தாளம் மெளனித்த தருணம்
- அந்தக் குழந்தை பிறந்தபோது, தந்தை அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்குச் சென்று மனைவியையும் குழந்தையையும் பார்க்கக்கூட முடியவில்லை. இரண்டு நாள்கள் கழித்து தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியதும், குழந்தையைத் தந்தையின் கைகளில் கொடுத்தார்கள்.
- இஸ்லாமிய முறைப்படி, குழந்தையின் காதில் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) ஓத வேண்டும். ஆனால், குழந்தையைக் கையில் ஏந்திய அல்லா ரக்கா, அதன் காதில் தபேலா ஜதியை உச்சரிக்கத் தொடங்கினார்: ‘தா தின் தின் தின் தா’. அந்த ஒலியைக் கேட்டு வளர்ந்த ஜாகிர் ஹுசைன் பின்னாள்களில் உலகப் புகழ்பெற்ற இசைமேதையாக உருவெடுத்தார்.
விதியை மாற்றியவர்:
- ஜாகிர் ஹுசைன் பிறந்தபோது குடும்பத்தில் நிறைய சிக்கல்கள். உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷி புகழ்பெற்ற தபேலா கலைஞர்தான் என்றாலும், குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகளும் இருந்தன. ஜாகிர் ஹுசைன் பிறந்த நேரம்தான் இதற்கெல்லாம் காரணம் என்றெல்லாம்கூட நம்பப்பட்டது. ஆனால், அப்படியான மூடநம்பிக்கைகளைத் தனது இசைத் திறமையால் உடைத்தெறிந்தார் ஜாகிர் ஹுசைன்.
- கண்ணில் படும் இடங்களிலெல்லாம் தனது கைவிரல்களைப் படரவிட்டுத் தாளம் போட்டுக்கொண்டிருந்த ஜாகிர் ஹுசைனைப் பார்த்து, அவரது தாய் பவி பேகமுக்குச் சற்று பயம் வந்தது. வகுப்பறையில் இருந்தும் பல முறை ஜாகிர் ஹுசைன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். தனது மகன் நன்கு படித்து குடும்பத்தை முன்னேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்துவிடுமோ என்று பவி பேகம் பயந்தார். ஆனால், அல்லா ரக்காவுக்கோ பெருமை தாளவில்லை. தனது மகனுக்குத் தன் கலையை முழுவதுமாகக் கற்றுத்தந்தார்.
தனித்தன்மை கொண்டவர்:
- அல்லா ரக்கா - பவி பேகம் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். மகன் எப்போது பிறப்பான் எனக் காத்திருந்த அல்லா ரக்கா, ஜாகிர் உசைன் பிறந்ததும் உற்சாகமாகிவிட்டார். மகனுக்கு ஏழு வயதாக இருந்தபோதே தபேலா பாடத்தை முறைப்படி கற்பிக்கத் தொடங்கிவிட்டார். கூடவே, ஒரு முக்கியப் பாடத்தையும் உணர்த்தினார் - “நீ என்னைப் பிரதியெடுக்க வேண்டியதில்லை. உன் சுயத்துடன் நில்.” இந்தப் பாடத்தை ஜாகிர் ஹுசைன் மறக்கவே இல்லை. உஸ்தாத் அஹமது ஜான் திரக்வா, பண்டிட் ஞான் பிரகாஷ் கோஷ் போன்ற மேதைகளின் தாக்கம் இருந்தாலும் தனக்கென ஒரு தனித்த பாணியை உருவாக்கிக்கொண்டார்.
- இசைக் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக இருந்த தபேலாவுக்குத் தனி மேடை அந்தஸ்தைப் பெற்றுத் தந்தார். அதே வேளையில், ஒரு தபேலா கலைஞரின் முதன்மைப் பணி பக்கவாத்தியக்காரராக இருப்பதுதான் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். பிற இசைக் கருவிகளைப் போலவே தபேலாவும் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியது, பிரதியெடுக்கக்கூடியது என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
- பண்டிட் கிஷன் மகராஜ், பண்டிட் சமதா பிரசாத் போன்றோரின் வரிசையில் புகழ்பெற்ற தாளக் கலைஞராகப் பரிமளித்த ஜாகிர் ஹுசைன், ஒரு கட்டத்தில் தனது தனித்தன்மையால் உலகப் புகழ்பெற்றார். ஜான் மெக்லாஃப்லின், எல்.ஷங்கர், விக்கு விநாயக்ராம் போன்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஜாகிர் உசைன் உருவாக்கிய ‘சக்தி’ என்னும் இசைக் குழுவின் நிகழ்ச்சிகள் உலகப் புகழ்பெற்றவை.
- ஃபியூஷன் இசை மூலம் இந்திய இசையையும் ஜாஸ் இசையையும் மட்டுமல்ல, இருவேறு பண்பாடுகளையும் இணைக்கும் ஃபியூஷன் வடிவமாகவே அவரது குழுவின் படைப்புகள் பார்க்கப்படுகின்றன. ஹாலிவுட் திரைப்படங்களில் அவரது தபேலா இசை ஒலித்திருக்கிறது. மோகன்லால் நடித்த ‘வானப்பிரஸ்தம்’ திரைப்படத்துக்கு அவர் அமைத்து வழங்கிய இசை இன்றும் தென்னிந்திய ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது.
