TNPSC Thervupettagam

தாய்மொழி நாள் உலகுக்கு உணர்த்தும் பாடம்

February 21 , 2022 896 days 419 0
  • பிப்ரவரி 21. இன்று உலகத் தாய்மொழி நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதற்கான விதை மிகச் சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய வங்கதேசத்தில் போடப் பட்டது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
  • 1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்தபோது, பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 6.9 கோடி. இதில் 4.4 கோடிப் பேர் கிழக்குப் பாகிஸ்தானில் வசித்தனர்.
  • அவர்களின் தாய்மொழி வங்காளியாக இருந்த அதேநேரத்தில், மேற்கு பாகிஸ்தானில் இருந்த மக்கள் உருது, பஞ்சாபி, பஷ்டோ, சிந்தி ஆகிய மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தனர்.
  • கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சி என காலனிய ஆட்சியின் தலைமைப் பீடமாக வங்காளம் நீண்ட காலம் இருந்துவந்த நிலையில், இயற்கையாகவே கிழக்குப் பாகிஸ்தான் பகுதி பொருளாதார உற்பத்தி மட்டுமின்றி, கல்வி உட்படப் பல்வேறு சமூகத் தளங்களிலும் மேற்கு பாகிஸ்தானை விட வெகுவாக முன்னேறிய நிலையில் இருந்தது.
  • இந்தப் பின்னணியில் 1948 பிப்ரவரி 23 அன்று கூடிய பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை, தனது உறுப்பினர்கள் உருது அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசலாம் என முடிவெடுத்தது.
  • இதை எதிர்த்த கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த உறுப்பினர் திரேந்திரநாத் தத்தா ‘வங்க மொழியையும் அதில் சேர்க்க வேண்டும்’ என்று முன்மொழிந்தார்.
  • எனினும், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், கிழக்குப் பாகிஸ்தான் முதல்வர் க்வாஜா நசிமுதீன் உள்ளிட்ட பலரின் உதவியுடன் வங்க மொழிக்கு ஆதரவான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
  • இதற்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் போர்க்கோலம் பூண்டது. 1948 மார்ச் 11-ல் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
  • மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா அரசுமுறைப் பயணமாக டாக்கா வந்து கலந்துகொண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலுமே, மக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே, ‘பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது மட்டுமே இருக்கும்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
  • இதைத் தொடர்ந்து, அரசியல் மட்டத்தில் தொடங்கிய எதிர்ப்பு மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் மத்தியிலும் வேகமாகப் பரவியது.
  • இவ்வாறு தாய்மொழியான வங்க மொழிக்கு ஆதரவாக 1948-ல் தொடங்கிய இந்த இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று 1952-ல் உச்சம் எய்தியது.
  • அந்த ஆண்டு பிப்ரவரி 21 அன்று டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஃபீக் உதீன் அகமது, அப்துல் ஜப்பார், அப்துல் பரக்கத், அப்துல் சலாம் ஆகிய மருத்துவக் கல்லூரி மாணவர்களோடு, ஒன்பது வயதேயான ரஹியுல்லா என்ற சிறுவன் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.
  • இவர்கள் உயிர்நீத்த அதே இடத்தில் பிப்ரவரி 23 அன்று தியாகிகள் நினைவுச் சின்னம் தற்காலிகமாக உருவானது.
  • அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அரசின் கடுமையான ஒடுக்குமுறைக்கு இடையே பிப்ரவரி 21ஐ மொழிப் போர் தியாகிகளின் தினமாக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கடைப்பிடித்து வந்தனர்.

தாய்மொழி எனும் சொத்து

  • மக்களின் கடுமையான எதிர்ப்பினை அடுத்து 1956 பிப்ரவரி 16 அன்று பாகிஸ்தானின் அரசு மொழிகளில் ஒன்றாக வங்க மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • எனினும், மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்க உணர்வு மங்கிவிடவில்லை. பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை ஒடுக்கவும், மதரீதியாக அவர்களைப் பிளவுபடுத்தவுமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன.
  • கிழக்கு பாகிஸ்தான் மீதான, தொடர்ச்சியான புறக்கணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த அவாமி லீக் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், அகர்தலா சதிவழக்கில் கைது செய்யப்பட்டு மேற்கு பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டார்.
  • 1970 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தான் பகுதியின் மொத்தமுள்ள 169 இடங்களில் 167 இடங்களை அவாமி லீக் கட்சி கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், ‘‘தாங்கள் ஆட்சியமைக்க வழிவிட வேண்டும்; புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்” என்ற முஜிபுர் ரஹ்மானின் கோரிக்கையை பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் மக்கள் கட்சி (தலைமை: பூட்டோ) ஆகியவை கடுமையாக எதிர்த்தன.
  • இவ்வாறு தாய்மொழிக்காகத் தொடங்கிய போராட்டம் படிப்படியாக அரசியல்ரீதியாக வலுப்பெற்று, விடுதலைப் போராக உருமாறியது.
  • இப்போரின்போது கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்கி ஒடுக்க பாகிஸ்தான் ராணுவப் படைகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வெறியாட்டத்தில் 30 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; 3 லட்சம் பெண்கள் மிகக் கொடூரமான வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயினர்.
  • கிழக்கு பாகிஸ்தானில் காலம்காலமாக இருந்து வந்த கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டன.
  • ஒருவகையில், இதை இன ஒழிப்பு நடவடிக்கை என்றே கூறிவிடலாம். வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் ஆனபிறகும் கூட இந்த இன ஒழிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இன்றுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதோடு, இனப் படுகொலை குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட 195 போர்க் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  • இறுதியில், உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவாக வழிவகுத்தது.
  • இந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனிசெஃப், வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பிப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17-ல் தீர்மானம் நிறைவேற்றியது.
  • பின்பு, ஐக்கிய நாடுகள் சபையும் தனது உறுப்புநாடுகள் இதைக் கொண்டாட வேண்டுமென பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
  • பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படும் ஒவ்வொரு தாய்மொழி நாளும் உலகத்துக்குச் சொல்லும் பாடம் இதுதான்: ‘‘தேசிய இனங்களுக்கான உரிமைகளை, அவர்களது மொழி, பண்பாடு ஆகியவற்றை, ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் எந்தவொரு அரசும் இறுதியில் சிதறுண்டு போனதையே உலக வரலாறு நிரூபித்துள்ளது. எனவே, பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடுங்கள்!”

நன்றி: தி இந்து (21 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்