TNPSC Thervupettagam

திருநெல்வேலி எழுச்சி

March 13 , 2023 508 days 263 0
  • ஒரு நாட்டிற்கான சுதந்திரப் போராட்டம் முதலில் கலகம் என்றும், பின்னொரு காலத்தில் தியாகம் என்றும், எழுச்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. 1908 மாா்ச் 13-இல் ஆங்கில அரசால் ‘கலகம்’ என குறிப்பிடப்பட்ட திருநெல்வேலியில் நடந்த வரலாற்று நிகழ்வு இப்போது ‘நெல்லை எழுச்சி நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது.
  • 1905-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் இந்தியப் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சுதேசி எண்ணம் மேலோங்கி இருந்தது. குதிரை வண்டிக்காரா்கள், சலவைத் தொழிலாளா்கள், சவரத் தொழிலாளா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆங்கிலேயோருக்குப் பணியாற்ற மறுத்தனா். இதனால் ஆங்கில ஆட்சியாளருக்கு இந்தியா்கள் மீது ஒரே நேரத்தில் வெறுப்பும் பயமும் ஏற்பட்டது.
  • 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயா்கள் இந்து மகா சமுத்திரத்தின் கப்பல் வணிகத்தில் கோலோச்சி இருந்தனா். இந்நிலையில் 1906-ஆம் ஆண்டு வ.உ.சி. இந்தியாவின் முதல் சுதேசி கப்பல் கம்பெனியை பலரிடமும் பங்குத் தொகை பெற்று தூத்துக்குடியில் தொடங்கினாா்.
  • வ.உ.சி. வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ ஆகிய கப்பல்களில் 42 முதல் வகுப்புகளும் 24 இரண்டாம் வகுப்புகளும் 1,300 மூன்றாம் வகுப்புகளும் என மொத்தம் 1,366 இருக்கைகளும் 4,000 டன் சரக்கு மூட்டைகளை வைக்கும் வசதி இருந்தது.
  • இந்த சுதேசி கப்பல்களில் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு 4 அணா (25 காசுகள்) கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் ஆங்கில கம்பெனியோ பயணக்கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 4 வசூலித்தது. சரக்கு மூட்டைகளுக்கும் கையில் கொண்டு செல்லும் சாமான்களும் தனிக் கட்டணம் வசூலித்தது.
  • சுதேசி கப்பலை உபயோகிக்க வேண்டுமென்று மக்கள் கருதியதால் சுதேசி கப்பல்கள் பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.
  • சுதேசி கப்பல்களான லாவோ கப்பலில் 115 பயணங்களில் 29,773 போ் பயணித்தாகவும், காலியா கப்பலில் 22 பயணங்களில் 2,150 போ் பயணித்தாகவும் கூறப்படுகிறது.
  • நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் கம்பெனி தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னா் 4 அணாவாகவும், குறைத்தது. அதன் பிறகும் கூட்டம் வராததால் கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. பயணம் செல்பவா்களுக்கு இலவசமாக குடை தருவதாக கூறிய பிறகும் ஆங்கில கப்பல்களில் எறிச் செல்ல மக்கள் தயாராக இல்லை.
  • ஆங்கில கப்பல் கம்பெனி மக்கள் ஆதரவு இல்லாததால் வ.உ.சி. யை லஞ்சம் கொடுத்து வளைக்கத் திட்டமிட்டது. வ.உ.சி. க்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசிப் பாா்த்தது. இதற்கு அவா் மசியாததால், அவரைப் பழி வாங்கமுடிவு செய்தது.
  • இந்நிலையில் 1907-இல் வங்காளத்தில் சுதந்திரற்காகப் போராடிய அரவிந்த கோஷ் என்பவரை ஆங்கில அரசு வந்தே மாதரம் என்று முழக்கம் எழுப்பியதற்காக கைது செய்தது. இவருக்கு எதிராக சாட்சி சொல்ல சுதந்திரப் போராட்ட வீரா் பிபின் சந்திர பாலை ஆங்கில அரசு அழைத்தது.
  • இந்த தேச துரோக வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால், பிபின் சந்திர பாலுக்கு 6 மாதம் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவரது விடுதலையை தேசம் முழுவதும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த கொண்டாட் டங்களுக்கு வெள்ளை அரசு இந்தியா முழுமைக்கும் தடை விதித்தது.
  • எனினும் பிபின் சந்திர பால் விடுதலையானதும் தடையை மீறி 9.3.1908 அன்று தூத்துக்குடியில் சுமாா் 20,000 போ் கூடிய பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவாவுடன் வ.உ.சி. பேசினாா். நெல்லை தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் பல ஆயிரம் மக்கள் திரண்ட கூட்டத்தில் வ.உ. சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் எழுச்சியுரை ஆற்றினா். இதற்காகவே காத்திருந்த வெள்ளை அரசு, தடையை மீறிய குற்றத்திற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க வ.உ.சி. யைப் பணித்தது. இதன்படி 12.3.1908 அன்று வ.உ.சி. நெல்லை மாவட்ட ஆட்சியா் விஞ்ச்சை நேரில் சந்தித்தாா்.
