TNPSC Thervupettagam

திராவிட அரசு முருகனைக் கொண்டாடுவது திருப்புமுனையா?

September 6 , 2024 82 days 80 0

திராவிட அரசு முருகனைக் கொண்டாடுவது திருப்புமுனையா?

  • அண்​மையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடந்த பழநி நகருக்கு இன்னொரு சிறப்பும் இருக்​குமென்று முன்பு தெரியாது. மாநாடு நடந்த இடம் மட்டுமல்ல பழநி. தமிழக அரசியல் சிந்தனையின் வளர்ச்சிக் கட்டங்​களைக் காட்டும் தளமாகவும் அது தற்செயலாக அமைந்​து​போனது.
  • கீழை நாடுகளின் கலாச்​சா​ரத்தைக் கற்பிக்கும் கல்லூரி ஒன்றினை 1960 வாக்கில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அங்கு உருவாக்கி​யிருந்​தார். பின்னர், அது இந்தியக் கலாச்​சா​ரத்தைக் கற்பிக்கும் கல்லூரி​யாகத் தன் விகாசத்தில் குறைந்தது. அதன் இன்றைய நகர்வு ‘முத்​தமிழ் முருகன்’ என்கிற, அதற்கும் சிறிய தமிழ் அடையாளப் பரப்புக்​குள்ளாக மாறியுள்ளது. இது தமிழக அரசியல் சிந்தனைப் போக்கின் சரியான குறியீடு!

ஆறு புள்ளிக் கோலம்:

  • முருக வழிபாட்டு நெறியை​யும், தத்து​வத்​தையும் பரப்புவது மாநாட்டின் நோக்கம். அப்படியே வைத்துக்​கொண்டு மாநாட்டை விளங்​கிக்​கொள்​வதில் சிக்கல் இல்லை. இதனோடு மேலும் இரண்டு நிலைகளில் மாநாட்டை நாம் புரிந்​து​கொள்​வதும் இயல்பு​தான்.
  • இன்னொரு தெய்வத்தை மையமாக வைத்து, இந்திய மக்களை ஒருங்​கிணைக்கும் முயற்சி சில தசாப்​தங்​களாகத் தீவிரப்​படுவது தெரியும். இதற்குப் போட்டியாக முருகனை மையமாக்கி, இங்கு உள்ளவர்களை ஒருங்​கிணைக்க முனைவது இயல்பான அரசியல். இது இரண்டாவது நிலையில் வரும் சராசரிப் புரிதல்.
  • நூறு ஆண்டு​களாகவே தமிழ், தமிழினம், தமிழ்​நாடு, தமிழ்ப் பண்பாடு என்ற அடையாள அரசியலைக் கோலமாக இழைக்​கிறோம். இவற்றுடன், தமிழ்க் கடவுள், தமிழ்ச் சமயம் என்று மேலும் இரண்டு புள்ளிகளை இணைத்து, அந்தக் கோலத்தை முருகன் மாநாடு முழுமை​யாக்​கக்​கூடும். இது மூன்றாவது நிலையில் சாத்தி​ய​மாகும் புரிதல். இரண்டாவது நிலை புரிதலாக நான் சொன்னது மாமூலான கள அரசியல். நம் அக்கறை அதுவல்ல. முருகன் மாநாடு எப்படி அடையாள அரசிய​லாகிறது என்பதை மட்டும் விளக்​கலாம்.
  • அறநிலையத் துறை இம்மாநாட்டுக்குக் காட்டிய முனைப்பைப் பற்றிய விமர்சனம் உண்டு. அது சமயச் சார்பின்மை என்கிற கோட்பாட்டு அடிப்​படையில் வருவது. முதலில் அதற்கு மறுமொழி சொல்லி​விடலாம். அறநிலையத் துறை ஆதரவில், 1960களின் முதல் சில ஆண்டுகள், திருப்​பாவை-​திரு​வெம்பாவை மாநாடுகள் நடந்தன.
  • 1960-1961 மார்கழியில் ஐம்பத்​தைந்​துக்கும் குறையாத கோயில்​களில் இவை நிகழ்ந்​திருக்​கின்றன. மதுரை, சிதம்பரம் போன்ற பெரிய நகரங்​களி​லும், எட்டுக்குடி போன்ற சிறிய கிராமங்​களிலும் இம்மாநாடுகள் நடத்தப்​பட்டன. அப்போது பக்தவத்சலம் அறநிலையத் துறை அமைச்சர்; காமராஜர் முதலமைச்சர். மக்களிடம் சமய ஈடுபாட்டை வளர்ப்​ப​தற்​காகவே ஒளிவுமறைவு இல்லாமல் நடந்த மாநாடுகள் இவை.
  • சமயச் சார்பின்மை பற்றிய புரிதல் நம்மைவிட அவர்களுக்குக் குறைவு என்று சொல்ல முடியுமா? திருப்​பாவை-​திரு​வெம்பாவை மாநாடு​களுக்கு ஒரு வேறுபாடு காட்டலாம். அவை முருகன் மாநாடுபோல் இன்னொன்​றுக்கு மாற்றாகவோ, தமிழ் அடையாளத்தை அழுத்​த​மாக்கும் முயற்​சி​யாகவோ இருந்​திருக்​காது.

