TNPSC Thervupettagam

தாய்மொழியே தலைமை மொழி

February 27 , 2022 890 days 1040 0
  • மொழி என்பது நமது பண்பாட்டின் விழி மொழியில்லாத வாழ்க்கை வலமில்லாத வாழ்க்கை ஒரு பொருளை அறிதலுக்கும், புரிதலுக்கும், தெரிதலுக்கும், உணர்தலுக்கும், ஆராய்வதற்கும் காரணம் மொழி. நாகரிகத்தின் அடையாளமாக மொழி திகழ்கின்றது. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக் காக்கும் மொழி தாய்மொழி.
  • மனித குலத்தின் அறிவின் நீட்சி தாய்மொழியால் மட்டுமே முடியும். சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் மொழியின் உயிர்மை உள்ளது.
  • மகாத்மா காந்தி தனது வாழ்க்கை வரலாற்றை அவரது தாய்மொழியான குஜராத்தில் தான் எழுதினார். நோபல் பரிசுபெற்ற தாகூரின் கீதாஞ்சலி அவரது தாய்மொழியான வங்கமொழியில் தான் முதலில் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் தமது சிந்தனைகளைத் தங்கு தடையில்லாமல் தாய்மொழியில் மட்டுமே தர முடியும்.
  • குழந்தைகள் தமது தாய்மொழியில் தான் கல்வி கற்க வேண்டும். அதுதான் அவர்களது சிந்தனைத் திறனை வளர்க்கும்.
  • உலகத்தின் வளர்ந்த நாடுகள் தமது நாட்டுக் குழந்தைகளுக்குத் தாய்மொழி மூலம் கல்வியினை வழங்குகின்றனர். தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக உள்ளது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்தமொழியினைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான.; தாய்மொழியால் சிந்தனைப் பெருகும். மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க முடியும்.
  • பெருமை மிகுந்த தாய்மொழியைப் போற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, பண்பாடு, கலை ஆகியவற்றின் பிரிவாகச் செயல்படும் ‘யுனெஸ்கோ’ பிப்ரவரித் திங்கள் 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
  • 1947 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்கதேசம்) மேற்கு பாகிஸ்தான் (தற்போது பாகிஸ்தான்) ஆகிய இரு நாடுகள் இணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவாக்கப்பட்டது. இந்தியாவிற்கு இடையில் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் பண்பாடு மொழி போன்றவற்றில் ஒன்றுக் கொன்று வேறுபட்டது.
  • பெரும்பாலான மக்கள் வங்கமொழியைப் பேசினார்கள். 1948ம் ஆண்டு அன்றைய அரசு உருது மொழியை ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அவர்களது தாய்மொழியான
  • வங்காள மொழியைக் குறைந்தது தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென கோரினார்கள்.
  • தாக்காப் பல்கலைக் கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதரவுடன் போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு போராட்டத்தைத் தடை செய்தது.
  • 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் நடைபெற்ற பேரணியில் காவல்துறை நடத்தியத் துப்பாகிச் சூட்டில் சலாம், பர்கட் ரபீக், ஜாபர் மற்றும் சபியூர் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து அந்த நாளை வங்க நாட்டினர் துக்க நாளாகக் கருதி மாணவர்களது நினைவுவிடத்திற்குச் சென்று தங்களது நினைவு அஞ்சலியைக் செலுத்துகின்றனர்.
  • வங்காள தேசத்தில் அன்றைய நாள் தேசிய விடுமுறை நாளாகவும் உள்ளது.
  • 1998 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 9ஆம் நாள் கனடாவில் வாழ்ந்த வங்க தேசத்தைச் சார்ந்த ரபீரும் இசுலாம் என்பவர் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருக்கு உலக மொழிகளைக் காக்க வங்கத்தில் மாணவர்கள் கொல்லப்பட்ட பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி  நாளாக அறிவிக்க கடிதம் எழுதினார்.
  • அக்கோரிக்கை ஏற்கப்பட்டு உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாத்திட 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாள் என ஜக்கிய நாடுகள் கல்வி, அரசியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு உலகமெங்கும் பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய் மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை.
  • உலகத் தாய்மொழி நாளில் மூன்று நோக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. முதலில் தாய்மொழியைக் கற்க வேண்டும். அடுத்து அயல்மொழிகளைக் கற்க வேண்டும். மூன்றவதாக அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • உலக நாடுகளில் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, அரபுஎமிரேட், குவைத் முதலியவற்றிக் கல்வி, தொழில் உள்பட அனைத்து நடைமுறைகளும் அந்தந்த நாட்டு தாய்மொழியில் தான் நடக்கின்றன.
  • தாய்மொழிக்கான முதன்மையை வழங்கும் நாடுகளிலும் தாய்மொழியில் கல்வி வழங்கப்படும் நாடுகளிலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மிகுதியாக உண்டாவதாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
  • தமிழர்களின் தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பல்வேறு அறிஞர்கள் சிறப்பாக உணர்த்துள்ளனர். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் தமிழ்மொழி தலைமை மொழி என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி என்பது இன்றும் ஏக்கத்தோடு காணப்படுகின்றது.
  • தமிழ் படிக்காமல் ஒருவர் பட்டம் பயின்று விடலாம் என்ற நிலை சற்று தற்போது மாற்றப்பட்டுள்ளது மருத்துவம், பொறியியல் கல்வியையும் தமிழ்மொழியில் படிக்க இன்றும் தயக்கம் நிலவுகின்றது.
  • வங்க தேசத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் போல தமிழகத்திற்கும் 1938 ஆம் ஆண்டு முதல் இன்று வரை  தமிழைக் காக்க பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாய்மொழியாம் தமிழ்மொழியைக் கற்காமல் பல குழந்தைகள் பயின்றுவருகின்றனர். அக்குழந்தைகளின் பெற்றோர்களும் அதனைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
  • உலகத் தாய்மொழி நாள் கொண்டாடும் வேளையில் தமிழின் பெருமை உணர்ந்து தமிழ்மொழிக் கல்வியை முழு முயற்சியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
  • தாய்மொழியை நன்கு படித்து புரிந்து கொண்ட மாணவன் தான் அயல் மொழியை நன்கு புரிந்து கொள்வான். தாய் மொழிப் புலமை பெறாத மாணவன் அயல் மொழிப் புலமை பெற முடியாது என்பது மொழி வல்லுநர்களின் கருத்தாகும்.
  • மொழி என்பது தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமன்று. இனத்தின், பண்பாட்டின் அடையாளம் என்பதை உணர்ந்தாலே தாய்மொழியைக் காக்கலாம்.

நன்றி: தினமணி (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்