- இசையின் பல்வேறு வடிவங்களையும் ஜாகிர் ஹுசைன் திறந்த மனதுடன் வரவேற்றார். பாலிவுட் இசையுலகிலும் பல்வேறு இசை வடிவங்கள் பயன்படுத்தப்படுவது நல்ல விஷயம்தான் என்றார். உண்மையில், “இந்திய இசை என்றோ, மேற்கத்திய இசை என்றோ பார்க்க வேண்டியதில்லை. இசை என்றால் அது இசைதான்” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
- தபேலாவுடன் அமெரிக்காவுக்குச் சென்றதும் அவரது முதல் பணி இசை ஆசிரியர் பணிதான். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையில் பணியாற்றியிருக்கிறார். கலிபோர்னியா அலி அக்பர் இசைக் கல்லூரியிலும் பணியாற்றியிருக்கிறார். சிறாருக்கு, இளைஞர்களுக்கு இசையைக் கற்பிப்பவராக அல்ல, இசையைப் பகிர்ந்துகொள்பவராகவே தன்னை முன்வைத்துக்கொண்டார். பெரும் மேதைகளுடன் இணைந்து வாசிப்பதையும், வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசிப்பதையும் ஒரே மாதிரியாகக் கருதினார்.
- ‘முகல்-ஏ-ஆஸம்’ திரைப்படத்தில் இளம் சலீம் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘பியார் கியா தோ டர்னா கியா’ பாடல் படப்பிடிப்பின்போது, படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அல்லா ரக்காவுக்கு அந்தத் தகவல் சொல்லப்பட்டது. நடிகர் திலீப் குமாரும் இசைவு தெரிவித்துவிட்டார். ஆனால், மறுநாளே தனது மனதை மாற்றிக்கொண்டார் அல்லா ரக்கா. தனது மகனுக்கு இசைதான் எதிர்காலம் என்று தீர்க்கமாக அறிவித்துவிட்டார்.
- எனினும், ஜாகிர் உசைன் பின்னாள்களில், ‘எ பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ‘சாஸ்’ (Saaz) திரைப்படத்தில் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை (ஷபனா ஆஸ்மி) காதலிக்கும் இசைக் கலைஞன் வேடத்தில் ஜாகிர் ஹுசைன் நடித்திருந்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து தனக்கான ஆத்ம துணையைத் தேடும் விழைவுடன் காத்திருக்கும் அந்த இளைஞனின் கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி இயல்பாக நடித்திருந்தார்.
- இசைக் கலையில் பயிற்சியும் ஆர்வமும் இருந்தாலே ஒருவர் எந்தப் போதைப் பழக்கத்துக்கும் அடிமையாக வேண்டியதில்லை என்று கருதியவர் ஜாகிர் உசைன். தனது இளமைத் தோற்றத்துக்கும் இசை மீதான தனது காதல்தான் காரணம் என்றும் சொன்னார். ‘வாஹ் தாஜ்!’ என்று விளம்பரத்தில் சிகையைச் சிலுப்பியபடி அவர் தபேலா வாசிக்கும் அழகு இன்றுவரை அவரது அடையாளமாகச் சுட்டப்படுகிறது.
காலங்களைக் கடந்தவர்:
- மத அடிப்படையிலான பிரச்சினைகள், சகிப்புத்தன்மையின்மை குறித்த அவரது பார்வையும் ஆக்கபூர்வமானது. “ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், ஆமீர்கான் எனப் பலரும் மக்களால் நேசிக்கப்படுகிறார்கள். எனவே, மத அடிப்படையிலான சகிப்புத்தன்மையின்மை என்பது அர்த்தமற்றது” என்றார். அல்லா ரக்கா தனது குழந்தையின் காதில் ஜதி சொன்னபோதுகூட, “இதுதான் என் பிரார்த்தனை முறை.
- நான் சரஸ்வதி தேவியையும் விநாயகரையும்கூட வழிபடுகிறேன். இதையெல்லாம் என் ஆசிரியர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த ஆசியை என் மகனுக்குக் கடத்துகிறேன்” என்றுதான் தனது உறவினர்களிடம் விளக்கினார். அவரது மகனான ஜாகிர் ஹுசைனும் எந்தவித வேற்றுமைகளுக்கும் தன் வாழ்வில் இடம் அளித்ததில்லை.
- கதக் நடனக் கலைஞரான அண்டோனியா மின்னகோலாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மதங்களைக் கடந்த திருமணங்களுக்கே உரிய சவால்களையும் அந்தத் தம்பதி எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், தனது வாழ்வை இசைமயமாக மிக இனிமையானதாகவே ஜாகிர் ஹுசைன் முன்னெடுத்தார்.
- தபேலா தாளம்தான் தனது இதயத் துடிப்பு என்றே வாழ்ந்தவர் ஜாகிர் ஹுசைன். அவரது மறைவால் அந்தத் துடிப்பு நின்றுவிட்டது என்றே பலரும் கருதுகிறார்கள். அதேவேளையில், “ஒரு இசைக் கலைஞரின் மறைவுடன் அவரது கலையும் மறைந்துவிடும் என்று கருத வேண்டியதில்லை. அவரைப் பின்பற்றுபவர்கள் அந்த மரபை முன்னெடுத்துச் செல்வார்கள். எனவே, பாத்திரம் காலியாகிவிட்டது என்று கருதிவிட வேண்டாம்” என்று ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார் ஜாகிர் ஹுசைன். அவரது படைப்புகளும் மாணவர்களும் ரசிகர்களும் ஜாகிர் ஹுசைனின் பெயரைக் காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்வார்கள்!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 12 – 2024)