அடையாளங்​களும் நெகிழும்:

  • திராவிட இயக்கத்தின் பழைய இறைமறுப்பு நிலைப்​பாட்டோடு முருகன் மாநாட்டைச் சேர்த்துக் கவனிப்​பவர்கள், ஒரு சித்தாந்த சங்கடத்தை உணரக்​கூடும். தமிழ்க் கலாச்சார அடையாளம் அதுவாகவே அமைந்​ததல்ல; நாமாகக் கட்டி அமைப்​பதுதான் என்று தெரிந்தவர்களுக்கு இந்தச் சங்கடம் வராது. அதை அவ்வப்போது மறு விவரிப்பு செய்து​கொள்கிறோம். சில சடங்கு​களைக் கழித்து, தைப் பொங்கலைத் தமிழ்க் கலாச்சார அடையாளமாக மறு விவரிப்பு செய்து​கொண்​டோமே!
  • கட்டிச் சோடித்த தமிழ் அடையாளத்தை, தெய்வத்​தையும் சமயத்​தையும் கழித்து வலுப்​படுத்த இயலாது என்பது இப்போது புரிந்​து​விட்டது. இந்தப் புரிதல் மட்டுமே புதிதாக வந்தது; மற்றவை வழக்க​மானவை​தான். ஆக, முத்தமிழ் முருகன் மாநாடு நாம் அமைத்​துக்​கொண்ட தமிழ் அடையாளத்​துக்கு மறு விவரிப்பு செய்து​ கொள்ளும் முயற்சி. அடையாளங்கள் இப்படி அவ்வப்போது மறு விவரிப்பு பெறுவது இயல்பு; அவை உறைந்து, இறுகிப்​போ​காது. நாளையே, இதைவிடக் கோலாகலமான இன்னொரு மறு விவரிப்​புக்கு அவசியம் ஏற்படலாம். இந்தத் திசையிலேயே தமிழ் அடையாளம் மேலும் நெகிழக்​கூடும்!
  • நாம் சோடித்த அடையாளம் எப்படி மறு விவரிப்பைப் பெறுகிறது என்பது மட்டுமே நம் அக்கறை. அது சரியா, தவறா என்பதெல்லாம் மற்றவர்​களின் சிந்தனைச் சுதந்​திரம். ‘எல்லாம் முருகன் செயல்’ என்று மக்கள் இருந்​து​விடு​வார்​களானால், சமூக மாற்றத்​துக்கு அவர்களின் பங்களிப்பை எப்படிப் பெறுவது? இந்தக் கோணத்​திலிருந்து முருகன் மாநாட்டை விமர்​சிப்​பதும் வழக்கமே.
  • முருகன் கடவுள்​தான்; இருந்​தா​லும், ‘முத்​தமிழ் முருகன்’ என்று தமிழோடு சேர்த்துச் சொல்லும்போது தமிழ் அடையாளம் நெகிழ்ந்து, அதற்கு இடம் கொடுத்து​விடு​கிறது. கார்த்தி​கேயனும், சுப்ரமணி​யனும், சுவாமிநாதனும், சண்முகநாதனும் இந்தக் கலாச்​சாரத் தளத்தில் இடம் சம்பா​திக்க முடியாது. ‘முருகன் நம் சுவாமிமலை சுவாமிநாதன்​தான்; வேறு யாருமல்ல’ என்று பழைய சமன்பாட்டை மறந்து​விடாமல் நான் பிடித்​துக்​கொள்வது வேறு சங்கதி. அந்தச் சமன்பாட்டை அசக்குவதுதான் அடையாள அரசியல்.

