TNPSC Thervupettagam

தியாகிகள் மீதான அவதூறுகள்: மாறட்டும் கண்ணோட்டம்

April 1 , 2023 484 days 358 0
  • இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1919 மார்ச் 23 முக்கியமான நாள். அந்த நாளில்தான், கஸ்தூரி ரங்க ஐயங்கார் அழைப்பின்பேரில், மகாத்மா காந்தி மதராஸ் பட்டினத்துக்கு வந்திருந்தார். பிரிட்டிஷ் அரசு இயற்றியிருந்த கொடூரமான ரௌலட் சட்டத்தை எப்படி எதிர்ப்பது என்ற சிந்தனையோடு காந்திஜி இருந்தார்.
  • மக்களைத் திரட்டி மாபெரும் ‘ஹர்த்தால்’ போராட்டத்தை நடத்தலாம் என்ற யோசனை, அன்றைக்கு அதிகாலையில்தான் கனவு மூலம் அவருக்குத் தோன்றியது. அதன்படி நாடு முழுவதும் 1919 ஏப்ரல் 6 அன்று மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம்காண வைத்தது.
  • அற்புதமான காட்சி’ என்ற தலைப்பில் காந்திஜி தனது சுயசரிதையில் முக்கியமான இந்தப் போராட்டம் பிறந்த கதை குறித்து எழுதியிருந்தும், நம்மில் பலர் இன்னமும் இதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருக்கிறோம்.

இடையறாத, தன்னலமற்ற வைராக்கியம்

  • ஆட்சியாளர்களால் அடக்கிவிட முடியாத நெஞ்சுரம், அடங்க மறுக்கும் கிளர்ச்சி மனோபாவம், தன்னலம் கருதாத தியாகம் கொண்ட அத்தகைய பல தருணங்கள், அவற்றைச் செய்தவர்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தராமலேயே போய்விட்டன.
  • 1857இல் மூண்ட ‘சிப்பாய்க் கலக’த்தை இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அழைக்கிறார்கள். அதற்கும் முன்னதாகவே தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பல கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மத்திய அரசு இப்போது கொண்டாடிவரும் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’, நாடு சுதந்திரம் அடைந்த 75ஆவது ஆண்டைக் கொண்டாடுவதுடன், உரிய வகையில் மக்களுடைய கவனத்தைப் பெறாத இத்தகைய போராட்டங்களையும் அதில் ஈடுபட்டவர்களையும் நினைவுகூர்ந்து நன்றி பாராட்டுகிறது.
  • தன்னலம் கருதாத ஆயிரக்கணக்கான தேசபக்தர்களின் தேசிய உணர்வும் தேசபக்தியும்தான் - வெவ்வேறான சித்தாந்தச் சார்புகளைக் கொண்டிருந்தாலும், குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் – நாட்டை வழிநடத்தியது.

பல்வேறு முனைகளில் போராடியவர்கள்

  • கோபால கிருஷ்ண கோகலே, அம்பேத்கர் போன்றோர் பிரிட்டிஷ் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். போராட்டத்துக்காக ஒரு முறைகூடக் கைதாகவில்லை என்றாலும், இந்த நாட்டின், நாட்டு மக்களின் நலனுக்காகத் தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கித் தனி அடையாளச் சின்னமாகவே இன்றைக்கும் மக்களுடைய மனங்களில் வீற்றிருக்கின்றனர்.
  • சுதந்திரப் போராட்ட காலத்தில் கைது செய்யப்படவில்லை என்பதால் அவர்களுடைய நாட்டுப்பற்றும் சமூக நலனுக்கான பங்களிப்பும் எள்முனையளவும் குறைந்துவிடவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்குச் சிறிதும் அஞ்சாத சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலைக்காக ஆயுதப் பயிற்சி பெற்ற மாபெரும் இந்திய தேசிய ராணுவத்தை வெளிநாட்டு மண்ணில் உருவாக்கினார்.
  • அதற்காக ‘அச்சு நாடுகள்’ அணியில் இடம்பெற்றிருந்த ஜப்பானிடம் உதவியும் பெற்றார். பீகாஜி காமா, சியாம்ஜி கிருஷ்ண வர்மா, செண்பகராமன் பிள்ளை, தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரெல்லாம் வெளிநாடுகளில் இருந்தபடியே இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டுள்ளனர்; அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளையும், உள்நோக்கங்களையும் சந்தேகித்து இந்தியாவுக்காகத்தான் பாடுபட்டார்களா என்று கேள்வி எழுப்ப முடியுமா?

வரம்பற்ற விமர்சனங்கள்

  • இந்திய அரசியல் களத்தில், எப்போதோ வாழ்ந்து மறைந்த தலைவர்களையும் அமைப்புகளையும் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்துத் தாக்கிப் பேசுவதும், களங்கப்படுத்துவதும், அவர்களுடைய பங்களிப்புகளை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, அவதூறுகளை அள்ளி வீசுவதும் சமீபகாலமாக அரங்கேறிவருகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில்அவர்கள் என்ன செய்தார்கள் அல்லது செய்யவில்லைஎன்று தனித்தனியாக இனம்பிரித்து, அவர்களைச் சிறுமைப்படுத்தும் வேலை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
  • அப்படி அதிகம் அவமதிக்கப்படுபவர்களில் வி.டி.சாவர்க்கர் முதன்மையானவர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் தேசிய நினைவு அறக்கட்டளை அமைப்பின் செயலர் பண்டிட் பாக்லேவுக்கு 1980 மே 30 அன்று எழுதிய கடிதம் இங்கே நினைவுகூரத்தக்கது: “நம்முடைய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்குச் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று போராடிய வீர சாவர்க்கரின் துணிச்சல், தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இந்தியாவின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நீங்கள் எடுக்கும் முயற்சி முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். நமக்கு முந்தைய தலைமுறையினரின் தியாக வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புரிதல் இன்றி, அரைவேக்காட்டுத்தனமாக வாய்க்கு வந்தபடி விமர்சிக்கக் கூடாது.

