TNPSC Thervupettagam

திராவிட மொழிகளின் தாய்!

February 12 , 2019 2142 days 7456 0
  • மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதில், மகத்தான பங்களிப்பைச் செய்தவை மொழிகள்தான்.
  • நாடோடித் திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல்மேல் சேர்தல், உழவு செய்தல் இந்த ஐந்து படிநிலைகளில் மனித நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது.
மனித இனம்
  • காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சியளித்த மனித இனம், வேட்டையாடுதலின் மூலம் ஒரு வேட்டைச் சமூகத்தையே தன் இதயத்தில் தாங்கி நகர்ந்தது. அதன் முன்னர் நாடோடியாகத் திரிந்து பல்வேறு கால தட்பவெப்ப நிலைகளில் தன் உடல் தாங்க, மனம் ஏங்க புதியவற்றை கற்றுக் கொண்டது.
  • பின்பு நாகரிகம் வளர்ந்து, ஆடு, மாடுகளை தன்னகத்தே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மேய்ச்சல் சமூகமாக நாகரிகம் விரவியது. பின்னர் விரிந்து பரந்த கடற் பகுதிகளில் மீன் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி, அதில் தானும் உண்டு, பிறருக்கும் வழங்கி, அதன் மூலம் ஒரு பண்டமாற்று நாகரிகத்தை நோக்கி நகர்ந்தது. அதன் பின்பு விவசாயம் செய்ய விதைத்தல் மூலமாக, விவசாய நாகரிகத்தைக் கற்றுணர்ந்தான்.
மொழி – கருவி
  • தனக்குத் தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும். முதலில் தம் எண்ணங்களை, மெய்ப்பாடுகள், சைகைகள், ஓவியங்கள் போன்றவற்றின் மூலமாக பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர்.
  • இவற்றின் மூலம் பருப்பொருள்களை (கண்ணில் காணக்கூடிய, தொட்டு உணரக்கூடிய பொருள்கள்) மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண் பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கி பயன்படுத்தத் தொடங்கினர்.
  • சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது. மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும், இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாகின.
  • உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில், மொழிக் குடும்பங்கள் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 

