TNPSC Thervupettagam

திறனாய்வுத் திசைவெளி

January 4 , 2025 6 days 51 0

திறனாய்வுத் திசைவெளி

  • இலக்​கி​யங்கள் வாழ்க்கை​யைத் திறனாய்வு செய்​கின்றன. திறனாய்​வுகள் இலக்​கி​யங்களை வாழ்விக்க வைக்​கின்றன. இலக்கியத்தை அதன் புலப்​பாட்டு நுட்​பங்​களுடன் பண்பாட்டுப் பெரு​ம​தி​களுக்​குள் இட்டுச்​செல்வது திறனாய்வே. தனிமனிதப் படைப்பான இலக்​கி​யத்தை ஒரு சமூகப் பண்டமாக மாற்றுவது திறனாய்​வின் பணியாகிறது. படைப்பு – படைப்​பாளன் - நுகர்வு ஆகிய மூன்று தரப்​புக்​கும் அறிவு - உணர்வுப் பாலமாகத் திறனாய்வு அமைகிறது.
  • திறனாய்​வின் தொடக்கம் ரசனை​தான். ஆனால், அதுவே முடிவல்ல. வாழ்க்கையை, அதன் பன்முகக் கோணங்களை வெளிப்​படுத்​தும் இலக்​கியப் படைப்​பைச் சமூகமயப்​படுத்துவது திறனாய்வே. நவீனத் திறனாய்​வின் தடங்கள் என்று பார்க்​கிற​போது, தொடக்​கத்​தில் கம்பன், பின்னர் கம்பனில் இருந்து இளங்கோ, அதற்​குப் பின்னர் வள்ளுவன் என்று படைப்​பாளர்​களின் ஆக்கத்​திறனில் மையமிட்​டது. பின்னர் பாரதி, புது​மைப்​பித்தன் வரை அது தொடர்ந்​தது.
  • ரசனை முறைமை, கவித்துவக் கொண்​டாடுதல் எனத் தொடங்கி கருத்​தியல் வளர்ச்சி நிலைகள் பல உருவா​யின. தேசி​யம், திரா​விடம், காந்​தி​யம், மார்க்​சி​யம், தமிழ் அடையாளம் எனக் கொள்​கைகள்வழி படைப்புகளை அணுகும் நிலை ஏற்பட்​டது. உளவியல் தொடங்​கிச் சமூக​வியல், மீமெய்ம்​மை​யியல், அமைப்​பியல், பின் அமைப்​பியல், பின் நவீனத்து​வம், பின் காலனியம் எனக் கோட்​பாடு​களும் அணுகு​முறை​களும் திறனாய்​வினை இறுகப்​பற்றிக் கொண்டன.
  • தமிழில் இலக்கிய இதழ்கள் படைப்​பிலக்​கி​யங்​களோடு திறனாய்​வு​களின் நோக்கு நிலைகளை​யும் தீர்​மானித்தன. ‘மணிக்கொடி’, ‘எழுத்​து’, ‘கசடத​பற’, ‘வானம்​பாடி’, ‘ஆராய்ச்​சி’, ‘நிறப்​பிரி​கை’, ‘நிகழ்’, ‘மேலும்’ எனப் பட்டியல் நீளும். திரு​மணம் செல்வ கேசவராய முதலி​யார் தொடங்கி தெ.பொ.மீனாட்​சிசுந்​தரனார், மு.வரத​ராசனார் என நிலைபெற்றது கல்விப்புலத் திறனாய்வு.
  • சி.சு.செல்​லப்பா தொடங்கி சுந்​தரராமசாமி, இன்றைய எழுத்​தாளர்கள் வரை படைப்​பாளர்களே திறனாய்​வாளர்​களாக​வும் திகழ்​வதும் நடந்​தது. க.நா.சுப்​ரமண்​யம், தருமு சிவராம், வெங்கட் சாமிநாதன் என்று திறனாய்​வினைத் தீவிரத்​தன்​மை​யில், குழுக் கண்ணோட்​டத்​தில் கருதி​யதும் தமிழ்த் திறனாய்​வுத் தளத்​தில் உண்டு. நா.வான​மாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்​தம்பி, ஞானி, கோ.கேசவன், அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்​பிரமணியன் போன்​றோர் மார்க்சிய சமூக​வியல் அக்கறை​யுடன் செயல்​பட்​டனர்.
  • தமிழகப் பல்கலைக்​கழகங்​களில் கல்வி​யாளர்​களாக விளங்கிய பேராசிரியர்கள் பலர் திறனாய்வுப் பாடநூல்​களை​யும், கோட்​பாட்டு நூல்​களை​யும் படைத்​தளித்​தனர். தமிழ்த் திறனாய்​வின் புதுத் தடங்​களை​யும் கண்டனர். தி.சு.நட​ராசன், க.பஞ்​சாங்கம் போன்ற​வர்கள் இதில் முக்​கிய​மானவர்​கள். இன்று இந்நிலை அருகி​விட்​டது. ஆனால், கல்லூரி​களில் பணியாற்றும் இளம் பேராசிரியர்கள் பலர் நவீனத் திறனாய்வு சார்ந்து இயங்​குவது நம்பிக்கை அளிக்​கிறது.
