இந்திய வழக்கறிஞரான சர் பிட்டி தியாகராய செட்டியார், தொழிலதிபரும் முந்தைய மதராஸ் மாகாணத்தின் பிரபலமான அரசியல் தலைவருமாவார்.
சி. நடேச முதலியார், டாக்டர் T.M. நாயர் ஆகியோருடன் இணைந்து 1916 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியை தொடங்கியவர்களில் இவரும் ஒருவராவார்.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோருக்கான இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இந்த இயக்கத்தை வழி நடத்தியதில் முதல் நபராகவும் இவர் கருதப்படுகின்றார்.
இளமைக்கால வாழ்க்கை
தியாகராயச் செட்டியார்மதராஸ் மாகாணத்தின் ஏகாட்டூரில் தெலுங்கு மொழி பேசும் தேவாங்க குடும்பத்தில் 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று பிறந்தார்.
1873 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த இவர் பொது வாழ்வில் நுழைந்து 1882 ஆம் ஆண்டு முதல் 1922 ஆம் ஆண்டு வரை மதராஸ் மாநகராட்சியில் உறுப்பினராகப் பணியாற்றினார்.
இவர் 1882 முதல் 1922 வரை மதராஸ் மாநகராட்சியில் உறுப்பினர் அல்லது கவுன்சிலராக சுமார் 40 ஆண்டுகள் வரை பணியாற்றினார்.
மேலும் இவர் 1920 ஆம் ஆண்டு முதல் 1923 வரை மதராஸ் மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
மதராஸ் மாநகராட்சியின் முதல் அலுவல் சாராத தலைவர் இவரேயாவார்.
1910 ஆம் ஆண்டு இவர் மதராஸ் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்னிந்திய வர்த்தக சபையின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 1910 முதல் 1921 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகப் பணியாற்றினார்.
இவர் இந்திய தேசபக்தி (Indian Patroit) செய்தித்தாள் மற்றும் அதன் பதிப்பாசிரியரான கருணாகர மேனனின் சார்பாக டாக்டர் TM நாயருக்கு எதிராக வழக்காடினார். பின்னாளில் அவர் நாயரின் நெருங்கிய நண்பரானார்.
தியாகராயச் செட்டியார் 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவுவதற்கு முன்பு இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக பணியாற்றினார்.
மீள் இணைப்பு
1912 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சி ஆணையத்தில் இரண்டு விதமான குழுக்கள் இருந்தன.
பிராமணரல்லாதோர் குழுவிற்கு சர் பிட்டி தியாகராயச் செட்டியார் தலைமை தாங்கினார்.
மற்றொரு குழுவிற்கு டி.எம். நாயர் தலைமை தாங்கினார்.
இந்த இரு குழுவினரும் பிராமணரல்லாதோராக இருந்த போதிலும் அவைக் கூட்டங்களில் இதன் இரு தலைவர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்த இரண்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்திருந்தால் பிராமணரல்லாதோர் இயக்கத்தினை வேகமாக முன்னேற்றலாம் என்பதனை நடேச முதலியார் உணர்ந்தார்.
இதனால் தான் நடேச முதலியாரால் இவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளைச் சரி செய்ய முடிந்தது.
திராவிட இயக்கம்
1909 ஆம் ஆண்டில் P. சுப்பிரமணியம் மற்றும் M. புருஷோத்தம் எனும் இரு மதராஸ் நகர வழக்கறிஞர்களால் பிராமணரல்லாதோர் சங்கமானது தோற்றுவிக்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்படும் வரை தியாகராயச் செட்டியார் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அதிருப்தி அடைந்த பிராமணரல்லாத அதிகார வர்க்கத்தின் உறுப்பினர்களான சரவணப் பிள்ளை, G. வீராச்சாமி நாயுடு, துரைசாமி நாயுடு மற்றும் நாராயண சாமி நாயுடு ஆகியோரால் மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்பட்டது C. நடேச முதலியார் அதன் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1912 ஆம் ஆண்டிலேயே (அக்டோபர்) மதராஸ் ஒருங்கிணைந்த லீக் ஆனது மதராஸ் திராவிடச் சங்கம் என மறுபெயரிடப்பட்டது.
திராவிடம் எனும் சொல் ஒரு அரசியல் அமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
பின்னாளில் பனகல் ராஜா என்றழைக்கப்பட்ட பனகந்தி ராமராயநிங்கார் அதன் தலைவராகப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த அமைப்பின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக மதராஸ் திராவிடச் சங்கமானது “திராவிட இல்லம்” எனும் விடுதியை நடத்தியது.
சாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக விடுதிச் சலுகைகள் கிடைக்கப் பெறாத பிராமணரல்லாத மாணவர்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டது.
1914 ஆம் ஆண்டில் மதராஸின் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடேசன் அத்தகைய விடுதிகளை நடத்தினார்.
