திட்டங்களைச் செயல்படுத்த பணியாளர்கள் வேண்டாமா?
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பல்வேறு துறைகளில் முற்போக்கான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம், கல்வி - வேலைவாய்ப்புத் துறை சார்ந்த ‘நான் முதல்வன்’, ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
- குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’த் திட்டம், ‘இலவசப் பேருந்துப் பயண’த் திட்டம் ஆகியவை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடியவை. ஆனால், இத்திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கான மனித வளம் அரசுத் துறைகளில் உள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.
காலிப் பணியிடங்கள்:
- திமுகவின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ‘அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்’ என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டுதான் வருகிறது.
- அரசுத் துறைகளில் நிலவும் பல்வேறு காலிப் பணியிடங்கள், ஏற்கெனவே இருக்கும் அரசு ஊழியர்களால் கூடுதல் பொறுப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதனைத் தடுக்கக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
- ஆனால், தற்போது அரசு அலுவலகங்களில் இருக்கும் தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்குத் தொகுப்பூதிய முறையில் பணியாளர்களை நியமித்துவருவது வாடிக்கையாகி வருகிறது. இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் கிடையாது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அரசின் இதுபோன்ற அணுகுமுறை எதிர்காலத்தில் அரசுத் துறைகள் தனியார்மயமாவதற்கே வழிவகுக்கும்.
பெண்கள் நலன்:
- பெண்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டாலும், பெண்கள் படுகின்ற இடர்ப்பாடுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண்களின் துயரங்கள். குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் நியாயவிலைக் கடைகளைக் காலை 8.30 மணிக்கே திறக்க வேண்டும். நண்பகல் 12.30 வரை இயங்கும் கடை மீண்டும் 3.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்க வேண்டும்.
- வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் அவர்கள்தான் வீட்டிலும் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது நமது நாட்டில் எழுதப்படாத விதி. வீட்டில் அவசரஅவசரமாக வேலையை முடித்துவிட்டு, நியாயவிலைக் கடைக்கு வந்தால் இங்கு விற்பனை இயந்திரத்தில் பில் போட்டுவிட்டு, அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை என்று இத்தனை பொருள்களையும் எடையிட்டு வழங்க வேண்டும். இப்பொருள்கள் 50 கிலோ மூட்டைகளாகக் கடைகளுக்கு வந்துசேர்கின்றன.
- இந்த மூட்டைகளையும் தனிநபர்களாகவே பெண்கள் கையாள வேண்டியிருக்கிறது. ஒரு நியாயவிலைக் கடையில் ஒரு விற்பனையாளரும், ஓர் எடையாளரும் இருக்க வேண்டும். ஆனால் 90% கடைகளில் ஒரே ஒரு நபர்தான் இருவருக்கான வேலையையும் செய்துவருகிறார். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. ஒரு கடைக்குச் சராசரியாக 1,000 முதல் 1,500 குடும்ப அட்டைகள் வரை இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், இப்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் பொருள்களுக்குத் தனியே பில் போட வேண்டி உள்ளதால், ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு பில்கள் போட வேண்டியிருக்கிறது.
- இவை அனைத்தையும்விட அவலமான நிலை, 90% நியாயவிலைக் கடைகளில் கழிப்பிட வசதி கிடையாது. காலை முதல் மாலை வரை இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டோ அல்லது இதற்காகக் கடையின் அருகில் உள்ள வீட்டாரிடம் கூச்சப்பட்டுக் கேட்கும் நிலையிலோதான் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் பெண்கள் இருக்கின்றார்கள்.
- இவ்வளவுக்கும் கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக வீடு வீடாகச் சென்று ‘டோக்கன்’ வழங்கியதும், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொண்டுசேர்க்கத் துணைநின்றதும் இவர்கள்தான். இந்த ஊழியர்கள்தான் இத்தகைய அவலநிலையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டம் கனவுதானா?
- 2021 தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த முக்கியமான வாக்குறுதி, புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டுப் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்பது. இந்த வாக்குறுதியைக் கொடுப்பதில் திமுகவும், அதிமுகவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.
- ஒவ்வொரு தேர்தலின்போதும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்கிற வாக்குறுதியைக் கொடுப்பதும், ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை வசதியாக மறந்துபோவதும் வாடிக்கையாகிப் போயிற்று. நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குறுதியை ஏன் கொடுக்க வேண்டும்?
- ஓர் அரசின் நிர்வாகமானது செம்மையாக நடைபெறவும், அரசின் திட்டங்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடையவும் முக்கியமான கருவியாக இருப்பது அரசு ஊழியர்கள். அவர்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு அலட்சியமாக இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு துறையிலும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தும்போது கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது, அத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதற்கு உதவும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள். பாலம் பலவீனமாக இருப்பது அரசு நிர்வாகத்துக்கு ஒருபோதும் நல்லதன்று.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 08 – 2024)