TNPSC Thervupettagam

திரிக்க முடியாதது வரலாறு!

August 11 , 2024 109 days 135 0
  • “கடந்த காலத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்களே எதிர்காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்; நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துகிறவர்கள் கடந்த காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்” என்பது ‘1984’ என்ற நாவலில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய பிரபலமான வரிகள். ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யாவை மனதில் கொண்டு ஆர்வெல் எழுதியது அந்த நாவல்.
  • ஆனால், அவர் சொன்னது உலகின் எந்தப் பகுதியிலும் ஆட்சி நடத்தும் ஆளுங்கட்சியும் அதன் சர்வாதிகாரத் தலைவரும் தங்களுக்கேற்ப வரலாற்றைத் திணிக்க முற்படுவதற்கு முற்றிலும் பொருந்துவது; இளையவர்கள் அல்லது முதியவர்கள், ஆடவர் அல்லது மகளிர், ஏழை அல்லது பணக்காரன், தன்பால் ஈர்ப்பாளர் அல்லது சாதாரணமானவன் – என்று அனைவர் மீதும் மேற்கொள்ளப்படுவதே வரலாற்றுத் திணிப்பு.
  • வெளிப்படையான சமூகத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் ஒரேயொரு வகைப்பாட்டில் மட்டும், ‘இதுதான் வரலாறு’ என்று திணித்துவிடவும் முடியாது. அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் ஆட்சியில் இருக்கும்போது, வெவ்வேறு பிரிவு மக்களுக்கிடையே உறவு எப்படி இருக்க வேண்டும் என்று கூற வெள்ளையினத்தை மேன்மைப்படுத்தியே கதைகளைக் கட்டுவர், ஆனால் மற்ற இனத்தவர் இதைத் தீவிரமாக கேள்விக் கேட்பார்கள்.
  • குறைபாடுகள் உள்ள அல்லது பகுதியளவே ஜனநாயகம் என்கிற இந்தியா போன்ற நாடுகளிலும்கூட, அரசின் ஆதரவிலான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அப்படியே ஏற்காமல் தீவிரமாக விவாதிப்பார்கள். தங்களுக்கிருக்கும் அனைத்து அதிகாரத்தையும் திரட்டி, இந்து – முஸ்லிம் உறவு தொடர்பாக ஒருவிதச் சித்திரத்தைத் தீட்ட நரேந்திர மோடி அரசு முயற்சி செய்தது.
  • காட்டி அவரை சிறுமைப்படுத்த தீவிரமாக முயன்றது. ஆயினும் இணையதளங்களிலும் பதிப்பகங்களிலும், யூட்யூப்களிலும், பழைய செய்தித்தாள்களிலும் உண்மை என்ன என்பது பதிவாகியிருப்பதால், உண்மை என்னவென்று புரிந்தவர்களால் வரலாற்றைத் தவறில்லாமல் எடுத்துரைக்க முடிகிறது. இப்படி தனித்தனியாக ஆங்காங்கே ஒலிக்கும் சில குரல்களையும் அடக்கிவிடத்தான், புதிய ஒலிபரப்பு (தடை) மசோதாவை மோடி அரசு தயாரித்துக்கொண்டிருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி

  • மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் – அல்லது சிந்திக்கக் கூடாது என்று மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்து, கட்டுப்படுத்தும் வேலையை இப்போதைய காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல வேறு எவருமே செய்வதில்லை. சீனத்தின் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகியவற்றை மக்கள் விரும்பும் வகையில் அறியவும், சீனத்தில் நடந்தவற்றை நியாயப்படுத்தவும் நான்கு அடிப்படைகளின் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.
  • முதலாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே – எதையுமே சரியாகத்தான் செய்கிறது, அது தவறே செய்யாது, அதன் தலைவரும் (முன்பு மா சேதுங் இப்போது ஜி ஜின்பிங்) எப்போதுமே சரியான முடிவுகளையே எடுப்பார்கள், தவறுகளுக்கு இடம்தரவே மாட்டார்கள்.
  • இரண்டாவது, கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும், சீனத்தின் மாபெரும் தலைவரும் அல்லும் பகலும், வசந்தம் – கோடை – இலையுதிர்காலம் - குளிர்காலம் என்று எல்லா பருவங்களிலும் சீனத்தை எப்படி மேலும் உயர்த்துவது, நாட்டை எப்படி வலிமையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது, மக்களை வளமாகவும் மகிழ்ச்சியாகவும் எப்படி வைத்திருப்பது என்பதையே ‘இடைவிடாமல் சிந்தித்து’ உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
  • மூன்றாவது, அரசின் அல்லது கட்சியின் கொள்கைகளை, நிர்வாகத்தைப் பொதுவெளியிலோ – தனிப்பட்ட முறையிலோ விமர்சிப்பவர்களும், கேலி பேசுவோரும் ‘நாட்டின் எதிரிகள்’, அன்னிய நாடுகளின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர்.
  • நாலாவது, இந்த விமர்சனங்களையும் விமர்சகர்களையும் கட்சி உடனடியாகவும் கடுமையாகவும் ஒடுக்காவிட்டால் 1949இல் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இருந்த ‘இருண்ட கால’த்துக்குச் சீனம் திரும்பிவிடும், மக்கள் பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் பிளவுபட்டு தங்களுக்குள் மோதலிலும் உள்நாட்டுப் போரிலும் ஈடுபடுவர், அதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் கைப்பிடிக்குள் நாடு சென்றுவிடும்.
  • வரலாறு குறித்து கட்சி என்ன நினைக்கிறதோ அதற்கு மாறுபட்டுச் சிந்திப்பதை, இந்திய ஆட்சியாளர்களைவிட சீன ஆட்சியாளர்கள் மிகக் கடுமையான குற்றமாகக் கருதுவார்கள் – அமெரிக்கா ஒரு பக்கம் இருக்கட்டும். 1949 முதல் ஆளும் அரசுக்கு எதிராகப் பேசுவதோ எழுதுவதோ மிகப் பெரிய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும், வேலை போய்விடும், கைதும் செய்வார்கள், ‘கட்சி கூறும் வரலாற்றையா நம்ப மறுக்கிறாய்?’ என்று சிறையில் அடைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்வார்கள் – சமயங்களில் கொலைகூட செய்துவிடுவார்கள்.
  • ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள சில புத்தகங்களைப் படிக்கும்போது, நவீன சீனத்தின் உண்மையான வரலாற்றைத் தங்களுடைய நாட்டவருக்குக் கூறிவிட வேண்டும் என்று எப்படியெல்லாம் சிலர் துணிந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து வியப்பு ஏற்படுகிறது. நாட்டின் வரலாறு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றையும்கூட அவர்கள் ‘உள்ளது உள்ளபடியே’ எழுதியுள்ளனர்.

இயான் ஜான்சன் புத்தகம்

  • சீன அரசால் வெளியே தள்ளப்படும்வரையில் அந்த நாட்டில் பல ஆண்டுகள் நிருபராக இருந்த இயான் ஜான்சன், சீனத்துக்குள் பயணித்து ஏராளமானோரைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியும் நேர்காணல் மூலம் அறிந்தும் இந்த நூலை எழுதியிருக்கிறார். நூலின் பெயர் ‘ஸ்பார்க்ஸ்: சீனா’ஸ் அண்டர்கிரௌண்ட் ஹிஸ்டோரியன்ஸ் அண்ட் தெய்ர் பேட்டில் ஃபார் த ஃப்யூச்சர்’ (Sparks: China’s Underground Historians and Their Battle for the Future).
  • கட்டுரையாளர்கள், நிருபர்கள், வலை எழுத்தாளர்கள், ஆவணப்பட தயாரிப்பாளர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார். வரலாற்றை எழுதும் அதேவேளையில் சீன நாட்டின் பன்மைத்துவம் வாய்ந்த நிலப்பகுதி, நகர்ப்புற – கிராமப்புற வாழ்க்கை, பண்பாடு மற்றும் நாகரிக வளர்ச்சியின் வரலாறு, வளம் மிகுந்த கலைத் துறை, இலக்கியம், மெய்யியல் பாரம்பரியம் என்று அனைத்தையும் சித்தரித்திருக்கிறார்.
  • கம்யூனிஸத்துக்கும் அப்பாற்பட்ட சீனத்தை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன், கம்யூனிஸம் இல்லாத சீனம் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சிந்திக்கவும் வைக்கிறார்.

