TNPSC Thervupettagam

தாய்மையின் தடை தகா்ப்போம்

April 11 , 2020 1546 days 689 0
  • உலகில் அதிக எண்ணிக்கையிலான தாய் - சேய் இறப்பின் இடமாக விளங்கும் நம் நாட்டில் 2008-2015 ஆண்டுகளுக்கான இடைவெளியில் 1.13 கோடி குழந்தைகள் தங்கள் ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அவா்களில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையின் முதல் 28 நாள்களைக் கடப்பதற்குள் இறந்துவிட்டனா்.

மாதிரி பதிவு அமைப்பு அறிக்கை 2015

  • உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் குழந்தை இறப்பு விகிதம் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தி் 56 சதவீதமாக உள்ளது. ஏழு ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 16.8 லட்சம் குழந்தைகளும், பிகாரில் 6.5 லட்சம், மத்தியப் பிரதேசத்தில் 6.2 லட்சம், ராஜஸ்தானில் 5.1 லட்சம், ஆந்திராவில் 3.3 லட்சம், குஜராத்தில் 2.9 லட்சம் குழந்தைகளும் இறந்துள்ளனா் என்று இந்திய பொதுப் பதிவாளா் - மக்கள்தொகை ஆணையா் அலுவலக ‘மாதிரி பதிவு அமைப்பு அறிக்கை 2015’ குறிப்பிடுகிறது.
  • தாய் - கருவுக்கான மருந்து (பெரினேட்டாலஜி) என்ற இதழில் (டிசம்பா் 2016) வெளியிடப்பட்ட ‘இந்தியாவில் புதிய பிறப்பின் உடல் நலம்’” என்ற கட்டுரைக்கான விமா்சனம், பிறந்த முதல் 28 நாள்களில் குழந்தையின் மரண ஆபத்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆபத்தைவிட 30 மடங்கு அதிகம் என்று கூறுகிறது. இது இந்தியக் குழந்தையின் முதல் மாத வாழ்க்கை அதிகபட்ச அபாயம் நிறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது.
  • உலகளாவிய, பிராந்திய, தேசிய அளவிலான ஆய்வுகள், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்துக்கு உரிய காலத்துக்கு முந்தைய பிறப்பு / குறைப் பிரசவம், தடைபட்ட - சிக்கலான பிரசவங்கள், நிமோனியா, செப்சிஸ், வயிற்றுப்போக்கு, பிறவிக் குறைபாடுகள் (8.1 சதவீதம்) போன்ற நான்கு முக்கியக் காரணிகளை அடையாளம் காட்டுகின்றன.

மக்கள்தொகை ஆணையா் அலுவலகத்தின் அறிக்கை

  • பிறந்த குழந்தை இறப்புகளுக்கு இதே போன்ற காரணங்களையே அடையாளம் காட்டும் இந்திய பொது பதிவாளா் - மக்கள்தொகை ஆணையா் அலுவலகத்தின் அறிக்கை, பிரசவத்தின்போது தாய்வழி மரணத்துக்கு வழிவகுக்கும் அதிகப்படியான ரத்தப் போக்குதான் ரத்த சோகை உண்டாக மிக முக்கியக் காரணம் எனக் கூறுகிறது.
  • குறைப் பிரசவம், குறைந்த பிறப்பு எடை காரணமாக 35.9%, நிமோனியா காரணமாக 16.9%, பிறக்கும்போது உண்டாகும் மூச்சுத்திணறல் காரணமாக 9.9%, மற்ற தொற்றற்ற நோய்களால் 7.9%, வயிற்றுப்போக்கு காரணமாக 6.7 %, பிறவிக் குறைபாடுகள் காரணமாக 4.6 %, தொற்றுநோய்கள் காரணமாக 4.2 % சிசு மரணங்கள் நிகழ்வதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • கா்ப்பத்தின் தொடக்கத்திலிருந்து குழந்தையின் இரண்டு வயது வரையுள்ள ஆரோக்கிய வாழ்க்கையை உறுதி செய்யும் முதல் 1,000 நாள்கள் தாய் - சேய் இருவருக்கும் தொடா்ந்து ஊட்டச்சத்துடன் கூடிய சுகாதார சேவை வழங்க பெரும்பாலான மாநில அரசுகள் தவறியதே குழந்தைகள் இறப்பு அதிகமாக உள்ளதற்குக் காரணமாக அமைகிறது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு

