TNPSC Thervupettagam

திட்டமிடலின் தவறு!

October 28 , 2020 1545 days 688 0
  • வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. 2015-இல் பெற்ற அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகம்தான்.
  • நகர்ப்புற திட்டமிடலில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
  • மழை நீர் வடிகால் பாதைகள் ஓரளவுக்கு சுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றனவே தவிர, கால்வாய்கள் முழுமையாக தூர் வாரப்படவில்லை. மழை வெள்ளத்தைக் கடலில் கொண்டு போய் சேர்ப்பதற்கு சென்னை மாநகரத்தில் இயற்கையாகவே அமைந்திருக்கும் கொசஸ்தலை, கூவம், அடையாறு என்கிற மூன்று ஆறுகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவை உண்மையான பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படவில்லை.
  • நகரங்கள் வெள்ளத்தில் மூழ்குவது என்பது சமீபகாலமாக இந்தியா முழுவதும் காணப்படும் பிரச்னையாக மாறியிருக்கிறது. மும்பை, சென்னை, தில்லி, பெங்களூரைத் தொடர்ந்து அண்மையில் ஹைதராபாத் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
  • கடந்த அக்டோபர் 13, 14 இரண்டு நாள்களும் தெலங்கானாவிலும் அதன் தலைநகரான ஹைதராபாதிலும் பெய்த அடை மழை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
  • ஹைதராபாத் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான நகரம். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் ஒரு லட்சமாக இருந்த மக்கள்தொகை, 1950-இல் 10 லட்சமாக உயர்ந்தது என்றால், கடந்த 70 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து இப்போது ஒரு கோடியாகக் காணப்படுகிறது.
  • மூசி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஹைதராபாத், சென்னையையும் மும்பையையும் போலல்லாமல் பெங்களூரு, தில்லியைப்போல நாலாபுறமும் விரிவடையும் வசதியைப் பெற்ற நகரம். மழை வெள்ளத்தை ஏற்றுக்கொள்ள நகரத்தின் நடுநாயகமாக ஹிமாயத் சாகர் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. அப்படியிருந்தும்கூட, வெள்ளத்தில் மூழ்கித் தவித்தது ஹைதராபாத்.
  • கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், நகரங்கள் வளர்ச்சி அடையத் தொடங்கியபோது மக்கள் பெரும்பாலும் நடந்தும், சைக்கிளிலும்தான் பயணித்தனர். அதற்கேற்ப குடியிருப்புகளில் உள்ள தெருக்களின் அகலம் 10 அடியும் அதற்குக் குறைவாகவும் இருந்தது.
  • 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியின் விளைவால் மூன்று சக்கர வாகனங்களும், கார்களும் வரத்தொடங்கியபோது குடியிருப்பு சாலைகளின் அகலம் 40 அடியாக அதிகரித்தது.
  • இப்போது கணக்கிலடங்காத வாகனங்கள். ஆனாலும்கூட, 60 அடி அகலத்தைத் தாண்டாத தெருக்கள்தான் மாநகரங்களின் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • புதிய புதிய குடியிருப்புகள் உருவாகின்றன. அதன் விளைவாக, நீர்வழிப் பாதைகள் அடைபடுவதால் குறுகிய தெருக்களும், சாலைகளும் அடைமழை பெய்யும்போது ஆறுகளாக மாறிவிடுகின்றன.
  • அடுக்கு மாடிக் கட்டடங்களின் கழிவுநீரை அகற்றும் பாதைகளேகூட, மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படாத நிலையில், மழை நீர் வடிகால் பாதைகள் கவனிக்கப்படாமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
  • மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நகரங்கள் வளர்ச்சி அடைவது இயற்கை. அப்படி வளர்ச்சி அடையும்போது, ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் முறையான திட்டமிடல் இருந்தால் மட்டுமே பருவமழைக் காலத்திலும் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும்போதும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முடியும்.
  • உயர்ந்த பகுதிகளிலிருந்து தாழ்ந்த பகுதிகளை நோக்கிச் செல்லும் நீர்ப்பாதைகள், புதிதாக எழுப்பப்படும் அலுவலகங்களாலும், வணிக வளாகங்களாலும், குடியிருப்புகளாலும் தடுக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை மாநகராட்சிகளுக்கும், பெருநகர வளர்ச்சி குழுமங்களுக்கும் உண்டு.
  • ஆனால், அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை முறைகேடுகளின் நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டிருப்பதால், சிறிய மழை பெய்தாலும் நகரங்களின் தெருக்கள் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. நகர்ப்புற திட்டமிடலைப் பொருத்தவரை, நகரத்துக்கு நகரம் அது வேறுபடுகிறது.
  • தில்லிக்கான திட்டமிடலும், ஹைதராபாதுக்கான திட்டமிடலும், மும்பைக்கான திட்டமிடலும், சென்னைக்கான திட்டமிடலும் வேறு வேறு. நுரையீரல் புற்றுநோய் குறித்துக் கவலைப்படாமல் புகை பிடிப்பவர்களும், கல்லீரல் பாதிப்பு குறித்து கவலைப்படாமல் மது அருந்துபவர்களும்போல எத்தனையோ எச்சரிக்கைகள், முன்னறிவிப்புகள், ஆய்வுகள், அறிக்கைகள், பொதுநல வழக்குகள் போன்றவை நம்மால் சட்டை செய்யப்படாமல் அலட்சியப்படுத்தப்படுகின்றன.
  • எல்லோரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வளர்ச்சி குறித்து பேசுகிறார்களே தவிர, எத்தனை பேர் கழிவுநீர்ப் பாதையின் அகலம் குறித்தும், மழைநீர் வடிகால் பாதையின் ஆழம் குறித்தும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? கண்ணில் படாமல் இருப்பதால் அவை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. மிகப் பெரிய மழை பெய்து, மழை வெள்ளத்தில் நகரங்கள் மூழ்கும்போது மட்டும் அவை விவாதிக்கப்படுகின்றன.
  • ஊடகங்கள் பரபரப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. நகர்ப்புற திட்டமிடலும், நகரங்கள் மூழ்குவதும் தேர்தலில் பேசுபொருளாக மாறுவதில்லை. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அது ஏதோ வருடாந்திர இயற்கைச் சீற்றமாகக் கருதி புறக்கணிக்கப்படுகிறது.
  • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சி சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், நிரந்தரத் தீர்வு காண சென்னை மட்டுமல்ல, இந்தியாவின் எந்த ஒரு மாநகரமும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை!

நன்றி: இந்து தமிழ் திசை (28-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்