TNPSC Thervupettagam

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

January 22 , 2020 1773 days 1074 0
  • மனிதனையும் பிற ஜீவராசிகளையும் வேறுபடுத்தும் ஆறு வித்தியாசங்களில் மனிதனின் பேச்சுத் திறனும் ஒன்று.  பறவைகளும், மிருகங்களும் ஏன் கடல்வாழ் திமிங்கிலங்களும் தங்களுக்குள் ஏதாவது ஒருவகையில் தகவலை பரிமாறிக் கொள்கின்றன என்பது நவீன விஞ்ஞானத்தின் முடிவு. ஆனால், பேசும் திறனை ஒரு கலையாக்கி அதை ஒரு சக்தி வாய்ந்த கருவியாக ஆக்கியவன் மனிதன் மட்டுமே. 
  • உலகின் மிகத் தொன்மையான பேச்சு ஹிந்து மதத்தின் வேதங்கள். கிட்டத்தட்ட எல்லா மதத்தின் கோட்பாடுகளும் வாக்கால் சொல்லப்பட்டவையே.
  • உலகின் மிகத் தொன்மையான உபதேசம் என்பது, குருஷேத்ர யுத்த களத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டி வந்த பார்த்தனுடைய சாரதி சொன்ன பகவத்கீதை. கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது இயேசுவின் மலைப்பிரசங்கம். எதிரிகளாலும் நம்பிக்கைத் துரோகி புரூட்டாலும் வெட்டுண்டு கிடந்த ஜுலியஸ் சீரின் உடலை வைத்துக் கொண்டு "நண்பர்களே, ரோமானியர்களே, நாட்டு மக்களே'  என்று மார்க் ஆண்டனி நிகழ்த்திய உரை ஷேக்ஸ்பியரின் காவியப் படைப்பின் உச்சம்

சிகாகோ மாநாடு

  • இந்தக் கற்பனையை விஞ்சிய உரையை சுவாமி விவேகானந்தர், சிகாகோ மாநாட்டில் "எனதருமை அமெரிக்க சகோதர, சகோதரிகளே' என ஆரம்பித்து அதுகாறும் வியாபாரத்திற்காக மட்டுமே இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருந்த மேலை நாடுகளின் பார்வையை மாற்றி, அவற்றை இந்தியாவின் ஆன்மிக உலகுக்கு, கையைப் பிடித்து அழைத்து வந்தார்.
  • சின்னாபின்னமாயிருந்த ஜெர்மானிய நாட்டை 1918-லிருந்து 21 ஆண்டுகளில் அதாவது செப்டம்பர் 1, 1939-இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போருக்கு ஜெர்மானிய நாட்டை வளர்த்தெடுத்தது என்றால், ஹிட்லரின் மகத்தான வாக்கு வன்மை மறக்க முடியாத வலி மிகுந்த உலக சரித்திரமாகி விட்டது.
    "இனிய உளவாக இன்னாத கூறல்' என்பதுதான் பேச்சுத் திறமையின் உச்சம். ராமாயணத்தில் அனுமன் "சொல்லின் செல்வன்' எனக் கவிச்சக்ரவர்த்தி கம்பரால் பாராட்டப்படுகிறார். "சீதையைக் கண்டேன்' எனச் சொல்வதால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க, "கண்டேன் சீதையை' என்று சொன்ன வாக்குச் சித்தர் கம்பர்.
  • உலகம் உறங்கிக் கொண்டிருக்கும்போது இந்தியா சுதந்திரத்தைக் காண விழித்துக் கொண்டிருக்கிறது என 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடுநிசியில் நமது முதல் பிரதமர்  ஜவாஹர்லால் நேரு சொன்ன உணர்ச்சிகரமான வரிகள், "நாடு உனக்காக என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்' என்று சொன்ன அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் வரிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல.
  • பேச்சுத்திறன், அரசியலில் ஒரு முக்கிய அங்கம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸில் பேச்சாளர்கள் பலர் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வ.உ.சி., சத்தியமூர்த்தி, ம.பொ.சி., சுப்பிரமணிய சிவா முதலானோர்.
  • அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் தவறுகளை சத்தியமூர்த்தி வரிசைப்படுத்தி நையாண்டி செய்து, இதை "நீ ஏன் செய்கிறாய் என்று கேட்டால், அவன் தோல் வெளுப்பாம் என் தோல் கருப்பாம்' என்ற வரிகள் கால வெள்ளத்தில் கரைந்து போனது. "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்/வேட்ப மொழிவதாம் சொல்' என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தவை, "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வும், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யும் ஆற்றிய உரைகள். 
  • திராவிட இயக்கத் தலைவர்கள், அதாவது திமுக பேச்சாளர்கள் மேடைப்பேச்சை ஒரு கலையாகவே மாற்றினர். மேடைப்பேச்சை மணிப்பிரவாள நடையில் இருந்து மாற்றி எளிய 
  • தமிழால் மக்களை கட்டிப் போட்டனர். "கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டு செத்தான்' என்ற வரிகள் அவர்கள் ஆட்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எதிரொலிக்கவே இல்லை என்பதுதான் கழக ஆட்சிகளின் பலமானது.
  • கழக மேடைகளில், அடுக்குமொழி ஆபாசங்களும், நகைச்சுவை என்ற பெயரில் தரம் தாழ்ந்த பேச்சுகளும் விண்ணைத் தொட்டன.