மொழிகளின் எண்ணிக்கை
  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1,300-க்கும் மேற்பட்டது எனலாம். இவற்றை நான்கு மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை இந்தோ ஆசிய மொழிகள்; 2.திராவிட மொழிகள்; 3.ஆஸ்திரோ ஆசிய மொழிகள்; 4.சீன திபெத்திய மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • பல மொழிகளும் இங்கு பேசப்படுவதால், இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலையாகத் திகழ்கிறது என்று அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். உலகின் குறிப்பிடத்தக்க பழைமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று.
  • மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.
  • திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர், குமரிலப்பட்டர். தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் "திராவிடா' என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
  • ஈராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தை தமிழ், தமிலா, தமிழா, டிரமிழா, ட்ரமிழா த்ராவிடா, திராவிடா என்று உணர்த்துகின்றார். முதலில் பிரான்சிஸ் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து, இவை தனி ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார். இந்த மொழிகளை ஒரே இனமாகக் கருதி, தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனையொட்டி மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழியன்
  • ஹோக்சன் என்பார் இந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து, "தமிழியன்' என்று பெயரிட்டதோடு, மற்ற மொழிகளில் இருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ்முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். 1856-இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார்.
  • கால்டுவெல்லுக்குப் பின்னர், ஸ்டென்கெனா, கே.வி.சுப்பையா, எல்.வி.ராமசாமி, பரோ, எமினோ, கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள், மொழி வழியான ஆய்வுகளுக்கு பங்களிப்புச் செய்தனர்.
  • மொழிகள் பரவிய நில அடிப்படையில், தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக திராவிட மொழிக் குடும்பம் வகுக்கப்பட்டுள்ளது.
  • இவற்றில் தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொற்றகொரகா, துளுவம், குடியா ஆகியவை தென் திராவிடம் என்றும், தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா, கோலமி, நாய்கி, பெங்கூ, முன்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா ஆகியவை நடு திராவிடம் என்றும், குரூக், மால்தோ, பிராகுய் ஆகியவை வட திராவிடம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
திராவிட மொழிகள்
  • மேலும் அண்மையில் கண்டறியப்பட்ட எருகளா, தங்கா, குரும்பா, சோளிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்து, திராவிட மொழிகள் மொத்தம் 28 என்றும் கூறுவர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டதாகவே காண முடிகிறது.
  • ஏனென்றால், சொற்களின் தவிர்க்க முடியாத பகுதிதான் வேர்ச்சொல் என்பதும், அடிச்சொல் என்பதும் ஆகும். இவற்றில் உதாரணமாக, அடிச்சொல் திராவிட மொழிகள் ஒன்றை உதாரணமாக நாம் காணுகிற போது, கண் என்பது தமிழில் கண்ணு மலையாளத்திலும், கன்னடத்திலும் மருகுகிறது.
  • இது போல் கன்னு, தெலுங்கிலும், குடகிலும் இவ்வாறாக தோன்றுகிறது. குரூக் மொழியில் ஃகன் என்றும் பர்ஜி மொழியில் கெண் என்றும், தோடா மொழியில் கொண் என்று தோன்றுகிறது. ஆக, இதன் அடிச்சொல் என்பது தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதை ஓர் ஆய்வின் தரவுகள் நமக்குச் சொல்லுகின்றன.
  • மேலும், ஒரு சான்றாக தமிழில் மூன்று என்று எண்ணைக் குறிப்பிடுகிறோம். மலையாளத்தில் மூணு என்றும், தெலுங்கில் மூடு என்றும், கன்னடத்தில் மூரு என்றும், துளுவில் மூஜி என்றும் அழைக்கப்படுகிறது. இம்மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ் மொழியில் இருந்துதான் எழுத்துக்களாக உருவாகி இருக்கிறது என்பது கண்டறிந்த ஆய்வுகளாகும்.
திராவிட மொழி – வட மொழி
  • திராவிட மொழிகளில் உயிரெழுத்தில் இருந்த குறில், நெடில் வேறுபாடுகள், வேறுபடுத்த துணை செய்கின்றன. இவற்றில் பொருள் தன்மையை ஒட்டி பால் பாகுபாடு, திராவிட மொழிகளில் அமைந்துள்ளது.
  • ஆனால், வடமொழியில் இவ்வாறு அமையவில்லை. உயிரற்ற பொருள்களும், கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும் பால்பாகுபாடு படுத்தப்படுகின்றன. இம்மொழிகளில், கைவிரல்கள் பெண் பால் என்றும், கால் விரல்கள் ஆண் பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன.
  • திராவிட மொழிகளில் அவ்வாறாக இல்லை. இவற்றில் ஆண் பால், பெண் பால் என்ற பகுப்பு உயர்திணையில் ஒருமையில்தான் காணப்படுகிறது. பன்மையில் அமையப் பெறவில்லை. அஃறிணைப் பொருள்களைப் பொருத்த மாத்திரத்தில், ஆண், பெண் என்ற பால் அடிப்படையில் பகுத்தாலும், அவற்றுக்கென பால் காட்டும் விகுதியில் அமையப் பெறுவது இல்லை.
உதாரணம்
  • இவற்றில் கடுவன் - மந்தி, களிறு - பிடி என்பது நாம் எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். இவற்றில் ஒரு படி மேலாகப் போய்ப் பார்த்தோமானால், ஆங்கிலம் போன்ற மொழிகளில், வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும். இவற்றுள் தினை, பால் + எண் ஆகியவை வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன. வந்தான் என்பது, உயர்திணை ஆண்பால் ஒருமை என்பதை உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆனால், மலையாள மொழி இவ்வியல்புகளுக்கு மாறாக அமைந்துள்ளது; திணை, பால், எண் ஆகியவற்றில் பாலறி கிளவிகள் இல்லை. தனிச்சொற்களே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும்.
  • இவ்வாறாக, திராவிட மொழிகளில் சில பொதுப்பண்புகளும், சிறப்புகளும் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கு என்று சிறப்பும், தனித்தன்மைகளும் அமைந்திருப்பதே, தமிழுக்கு கிடைத்த மிகப் பெரும் பேறாகும். மலையாளத்தில் 12-ஆம் நூற்றாண்டில் ராமசரிதமும், 15-ஆம் நூற்றாண்டில் இலக்கணநூல் லீலாதிலகமும் அந்த மொழிக்கான பெருமைகளாகும். தெலுங்கில் 11-ஆம் நூற்றாண்டில் இலக்கியம் பாரதமும், 12-ஆம் நூற்றாண்டில் ஆந்திரா பாஷாபூசணமும் அந்த மொழிக்கான மூலமாகும்.
  • அதே போன்று, கன்னடத்தில் 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியம் கவிராஜமார்க்கம் ஆகும்.
  • இவை இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் உள்ளதற்குச் சான்றாக உள்ளன. தமிழ் மொழியைப் பொருத்தவரை, 2-ஆம் நூற்றாண்டு அளவில் சங்க இலக்கியமும், 3-ஆம் நூற்றாண்டு அளவில் தொல்காப்பியமும் நமது மொழிக்கான பெருமை குறித்த தரவுகளாகும். ஆக, இவற்றிலிருந்துதான் தென்னிந்திய மொழிகள் தோன்றியிருக்கின்றன என்பது பல்வேறு ஆய்வுகளின் சான்றுகளாகும்.
மற்ற நாடுகளில்
  • இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா, மோரீஷஸ், பிரிட்டன், டயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தொன்மையும், இலக்கண இலக்கிய வளமும் உடைய தமிழ் மொழி பேசப்படுகிறது என்பது மொழி குறித்தான பெருமைகளாகும்.
  • தனித்த இலக்கண வளமும், பிறமொழித் தாக்கம் குறைந்தும், திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாகவும், சொல் வளமும், சொல்லாட்சி உடையதாகவும் தமிழ் உள்ளது. மேலும், இந்திய அளவில் கல்வெட்டுத்துறையின் ஆராய்ச்சியின் பெரும் பகுதி தமிழில் இடம்பெற்றுள்ளதும் தொன்மையான மூத்த மொழி தமிழ் என்பதும் ஆய்வாளர்களின் பார்வையாகும். தனித்தன்மை மாறுபடாமல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாக தமிழ் மொழி விளங்குவதால், பல நூற்றாண்டுகள் கடந்தும் தழைத்தோங்கி விளங்குகிறது.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்