TNPSC Thervupettagam

தாவரங்களுக்கு அறிவாற்றல் உண்டா

August 16 , 2023 319 days 230 0
  • அனைத்து உயிரினங்களுக்கும் அறிவாற்றல் இருக்கிறது. மனிதர்களைப்போல இல்லை என்றாலும் எல்லா உயிரினங்களும் தங்களுடைய சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் உயிர் வாழ்வதற்கு வேண்டிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. உங்கள் வீட்டருகே வசிக்கும் நாய், நீங்கள் சமைக்கும் உணவை வாசனை பிடித்துக்கொண்டு வாசலில் வந்து நிற்கிறது. ஒரு பறவை தனக்கு வேண்டிய பழத்தையோ பூச்சியையோ வேட்டையாடும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறது. இதைத்தான் நாம் அறிவாற்றல் என்கிறோம்.
  • அந்த வகையில் பார்க்கும்போது உயிரினங்களில் ஒன்றான தாவரங்களுக்கும் அவற்றின் சுற்றுப்புறத்தை அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்படும் அறிவாற்றல் இருப்பதாகவே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • தாவரங்களால் பார்க்க முடியாது, பேச முடியாது. ஆனால், அவற்றால் சுற்றுப்புறத்தை உணர்ந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் மற்ற விலங்குகளைவிடத் தாவரங்களுக்குத்தான் நுண்ணறிவு அதிகம். காரணம், உணவு தேவைப்படும்போதோ ஆபத்துகள் சூழும்போதோ மற்ற விலங்குகளால் இடம்பெயர முடியும்.
  • ஆனால், தாவரங்களால் நகர முடியாது. அதனால், இயற்கை எத்தகைய அச்சுறுத்தலைக் கொடுத்தாலும் அவற்றுக்குத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை தாவரங்களுக்கு இருக்கிறது. அதனால், அவை வெளிப்புறத்தை நன்றாகப் புரிந்துகொள்ளும் புலனறிவைப் பெற்றிருக்கின்றன.
  • தாவரங்களால் தங்களைச் சுற்றியிருக்கும் இடத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக மேல், கீழ், இடம், வலம் ஆகிய வேறுபாட்டையும் அவற்றால் உணர முடியும். இதனால்தான் ஒரு விதையை நீங்கள் எப்படி ஊன்றினாலும் அதன் வேர் நிலத்துக்குள்ளும் தண்டு நிலத்துக்கு மேலும் வளர்கிறது. ஒரு தொட்டியில் விதையை வைத்து, அந்தத் தொட்டியைப் படுக்க வைத்தாலும்கூடத் துளிர்விடும் செடி, மேல் நோக்கித்தான் வளரும்.
  • தாவரங்களால் ஈர்ப்பு விசையைப் புரிந்துகொள்ள முடியும். தாவரங்களின் வேர்களில் உள்ள செல்களில் சிறிய உருளை வடிவத் துகள்கள் (Statoliths) இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் துகள்களை ஈர்ப்பு விசை எந்தத் திசையில் இழுக்கிறதோ அந்தத் திசையை நோக்கி வேர்களை வளர்க்க வேண்டும் என்று தாவரங்கள் புரிந்துகொள்கின்றன.
  • தாவரங்களின் தண்டுகளிலும் இதே போன்ற துகள்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அவை புவி ஈர்ப்பு விசைக்கு நேரெதிரான திசையில் திசுக்களை வளர்ப்பதற்கான சமிக்ஞைகளைத் தாவரங்களுக்கு வழங்குகின்றன. அதனால்தான் தண்டுகள் மேல் நோக்கி வளர்கின்றன.
  • தாவரங்கள் சூரிய ஒளியை வைத்தும் தங்களுடைய சுற்றுப்புறத்தை அறிகின்றன. வீட்டுக்குள் தாவரங்களை வளர்ப்பவர்கள் சூரிய ஒளி வரும் திசையை நோக்கி இலைகள் வளர்வதைப் பார்த்திருப்போம். இந்தச் செயல்பாட்டை ஒளிநாட்டம் (Phototropism) என்று அழைக்கின்றனர்.
