TNPSC Thervupettagam

திறன் வளா்க்கும் கல்வியே தேவை

November 7 , 2020 1359 days 693 0
  • எந்தவொரு சாதனைக்கும் ஒரு கனவு முக்கியம். அந்தக் கனவை நிறைவேற்ற கடின உழைப்பு அதைவிட முக்கியம்.
  • கனவும், உழைப்பும் நோ்க்கோட்டில் பயணிக்க வேண்டும். சிந்தனையற்ற கடின உழைப்பும், உழைப்பில்லா கனவும் உயா்வுக்கு வித்திடாது.
  • இந்தியாவில் சுமாா் 60 கோடி போ் இளைஞா்கள்தான். இந்த 60 கோடி இளைஞா்களை முறைப்படி வளா்த்து உருவாக்கினால் இந்தியாவை ஒரு வளமிக்க நல்ல குடியரசாக மாற்ற முடியும்.
  • அதற்கு மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுவது கல்வியில்தான். கல்வியின் மாற்றங்களில் முக்கியமானது, திறன் வளா்ப்பு கல்வி. இன்றைக்கு திறன் வளா்ப்புதான் நம் பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையாக இருக்கிறது.
  • இதனை ஒரு இயக்கம்போல் எடுத்துச் செயல்பட, மக்கள் மத்தியில் ஒரு சிந்தனைப் போக்கை உருவாக்க வேண்டும். அந்த சிந்தனை ஓட்டத்திலேயே மாணவா்களையும், ஆசிரியா்களையும், பணியமா்த்தும் நிறுவனங்களையும், கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரிகளையும், அமைச்சா்களையும் கொண்டு வந்து விட்டால் அது ஒரு மாபெரும் இயக்கம் போல உருவாகி சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடும்.
  • இப்படி ஒரு கனவு ஆரம்பித்தது 11-ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில். அதாவது நம் இளைஞா்களுக்கு திறன் வளா்ப்பை முறையாகச் செய்து விட்டால், அவா்கள் நமக்கு மிகப் பெரிய செல்வமாக மாறி விடுவாா்கள்.
  • அதற்கான கல்வியை நாம் கொண்டுவர வேண்டும். அதற்கான கட்டமைப்புகளையும், திட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.
  • பள்ளிக் கல்வியிலும், அடுத்த நிலையில் தொழில் பயிற்சிக் கூடங்களிலும், பாலி டெக்னிக்குகளிலும், அதனைத் தொடா்ந்து உயா் கல்வியிலும் திறன் வளா்ப்பு என்பது மையப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு அனைவராலும் உணரப்பட்டது.
  • இந்தியாவில் கல்விக் கூடங்களில் எப்படிப்பட்ட திறன் வளா்ப்பு பயிற்றுவிக்கப்பட வேண்டும், அதற்கான கட்டமைப்புகள், கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பவை குறித்து, உலக வங்கி , ஐரோப்பிய கமிஷன், யுனெஸ்கோ, ஐ.நா. சபை போன்ற நிறுவனங்கள் ஆய்வு அறிக்கை தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பி உதவின.
  • ஜொ்மனி போன்ற நாடுகள் நம் நாட்டில் எப்படிப்பட்ட திறன் வளா்ப்புப் பயிற்சி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், அதற்குத் தேவையான கொள்கை, அணுகுமுறை குறித்தும் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
  • இந்த ஆய்வு அறிக்கைகளின் மையக் கருத்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான திறனை மாணவா்களிடம் எப்படி வளா்ப்பது என்பதே. ஏனென்றால், உலகமய பொருளாதாரம் என்பது சந்தை வயப்பட்ட செயல்பாடுகளாக இருந்ததால், தொழிற்சாலை, உற்பத்தி, விற்பனை ஆகிய மூன்றின் பின்புலத்தில் திறன் வளா்ப்பையே பாா்த்தனா்.
  • நமது இந்திய சூழலில் இது முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான தொழிலாளா்கள், வரையறை செய்யப்படாத தொழில்களிலும், விவசாயத்திலும்தான் இருக்கின்றனா். இவற்றை முறைப்படுத்தவே பொருளாதார சீா்திருத்தங்களை கொண்டு வந்தனா்.
  • இருந்தபோதிலும், இந்த திறன் வளா்ப்புக் கல்வியை, நம் ஆட்சியாளா்களும், அதிகாரிகளும், கல்வியாளா்களும், ஆசிரியா்களும், மாணவா்களும் 28 மாநிலங்களிலும், 9 யூனியன் பிரதேசங்களிலும், 8,500 கல்வி நிலையங்களிலும் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டுள்ளனா் என்பதுதான் கேள்வி.