மாவோவின் கொடுங்கோன்மை

  • 1949 முதல் 1976இல் இறக்கும் வரை சீன மக்கள் மீது மாசேதுங் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளை ஒன்றுவிடாமல் நூலில் விவரித்திருக்கிறார். மாவோவின் வளர்ச்சிக்கு, ‘எதிரிகள்’ தேவைப்பட்டார்கள், எனவே அவர்களை எங்கும் அவர் அடையாளம் கண்டார்.
  • பண்ணைகளில், ஆலைகளில், நகரங்களில், கிராமப்புறங்களில் – ஏன் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயும்கூட. நேர்மையாகவும் கடுமையாகவும் பாடுபட்ட லட்சக்கணக்கான அப்பாவிகளை மாவோவின் குண்டர்கள், ‘எதிர்ப் புரட்சியாளர்கள்’ என்று முத்திரை குத்தி, ‘மக்களின் எதிரிகள்’ என்று பட்டம் சூட்டி கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கினார்கள். அவர்களில் அதிருஷ்டம் செய்தவர்கள் வேலை பறிப்பு, குடியிருப்பு இடிப்பு, உழைப்பு முகாம்களில் இடுப்பொடிய கடுமையான வேலை என்ற தண்டனைகளோடு தப்பித்தார்கள், மற்றவர்கள் வரம்பில்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டதுடன் கொல்லப்பட்டும் இறந்தனர்.
  • மாவோவுக்கு வினோதமான வேட்கைகளும் கொலை செய்யும் நோக்கங்களும் இருந்தன. 1956இல் நாட்டு மக்களைப் பார்த்து, “உங்கள் மனங்களில் உள்ளதையெல்லாம் அப்படியே வெளிப்படையாகப் பேசுங்கள் – ஆயிரம் பூக்கள் பூக்கட்டும்” என்றார். இதை உண்மையென்று நம்பி அப்படியே மனங்களில் உள்ளதையெல்லாம் சொன்னவர்களில் பலரை, ‘தீவிர வலதுசாரிகள்’ என்று முத்திரை குத்தி அவர்களுடைய ‘சிந்தனையைத் தெளிவாக்கும் நடவடிக்கைக’ளுக்கு உள்ளாக்கினார். வலதுசாரிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தையே தொடங்கிவைத்தார்.
  • எழுத்தாளர்கள், மாற்றுச் சிந்தனை கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசுத் துறை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், அறிவியலாளர்கள் என்று பலரும் வெவ்வேறு வகைகளில் தண்டிக்கப்பட்டனர். எவருமே சுய சிந்தனையுடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கையின்போது பல்கலைக்கழகங்கள், உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள், ஆய்வு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள்கூட தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்கிறார் ஜான்சன். 
  • ஆயிரக்கணக்கானோரை கடுமையான ‘உழைப்பு முகாம்க’ளுக்கு அனுப்பினர், எஞ்சியவர்களை எச்சரித்து, கட்சியின் கட்டளை மற்றும் சிந்தனைக்கேற்ப தங்களைத் திருத்திக்கொள்ளுமாறு அனுப்பிவிட்டனர்.

தலைமறைவு வரலாற்றினர்

  • ஜான்சன் தன்னுடைய நூலில், ‘தலைமறைவு வரலாற்றினர்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறார், அவர்கள் எல்லாம் அரசால் சிறைக்கும் உழைப்பு முகாமுக்கும் அனுப்பப்பட்ட, கொல்லப்பட்டவர்களின் உடன் பிறந்தவர்கள் அல்லது வாரிசுகள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் இருண்ட பக்கங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக அவர்கள் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
  • மாவோவின் சிந்தனையில் உதித்த, பிறகு அறிவித்து செயல்படுத்தப்பட்ட ‘பெரும் பாய்ச்சல்’ (கிரேட் லீப் பார்வேட்), ‘கலாச்சாரப் புரட்சி’ (கல்சுரல் ரெவல்யூஷன்), ‘திபெத்தை நாசமாக்கு’ போன்ற சிறப்பு திட்டங்களின் பின்னாலிருக்கும் உண்மையான தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

21வது நூற்றாண்டின் முற்பகுதியில்

  • சீன அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்கள் பலர் 21வது நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்துள்ளனர். அது ‘வெளிப்படையான காலம்’ என்று அழைக்கப்படுகிறது. அரசு கூறிக்கொள்ளும் வரலாற்றுச் சாதனைகளின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாவது, அசைத்துப் பார்ப்பது, மறுத்துப் பேசுவது அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கிறது. வெளிப்படையாகவும் மனிதாபிமானத்துடன் இருந்த சீனத்துக்குத் தங்களைப் பிரதிநிதியாகக் கருதியதால், அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழுதவும் ஆவணப்படங்களைத் தயாரிக்கவும் அவர்கள் துணிந்துள்ளனர்.