நேருவின் உறுதிமொழிப் பத்திரம்

  • சுதந்திரப் போராட்ட வீரரும் நாட்டை வழிநடத்திய முதல் பிரதமருமான ஜவாஹர்லால் நேரு, போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒருமுறை கே.சந்தானம், ஆசார்ய கித்வானி ஆகியோருடன் கைது செய்யப்பட்ட – அதிகம் பேருக்குத் தெரியாத ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ‘பஞ்சாப் சமஸ்தானத்தில் இனி காலடி எடுத்து வைக்கமாட்டேன்’ என்று பஞ்சாபின் ‘நபா’ சமஸ்தானத்துக்கு உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்த பிறகு, நேரு சிறையில் அடைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கித்வானி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
  • நேரு இது குறித்து வேதனையுடன் தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்: “என்னுடைய நண்பர்களின் ஆலோசனையைக் கேட்கும் சாக்கில் - என்னுடைய பலவீனத்தை மறைத்துக்கொண்டு, இனி பஞ்சாபின் நபா சமஸ்தானம் பக்கம் வரமாட்டேன் என்று பத்திரத்தில் எழுதிக் கொடுத்தேன்.
  • அதற்குக் காரணம், என்னுடைய பலவீனமும் நபா சிறைக்கு மீண்டும் போகப் பிடிக்காததும்தான். இவ்வாறாக என்னுடைய சுதந்திரப் போராட்ட சகாவை விட்டுவிட்டு நான் மட்டும் விடுதலை பெற்றேனே என்று பிறகு வெட்கமடைந்தேன். நாம் எல்லோருமே அடிக்கடி இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக வீரத்தைவிட, சுக வாழ்வுக்கான மாற்று முடிவை எடுத்துவிடுகிறோம்.”

காந்திக்கு பிரிட்டிஷ் விருது

  • தென் ஆப்பிரிக்காவில் நடந்த ‘போயர்’ போரின்போது ஏகாதிபத்திய சக்தியான பிரிட்டிஷாருக்கு ஆதரவாக காந்திஜியே செயல்பட்டார். தென்னாப்பிரிக்காவில் மனிதாபிமான அடிப்படையில் செய்த சேவைக்காக ‘கெய்சர்-இ-ஹிந்த்’ என்ற பதக்கத்தை காந்திக்கு அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு 1915இல் அறிவித்தது.
  • அந்த விருதை 1920இல் காந்திஜி பிரிட்டிஷ் அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். ஜலியான் வாலாபாகில் அப்பாவி மக்களை ஜெனரல் டயர் ஈவிரக்கமின்றிச் சுட்டுக்கொன்ற சில நாள்களுக்கெல்லாம் அறிவிக்கப்பட்ட ‘மான்டேகு–செம்ஸ்போர்டு’ சீர்திருத்த யோசனைகளைக் காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகள் வரவேற்கவே செய்தனர்.
  • வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தை 1942இல் காந்திஜி அறிவித்தபோது, சக்ரவர்த்தி சி.ராஜகோபாலாச்சாரியார், அதனால் இந்திய மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று கருதி, அதில் பங்கேற்காமல் விலகியே நின்றார்.

வரலாற்றை முழுமையாகப் பாருங்கள்

  • இந்த வரலாற்று உதாரணங்களை எல்லாம் தேசத்துரோகச் செயல்களின் பட்டியலாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா? நாட்டின் வரலாற்றைப் பார்ப்பதாக இருந்தால், முழுமையான கண்ணோட்டம் அவசியம். குறிப்பிட்ட நாளில் யார் என்ன செய்தார் அல்லது பேசினார் என்பதை மட்டும் பெரிதாக்கி, அவர் மீது அவதூறுகளைச் சுமத்துவது முறையற்ற செய்கையாகும்.
  • இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வசதியாகஉட்கார்ந்துகொண்டு எப்போதோ நிகழ்ந்தவற்றையெல்லாம் அலசிப் பார்த்து, இப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் – அப்படிச் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம்வரலாறு குறித்து கருத்து தெரிவிப்பது எளிது. அந்நியர்களின் அதிகாரத்துக்கு எதிராகத் துணிந்து நின்றவர்களின் செயல்களைக் காமாலைக் கண்களோடு பார்ப்பதும், திரிக்கப்பட்ட இரட்டை அளவுகோல்களால் அளப்பதும் பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, தவறும்கூட.
  • தேசியத்துக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட - அதிகம் கொண்டாடப்படாத தியாகிகளுக்கு – அஞ்சலி செலுத்துவது அவசியமான கடமையாகும். தங்களுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்கள் எந்த சித்தாந்தத்துக்கு ஆதரவாக இருந்தார்கள், எந்த அரசியல் சார்பு கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் பாராமல், எந்தவித எல்லைக்கோடும் அவர்களுடைய தேசபக்தியைப் பாராட்டத் தடையாக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

நன்றி: தி இந்து (02 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்