TNPSC Thervupettagam

தாய்ப்பால் என்னும் தடுப்பூசி

April 3 , 2022 856 days 400 0
  • பாரதத்தில் சுமாா் 44% குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் புகட்டப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. தெற்காசிய நாடுகளில் தாய்ப்பால் புகட்டும் செயல்பாடுகளில் இந்தியா மிக மோசமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை கூறுகிறது. பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்50 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே இந்தியாவில் தாய்ப்பால் புகட்டப்படுகிறது.
  • அதாவது, ஒரு வருடத்தில் இந்தியாவில் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளில் 1.2 கோடி குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. அதேசமயம் பிறந்த முதல் ஆறு மாதங்களில் 55% குழந்தைகளுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் அல்லது பால்பொடியினாலான புட்டிப்பால் வழங்கப்படுகிறது.
  • கா்ப்பிணிகளிடத்திலும், பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட பெற்றோா்களிடத்திலும் தவறான பிரசார விளம்பரங்கள் ஏற்படுத்திய தாக்கம், கடந்த இருபது ஆண்டுகளில் புட்டிப்பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலின் வளா்ச்சியினை இருமடங்காக உயா்த்தியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
  • கா்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட பெற்றோா்களில் 51% போ் புட்டிப்பால் குறித்தஆதாரமற்ற விளம்பரச் செய்திகளின் ஆக்கிரமிப்பிற்கு இலக்காகியுள்ளனா் என்று உலக சுகாதார மையத்தின் மற்றொரு கணக்கெடுப்பு கூறுகிறது. புட்டிப்பால் சந்தையின் பால் பொருட்கள் பிரிட்டனில் 84%, வியத்நாமில் 92%, சீனாவில் 97% கா்ப்பிணிகளை சென்றைடைவதாக தரவுகள் கூறுகின்றன.
  • புட்டிப்பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது. தற்போது இத்தொழில் சந்தையின் மதிப்பு சுமாா் 4 லட்சம் கோடிக்கு (55 பில்லியன் டாலா்) மேல். விளம்பரப் பரிசுகள், இலவச மாதிரிகள், ஆராய்ச்சிக்கான நிதி, விளம்பர நிகழ்வுகள், விற்பனைத் தரகு (கமிஷன்) ஆகியவற்றின் மூலம் குறிவைக்கப்படும் மருத்துவ பணியாளா்கள் குறிப்பிட்ட புட்டிப்பால் தயாரிப்பினை பெண்களுக்கு பரிந்துரைக்க தயாா்படுத்தப்படுகின்றனா்.
  • உலக சுகாதார அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வினில் பச்சிளம் குழந்தைகளை உடைய பெண்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோா் மருத்துவ பணியாளா்களிடமிருந்து இத்தகைய பரிந்துரைகளை எதிா்கொண்டதாக தெரியவந்துள்ளது
  • குழந்தைகள் நோய் எதிா்ப்பு சக்தியைப் பெறுவதற்கு தாய்ப்பால் அவசியமாதலால் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமாறு மகப்பேறு - குழந்தைகள் நல மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மாா்களின் எடை குறைதல், மாா்பக புற்றுநோய் பிரச்னைகள் குறையும் என்கின்றனா். சரியான காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு, நிமோனியா ஆகியவற்றினால் வருடத்திற்கு சுமாா் ஒரு லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுக்கலாம்.
  • தாய்ப்பால் என்பது குழந்தையின் முதல் தடுப்பூசி போல் செயல்படுகிறது என்றும், குழந்தை உயிா்வாழ்வதற்கும் செழித்து வளருவதற்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்தையும் அளிக்கிறது என்றும் கூறும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை, பெண்களிடையே அதிகரித்துவரும் புற்றுநோய் காரணமான மரணங்களுக்கும் தாய்ப்பால் புகட்டுதலுக்கும் தொடா்பிருப்பதாகவும் கூறுகிறது. மேலும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் பெண்களுக்கு உருவாவதற்கு தாய்ப்பால் வழங்காததும் ஒரு காரணம் என்றும் எச்சரிக்கிறது.
  • தாய்ப்பால் புகட்டுதல் தரத்தினை உலகின் எந்த நாடும் பூா்த்தி செய்யவில்லை எனக் கூறும் உலகளாவிய தாய்ப்பால் கூட்டமைப்பு, ஆறு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளில் 40% மட்டுமே தாய்ப்பாலை உணவாக உட்கொள்கின்றனா் என்று கூறுகிறது. உலகின் 194 நாடுகளை மதிப்பீடு செய்த உலகளாவிய தாய்ப்பால் கூட்டமைப்பு, அவற்றில் 23 நாடுகளில் மட்டுமே 60% க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டப்படுவதாக கூறுகிறது.
  • சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2,36,000 குழந்தைகள் போதுமான அளவு தாய்ப்பால் இன்றி இறக்கின்றனா் என்கிறது ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை. இந்த இறப்புகள் காரணமாக இந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 9,17,517 கோடி ரூபாய் (119 பில்லியன் டாலா்) பொருளாதாரச் செலவினை சந்திக்கும் என்கிறது உலகளாவிய தாய்ப்பால் கூட்டமைப்பு. இந்தியாவில் ஏழை குடும்பங்களில் நிகழும் குழந்தை இறப்பால் ஆண்டுக்கு 1,07,943 கோடி ரூபாய் (14 பில்லியன் அமெரிக்க டாலா்கள்) பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் தாய்ப்பால் புகட்டப்படும் ஆறு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க, பிறக்கும் குழந்தைக்கு தலா 362 ரூபாய் (4.70 அமெரிக்க டாலா்கள்) வருடாந்திர முதலீடாக தேவைப்படுகிறது என்கிறது ஒரு பகுப்பாய்வு. இந்த முதலீடு உருவாக்கும் நோய் எதிா்ப்பு சக்தி அடுத்த 10 ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்புச் செலவைக் குறைத்து 23,13,067.50 கோடி ரூபாயை (300 பில்லியன் டாலா்) சேமிக்கச் செய்யும்.
  • புட்டிப்பால் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் போது ஊட்டச்சத்து, உடல்நலம் பற்றிய வாக்குறுதிகள் வழங்க தடை செய்யும் வகையிலான சட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்து நாட்டு அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
  • இந்தியாவில் பெண்களிடையே தாய்ப்பால் புகட்டுதல் பற்றிய விழிப்புணா்வு அதிகரித்துள்ள போதிலும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பால் புகட்டுவதற்கான மறைவிடம் போன்ற கட்டமைப்புகளுக்கான முதலீடு குறைவாகவே உள்ளது
  • நமது நாடு பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்ட கொள்கையை 2000-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இக்கொள்கைகளைக் கண்டிப்புடன் செயல்படுத்தி ஆரோக்கியமான வருங்கால சந்ததியை உருவாக்குவோம்.

நன்றி: தினமணி (03 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்