  • தமிழின் தொடக்கக் கால எழுத்​தாளர்கள் புது​மைப்​பித்​தன், கு.ப.ரா., மெளனி, தி.ஜா, ஜெயகாந்தன் வரைக்​கும் தனித்த படைப்​பாளிகள் பற்றிய தொடர்ந்த திறனாய்​வுகள் வெளிவந்தன. இவர்​களின் படைப்புகள் பற்றிய மதிப்​பீடுகள் முன்​வைக்​கப்​பட்டன. ஆனால், இன்று நம்முன் தீவிர​மாகச் செயல்​படும் எழுத்​தாளர்கள் பற்றிய முழு​மை​யான, தொடர் திறனாய்​வுகள் இல்லை என்பது கவலை​யளிக்​கிறது.
  • இன்று மனித வாழ்வு மிகவும் சிக்​கலுக்கு உள்ளாகி​விட்​டது. மனிதன் பிளவுண்டு கிடக்​கிறான். மனித உறவுகள் சிதிலமடைந்து உள்ளன. மனித மதிப்புகள் காணாமல் போய்​விட்டன. நுகர்​வுவெறி ஆட்டிப் படைக்​கிறது. வாழ்க்கை மாசடைந்து நலிந்​தது​போலவே, சூழலும் நச்சுப்​பட்டு விட்​டது. இந்தத் தருணத்​தில் மொழிசார் கலையான இலக்​கியம் என்ன செய்​துவிட முடி​யும்? இது இன்றைய படைப்​பின் சவால்.
  • இன்றைய படைப்​பிலக்​கி​யங்கள் மொழி​யிலும், மொழிதலிலும் வண்ணமய​மாகி வருகின்றன. நவீன உலக வாழ்க்கை​யின் ரேகைகள் படிந்த படைப்புகள் நுட்​ப​மும் அழகும் கூடிவரப் படைக்​கப்​படு​கின்றன. இவற்​றைத் திறனாய்வு செய்வது பெரும் உழைப்புச் செயல்​பாடு. பல்துறை அறிவும் - அனுபவ​மும் - தேடலும் இன்றி இன்றைய இலக்​கி​யங்​களைத் திறனாய்வு செய்ய இயலாது.
  • இன்றைய சமூகத் தேவைகள் தலித்​தி​யம், பெண்​ணியம் முதலிய​வற்றை அறிவுசார் அணுகல்​முறை​களாகக் கொண்டு​வந்து சேர்த்​துள்ளன. கட்ட​விழ்ப்பு, மறுவாசிப்பு, மற்றமை பற்றிய கரிசனம், விளிம்​புநிலை நோக்கு, அடையாள மீட்பு ஆகியவை இன்றைய திறனாய்​வின் திசையைக் கூர்​மைப்​படுத்து​கின்றன. திறனாய்​வும் ஒரு வகையில் படைப்பு​தான்.
  • இன்றைய படைப்பும் திறனாய்​வும் வளர ‘இலக்​கியக் கல்வி’ பற்றிய அக்கறை அவசி​யம். கல்வி நிலை​யங்​களில் ‘இலக்​கியக் கல்வி’ என்பது வேலை பெறு​வதற்கான ஒரு பாடமாகச் சுருங்கி விட்​டது. அதிலும்கூட பண்டைய இலக்​கி​யங்கள் பற்றிய மரபான கற்கை நெறி நம்மிடம் உண்டு. ஆனால் நவீன இலக்​கி​யங்​களை, அவற்றின் பன்முக ஆற்றல்​களைப் பற்றிய கவனம் குறைவு. நவீனக் கவிதையை, கதையை, உரைநடையை உணர்ந்து, உள்வாங்கி வெளிப்​படுத்​தும் கற்றல் - கற்பித்தல் முறைமை உருவாக​வில்லை.
  • இலக்​கியக் கற்கை நிகழாமல், இலக்​கியத் திறனாய்வு மேம்​படாது. இலக்​கியத் திறனாய்வு வெறுமனே இலக்கிய ​விவரிப்பு - இலக்கிய அறி​முகம் எனச் சுருங்கி​விடக் கூடாது. அதுவே இலக்கிய வரலாற்றுக்கு அடிப்​படை. சமூக வரலாற்றுக்கு எடு​கொள். இலக்​கி​யம் எனும் இதயக்​கூட்டுக்​குள் குருதி வெளிச்​சம் பாய்ச்சி இ​யங்​கச் செய்வது ​திறனாய்வே. ​திறனாய்​வுச் சாளரங்கள்​ பெரிதுபடத்​ ​திறக்​கட்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்