இலக்கிய நாயகன் மட்டுமா?

  • தமிழர்​களின் இலக்கிய ரசனைக்கு முருகன் இயல்பான பொருள். அவர்களின் கற்பனையில் முருகன் சட்டென்று பற்றிப் படர்ந்​து​கொள்​வான். முருகன்​-வள்ளி உறவில் தமிழின் அக இலக்கியக் கூறுகள் ரசமான வடிவம் எடுக்​கின்றன. பார்வதி கல்யாணம், மீனாட்சித் திருமணமெல்லாம் இருந்​தாலும் அன்றைய கிராமங்​களில் வள்ளித் திருமண நாடகம்தான் பிரபலம். கிழவர் உருவில் வரும் முருகனை வள்ளி பரிகசிப்​பார்.
  • சித்தர் மொழியின் சந்தத்​தில், “பழுத்த பழம் தித்திக்​குமடி, இந்தப் பாழும் காயெல்லாம் புளிக்​குமடி” என்று அந்தப் பழுத்த கிழம் பாடுவதை இளைஞர்​களும்தான் ரசித்தார்கள். தனியாக இருக்கும் வள்ளி​யிடம் தான் வந்ததற்குச் சாக்குச் சொல்லும், “தேடி வந்தேனே புள்ளி மானை—அது ஓடிவந்​ததால் இங்கு நானே” என்ற முருகனின் பல்லவியை மறக்க முடியுமா?
  • சிருங்​காரத்தோடு நகைச்​சுவையும் பிணைந்​து​கொண்ட இந்தக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து மக்கள் மாய்ந்​து​போனார்கள். முருகனின் ஆறு முகங்​களில் ஒன்று குறமகள் வள்ளியோடு சல்லாபிக்​கிறது என்கிறார் நக்கீரர். சுப்ரமணிய மங்கள அஷ்டகத்​தில், ‘வள்ளியின் முகத் தாமரையில் தேன் பருகும் முருகனே’ என்பது ஒரு வரி. கராவலம்பச் சுலோகங்​களுக்கு, ‘வள்ளி மணவாளனே, என்னைக் கைதூக்​கி​விடு​வாய்’ என்பது ஈற்றடி.
  • ஓர் அடையாளத்தை அழுத்​த​மாக்​கும்போது மற்ற எத்தனையோ கலாச்சார அடையாளங்​களைத் தெரிந்தோ, தெரியாமலோ ஒதுக்​கி​விடு​கிறோம். அடையாள அரசியலில் இன்னொரு ஆபத்தும் உண்டு. ‘என் கலாச்​சா​ரம்தான் பூர்வ கலாச்​சாரம்; மற்றவற்​றைவிட அதற்கு அரசியல் அதிகாரத்​துக்கான உரிமை அதிகம்’ என்கிற இடத்துக்கு அது எளிதாக நகரக்​கூடும்.
  • இலக்கிய நாயகனாக வைத்தே, முருகனைச் சமயம் கழிந்த கலாச்சார அடையாள​மாக்​கிக்​கொள்வது சாத்தியமா என்று தெரியாது. திருப்​பரங்​குன்​றத்து முருகனைப் பாடும் நக்கீரர் அவன் பாதங்களை ‘தான்’ என்னும் நினைவு கட்டு​விட்டுச் சிதறும் இடமாகச் சொல்கிறார். அது பல இந்தியச் சமயங்​களின் ஆதாரக் கோட்பாடு என்பதை மட்டும் அறிவேன். தமிழ் அடையாளத்தின் அடுத்த நகர்வு எந்தப் புள்ளிக்​கு?

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்