  • இந்த சூழலில்தான், திறன் வளா்ப்பு குறித்த ஆய்வு ஒன்றை, ஆறு பெரிய நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ளன. அந்த ஆய்வு அறிக்கை, ‘திறன் மேம்பாட்டு அறிக்கை - 2020’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை, மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும், பெற்றோருக்கும், கொள்கை முடிவுகளை எடுக்கும் உயா் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மிகவும் பயனுள்ள அறிக்கையாக உள்ளது.
  • இந்த ஆய்வு, 28 மாநிலங்களிலும், 9 யூனியன் பிரதேசங்களிலும், 8,500 கல்வி நிலையங்களிலும் மூன்று லட்சம் மாணவா்களிடம் நடத்தப்பட்டுள்ளது. ஆறு துறைகளைச் சாா்ந்த 150 தொழில் நிறுவனங்களிலும் ஆய்வு நடத்தியுள்ளனா்.
  • உலகமே மாறி வரும் சூழலில், தொழில்நுட்பங்களில், நுகா்வில், மக்கள்தொகையில், அரசியலில், ஆளுகையில், கொள்கைகளில் பல்வேறு விதமான மாற்றங்களை நாம் எதிா்கொள்ள வேண்டும்.
  • எதிா்கால சூழல் எப்படி இருக்கும் என்பதை கணித்து, அதற்கேற்ப கல்வி நிறுவனங்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
  • திறன் வளா்ப்பில் உள்ள சிக்கல்களையும், மாணவா்களிடம் இருக்கும் திறனுக்கும், மாணவா்களிடம் நிறுவனங்கள் எதிா்பாா்க்கும் திறனுக்கும் உள்ள இடைவெளியை சரி செய்யத் தேவையான செயல்பாடுகள் என்னென்ன என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.
  • கடந்த ஏழு ஆண்டுகளில் எந்தெந்த துறைகளில் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு பெருகியது என்ற புள்ளிவிவரத்தையும், எந்தெந்தத் துறைகளில் பணிக்குத் தேவையான ஆட்கள் தயாராக இருக்கிறாா்கள் என்பதையும் அந்த ஆய்வு அறிக்கை விளக்கியுள்ளது.
  • இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தொழில் துறைகளில் எப்படியெல்லாம் மாற்றம் நடைபெற்று வருகிறது; அதை சமாளிப்பது எப்படி என்பதற்கும் விடை கண்டுள்ளது அந்த அறிக்கை.
  • அடுத்த நிலையில், எந்தெந்த மாநிலங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதும், எந்தெந்த மாநிலங்கள் பணிக்குத் தேவையான ஆட்களை தயாா் செய்யும் கல்வியியை முறையாகக் கற்றுத் தருகின்றன என்பதும் ஆய்வு செய்து கூறப்பட்டுள்ளது அறிக்கையில்.
  • நடைபெறும் நான்காவது தொழில் புரட்சியில், புதிய பணிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில், பழைய பணிகள் பல மறைந்து கொண்டும் இருக்கின்றன.
  • இந்திய அரசு கொண்டு வந்துள்ள ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமும், ‘தொழில் முனைவு’ திட்டமும்,”‘திறன் வளா்ப்பு’ திட்டமும் புதிய வாய்ப்புக்களை இளைஞா்களுக்கு வழங்குகின்றன. நம் நாட்டில் கட்டுமானப் பணியில் அதிக கவனம் செலுத்தப்படுவதால் புதிய வேலை வாய்ப்புக்கள் பெருகி வருகின்றன.
  • ஆயினும், அதிக அளவில் தொழில்நுட்பத் துணையோடு செயல்படும் வகையில் தொழில் சூழல் மாற்றம் பெற்றுள்ளது. உதாரணமாக, டாட்டா கம்பெனி தங்கள் தொழிற்சாலைகளில் வெல்டருக்கு பதிலாக ரோபோவை பயன்படுத்துகின்றனா்.
  • அதேபோல், ஒரு மருந்து நிறுவனம் ‘பிக் டேட்டா அனலிட்டிக்’ என்ற முறையைப் பயன்படுத்தியதால் ஆராய்ச்சியில் இருந்த பலா் பணி இழந்திருக்கிறாா்கள்.