சூழ்நிலை

  • "அவள் படி தாண்டா பத்தினியுமல்ல, நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்ற சொல்லடை தமிழக அரசியலில் பிரசித்தம். இதனால் பேச்சாளர்கள் தீப்பொறி, கோடையிடி என்ற அடைமொழிகளால் கொண்டாடப்பட்டனர்.
  • கழகம் ஆட்சியைப் பிடித்தவுடன் நிலைமை மாறியது என்பதை மறுப்பதற்கில்லை. பதவி தந்த சூழ்நிலை மாற்றம் அவர்களுடைய மேல்மட்டத் தலைவர்களின் பேச்சில் கூடுதல் நாகரிகத்தையும், தமிழ் சொற்றொடர்களையும் மாநிலமெங்கும் விதைத்தன.
  • அண்ணாதுரையும், நெடுஞ்செழியனும், அன்பழகனும், ஈ.வி.கே. சம்பத்தும், கருணாநிதியும், கவிஞர் கண்ணதாசனும் அழகு தமிழில் தமிழ் மக்களை வசியம் செய்தார்கள் என்பது நிஜம். இவர்களில் சம்பத்தும், கண்ணதாசனும் பின்னால் அணி மாறினார்கள்.
  • வைகோவில் தொடங்கி, காளிமுத்து, துரைமுருகன், ரகுமான் கான், ஆ.ராசா என்று வசன வியாபாரிகள் திராவிட மேடையின் அடுத்தகட்ட நகர்வில் முன்னிலை வகித்தனர். எதிர்க்கட்சி வரிசையிலும் அவர்களுக்கு எள்ளளவும் சளைக்காத பேச்சாளர்களை தேசியக் கட்சியான காங்கிரஸ் அணிவகுத்தது. நகைச்சுவைப் பேச்சுக்கு சின்ன அண்ணாமலை, இலக்கிய உரைக்கு ஜெயகாந்தன், ஆற்றொழுக்குத் தமிழுக்குத் தமிழருவி மணியன் என்று பலரைக் குறிப்பிடலாம்.
  • குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், புலவர் கீரன் தொடங்கி இன்றைய விசாகா ஹரி, தேச மங்கையர்க்கரசி என ஆன்மிகப் பேச்சாளர்களின் பட்டியல் காவிரிப் புது வெள்ளமாய் பொங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே, கட்டிப் போடும் கருப்புச் சட்டை பேச்சாளர்கள் குறித்துச் சொல்லவே வேண்டாம். யூடியூபை அழுத்தினால் வந்துவிழும் உரையாடல்களுக்குக் குறைவேயில்லை.
  • இதில் அரசியலும் ஆன்மிகமும் பேசுபவர்கள், ஆன்மிகமும், தமிழும் பேசுபவர்கள் என இரண்டு விதமானவர்கள் உள்ளனர். இதில் முன்னதில் பிரபலமானவர் நெல்லைக் கண்ணன், பின்னதில் கோலோச்சுபவர் சுகி சிவம். இருவர் பேச்சிலும் கருத்துகளும், நகைச்சுவையும் "பொங்கு மாங்கடல் அருவிபோல் பொங்கி வழியும்' என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விளைவு