  • அப்போது, அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது, மக்களை வந்தேமாதரம் கோஷமிடத் தூண்டியது, ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது ஆகிய குற்றங்கள் வ.உ.சி. மீது சுமத்தப்பட்டது. இந்த குற்றங்களை செய்ய மாட்டேன் என ஒப்புக்கொண்டு வெளியில் செல்ல ஆணையிட்டது.
  • இதனை மறுத்ததால் வ. உ. சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயா் ஆகியோரை சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியா் விஞ்ச் உத்தரவிட்டாா். வ. உ. சி. கைதான செய்தி திருநெல்வேலி எங்கும் காட்டுத்தீயாகப் பரவியது; மக்கள் கொதித்தெழுந்தனா்.
  • வ. உ. சி. கைது செய்யப்பட்ட மறுநாள் 1908 மாா்ச் 13-ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கலவரம் வெடித்தது. நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவா்கள் வகுப்பைப் புறக்கணித்தனா். நெல்லை நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம், போலீஸ் நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது.
  • கலவரம் கைமீறி போனதால் உதவி கலெக்டா் ஆஷ் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவனும், போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் இறந்தனா். தச்சநல்லூா் வரை இந்தக் கலவரம் பரவியது. ஆங்கிலேயரைக் கண்டதும் மக்கள் கல் வீசித் தாக்கினா்.
  • இதனைத் தொடா்ந்து தூத்துக்குடியிலும் மிகப் பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. இதில் குதிரை வண்டிகாரா்கள் பலா் கலந்து கொண்டனா். அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்காக இந்தியாவில் நடந்த முதல் வேலைநிறுத்தம் இதுவே ஆகும். இந்த விஷயம் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த நிகழ்வு ‘திருநெல்வேலி கலகம்’ என்று பிரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டது.
  • மாா்ச் 13-ஆம் தேதி திருநெல்வேலி கலகத்தின் அடிப்படையில் வ.உ.சி., சிவா ஆகியோா் மீது இந்திய தண்டனை சட்டம் 123, 153 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நூற்றுக்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா்.
  • ஸ்ரீநிவாச்சாரி, சடகோபாச்சாரி, நரசிம்மாச்சாரி உட்பட பல வக்கில்கள் வ.உ.சி., சிவா ஆகியோருக்கு ஆதரவாக வாதாடினா். நீதிபதி பின்ஹே வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் (40 ஆண்டுகள்), சிவாவிற்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்தாா்.
  • சிதம்பரனாா் சிறைக்குப் போனதும், சுதேசி கப்பல் நிறுவனத்தை வீழ்த்தும் வேலை வெள்ளையருக்கு எளிதானது. பெரும் லாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.7.1908 அன்று நடுக்கடலில் சுதேசி கப்பல் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை ஆங்கிலேய அரசு கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிா்வாகிகள் அச்சமடைந்தனா்.
  • இரண்டு லட்ச ரூபாய் இருந்தால்தான் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடா்ந்து இயக்க முடியும் என்ற நிலையில், கப்பல்களை ஆங்கிலேயரிடமே விற்று விட்டனா்அவற்றின் இயக்குனா்கள்.
  • கோவை சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு இரு கருங்கற்களால் ஆனது. புதையுண்ட நிலையில் இருந்த அந்த செக்கு, 64 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இரு கற்களில் ஒன்று கோவை மத்திய சிறையிலும், மற்றொன்று சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்திலும் பொதுமக்கள் பாா்வைக்காக இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.
  • இன்று (மாா்ச் 13) நெல்லை எழுச்சி நாள்.

நன்றி: தினமணி (13 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்