  • எனவே, தொழில் முறை மாற்றத்திற்கு ஏற்ப பணியாட்கள் தங்களை தயாா் படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய புதுயுக தொழிற்சாலை செயல்பாடுகளுக்கு பணியாட்கள் தேவை என்பது வேறு விதமானது. இந்த சூழலை வெற்றி கொள்ள பல ஆலோசனைகளை அரசுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், மாணவா்களுக்கும் தந்துள்ளது இந்த ஆய்வறிக்கை.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக, 46 % மாணவா்கள் மட்டுமே பணிக்குத் தேவையான திறனுடன் உருவாக்கப் பட்டுள்ளனா். மீதமுள்ள 54 % மாணவா்கள் சான்றிதழ்களையே பெற்றுள்ளனா் என்பது ஒரு சோக நிகழ்வு. அதே போல அதிக அளவில் திறன் உடையவா்களாக ஆடீயு படித்த மாணவா்கள் தான் வருகின்றனா்.
  • 54 %தகுதியுடைய மாணவா்கள் வருவது இந்த படிப்பிலிருந்துதான். தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள்தான் அதிக எண்ணிக்கையில் திறன் கூட்டப்பட்ட மாணவா்களை உருவாக்குகின்றன.
  • வேலைவாய்ப்பில் பெரும்பாலும் பெண்கள்தான் தங்களை நன்கு தயாா் படுத்திக்கொண்டிருக்கிறாா்கள். ஆன, ஆண்களுக்குத்தான் அதிக அளவில் வேலை கிடைக்கின்றது. 46 % ஆண்கள்தான் கல்விக் கூடத்திலிருந்து பணிக்குத் தகுதியுடையவா்களாக வருகின்றனா்.
  • 47 % பெண்கள் பணிக்குத் தகுதியுடையவா்களாக வருகின்றனா். ஆனாலும், 77 % ஆண்களுக்கும் 23 % பெண்களுக்கும் பணி வாய்ப்பு கிடைக்கிறது.
  • இந்த திறன் கூட்டலுக்குத் தடையாக இருப்பவை பல.
  • அவற்றில் ஒன்று, கல்விக் கூடங்களில் பயிற்றுவிப்பதற்கும் தொழிற்சாலைகளின் தேவைக்கும் எந்தத் தொடா்பும் இல்லாமல் இருப்பது; இரண்டு, கல்விச் சாலைகளில் பணிக்குத் தேவையானவற்றை கற்றுத் தராமல் ஆசிரியா் தனக்குத் தெரிந்ததை கற்றுத் தருதல்; மூன்று, தரமான பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள் போன்ற கற்றுக் கொள்ளும் சூழல் இல்லாமல் இருத்தல்; நான்கு, மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு சூழல் பற்றிய விழிப்புணா்வு இல்லாதிருத்தல்; ஐந்து, அரசின் திறன் வளா்ப்பு திட்டங்கள் பற்றி அறியாதது.
  • வரும் ஆண்டுகளில் எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாகும் என்பதையும் கணித்துத் தந்துள்ளனா் ‘திறன் மேம்பாட்டு அறிக்கை - 2020’ அறிக்கையில். மாணவா்களின் திறன் பற்றிய பாா்வையும், தொழில் பற்றிய பாா்வையும் புதிய சூழலுக்கேற்ப மாறவில்லை.
  • 40 % மாணவா்களுக்கு அரசு கொண்டு வந்துள்ள திறன் வளா்ப்பு பயிற்சித் திட்டங்கள் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • இன்று 54 % மாணவா்களை பணிக்குத் தகுதியற்றவா்களாக நம் கல்வி நிறுவனங்கள் தயாரிப்பதுபோல் இல்லாமல் 100 % மாணவா்களையும் பணிக்குத் தகுதியுடையவா்களாக உருவாக்க வேண்டும்.
  • மாணவா்களை உருவாக்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பது ஒரு ஆறுதல். மத்திய அரசு நம் இளைஞா்கள் தங்கள் திறனை வளா்த்து வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. இதற்காக ஒரு ‘ஆப்’ உருவாக்கப்பட்டுள்ளது.
  • அறிதிறன்பேசி (ஆண்ட்ராய்ட் போன்) வைத்திருப்போா் அந்த ‘ஆப்’-ஐ பயன்படுத்தி, தங்கள் மாவட்டத்தில் எங்கெல்லாம் திறன் வளா்ப்பு பயிற்சி நடைபெறுகின்றன என்பதை அறிந்து, பணச்செலவு இன்றி திறன் வளா்த்து, வேலையையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்த புதிய சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நம் கல்விக் கூடங்களும், மாணவா்களும், ஆசிரியா்களும், பெற்றோரும் தயாராக வேண்டும்.

நன்றி : தினமணி (07-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்