  • ஆனால், 2019-ஆம் ஆண்டு இவர்களுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பதுதான் வேதனை. அத்திவரதரைப் பற்றி சுகி சிவம் விளையாட்டாகச் சொன்ன ஒரு கருத்து, அவர் செய்த சமயப் பிரசாரங்களையெல்லாம் ஒரு விநாடியில் தவிடுபொடியாக்கி அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டது. அப்போதைக்கு கைதட்டல் பெறுவதற்காகவோ அல்லது லட்சக்கணக்கில் மக்கள் காஞ்சிபுரம் நோக்கிப் படையெடுத்ததைக் குறிப்பிட வெகுளித்தனமாகவோ சுகி சிவம் நையாண்டி செய்ததன் விளைவு, அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டது. தன்னை நியாயப்படுத்திக் கொள்ள அவர் ஜாதி முலாம் பூச முற்பட்டது அதைவிடக் கொடுமையானது.
  • வார்த்தைகளால் வரும் வினைகள் குறித்துச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. 
    இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 107 "அபேட்மெண்ட்' குறித்து விரிவாகச் சொல்கிறது. "அபேட்மெண்ட்' என்பது "உடந்தை' அல்லது "தூண்டிவிடல்' என்ற பொருள்களைக் கொள்ளும். "கொலை செய்பவனும்' "கொலையாளிக்கு உடந்தையாக இருந்தவனும்' அல்லது "கொலை செய்வதைத் தூண்டியவனும்' சட்டத்தின் பார்வையில் சமமே. இதனால்தான் தற்கொலை செய்து கொண்ட நபரைத் "தற்கொலைக்குத் தூண்டியவர்' அல்லது "தற்கொலைக்கு உடந்தையாக இருந்தவர்' சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார். அதனால்தான் திருவள்ளுவர் "யா காவாராயினும் நா காக்க' என்று சொல்கிறார்.
  • நெல்லைக் கண்ணன், குறுக்குத்துறை தந்த நிறைவான தமிழ்க் கடல். யூடியூபில் கொட்டும் கண்ணனின் பேச்சுக்கு அளவேயில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ஓர்அரசியல் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது.
    பள்ளிப் படிப்பைத் தாண்டாத அவருடைய தமிழ் அறிவும், உலக அறிவும் வெளிநாட்டுப்  பயணங்களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், மகாகவி பாரதி எனத் தொடங்கி தமிழ் இலக்கியங்களிலும், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், அவரே சொன்னது போல் குரானிலும், பைபிளிலும்கூட ஆழங்காற்பட்டவர்.
  • பேச்சு என்பது போதை தருவது - கேட்பவருக்கு மட்டுமல்ல. பேசுபவருக்கும் கூடத்தான். தொடர் கைதட்டுக்களும் சிரிப்பலைகளும் ஒரு பேச்சாளனுக்கு அளவுகடந்த உற்சாகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்தப் போதையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கைதட்டல் பெறுவதற்காக வரம்புமீறிப் பேச வைத்துவிடுகிறது.

சங்க இலக்கியம்

  • "தோசையைத் திருப்பலாம், இட்லியைத் திருப்ப முடியாது' என்று திருநெல்வேலி மாவட்டப் பெண்கள் சொல்வர். எழுத்தை அச்சு ஏறி வெளிவரும்வரை திருத்தலாம்.  தொடர்படம் எடுக்கப்படும் பேச்சைத் திருத்த முடியாது என்பதை பேச்சாளர்கள் மறந்துவிடக் கூடாது. இதில்தான் சுகிசிவமும், நெல்லைக் கண்ணனும் தங்களை அறியாமல் தடம் புரண்டு விட்டனர்.
  • சங்க இலக்கியம் பேசுபவர்கள் அண்மைக்கால விஞ்ஞான வளர்ச்சியையும் நினைவில் கொண்டு பேச வேண்டும். திருடர்கள்கூட தங்கள் முகங்களை மூடிக்கொண்டு சிசிடிவியிடம் இருந்து தப்பிக்க எண்ணும்போது, படித்த பண்பாளர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாமா?  இந்தப் பட்டியலில் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (22-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்