TNPSC Thervupettagam

தில்லியின் முன்மாதிரி

May 30 , 2022 800 days 425 0
  • பல முன்மாதிரி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது தலைநகா் தில்லி. சென்ற வாரத்தில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 150 மின்சாரப் பேருந்துகளை மாநகரப் பொதுப் போக்குவரத்திற்காக தொடங்கி வைத்தாா். குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகள் தில்லியின் மாநகரப் போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.
  • தில்லி அரசு புதிதாக இயக்கும் 150 மின்சாரப் பேருந்துகள் அதிநவீன தொழில் நுட்பத்துடனும், அம்சங்களுடனும் திகழ்பவை. சிசிடிவி கேமராக்கள், அபாய அறிவிப்புக்கான பொத்தான்கள், ஜிபிஎஸ் கருவி ஆகியவை அந்த பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் மின்சாரப் பேருந்துகளில் பயணிப்பதை பிரபலப்படுத்த மூன்று நாள் இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டது.
  • தற்போது 150 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் தொடங்கி இன்னும் ஒரு மாதத்தில் அதை 300 பேருந்துகளாக அதிகரிக்கப் போகிறது தில்லி போக்குவரத்துத் துறை. அடுத்த ஓராண்டுக்குள் 2,000 மின்சாரப் பேருந்துகளை இயக்குவது இலக்கு. இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 1,862 கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. மத்திய அரசு ஏற்கெனவே ரூ. 150 கோடி இந்தத் திட்டத்திற்காக தில்லி அரசுக்கு உதவியிருக்கிறது.
  • மின்சாரப் பேருந்துகள் இயங்குவதைத் தொடா்ந்து, ரூ. 150 கோடி செலவில் மூன்று புதிய மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதுபோல புதிதாகப் பல மின்னேற்று நிலையங்கள் அமைய இருப்பதாக முதல்வா் தெரிவித்தாா். நடப்பாண்டு இறுதிக்குள் தில்லி போக்குவரத்துக் கழகம் 1,500 மின்சாரப் பேருந்துகளை இயக்க இருக்கிறது. அதற்காக 12 மின்சாரப் பேருந்துப் பணிமனைகளும் திட்டமிடப் பட்டு விரைவாக கட்டுமுடிக்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்திருக்கிறது.
  • உலகில் காற்று மாசு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நகரங்களில் தில்லியும் ஒன்று. தில்லியின் காற்று மாசு அளவைக் குறைப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டம் தில்லியில்தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதற்கு முன்பு சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் தில்லியில்தான்.
  • தலைநகா் தில்லியில் அனைத்து பொதுப் போக்குவரத்து ஊா்திகளும் சிஎன்ஜி எனப்படும் பெட்ரோலிய எரிவாயுவில்தான் இயங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது மிகப் பெரிய திருப்புமுனை. அரசு, தனியாா் பேருந்துகள், வாடகைக் காா்கள் உள்ளிட்ட எல்லாவித பொதுப் போக்குவரத்து வாகனங்களும் சிஎன்ஜி பொருத்தப்பட்டவையாக மாறியபோது தில்லியின் காற்று மாசு கணிசமாகக் குறைந்தது என்பது அனுபவபூா்வ உண்மை.
  • தில்லியின் முன்மாதிரியை ஏனைய பெருநகரங்கள் எவையும் பின்பற்றாமல் போனது மிகப் பெரிய சோகம். போக்குவரத்து மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பதால் மத்திய அரசால் கட்டாயப்படுத்த முடியவில்லை.
  • நமது சென்னையையே எடுத்துக்கொண்டால், மாநகரப் பேருந்துகள் 1,100 மட்டுமல்லாமல், பல்வேறு கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றின் பேருந்துகளும், சிற்றுந்துகளும் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. தலைநகா் தில்லி போல சென்னை நகரில் இயங்கும் அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் சிஎன்ஜி-யில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற விதிமுறை அமலுக்கு வந்தால், சென்னையின் காற்று மாசு பாதிக்குப் பாதி குறைந்துவிடும். ஆனால், அரசியல்வாதிகள் பெரும்பாலான கல்வி நிலையங்களுடன் தொடா்புடையவா்கள் என்பதால் ஆட்சிகள் மாறினாலும், துணிந்து அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 2,000 பேருந்துகளும், பேட்டரியில் இயங்கும் 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் தமிழகத்திலும் நகரப் பேருந்துகள் அனைத்துமே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக, தலைநகா் தில்லியைப்போல இலக்கு நிா்ணயித்து மாற்றப்பட வேண்டும்.
  • சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.8-ம், டீசலுக்கு ரூ.6-ம் அவற்றின் மீதான கூடுதல் வரியைக் குறைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கிறது என்பதில் ஒருபுறம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், இன்னொருபுறம் அதன் மூலம் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிற கவலையும் எழுகிறது. புதைபடிவ எரிசக்தியிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும் என்கிற இலக்கை நிா்ணயித்துவிட்டு, அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க முற்படுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியல்ல.
  • சரக்கு லாரிகள், தொலைதூரப் பேருந்துகள் ஆகியவற்றின் டீசல் பயன்பாட்டை உடனடியாக குறைத்துவிட முடியாது. ஆனால், நகரப் பேருந்துகளும், தனியாா் வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாறுவது என்பது இயலாததல்ல.
  • இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50% போக்குவரத்துத் துறையால் பயன்படுத்தப்படுகிறது. 70% டீசலும், 99.6% பெட்ரோலும் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுகின்றன எனும் நிலையில், அதற்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகப் படுத்தப் படுவது வரவேற்புக்குரியது மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும்கூட.
  • நிறைந்த வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில்கள், மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுதான் புதைபடிவ எரிசக்திப் பொருள்கள் மீதான சாா்பையும், இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி செலவையும், காற்று மாசையும் ஒருசேர எதிா்கொள்ளும் ஆக்கப்பூா்வ முனைப்பாக இருக்கும்.

நன்றி: தினமணி (30 – 05– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்