக்கித் தாமரை/வண்டுது பனிமலர் ஆரும் ஊர’ எனச் செல்லும் கவிதை முழுவதும் ஓர் உருவகமாகத் தலைவியின் உணர்வைச் சொல்கிறது. தொழுவத்தில் சேற்றில் இருப்பதை வெறுக்கும் செந்நிறம் கொண்ட கண்களை உடைய எருமை, ஊர் உறங்கும் வேளையில் கட்டிவைக்கப்பட்ட கயிற்றை அறுத்துகொண்டு தன் கொம்பால் வேலியை முட்டிச் சாய்த்துவிட்டுக் குளத்தில் இறங்குகிறது. குளத்தில் மீன்கள் எல்லாம் எருமையின் இந்தத் திடீர்ப் பாய்ச்சலால் வெருண்டோடுகின்றன. எருமையின் மூர்க் கத்தால் வள்ளைக்கொடி சிதைகிறது. எருமை, வண்டுகள் ரீங்கரிக்கும் தாமரையை உண்கிறது. இப்படியான ஊர்க்காரன் நீ என்கிறாள் தலைவி.

ஆணின் மூர்க்கம், பெண்ணின் பொறுமை

  • இரண்டாம் பகுதியில் அவளது ஊரைப் பற்றிச் சொல்கிறாள். கொற்றச்செழியன் என்கிற மன்னனைப் பற்றி விவரிக்கிறாள். ‘யானைப் படையை வாள் படையால் வென்ற மன்னனின் ஊர் என் ஊர்’ என்கிறாள். என் காதலால் உடல் மெலிந்து எங்கள் ஊரின் நெல் மணியைப் போன்ற என் வளையல் கழன்று விழுந்தாலும் பரவாயில்லை. உனக்கென்ன உன்பாட்டில் நீ இரு, என்பதை அந்தக் கவிதை உணர்த்துகிறது. இதில் வெளிப்படையாக என் ஊர், உன் ஊர் எனச் சொன்னாலும் ஆணின் ஊர், பெண்ணின் ஊர் என இவற்றைக் கருதலாம். ஆணின் பொறுமையின்மை, பரபரப்பு, நள்ளிரவுப் பசி என எல்லா உணர்வுகளும் எருமையின் மூர்க்கத்தின் வழி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதை ஆணின் ஊர் எனலாம். நெறி, காதல் எல்லாம் பெண்ணின் ஊரின் இயல்புகளாகச் சித்தரிக்கப்பட்டிருக் கின்றன. யானை போன்ற உணர்வுகளையும் வென்றுவிடக் கூடியதாக இருக்கிறது அவளது ஊரின் திறம். ஆணும் பெண்ணும் இரு வேறு ஊர்கள் எனச் சொல்லும் போது அவர்கள் மன அமைப்பு எப்படி ஒன்றுக்கு மற்றொன்று வேறுபட்டது என்பதைக் கவிஞர் இந்தக் கவிதையில் உணர்த்துகிறார் எனப் புரிந்துகொள்ளலாம்.
  • தலைவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதும் இந்தக் கவிதையில் சொல்லப் பட்டுள்ளது. அதனால், தலைவிக்குத் தோன்றும் எதிர்ப்புணர்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவியும் தலைவனைப் பிரிந்து இருக்கிறாள் என்பதை அவளது கைகள் சிறுத்து வளையல் கீழே விழும் அளவுக்கு மெலிந்துபோகிறாள் என்கிற வரி உணர்த்துகிறது.
  • இந்தக் கவிதையில் தலைவன் வேறு துணை தேடுவதற்கான முகாந்திரம் விவரிக்கப்படவில்லை. ‘சேற்றில் நிற்கும் எருமை’ என்கிற சித்திரத்தின் வழி நாம் உணர்ந்துகொள்ள முடியும். அவள் குழந்தைப்பேறு முடிவடைந் திருக்கலாம் என ஊகிக்கலாம். தலைவன் தன் உடல் தேவைக்காக வேறு பெண்ணை நாடியிருக்கலாம். இதனால், இகழ்வதற்குப் பதிலாகப் புகழ்வது போன்ற பாவனை இந்தக் கவிதையில் வெளிப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைய முயலும் தலைவனை மறித்து உரைக்கும் தொனியை இந்தக் கவிதையில் காண முடிகிறது.

மடலேறுதல் என்னும் மிரட்டல்

  • குறுந்தொகைக் கவிதையும் இதுபோல் ஆண்-பெண் உறவுச் சிக்கலையே பேசுகிறது. ‘காலையும் பகலும் கையறு மாலையும்/ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இப்/பொழுது இடை தெரியின், பொய்யே காமம்/மா என மடலொடு மறுகில் தோன்றித்/தெற்றெனத் தூற்றலும் பழியே/வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே’ என்கிற கவிதை ஆணின் நிலையில் நின்று காதலின் உன்மத்தத்தைச் சொல்கிறது. காதலில் ஆண் படும் பாடு பரிதாபகரமானது. ஒருநாளின் எல்லாப் பொழுதிலும் அவனுக்குக் காதல் உணர்வு வருகிறது. காதல் உணர்வு ஒரு பொழுதுதான் என்று இல்லை. அப்படி வருவது காதலே இல்லை என இவன் சமாதானப்பட்டுக்கொள்கிறான். தனக்கு நியாயம் கற்பித்துக்கொள்கிறான். தலைவி இணங்காதது பற்றி வேறு ஒருவரிடம் கூறுவதுபோல் இந்தக் கவிதை உள்ளது. தோழியிடம் கூறுவதாக இருக்கலாம். இப்படி அவள் வராதிருந்தால் நான் மடலேறுவேன்; அதனால், அவளுக் குப் பழி வரும் என்கிறான். சங்க காலத்தில் ‘மடலேறுதல்’ என்கிற வழக்கம் இருந்தது. பனை மடலால் செய்யப்பட்ட குதிரையின் மீதேறி, தலைவியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தலைவன் செல்வான். இப்படிச் சொன்ன பிறகு அவளுக்கு அவப்பெயர் வரும். இது ஒருவிதமான மிரட்டல்தான். ‘இப்படி ஊரார் அறிந்தால் நம் காதலைக் குறை கூறு வர். அதனால், அவளுக்கும் எனக்கும் பழி வரும்’ என்கிறான். எப்படியாவது தலைவியைச் சம்மதிக்கவைக்க வேண்டும் என்கிற பெரும் புலம்பல் இந்தக் கவிதையில் வெளிப்பட்டுள்ளது. ஆணின் புலம்பலும் மிரட்டலும் காலங்காலமாகத் தொடர்வதையும் இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.
  • இன்னொரு குறுந்தொகைக் கவிதையில் புலம்பெயர்ந்து சென்ற கணவன் வேப்பம்பழத்தைப் பார்த்தால் தன் நினைவு வருமா எனத் தோழியிடம் கேட்கிறாள். வேப்பம்பழம் அவளது தாலியைப் போல் இருக்குமாம். புறநானூறில் ஒரு கவிதை வழக்கமான போர் அறத்தை ஒரு தாயின் பக்கம் நின்று பேசுகிறது. நன்முல்லையார் பெரும்பாலும் ஆண்-பெண் உறவு நிலையைத்து வைத்துத்தான் கவிதைகளை எழுதியிருக்கிறார் என வரையறுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்