1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தியாகராயச் செட்டியார் மற்றும் நாயர் உட்பட முப்பது பேர் கொண்ட குழுவின் கூடுகை ஒன்று நடத்தப் பட்டது.
பிராமணரல்லாதவர்களின் குறைகளை அறியப்படுத்த ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி செய்தித்தாள்களை வெளியிட தென்னிந்திய மக்கள் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.
தியாகராயச் செட்டியார் இந்த அமைப்பின் செயலாளரானார்.
“நீதி” எனும் பெயரிடப்பட்ட ஒரு செய்தித் தாளானது, 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் வெளிவரத் தொடங்கியது.
நாயர் இதன் முதல் ஆசிரியராக இருந்தார்.
இந்தக் கூடுகையானது மேலும் தென்னிந்திய தாராளவாதிகள் கூட்டமைப்பு எனும் ஒரு அரசியல் சங்கத்தினையும் உருவாக்கியது.
“நீதி” என்ற பத்திரிக்கையை இது வெளியிட்டதால் பின்னாளில் இந்தச் சங்கமானது “நீதிக்கட்சி” என பிரபலமாக அழைக்கப்பட்டது.
தியாகராயச் செட்டியார் 1917 ஆம் ஆண்டிலிருந்து 1925 ஆம் ஆண்டு தனது மறைவு வரை இந்தக் கூட்டமைப்பின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.
இடஒதுக்கீடு மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை வெகு சீக்கிரம் ஏற்றுக் கொள்வதன் மூலம் நீதிக் கட்சி அப்பிரச்சினைகளுக்கானத் தீர்வினைக் கோரியது.
திராவிடர் கழகத்தினை உருவாக்க நீதிக்கட்சியுடன் 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈவெரா பெரியாரின் சுய மரியாதை இயக்கமும் கை கோர்த்தது. இது பிராமண எதிர்ப்பு, வட இந்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு அமைப்புகளுக்கு உதவியது.
தேர்தல் முடிவுகள்
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1920 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 98 இடங்களில் நீதிக்கட்சியானது 63 இடங்களில் வென்று போதுமான பெரும்பான்மையைப் பெற்றது.
அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநரான வெல்லிங்டன் பிரபு அரசினை அமைக்க தியாகராயச் செட்டியாருக்கு அழைப்பு விடுத்தார்.
இருப்பினும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அமைச்சரவையில் ஒரு பதவியையும் வகிக்க முடியாது என்ற நெறிமுறை விதியின் காரணமாக இவர் அதனை மறுத்துவிட்டார்.
இதன் விளைவாக A. சுப்புராயலு ரெட்டியார் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
சுப்புராயலு ரெட்டியாருக்கு பனகல் ராஜா மற்றும் வெங்கட ரெட்டி நாயுடு என இரண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் இருந்தனர்.
இறுதிக் காலம்
1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் தியாகராயச் செட்டியார் காலமானார்.
இவருக்குப் பின் நீதிக்கட்சியின் தலைவராக பனகல் ராஜா நியமிக்கப்பட்டார்.
நினைவுச் சின்னங்கள்
1909 ஆம் ஆண்டில் ராவ் பகதூர், 1919 ஆம் ஆண்டில் திவான் பகதூர் மற்றும் 1921 ஆம் ஆண்டில் சர் ஆகிய பட்டங்களை வழங்கி அரசு இவரை கௌரவித்தது.
1920 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நீதிக்கட்சியின் வெற்றிக்கு இவரே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறார்.
பின்தங்கிய உள்ளூர் மக்களுக்காக சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு மதராஸ் இந்து மேல்நிலைப் பள்ளியானது 1897 ஆம் ஆண்டில் தியாகராயச் செட்டியார் மற்றும் அவரின் தந்தையால் திறக்கப்பட்டது.
பின்னர் 1950 ஆம் ஆண்டில் அவரின் பேரனால் அப்பள்ளி சர் தியாகராய கல்லூரியாக மாற்றப்பட்டது.
சென்னையில் முதல் மதிய உணவுத் திட்டம் 1920 ஆம் ஆண்டு சென்னையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்டது.
உலகின் இரண்டாவதுப் பழமையான மாநகராட்சியான சென்னை மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் சர் தியாகராயச் செட்டியாருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.
மதராஸ் மாகாணத்தின் பனகல் ராஜா அரசால் 1923 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரையில் சென்னையின் ஒரு பகுதியில் நிறுவப்பட்ட ஒரு இடத்திற்கு தியாகராய நகர் என இவரின் பெயர் சூட்டப்பட்டது.
வெள்ளை ஆடைகள் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக, தியாகராயச் செட்டியார் வெள்ளுடை வேந்தர் என்று மாகப் பொருத்தமாக அழைக்கப்படுகின்றார்.