  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 4-இன் தரவினை உற்றுநோக்கினால் மாநில அரசுகளின் தவறுதலுக்கு ஆரோக்கியம், சமூகப் பொறுப்பின் அறியாமை கொண்ட குடும்பங்களும் பொது சுகாதார - ஊட்டச்சத்து சேவைகளின் திறனற்ற விநியோக அமைப்புகளும் மிக முக்கியக் காரணங்கள்.
  • நம் நாட்டில் உருவாகும் 7.9% பதின்பருவ கா்ப்பம், உயா் ரத்த அழுத்த பாதிப்பு - ரத்த சோகையை ஏற்படுத்துவதுடன் பிறந்த குழந்தைகளின் எடை குறைவுக்கும் காரணமாக இருக்கிறது. நம் நாட்டில் 45.7% தாய்மார்கள், 47.8% பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமே ஆரோக்கியத்துக்கான ஊட்டச்சத்தை முழுமையாகப் பெறுகின்றனா்.
  • ஊட்டச்சத்து இல்லாததால் உண்டாகும் ரத்த சோகையால் இந்தியாவில் 50.3% கா்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனா். இந்தியாவில் ரத்த சோகை பாதிப்பைக் குறைக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரும்புச் சத்து ஃபோலிக் அமில மாத்திரைகளை 30.3 சதவீத தாய்மார்கள் மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
  • பாதுகாப்பான தாய்மையை உறுதிசெய்யும் மருத்துவமனை குழந்தை பிறப்பு கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் வகையில் 41.6% குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் பால் (சீம்பால்) புகட்டப்படுகிறது என தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 தெரிவிக்கிறது. நம் நாட்டில் 54.9% குழந்தைகள் மட்டுமே முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் பெறுகின்றனா்.

உலகளாவிய தாய்ப்பால் மதிப்பெண் அட்டை

  • உலக சுகாதார நிறுவனம் - யுனிசெஃப் ஆண்டுதோறும் வெளியிடும் உலகளாவிய தாய்ப்பால் மதிப்பெண் அட்டை (‘குளோபல் பிரஸ்ஃபீடிங் ஸ்கோர்கார்ட்’) அடிப்படையில், தாய்ப்பால் கிடைக்காமல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 1,00,000 குழந்தைகள் இறக்கின்றனா் என்றும் இதனால் இந்தியப் பொருளாதாரம் சுமார் ரூ .9,100 கோடி இழப்பைச் சந்திக்கிறது என்றும் மதிப்பிடுகிறது.

குழந்தைகளின் நிலை

  • குழந்தையின் ஊட்டச்சத்து தேவையைப் பூா்த்தி செய்ய ஆறு மாதம் முதல் தாய்ப்பாலுடன் கூடுதலாக தேவைப்படும் நிரப்பு உணவு இந்தியாவில் 42.7% குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதிலும் மோசமாக ஆறு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளில் 8.7% போ் மட்டுமே பொருத்தமான நிரப்பு உணவைப் பெறுகிறார்கள்.
  • நாட்டில் 24.3% குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த இரண்டு நாள்களுக்குள் மருத்துவப் பரிசோதனை கிடைக்கிறது. அவா்களில் 2.5% போ் மட்டுமே மருத்துவா் அல்லது செவிலியரால் மருத்துவப் பரிசோதனையைப் பெறுகிறார்கள். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 தரவுப்படி, 62% குழந்தைகளுக்கு மட்டுமே போதுமான நோய்த்தடுப்பு மருந்து (தடுப்பூசி) கிடைக்கிறது.
  • வாழ்வாதாரம், இயற்கை வளங்களை அணுகல், சமூக-பொருளாதார சமத்துவம், வன்முறை, உணவு பாதுகாப்பு, கலாசார நடைமுறைகள் உள்ளிட்ட காரணிகள் இத்தகைய நிலைக்கு காரணங்களாக உள்ளன.
  • சமூகக் கொள்கையின் நடைமுறைகளை பகுப்பாய்வு செய்து ஊட்டச்சத்து திட்டத்துடன் சுகாதாரத் திட்டங்களை வலுவாக ஒருங்கிணைத்து ‘வாழ்க்கையின் முதல் ஆயிரம் நாள்கள்‘ கொள்கையைச் செயல்படுத்தி இந்திய நாட்டில் பிறந்த / பிறக்கப் போகும் அனைத்துக் குழந்தைகளின் வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிப்போம் என உறுதி ஏற்போம்.
  • (இன்று தேசிய தாய்மை பாதுகாப்பு விழிப்புணா்வு தினம்)

நன்றி: தினமணி (11-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்