  • விலங்குகள் உணவு இருக்கும் திசையைத் தேடிச் செல்வதைப்போல, தாவரங்கள் நிற்கும் இடத்தில் இருந்தே உணவு இருக்கும் திசையை நோக்கி வளர்கின்றன. வளர்ந்துவரும் ஒரு தாவரத்தின் நுனியை நாம் கிள்ளிவிட்டாலும்கூட, புதிதாக வளரும் தண்டு சரியாக ஒளி இருக்கும் திசையிலேயேதான் வளரும்.
  • அதேபோலச் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒளியின் அளவையும் தாவரங்களால் கணக்கிட முடியும். இந்தச் செயல்பாட்டை ஒளிக்காலத்துவம் (Photoperiodism) என்கிறோம். சூரிய ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களைத் தாவரங்களில் உள்ள பைடோகுரோம், கிரிப்டோகுரோம் எனப்படும் புரதங்கள் உணர்கின்றன.
  • இந்த அலைநீளங்களின் வேறுபாட்டைக் கொண்டு சூரியன் உதிப்பதையும் அஸ்தமிப்பதையும் அவற்றால் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் ஒரு நாளில் எவ்வளவு இருள், எவ்வளவு பகல் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறது. இதை வைத்துத்தான் சில தாவரங்கள் பகலிலும் சில தாவரங்கள் இரவிலும் பூக்கின்றன.
  • மேலும், ஒரு நாளின் இரவு - பகல் விகிதம் மாறுபடுவதை வைத்து அது எந்தப் பருவம் என்பதையும் தாவரங்கள் புரிந்துகொள்கின்றன. இதைக் கணக்கிட்டுக் குறிப்பிட்ட பருவக் காலங்களில் மட்டும் அவை பழங்களைத் தருகின்றன. தாவரங்களின் ஒளிக்காலத்துவச் செயல்பாட்டை மனிதர்களால் செயற்கைக் காரணிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தித்தான் குறிப்பிட்ட பருவக் காலத்தில் கிடைக்கும் பழங்களை எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்படி விவசாயிகள் செய்கின்றனர்.
  • தாவரங்களுக்கு வாசனையை முகரும் தன்மையும் இருக்கிறது. பொதுவாக நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் ஆப்பிளையோ வேறு காய்களையோ வைத்தால் அவை சீக்கிரம் கனிந்துவிடும். இதற்குக் காரணம் எத்திலின் வாயு. ஒரு காய் பழமாக மாறி இலகுத்தன்மையைப் பெறுவதில் இருந்து, அதன் நிறம் மாறுவது வரையும் இந்த எத்திலின் வாயுவின் பங்கு இருக்கிறது.
  • ஒரு தாவரம் எத்திலின் வாயுவைச் சுரந்தவுடன் அருகில் உள்ள காய்கள் அதனை முகர்ந்துவிட்டுச் சொல்லி வைத்ததுபோல, கனியத் தொடங்குகின்றன. இந்த வாயு பழங்களைத் தின்னும் விலங்குகளையும் பறவைகளையும் ஈர்க்கவும் செய்கிறது. அவை பழங்களைத் தின்றுவிட்டு விதைகளைப் பரப்புகின்றன.
  • மனிதர்களாகிய நாம் வெப்பம், குளிர், வலி உள்ளிட்ட உணர்வுகளைத் தனித்தனியாக உணரும் தன்மையைப் பெற்றிருக்கிறோம். இவற்றை உணர்வதற்கு என்றே நமக்கு உடலில் நரம்பணுக்கள் இருக்கின்றன. அந்த நரம்பணுக்கள் மூலம் பெறும் செய்தியை மூளை அலசி ஆராய்ந்து புரிந்துகொள்கிறது. தாவரங்களும் வெப்பம், குளிர் உள்ளிட்டவற்றை உணர்கின்றன. ஆனால், அவற்றுக்கு நரம்பணுக்களோ மூளையோ கிடையாது.
  • மாறாக, செல்களின் உதவியுடன் அவை வெளிப்புறத் தாக்கத்தை உணர்ந்துகொள்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் எதிர்வினையாற்றுகின்றன. அடுத்த முறை ஒரு செடியில் இருந்து பூக்களை நீங்கள் பறிக்கும்போது அது அந்தச் செடிக்குத் தெரிந்திருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நன்றி: தி இந்து (16 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்