ஜி ஜின்பிங்குக்குப் பிறகு

  • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் ஜி ஜின்பிங் பதவியேற்ற 2012க்குப் பிறகு இப்படிக் கருத்து தெரிவிப்பதும்கூட மிகவும் கடினமான செயலாகிவிட்டது. ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த புதிதில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை மிகச் சிறந்த முறையில் ‘வெளிச்சத்துக்குக் கொண்டுவர’ விருப்பம் தெரிவித்தார். ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் திரட்டப்பட்டு கட்சி அடைந்த ‘மாபெரும் வெற்றிகளையும்’ மிகவும் ‘அபாரமான அறிவார்ந்த சாதனைகளையும்’ தொகுத்து வரலாற்று நூல் எழுதுமாறு பணிக்கப்பட்டனர்.
  • கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கடந்த காலத்தில் நாட்டுக்காக எப்படியெல்லாம் உழைத்திருக்கிறார்கள், தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் என்று இளம் சீனர்கள் சரியான முறையில் புரிந்துகொள்ளுமாறு வரலாற்றைத் தயாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதேசமயம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைச் சிதைக்கவோ திரிக்கவோ எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது, அப்படி ஏதேனும் எண்ணம் ஏற்பட்டாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும் தகுந்த முறையில் அறிவுறுத்தப்பட்டார்கள்.
  • மாவோ காலத்தில் இருந்ததைவிட ஜி ஜின்பிங் காலத்தில் அரசின் கண்காணிப்பும் ஒடுக்குமுறையும் கடுமையாகிவிட்டபோதிலும், வருவது வரட்டும் என்று சிலர் துணிச்சலாக உண்மைகளைப் பதிவுசெய்துவருகின்றனர். “சீனத்தில் ஆட்சிமுறை மாறியபோதிலும் தனிமனித சுதந்திரச் சிந்தனை இன்னமும் உயிர்ப்புடன்தான் வாழ்கிறது, அதை எவராலும் நசுக்க முடியவில்லை. வரலாற்றைத் திரிப்பதில் கட்சி எப்போதும் ஜெயித்துவிட முடியாது என்று காட்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடர்கின்றனர்” என்கிறார் ஜான்சன்.

ஜியாங் ஹியூ

  • இந்த நூலில் குறிப்பிடப்படும் சில தனிநபர்களின் தார்மிக மற்றும் உடல் துணிவு மட்டும் அல்ல அவர்களுடைய அறிவார்ந்த தெளிவும் என்னைக் கவர்ந்தன. ஜியாங் ஹியூ என்ற பெண் எழுத்தாளர் கம்யூனிஸ்ட் சீனத்தில் வரலாற்றை எழுதுவது குறித்துத் தெரிவிக்கும் கருத்து இதோ: “வரலாற்றைத் திருத்தி எழுதுங்கள் என்றார் சேர்மன் மாவோ; வரலாறு என்பது நிகழ்ந்துவிட்டவற்றின் பதிவுதானே, அதை எப்படித் திருத்தி எழுதுவது? இது ஒன்றும் நாவல் அல்லவே - சம்பவங்களையும் முடிவுகளையும் விருப்பப்படி திருத்தி எழுதி வெளியிட? இது வரலாறுதான் என்றால், இதை எப்படி திருத்தி எழுதிவிட முடியும்? மனசாட்சியுள்ள எவரும் ‘திருத்தி எழுதப்பட்ட’ வரலாற்றை நிராகரிக்கவே செய்வார்கள்” என்கிறார்.
  • ஜாங் ஷி என்ற பத்திரிகையாளர் கூறுகிறார், “நான் ஏன் உண்மைகளை எழுதுகிறேன் என்றால், இவர்கள் எழுதும் பொய்யான வரலாற்றைப் படிக்கும்போது எனக்கு கோபம் கொப்பளிக்கிறது, நான் உண்மையைப் பேசியே தீர வேண்டும்.”
  • இன்னொருவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்வியாளர். “அரசியல் என்ன, குருடர்களை வழிநடத்தும் பைத்தியக்காரர்களின் நிகழ்வா?” என்று கேட்கிறார்.
  • “கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்படும் சீனம் போன்ற நாட்டில் இப்படி உண்மைகளைப் பதிவுசெய்கிறேன் என்ற முயற்சி அர்த்தமற்றது, தேவையும்படவில்லை, இதுவொன்றும் இந்த ஆட்சியின் மீது எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடாது” என்று ஜியாங் ஹுயூவிடம் அவருடைய தோழி கூறுகிறார். “உன்னுடைய கருத்தை என்னால் ஏற்க முடியாது. நீ முயற்சி செய்தால் அதற்கு நிச்சயம் பயன் இருக்கும். ‘அசாதாரண’மான இந்தச் சமூகத்தில், நான் ‘சாதாரணமானவ’ளாக இருக்க விரும்புகிறேன். உண்மைகளைச் சொல்ல என்னால் முடியும், என் மனதில் உள்ளதை அப்படியே பதிவுசெய்வேன்” என்று பதில் அளிக்கிறார் ஜியாங் ஹியூ!

நன்றி: அருஞ்சொல் (11 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்